Tuesday 29 June 2010

எப்போதும் இன்புற்றிருக்க - திரு.வெ.இறையன்பு.

கிழ்ச்சி, வெளியே தெரிகிற பொருளல்ல. நிலைத்த தியானத்தில் இருக்கும் சலனமற்ற புத்தரின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி ஒரு வகை; வயிறு குலுங்கச் சிரிக்கும் 'சிரிக்கும் புத்தரின்' மகிழ்ச்சி ஒரு வகை. இரண்டையும் ஒரே புள்ளியில் இணைப்பதே இன்பத்தின் ரகசியம்.
'அழகான பொருள்கள் எப்போதும் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கின்றன' என்கிறார் கீட்ஸ். உண்மை அது மட்டுமல்ல; 'மகிழ்ச்சியாக இருக்கும்போது, பார்க்கும் பொருள்கள் எல்லாம் அழகாகிவிடுகின்றன' என்பதுதான் அந்தக் கவிதையை நிறைவு செய்யமுடியும்.

சில நேரங்களில்... மிக அழகான பெண்ணுக்குச் சிறிதும் பொருந்தாத மணமகன் அமைந்திருப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுவோம். விசாரித்தால், அது காதல் திருமணம் என்கிற அதிர்ச்சியான செய்தி கசியும். 'இந்தப் பெண் அந்த ஆணுக்கு எப்படி அறிமுகமானாள்... எப்படி அவன்மீது காதல் கொண்டாள்?' என்று மண்டையைக் குழப்பிக் கொள்வோம். வேறொன்றுமில்லை... 'இவ்வளவு அழகான பெண் நமக்குக் கிடைக்கவில்லையே... நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்!' என்கிற ஒரு பொறாமைதான்.

அந்தப் பெண், மிக மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் அந்த ஆணைச் சந்தித்திருக்க வேண்டும்; அது, அவளை அந்த ஆண் மகனை நோக்கி ஈர்த்திருக்கவேண்டும். மனம் நிறைந்திருக்கும்போது வீசும் மணம், உடனடி யாக மனதில் பதிந்துவிடுகிறது. அடுத்தமுறை அந்த நறுமணத்தை நாசி நுகர நேர்ந்தால், முதல்முறை நிகழ்ந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் இருந்தும் வெறுமையாய் உணர்பவர்கள் இருக்கிறார்கள்; எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். சிரித்தால் பல் வழியே பணம் நழுவிவிடுமோ என்று நடுங்கிச் சிரிக்காமலேயே முகத்தை எப்போதும் உர்ரென்று வைத்திருக்கும் பணக்காரர்களும் உண்டு; 'எங்களிடம் இழக்க எதுவுமில்லை' எனக் களித்திருக்கும் ஏழைகளும் இருக்கிறார்கள்.
கை- கால்கள் அற்ற ஒருவர், சகலநேரமும் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவரிடம் 'கஷ்டமில்லையா?' எனக் கேட்டதற்கு, 'இல்லை சார்! அதுதான் பாட முடிகிறதே' என்று அவர் பதில் சொன்னதாகவும், ஜெய மோகன் அண்மையில் உடல்நலம் பற்றி எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். வெகுநேரம் அதை அசைபோட்டேன்.
மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்ததும், உலகமே தன் காலடியில் கிடப்பதைப்போல் இறுமாந்திருப்பவர்கள் உண்டு. அந்த நேரத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு, 'ஆணவத் துடன் நடந்துகொள்கிறார்களோ?' என்றுகூட நினைக்கத் தோன்றும். ஆனால், ஐஸ்கிரீமைப் பார்த்ததும் துள்ளிக் குதிக் கும் குழந்தையின் மனநிலை அது என்பது முதிர்ச்சி அடைந் தவர்களுக்குத் தெரியும். வெளியே ததும்பும் மகிழ்ச்சியைவிட உள்ளே ஊறும் நிறைவு இனிமையானது. மகிழ்ச்சியை நெறிப் படுத்தத் தெரிந்தால், எந்த நொடியிலும் கலங்காமல் வாழ முடியும். ஆனால், சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் எகிறிக் குதிப்பவனுக்கு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எலும்பு முறியலாம்!



அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்...

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற இளைஞன் ஒருவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவன் எதிர்பார்க்காத ரேங்க். அவனுக்குத் தனது மகிழ்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரியவில்லை. புத்தி சுவாதீனமற்றவனைப் போல... தனக்குத்தானே பேசிக்கொண்டான்; சிரித்துக் கொண்டான். வீட்டார் பயந்துபோய், வெளியூரில் இருந்த புகழ்பெற்ற மருத்துவரிடம் அவனை அழைத்துச் சென்றனர். அவனைப் பரிசோதித்த மருத்துவர், ''உன் நோயைக் குணப்படுத்துவது கடினம். இன்னும் இரண்டே வாரங்களில் நீ இறந்துவிடுவாய்'' என்றார். மேலும், ஓர் ஊர் பெயரைக் குறிப்பிட்டு, ''அங்கே என் நண்பர் ஒருவர் இருக்கிறார். எதற்கும் அவரைப் போய்ப் பார். ஒருவேளை, அவரால் உன் நோயைக் குணப்படுத்த முடியலாம்'' என்று, பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார்.

இளைஞனுக்கு மகா அதிர்ச்சி! அங்கேயே தளர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான். அவனு டைய மகிழ்ச்சியெல்லாம் ஆவியாகிப் போனது. இரண்டு மணிநேரம் கழித்து, மெள்ள எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் மருத்துவர் குறிப்பிட்ட அந்த நண்பரைச் சந்தித்து, கடிதத் தைக் கொடுத்தான்.

கடிதத்தைப் பிரித்துப் படித்தவர், சிரித்தார். 'இந்த இளைஞன் ஆனந்த மனநிலையில் எல்லையைத் தாண்டிவிட்டான். அவனுடைய கட்டுக்கடங்காத மகிழ்ச்சி, நிறைய மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இதயத்தைப் பாதித்துவிட்டது. எந்த மருந் தாலும் குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டான். விரைவில் அவன் இறந்துவிடுவான் என்று சொல்லி, அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறேன். இந்த அதிர்ச்சி, அவனுடைய அதிகப்படியான மகிழ்ச் சியைக் குறைத்து, இதயத்தைச் சம நிலைக்குக் கொண்டு வரும் என நம்புகிறேன். உன்னிடம் வருவ தற்குள் அநேகமாக அவன் சரியாகியிருப்பான்.'

அந்தக் கடிதத்தில் இதுதான் எழுதப்பட்டிருந்தது. அதேபோலவே, அந்த இளைஞன் ஒரு நிதானத்துக்கு வந்து, குணமானான்.
மகிழ்ச்சியை ஒரு கட்டுக்குள் வைத்து நெறிப்படுத்துபவனால், அதை நீட்டிக்கச் செய்ய இயலும். வாழ்வின் வாய்ப்புகளே அதற்கு வழிவகுக்கின்றன. பெரிய வெற்றி வரும்போது, ஒரு சின்ன தோல்வியும் நமக்கு ஏற்படுகிறதல்லவா! இது... கோப்பையைப் பெற்றுக் கொண்டு பெருமிதத்துடன் ஓடிவருபவனின் காலில் கல் இடறிக் காயம் உண்டாவதைப்போல், நமது மகிழ்ச்சி மிதமிஞ்சிவிடாமல் ஒரு கட்டுக்குள் வைத்து, உடலையும் உள்ளத்தையும் சீராக்கவே! இதற்காக நாம் விதியை வீதிக்கு இழுக்க வேண்டியதில்லை.

நான் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில், உலகின் மீது உட்கார்ந் திருக்கும் மனநிலையுடன் வீட்டுக்கு வந்தேன். எனக்கு முன் ஒரு கடிதம் வந்து காத்திருந்தது. அதில், 'உங்கள் மார்புச் சுற்றளவு, ஐ.பி.எஸ். பணிக்கு உங்களைத் தகுதியற்றவராக ஆக்கு கிறது' என்ற வாசகங்கள்!
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத வன், துயரத்தில் சுருங்கிப்போவது இல்லை. சுனாமியின்போது, கடல் பொங்குவதற்கு முன் உள்வாங்கியதாகக் கரையில் இருந்த மீனவர்கள் சாட்சி சொல்கின்ற னர். அலைகள் வரும் பகுதி, கடலின் மேம்போக்கான பகுதி. ஆழமான பகுதி சலனமற்று இருக்கிறது.

வள்ளுவர்கூட இன்பத்துள் இன்பம் விழையாத வனைத் துன்பம் தொடர்வதில்லை எனக் குறிப்பிடு கிறார். இன்று நிறையப் பேர் குடும்பத்துடன் குதூகல மாக இருப்பதாகக் காட்டிக்கொள்கின்றனர். பலரும் பார்க்கும்படி கைகோத்துக்கொண்டு போகிற தம்பதியரெல்லாம் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள் என்று எண்ண வேண்டியதில்லை; அமைதியாக இடைவெளி விட்டுச் செல்கிற அனைவரும் மனஸ்தாபத்தில் மருள்கிறார்கள் என யூகிக்க வேண்டியதுமில்லை.

எப்போதும் இன்புற்றிருப்பவர்கள், தங்களின் சந்தோ ஷத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லா மல், மனதில் பூரணமாக நிறைந்திருக்கிறார்கள். சிரிக் கிற பல கண்களை உற்றுக் கவனித்தால், அவற்றில் நிறைவேறாத ஏக்கங்கள் ததும்பி இருப்பதைக் காண லாம்; தளும்பியிருக்கும் சிலருடைய விழிகளில், கருணையும் அன்பும் பொங்கி வழிவதைக் காணலாம். மகிழ்ச்சியில் மிதவாதியாக இருப்பவனுக்கு, ஆனந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன.

'எப்படியாவது இவனைச் சாய்த்துவிட மாட்டோமா' என இயற்கை காத்திருக்கிறது. மகிழ்ச்சியில் தன் நிலையை, இலக்கை, நெறியை முற்றிலுமாகத் தவற விடுவதே 'ஊழ்'. அதுதான் சிலப்பதிகாரத்தில் உறுத்து வந்து ஊட்டியது. ஓரிடத்தில் துரோகம், இன்னோர் இடத்தில் பழியாக இடறியது. அதனால்தான் கோவலனின் மகிழ்ச்சி எல்லை மீறியது; மாதவியின் நடனத்தை ரசித்த அவன், அவளையே ரசிக்க ஆரம்பித்தான்; சிதையவும் தொடங்கினான்.

'என் மகிழ்ச்சியை எல்லோருக்கும் தம்பட்டம் அடிக்கும் அவசியம் இல்லை' என்று எண்ணும் நிலையே ஆன்மிக மனநிலை. அப்படிப் பட்டவர்களின் அருகில் கண் மூடி சிறிது நேரம் அமர்ந்தால் போதும்; நம் மனத்திலும் இனம்புரியாத சிலிர்ப்பும், எழுச்சியும் ஏற்படும். அவர்களின் புன்னகை, நம் காயங்களை ஆற்றுப்படுத்தும்.

அதற்காக, மகிழ்ச்சியில் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பதல்ல. சின்னச் சின்ன நிகழ்வு களையும் திருவிழாவாக்கத் தெரிந்தவன், பகிர்ந்துகொள்வதையே மகிழ்ச்சியான நிகழ்ச்சி யாக மாற்றிக்கொள்கிறான். தேநீர் அருந்துவதும் திருவிழாவாகும். ஆனால், அது மேம்போக்கான கேளிக்கையாக இல்லாமல், உள்ளார்ந்த புரிதலாக நிகழும். வானத்தைப் பிடிக்கும் ஆசையில் பூமியை விட்டு விலகாத யதார்த்தமான மனப்பான்மையாக, திகழும். அடுத்தவர்களைத் துன்புறுத்தாது, அனைவரை யும் ஈர்க்கின்ற பேரின்ப நிகழ்வாக அது மலரும்.