Friday, 26 June 2009

நீதான் புலி....

அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் போ‌லிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது......
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...

அமெரிக்காவின் முப்படைகளும் அக்காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...

வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு
கனடா....பிரான்ஸ்..... ஆஸ்த்ரேலியா....

இன்னும் பல நாடுகளும்
ஒண்ணும் புடுங்க முடியவில்லை.... புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூடி புலி பிடிக்கும் மகாநாடு
ஒன்றும் நடத்தப்பட்டது

அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....

எங்களைக் கேட்கலயே........ ஒரு குரல்...........

பார்த்தா‌‌‌ல் இலங்கை அதிபர் .....

நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறோம் ஆயுதத்தோட...
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...

சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமெரிக்க காட்டுக்குள் போய்...
நாள்கள் மாதங்களாயிற்று... மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...

கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக்காட்டுக்குள் சென்றன..

அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத்திசை நோக்கி விரைந்தன...

அங்கே அவை கண்ட காட்சி.... .

ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப்பன்றியை குண்டாந்தடிகளால் தாக்கியவாறு
கூறிக்கொண்டிருந்தனர்

"ஒத்துக் கொள்ளு... நீதான் புலி"

உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?

அதற்கு பன்றி

"பரவாயில்லிங்க... எனக்கு ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25
வருடமா இதைத்தான்
பண்றாங்க" என்றது சிரித்தவாறு....

கதையின் நீதி:
உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...! - சேகுவேரா

Wednesday, 24 June 2009

உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?

'ஸ்டார் ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் எலெக்ட்ரிகல்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளரான எல்.சுரேஷ், ஃப்ரிட்ஜ் பற்றிய தகவல்களை இங்கே வழங்குகிறார்.

''அடுப்பில்லாத வீட்டைக் கூட பார்க்கலாம்.

ஆனால், ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு உண்டா? அன்றாட தேவைக் கான பால், காய்கறிகள் மற்றும் கூல்டிரிங்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாத்து குளிர்ச் சியைத் தந்து நம்மை மலர்ச்சி யடைய செய்யும் ஃப்ரிட்ஜ், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அத்தகைய பொருளை மாதக்கணக்கில், ஏன்... ஆண்டுக்கணக்கில்கூட பராமரிக்காமல் பலரும் கெடுத்துக் கொண்டிருக்கி றார்கள் என்பதுதான் வேதனை யான விஷயம்'' என்று வருத்தப்பட்டவர், ஃப்ரிட்ஜ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு, பரா மரிப்பு என்று அனைத்தையும் வாரி வழங்கினார்.

புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கும்போது நமக்கு பிடித்த கம்பெனியை செலக்ட் செய்து வாங்குவோம். ஆனால், முன்பக்கம் ஸ்டார் முத்திரையிருக்கிறதா என்று கவனித்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். இந்த முத்திரை சிங்கிள் ஸ்டார் துவங்கி ஃபைவ் ஸ்டார் ரேஞ்ச் வரை உண்டு.

ஃப்ரிட்ஜுகளுக்காக அரசு கொடுத்திருக்கும் தர அங்கீகாரம்தான் இந்த ஸ்டார். அதாவது, மின்சாரம் குறைந்த அளவே தேவைப்படும் வகையில் தயாரிக்கப்படும் 200 லிட்டர் முதல் 400 லிட்டர் வரையிலான ஃப்ரிட்ஜ்களுக்கு இந்த ஸ்டார் முத்திரைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

ஃபைவ் ஸ்டார் தரச் சான்றிதழ் கொண்ட ஃப்ரிட்ஜ்கள் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் நேர்த்தியாக இருப்பதுடன், அத்தனை உள்வேலை களையும் கனகச்சிதமாக செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட் டிருக்கும். பால் பாக்கெட், ஐஸ்க்ரீம், காய்கறி, பழங்கள் என ஒவ் வொன்றுக்கும் தனித்தனி டிரேக்கள் இருக்கும். பொதுவாக ஃப்ரிட்ஜ் என்றால் பால் பாக்கெட்டை ஃப்ரீசரில் வைத்து, பிறகு தண்ணீரில் போட்டுவிட்டு காத்திருக்கவேண்டும். ஆனால், இதில் அந்த அவசியம் இருக்காது என்பதுதான் தனிச்சிறப்பு. அதாவது, ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த சில நிமிடங்களிலேயே பாலை பயன்படுத்தும் அளவுக்கான டெம்ப்ரேச்சர் இருப்பதுபோல வடிவமைத்திருப்பார்கள்.

இருவர் மட்டுமே புழங்கக்கூடிய வீட்டில் 165 லிட்டர் கொள்ளளவுள்ள ஃப்ரிட்ஜ் வாங்கினால் போதுமானது. வீட்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டைப் பொறுத்தே தேர்வு செய்யுங்கள்.

தரமான ஸ்டெபிலைசர்கள் வாங்குவது அவசியம். ஆனால், ஃப்ரிட்ஜ் விற்கப்படும் ஷோ-ரூம்களில் பெரும்பாலும் தரமான கம்பெனி முத்திரையுடன் கூடிய ஸ்டெபிலை சர்கள் விற்கத் தயங்குவார்கள். ஏனென்றால், அதில் அவர்களுக்கு கிடைக்கும் கமிஷன் மிகக் குறைவு. அதேசமயம், தரமில்லாத ஸ்டெபிலைசர் களை விற்கும் போது அதிக லாபம் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர் களிடம் பேசிப் பேசியே தரமற்ற ஸ்டெப்லைசர்களை தலையில் கட்டிவிடுவதும் உண்டு. எனவே, தரமான கம்பெனியின் ஸ்டெபிலைசர்களையே கேட்டு வாங்குங்கள்.

ஃப்ரிட்ஜை ஒரு தடவை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்கு வதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும், ஃப்ரிட்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்த பைப்பில் காற்றும் போகாது. எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பி யிருக்கும்.

ஃப்ரிட்ஜ் வாங்கியவுடன், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால், என்னென்ன பொருட்களை யெல்லாம் பயன்படுதக் கூடாது என்ற வழிமுறைகளை எழுதியிருப்பார்கள். முதலில் அதனை தெளிவாகப் படியுங்கள். சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட் களோ, சர்வீஸ் ஆட்களோகூட இதைப் பற்றி யெல்லாம் சொல்ல மாட்டார்கள். நீங்களாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஃப்ரீசரில் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்காக கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தகூடாது. ஃப்ரீசர் அமைந்து இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருந்தப் பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தினால், இந்த டப்பாவை கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியம் காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, 'டப்' என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டுவிடலாம். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பில்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது, டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத் துங்கள். இதனால் ஃப்ரிட்ஜில் உள்ள அதிகப்படியான ஐஸ் கரைந்து, அதன் பின்புறம் இருக்கும் டிரேவில் விழுந்து விடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்வதால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ... தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ... அதனுள் இருக்கும் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வெளியே எடுத்து விடுங்கள். இல்லையென்றால் அது அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கும். ரிப்பேரான ஃப்ரிட்ஜை ஈரத் துணியால் நன்றாக துடைத்து, எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜினுள்ளே ஆங்காங்கே வைத்து விடுங்கள். இதனால் துர்நாற்றம் அடிக்காது. கதவையும் திறந்து வையுங்கள்.

ஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும். அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜ் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். அது பல வியாதிகளுக்கு வழி வகுக்கலாம். கேஸ்கட் சரியாகப் பொருந்தியிருக்கிறதா? இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள்.

சாதாரண சோப்புத் தண்ணீரினால் ஃப்ரிட்ஜின், உள், வெளிப்புறங்களில் துடைத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் வராது.

ஃப்ரிட்ஜின் வாழ்நாள் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள்தான். அதற்கு மேல் அதன் செயல்பாடுகள் தொய்வடைந்து விடும். எந்த விதத்தில் அதனால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே, 12 ஆண்டுகளாகிவிட்டால் உடனே டிஸ்போஸ் செய்துவிடுவது நல்லது.

ஃப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்து கொள்ளுங்கள்.

வெளியூர் சென்று இரண்டு நாளில் திரும்பும் பட்சத்தில் ஃப்ரிட்ஜை ஆனில் வைத்து செல்லலாம். ஆனால், 10 நாட்களாகும் என்றால் பொருட்களை வெளியே வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு போவதுதான் நல்லது.

ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அதனை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.

Thursday, 18 June 2009

எக்மோர் டு தாம்பரம்! (ஒரு பக்க கதை) நன்றி: விகடன்

சட்டை, பேன்ட், பர்ஸ், ஷோல்டர் பேக் எல்லா வற்றிலும் தேடிப் பார்த்த நரேனுக்கு பகீர் என்றது. செல்-போனை ஒற்றி, "மச்சான், டிக்கெட்டை ரூம்லயே வெச்சுட்டு டிரெய்ன் ஏறிட்டேன்டா! டிக்கெட் மேஜை-ல இருக்கான்னு பாரேன்!"

22 தந்திக் கம்பங்கள் கடந்த பிறகு, "உன் டிராயர்ல இருக்குடா..!" என்றது எதிர்முனை.

"என்னடா பண்ணலாம்?"

"வண்டி கிளம்பிடுச்சா?"

"எக்மோர்ல இருந்து கிளம்பி சேத்துப்பட் நெருங் கிட்டு இருக்கு!"

"தாம்பரத்துல நிப்பான்னு நினைக்கிறேன். சரி, நீ கவலைப்படாதே! டிக்கெட்டை நான் எடுத்துட்டு வர்றேன். எப்படியாவது தாம்பரத்துல உன்கிட்ட டிக்-கெட் இருக்கும்!"

கொஞ்சம் தைரியம் வந்தது நரேனுக்கு. 'மச்சான் கிரிமினல் கில்லாடி. எப்படியாவது டிக்கெட்டைக் கொண்டு வந்துருவான்!' என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டான்.கிண்டி நெருங்குகை-யில் டிக்கெட் கலெக்டர் வருவது தெரிந்தது. 'விஷயத்-தைச் சொல்லிவிடலாமா?' என்று ஒருகணம் யோசித்-தவன், 'அதுதான் தாம்பரத்தில் டிக்கெட் கைக்கு வந்து -விடுமே!' என்று அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து முழுமறைவானான். சிறிது நேரம் கழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தபோது டிக்கெட் கலெக்டர் அவன் இருப்பிடத்திலேயே நிற்பதைக்கண்டு தலையை மீண்டும் உள்ளே இழுத் துக்கொண்டான். திடீரென வண்டி நிற்பதை உணர்ந்து வெளியே வந்தவன், அருகில் இருந்த-வரிடம் "தாம்பரம் வந்துடுச்சா?" என்று கேட்டான்.

"இல்லீங்க... அதுக்கு முந்தின ஸ்டேஷன்ல நிக்குது!" என்ற பதில். மீண்டும் மறைவானான். வண்டி நீண்ட நேரமாக நிற்கவும், எரிச்சலடைந்து இருக்கையிலேயே இருந்து எதையும் சமாளிப்போம் என்று உள்ளே வந்தான். காத்திருந்த டிக்கெட் கலெக்டர் அருகில் இரண்டு போலீஸ்.

"சார், உங்க டிக்கெட்டைக் காண்பிக்கிறீங்களா?"

"ஸாரி சார்! மறந்து வீட்ல வெச்சுட்டேன். தாம் பரத்துல குடுத்துடறேன். என் ஃப்ரெண்ட் கொண்டு வந்துட்டு இருக்கான்!"

"அப்ப நீயேதான்... நட, ஸ்டேஷனுக்கு!"

"சார், ஃபைன் வேணும்னா போட்டுக்குங்க... ஸ்டே ஷன்லாம் வேண்டாம்!"

"ஸ்டேஷன்லதான் உங்க ஃப்ரெண்ட் இருக்கார். அவருக்கு நீங்க கம்பெனி கொடுக்க வேண்டாமா?" என்றார் ஒரு போலீஸ் எகத்தாளமாக.

"என்ன சார் சொல்றீங்க?"

"ஏன்டா! டிரெயினை தாம்பரத்துக்கு லேட்டா வர வைக்கணும்கிறதுக்காக 'டிரெயின்ல வெடிகுண்டு இருக்-கு'ன்னு புரளியைக் கிளப்புறவனை வேற எங்கேடா வெச்சிருப்பாங்க..! ராஸ்கல்ஸ்!" பிடரியில் விழுந்த அடியில் பொறிகலங்கிப் போனது நரேனுக்கு!

- நாகராஜகுமார்

Saturday, 13 June 2009

அட‌க்‌க‌த்‌தி‌ல் உ‌ய‌ர்‌ந்தவ‌ர்க‌ள்

அ‌திக ‌திறமையு‌ம், ஆ‌ற்றலு‌ம் கொ‌ண்டவ‌ர் அட‌க்க‌த்துட‌ன் வா‌ழ்வதையு‌ம், ஒ‌ன்று‌ம் தெ‌ரியாதவ‌‌ர்க‌ள் தலை‌‌க்கண‌த்துட‌ன் ‌தி‌ரிவதையு‌ம் நா‌ம் பா‌ர்‌த்து‌ள்ளோ‌ம். அத‌ற்கு அ‌‌த்தா‌ட்‌சியான ஒரு கதை ‌இ‌ங்கே..

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு குறுகலான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து வ‌ழி விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் இடறி ப‌ன்‌றி ‌மீது ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ல் பன்றி நசுங்கி விடும். அ‌தி‌ல்லாம‌ல் அது வாலை ஆ‌ட்டி‌க் கொ‌ண்டு வரு‌கிறது. நானோ சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்தா‌ல் நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

Thursday, 28 May 2009

அப்பா - (மகள் எழுதிய கவிதை)

அப்பா...என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்

தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என்னுள் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம் தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்கும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!

வாழ்கையில் எனை நோக்கி வரும்
எல்லா இன்னலையும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என்ற தைரியத்தில்....

அம்மாவின் கடவுள் நம்பிக்கையும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவு கண்ணை திறந்தது எனலாம்

வெளிநாடு வரும் வரை மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று வெளிநாட்டு வசதிகளும், மெத்தைகளும்
உங்கள் அருகில் உறங்கிய நிறைவை தருவதில்லை...

கடவுள் என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கடவுளே !
அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என....

Friday, 22 May 2009

கண்ணே மணியே !!!!

ஏதாவது ஒரு பொருளைக் கண்களைக் குவித்துப் பார்க்கும்போது, அந்தப் பொருள் மங்கலாகத் தெரிந்தால் அல்லது முழுக்கவே தெரியாவிட்டால், கண் பார்வையில் கோளாறு என்று அர்த்தம்!

லேசர் அறுவை சிகிச்சையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் செய்து கொள்ள வேண்டும். அதே போல 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் லேசர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதல்ல!

குறைந்தது 10 அடி தூர இடைவெளி வைத்து டி.வி. பார்ப்பதுதான் நல்லது. டி.வி. பார்க்கும் அறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்!

கம்ப்யூட்டரில்தான் உங்களுக்கு வேலை என்றால், எதிரே நாற்காலியில் அமர்ந்திருக்கும் உங்களின் முகம் கம்ப்யூட்டரைவிட உயரமாக இருக்கும்படி அமைய வேண்டும். அதாவது, தலையை உயர்த்திப் பார்க்காமல், கம்ப்யூட்டர் திரை உங்கள் பார்வையின் கீழ்க்கோணத்தில் இருப்பது நல்லது!
குழந்தைகள் புத்தகத்தைக் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் படித்தாலோ, டி.வி-க்கு மிக அருகில் அமர்ந்து பார்த்தாலோ அது கிட்டப் பார்வைக்கான அறிகுறி. உடனே உஷார் ஆகுங்கள்!

வைட்டமின் A கண்களுக்கு நல்லது. அயோடின் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்!

சாலையோரம் விற்கப்படும் மலிவு விலை குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத் தாதீர்கள். இன்றைய சிக்கனம் நாளைய பிரமாண்ட செலவாக இருக்கலாம்!

கண்ணுக்கு மை அழகுதான். ஆனால், அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கண் மை இமைக்கு உள்ளே படக்கூடாது. ஒருவர் உபயோகித்த மையை இன்னொருவர் பயன்படுத்துவதும் சுகாதாரமானது அல்ல!
இறப்பு நேர்ந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்யலாம். ஒருவரின் இரு கண்கள் இருவருக்குப் பார்வை கொடுக்கும். கண் தானம் பெற்றவரின் கண்ணைக் கூட அவர் இறப்புக்குப் பிறகு, மற்றவருக்குத் தானமாகத் தரலாம்!

என்னைச் செதுக்கிய 7 நாட்கள் - இந்த வாரம்: இளவழகி


கண்கள் பார்த்துப் பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட காற்றில் ஸ்டிரைக்கர் சுண்டுகின்றன இளவழகியின் விரல்கள்!


உலகக் கோப்பை கேரம் சாம்பியன். வாழ்க்கை வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தபோதே கேரம் போட்டிகளில் உச்சக் கோடு தொட்ட பெண்... சாதித்த கதை சொல்கிறார்...


001
''எங்கப்பா கேரம் பிளேயர். வீட்ல நாங்க மூணு பேரும் பொண்ணுங்கதான். அப்பாவோ, அம்மாவோ, என்னைப் 'படி... படி'ன்னு சொன்னதே கிடையாது. ஆனா, அப்பா தினமும் என்னை கேரம்போர்டு விளையாடச் சொல்வாரு. மத்த பசங்களோடு விளையாட முடியாததால, எனக்கு கேரம்னா கொஞ்சம் வெறுப்பு. ஆனா, எனக்கு கேரம் கத்துக் குடுக்குறப்போ அப்பா கண்ல சின்னதா ஒரு பளபள. 'பையன் பொறந்திருந்தா, பெரிய கேரம் பிளேயர் ஆக்கி இருக்கலாமே'னு நினைக்குறாரோனு தோணுச்சு.


'பையனா இருந்தாலும் அவனுக்கும் கையில பத்து விரல்தானே இருக்கும். அவனால முடியும்னா, நம்மால முடியாதா?'ன்னு நிஜமா எனக்குள்ள ஒரு வீம்பு. கேரம் போட்டிகள்ல நிச்சயம் ஜெயிக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அதுவரை கேரம் விளையாட்டு மேல எனக்கு இருந்த சின்ன வெறுப்பைப் பெரிய வெறியா மாத்தினேன். அப்பெல்லாம் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 'டோர்னமென்ட் போர்டு'கள்லதான் நடக்கும். நல்லா வழுவழுன்னு போட்டிகளுக்காகவே தயாரிக்கப்படுற போர்டுகள். அது வாங்க வசதியில்லாம சாதாரண கட்டை போர்டுலதான் நான் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்ல டோர்னமென்ட் போர்டு இருந்துச்சு. தினமும் அதிகாலை நாலு மணில இருந்து ஆறு மணி வரை அதுல பிராக்டீஸ் பண்ணிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். சாயங்காலம் சும்மா இருக்கப் பிடிக்காம வீட்டு கட்டை போர்டுல பிராக்டீஸ் பண்ணிட்டு இருப்பேன். காலைல டோர்னமென்ட் போர்டுல ஸ்மூத்தா விளையாடிட்டு கட்டை போர்டுல விரல் நோக ஸ்டிரைக்கர் சுண்டுறதுக்குக் கடுப்பா இருக் கும். தினமும் காலைல அத்தனை சீக்கிரம் எழுந் திரிக்குறதுக்கும் கடுப்பா இருக்கும். ஆனா, அந்த வலி இருந்துட்டே இருந்தாதான் ஏதாவது ஒரு வழி திறக்கும்னு பொறுத்துக்கிட்டேன். முதல் வெற்றி கிடைக்கிற வரை என்னை நானே வாட்டிக்கிட்ட அத்தனை நாளும் இப்பவும் எனக்குச் சுளீர்னு ஞாபகம் இருக்கு!''


002
''ஆறாவது படிக்கிறப்போ ஜூனியர் கேரம் ஸ்டேட் டோர்னமென்ட்ல என்னைக் கலந்துக்கச் சொன்னாங்க பி.டி. டீச்சர் கலாவதியும் ஹெச்.எம். சந்திரா மேடமும். அதுக்கு முன்னாடி நான் பெரிய போட்டிகள்ல கலந்துக்கிட்டது கிடையாது. எனக்கு எதிரா விளையாடியது அப்போ ஸ்டேட் பிளேயரா இருந்தவங்க. சரசரன்னு என்னை அடிச்சுக் காலி செஞ்சுரலாம்னு வந்து உக்காந்தாங்க. 4:45-க்குள்ள என்னைத் தோக்கடிச்சுட்டு 5 மணி பஸ்ஸைப் பிடிக்கப் போற மாதிரியே இருந்துச்சு அவங்க ஒவ்வொரு ஆக்ஷனும்.


ஜெயிச்சே ஆகணும்னு உள்ளுக்குள்ள வெறியாயிருச்சு. என்கிட்ட இழக்குறதுக்கு எதுவும் இல்லை. ஆனா, ஜெயிச்சா உலகமே இருக்குன்னு நினைச்சுக்கிட்டு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சேன். அன்னிக்கு எனக்கு கேம் அட்டகாசமா கை வந்துச்சு. 4:50 பஸ்ஸையே அவங்க பிடிக்கலாம்கிற அளவுக்கு கேம் அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது. ஆனா, ஜெயிச்சது நான். யோசிச்சுப் பார்த்தா, அன்னிக்கு என் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால, என்னால இயல்பா இருக்க முடிஞ்சது. அந்த இயல்பை எந்தச் சூழ்நிலையிலும் இருத் திக்கிற மனப்பக்குவத்தைக் கத்துக்கொடுத்த முதல் வெற்றி அது. அதோடு ஸ்கூல் சார்பா எனக்கு டோர்னமென்ட் கேரம்போர்டும் வாங் கிக் கொடுத்த நாள்!''


003
''அடுத்தடுத்து நிறையப் போட்டிகள்ல கலந் துக்க ஆரம்பிச்சேன். நிறைய ஜெயிச்சேன். கொஞ்சம் கொஞ்சம் தோற்கவும் செஞ்சேன். எத்தனையோ போட்டிகள். ஆனா, நான் கலந்துகிட்ட முதல் ஆசியக் கோப்பைப் போட்டியை மறக்க முடியாது. 2005-ல மாலத்தீவுகள்ல நடந் தது. முட்டி மோதி ஃபைனல்ஸ் வரை வந்துட்டேன். ஃபைனல்ஸ்ல எனக்கு எதிரே நிர்மலா. அவங்கதான் அப்போ உலகத்துலயே டாப் பிளேயர். தொடர்ச்சியா நாலு உலகக் கோப்பை போட்டி ஃபைனல்ஸூக்கு வந்த ரன்னர்அப் அவங்க. முதல் செட்ல நான் ஆறு பாயின்ட். அவங்க 45. ரெண்டாவது செட்லயும் அவங்க லீடிங்.


'அதுக்குள்ள ஏன் நாம தோத்துட்டோம்னு நினைக்கணும்? இன்னும் அவங்க ஜெயிக்கலைதானே... அவங்களைக் கடைசி வரை ஜெயிக்கவிடாம பண்ணுவோம். அதுக்கப்புறம் நாம ஜெயிக்க முடியுமான்னு பார்ப்போம்'னு நினைச்சுக்கிட்டு விளையாடினேன். அஞ்சு நிமிஷத்துல முடியிற மாதிரி இருந்த கேம், முழுசா முடிய ஏழு மணி நேரம் ஆச்சு. நான்தான் ஜெயிச்சேன். கடைசி பாயின்ட் வரை அவங்க போக, நான் புடிச்சு இழுத்துட்டு வர... என்னை முன்னாடி நகரவிடாம அவங்க முட்டுக்கட்டை போட... ஒவ்வொரு ஸ்டிரைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஏழு மணி நேரமும் மனசை விடாம இறுக்கிப்புடிச்சு வெச்சிருந்ததுதான் பெருசு. தோக்குறதுக்குக் கடைசி செகண்ட் வரைக்குமான நேரம் இருக்கே... அது நமக்கும் சொந்தம்தானேன்னு அந்த ஏழு மணி நேரம்தான் கத்துக்கொடுத்துச்சு!''


004
''2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.
கிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்..? நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு. ஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும் நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட், விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க... நான் நேரு ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு. திரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி! ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும். கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.
அதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!''


005
''2008-ல உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் பிரான்ஸ்ல நடக்குது. ஏர்போர்ட்ல நாங்க போய் இறங்கினா, என் லக்கேஜ் மட்டும் காணலை. இந்தியாவுல இருந்து கிளம்புறப்போ நான் போட்டிருந்த அந்த ஒரு டிராக் சூட் மட்டும்தான் என்கிட்ட இருந்த டிரெஸ். பகல் 12 மணிக்கே ஸ்வெட்டர் போட்டு நிக்கிற அளவுக்குக் குத்திக் கொல்லுற குளிர் பிரான்ஸ்ல விசேஷம். ஒரு மணி நேரம்கூட என்னால தாக்குப்பிடிக்க முடியலை. இந்தியாவுல இருந்து போன ஆறு பேர்ல என்னையும் சேர்த்து மூணு பொண்ணுங்க. அவங்களோட டிரெஸ்ஸை எனக்குக் கொடுத்து உதவுற அளவுக்கு அவங்க சூழ்நிலை இல்லை. காசு கொடுத்து புது டிரெஸ் வாங்கிப் போடுற அளவுக்கு என் சூழ்நிலை இல்லை. மொத்தமா ஏழு நாள் அங்கே தங்கியிருக்கணும்.
கேரம் ஒரு மைண்ட் கேம். மனசுல எந்தக் குழப்பமும் சஞ்சலமும் இல்லாம ரொம்ப ஃப்ரீயா உணர்ந் தாதான் நம்ம மனசு திட்டமிடுற திசையில விரல் ஸ்டிரைக்கரைச் செலுத்தும். ஆனா, என் வாழ்க்கை யிலயே முக்கியமான கட்டத்தின்போது என் மனசு ஃப்ரீயா உணரலை. அன்னிக்கு முழுக்க மகா குழப்பம். குளிர்ல அழுதா கண்ணீர்கூட வர மாட்டேங்குது. பயம், பதற்றம், குழப்பம்... அந்தளவுக்கு நான் அது வரை அரண்டு மிரண்டதில்லை. 'போட்டியிலகலந்துக் காம ஊருக்குத் திரும்பிடலாமா?', 'ஏழு நாளும் ஓட்டல் ரூம்லயே தங்கிட்டு போட்டியில கலந்துக்காம இருக்கலாமா?'ன்னு ஏகப்பட்ட சிந்தனைகள். 'இளவழகி, நீ இப்போ நீயா இல்லை. இப்போ நீ என்ன முடிவெடுத்தாலும் அது தப்பாதான் இருக்கும். பேசாம படுத்துத் தூங்கு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, மறுநாள் என்ன நடக்கும்னு தெரியாமலே கஷ்டப்பட்டு தூங்கிட்டேன். அன்னிக்கு நான் எந்த முடிவும் எடுக்காதது எவ்வளவு நல்லதுன்னு மறுநாள்தான் எனக்குப் புரிஞ்சுது!''


006
''மறுநாள் பிரான்ஸ்ல ரெண்டாவது நாள். எந்திரிக்கிறப்பவே பசி வயித்தைக் கிள்ளுது. சாப்பிடப் போனா நாம அதுவரை கண்ணால பாத்திருக்காத, கேள்வியேபட்டிருக்காத சங்கதிகளை எல்லாம் சாப்பிடக் கொடுக்குறாங்க. இன்னொரு இடி... போட்டுக்க டிரெஸ் இல்லை, சரியான சாப்பாடு இல்லை. ஆனா, என்கிட்ட இருக்குற அதிகபட்சத் திறமையை நான் வெளிக்காட்டியாகணும். அப்போ உலகம் முழுக்க இருந்து வந்திருந்த போட்டியாளர்கள் என் கண்ணுக்குத் தெரியலை. எனக்கு நானேதான் போட்டியாத் தெரிஞ்சேன். 'உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் நார்மலா இல்லாம, இந்தப் போட்டியில் உன்னால எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும்?'கிற கேள்விக்குப் பதில் தேடுறதுதான் அப்போ எனக்குச் சவாலா இருந்துச்சு. 'எல்லாரும் நீ போட்டிருக்கிற டிரெஸ்ஸைப் பார்க்க இங்கே வரலை. உன் வேலை என்னவோ, அதை மட்டும் பாரு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.


முதல் கேம்ல எதிராளி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே ஜெயிச்சேன். அதே வேகத்தோடு ஒவ்வொரு கேம்லயும் அடிச்சு ஃபைனல்ஸூக்கு வந்தேன். அங்கே காத்துட்டு இருந்தது, என் கூடவே வந்திருந்த நம்ம நாட்டு பிளேயர்தான். எதையும் மனசுல ஏத்திக்காம விளையாடினேன். ஜெயிச்சுட்டேன். உலக சாம்பியன்! மனதளவிலும் உடலளவிலும் நான் ரொம்ப உடைஞ்சுகிடந்த நேரத்துல நான் சந்திச்ச உச்சகட்ட வெற்றி!


சரியான சமயத்துல சரியான முடிவெடுக்குறது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தப்பான சமயத்துல தப்பான முடிவு எடுக்காம இருக்குறதும்னு உணர்ந்த நாட்கள்!''


007
''எங்கப்பா மீன்பாடி வண்டி ஓட்டியே கஷ்டப்பட்டுட்டு இருந்தாரு. இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவருக்கு டாடா ஏஸ்னு மினி லாரி வாங்கிக் குடுத்தேன். அன்னிக்கு அவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்! 'நீ பையனா பொறந்திருந்தாக்கூட இப்படி எல்லாம் செஞ்சிருப்பியா?'ங்கிற கேள்வி அவர் பார்வையில தெரிஞ்சது. அவரும் வாய்விட்டுக் கேக்கலை. நானும் பதில் சொல்லலை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கே!''