Thursday 31 December 2009

செய் செய்யாதே!.- சத்குரு ஜக்கி வாசுதேவ்

"ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அப்போது, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத் தைக் கொண்டுவர என்னால் முடிந்த வரை பலமுறை முயன்றுவிட்டேன். அவன் இறுக்கமாகவே இருக்கிறான். அந்த நண்பன் உங்கள் மீது அபார மதிப்பு வைத்திருப்பவன். உங்கள் வார்த்தைகளைக் கவனிப்பவன். என்னை மறுபடியும் நெருக்கமான நண்பனாக ஏற்கச் சொல்லி நீங்கள் சொன்னால் கேட்பான். செய்வீர்களா?"

‘‘பிறப்பினாலோ, அல்லது சமூக பந்தத்தினாலோ, ஓர் உறவு அமைந்துவிட்டால், அது பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது மிகத் தவறு. மனைவியோ, கணவனோ, தாயோ, தந்தையோ, குழந்தையோ, நண்பரோ, எந்த நெருக்கமான உறவாக இருந்தாலும், அது இரும்புக் கவசம் அணிந்திருப்பதில்லை.

உறவு என்பது மிக அழகான கண்ணாடி ஜாடி போன்றது. அதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது. அதைக் கவனம்இன்றிக் கீழே போட்டுவிட்டால், அது நொறுங்கித்தான் போகும். நொறுங்கியதை மறுபடி பழைய வடிவத்துக்குக் கொண்டுவருவது இயலவே இயலாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மிகவும் கடினமான வேலை.

கடற்கரையில் சங்கரன்பிள்ளை நடந்துகொண்டு இருந்தார். ஒரு பையன் ஓடி வந்தான். அவரிடம் 'சார், வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பாட்டில் ஒன்றை எடுத்துக் காட்டினான்.

'என்ன விலை?' என்றார் சங்கரன்பிள்ளை.

'500 ரூபாய்.'

'கொள்ளையாக இருக்கிறதே, வேண்டாம்.'

'சரி, பிஸ்கட்டாவது வாங்கிக்கொள்ளுங்கள் சார். இரண்டே ரூபாய்தான்.'

சங்கரன்பிள்ளை பரிதாபப்பட்டு வாங்கினார். பிஸ்கட்டை வாயில் போட்டவர் தூதூவென்று துப்பினார்.

'என்ன கண்றாவி இது? இவ்வளவு மோசமாக நாறுகிறதே?'

'இப்போது சொல்லுங்கள் சார்... வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வேண்டுமா?'

இதைப்போலத்தான் பிரச்னைகளை நாமே உருவாக்கிவிட்டு, அவற்றுக்குத் தீர்வு தேடி அலைகிறோம். எப்போதும், உங்கள் எண்ணத்துக்கு ஏற்ப மற்றவரை மாற்ற வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. நீங்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி எப்படிப்பட்ட உறவும் நிலைத்து இருக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

சில உறவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். 'நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை' என்று உணர்ந்தவர்கள்கூட, ஏதோ காரணத்தினால் பிரிய நேரிடும். அப்படிப் பிரிந்து இருப்பது, சேர்ந்து இருந்ததைவிட அதிக நிம்மதி தரும் என்பதை அவர் கள் உணர்ந்துவிட்டால், எதற்கு மறு படியும் தலைவலி என்று ஒதுங்கி இருக்கத்தானே நினைப்பார்கள்?

உங்கள் நண்பர் ஒருவேளை ஏதோ ஓர் ஆதாயத்துக்காக உங்களுடன் நட்பு பாராட்டியிருந்தால், அவருக்கான ஆதாயம் கிடைத்ததும், பிரிவதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்து இருந்திருக்கக்கூடும். நீங்கள் சொன்ன வார்த்தைகளைக் காரணம் காட்டி, அவர் ஒதுங்கியிருக்கலாம்.

அவர் கோபத்திலோ, வருத்தத்திலோ இருந்தால் அந்தக் கோபத்தைக் குறைக்கப் பார்க்கலாம். விட்டதடா தொல்லை என்று அவர் ஒதுங்கப்பார்த்தால், யார் சொன்னதற் காகவும் அவர் உங்களுடன் மீண்டும் நண்பர் ஆகப் போவதில்லை.

ஒவ்வோர் உறவின் ஏமாற்றமும் சரிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால், அத்தனை பேரும் சரிசெய்யக்கூடிவர்களாக இருப்பதில்லை. அதற்கான பக்குவம் பெற்றவர்களாக அவர்கள் விளங்குவது இல்லை.

இந்த உண்மையை முதலில் முழுமையாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது அந்த நண்பருடைய உறவு உங்களுக்கு முக்கியமானதா என்பதைத் தீர்மானியுங்கள். முக்கியமானது என்றால், செய்த தவறுக்கு அவரிடம் மனதார மன்னிப்புக் கேளுங்கள்.

'ஏதோ ஓர் அறியாமையில், முட்டாள்தனத்தில் தவறாகப் பேசிவிட்டேன், என் உணர்வு உன் நட்பைத்தான் விரும்புகிறது' என்று அவருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். சொல்லிவிட்டு, முடிவு செய்ய அவருக்கு அவகாசம் கொடுங்கள். அவர் நெருங்கி வருகிறாரா, பாருங்கள்.

அந்த இடைவெளிகூடக் கொடுக்காமல், மேலும் மேலும் அவரை நட்புக்காக வற்புறுத்தினால், அது மேலும் எரிச்சலைக் கிளப்பிவிடக்கூடும். அவர் உடனடியாக இறங்கி வராமல் போகலாம். இன்றைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, நாளைக்கு அதே தவறை நீங்கள் செய்வீர்கள் என்று அவர் நினைத்தால், அவர் உங்கள் மன்னிப்பைப் பொருட்படுத்தாமல் போகக்கூடும்.

அப்படி ஒரு நிலை வந்தால், உங்கள் வாழ்க்கையைச் சற்று ஊன்றிக் கவனியுங்கள். உங்கள் வார்த்தைகளை முழுமையாக நம்ப முடியுமா? உங்கள் மீது மற்றவர்கள் முழுமையான நம்பிக்கைவைக்கும் அளவு நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.

நாம் பீகாரில் இருக்கும்போது, குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வந்து சேர்ந்துவிட்டால், நம் வாட்ச் நின்றுவிட்டதா என்று ஆட்டிப்பார்க்கிறோம். இதுவே ஜப்பானில் இருந்தால், ரயிலைப் பார்த்துவிட்டு வாட்ச்சில் நேரத்தைச் சரிசெய்யலாம்.

சாராயத்துக்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். 'இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும்' என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்திஎடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

பார்த்தான் நண்பன். ஒருநாள், ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக் கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப் போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான்.

'டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது' என்றான்.

'சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து...'

'கவலைப்படாதே நண்பா... வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்' என்றான் அவன்.

நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல் தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்துஇருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள் மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா?

உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல; நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது.

நீங்கள் சொன்னால் அதை வேத வாக்கியமாக எடுத்துக்கொள்ள இயலும் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு நம்பிக்கை மற்றவரிடத்தில் பிறந்துவிட்டால், உங்கள் வேலை சுலபம். நீங்கள் போய் மன்னிப்பு கேட்டால், உங்கள் நண்பர் மனம் மாறுவார்!''

- சரி செய்வோம்...

நன்றி விகடன்.

"பெற்றால்தான் பிள்ளையா ?" எஸ்.ராமகிருஷ்ணன்

அந்தப் பையனுக்கு 14 வயதிருக்கும். சென்னையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சம்மர் கேம்ப் ஒன்றில் அவனைச் சந்தித்தேன். ஓவியப் போட்டி, கதை சொல்லுதல், பாட்டுப் போட்டி என்று நான்கைந்து முதல் பரிசுகள் வாங்கியிருந்தான். உற்சாகம் பொங்கும் தோற்றம். வெளிறிய மஞ்சள் நிற உடல்வாகு, சப்பையான முகம். செம்பட்டை படிந்த தலை. நிச்சயம் இவன் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.

சம்மர் கேம்ப் ஏற்பாடு செய்திருந்த பள்ளியின் நிர்வாகி மைக்கில் பேசத் துவங்கினார், "நமது பள்ளியில் பணிபுரியும் சுப்ரஜா டீச்சரால் இரண்டு வயதிலேயே தத்து எடுக்கப்பட்ட அஸ்வின் என்ற நேபாளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன், இன்று ஐந்து முதல் பரிசுகள் வென்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. யாவரும் அதைக் கைதட்டி வரவேற்போம்'' என்றார். மாணவர்கள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், அஸ்வின் முகத்தில் இருந்த சந்தோஷம் அப்படியே வடிந்திருந்தது. அவன் அவசரமாக மேடையைவிட்டு இறங்கி ஓடினான்.

எதற்காக அவனைத் தத்துப்பிள்ளை என்று அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மேடையில் பேசியது போதாது என்பதுபோல, என் அருகில் உட்கார்ந்த நிர்வாகி, "இந்தப் பையனின் அப்பா-அம்மா எல்லாம் நேபாளிகள். ஸ்வெட்டர் விற்க வந்த ஆட்கள். புருஷன் விட்டுட்டுப் போயிட்டான். நேபாளிப் பெண்ணாலே பிள்ளையைப் பெத்து வளர்க்க முடியலை. டீச்சருக்கும் கல்யாணமாகி ஏழு வருஷமாப் பிள்ளை இல்லை. அதனால், இந்தப் பையனைப் பெரிய மனசு பண்ணி தத்து எடுத்துக்கிட்டாங்க. இப்போ டீச்சர் பேரைக் காப்பாத்துற மாதிரி படிக்கிறான். எங்கே பிறந்தா என்ன? எல்லாம் நாம வளர்க்கிறதுலதானே இருக்கு'' என்று சொன்னார்.

என்னால் அந்த அசட்டு உளறல்களைத் தாங்க முடியவில்லை. "அந்தப் பையனை நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள்'' என்று முகத்துக்கு நேராகச் சொன்னேன். அவரோ, "உண்மையைத்தானே சொன்னேன். இதில் என்ன அவமானப்படுத்த இருக்கிறது?'' என்றார். "அந்த உண்மை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது உங்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதான் இப்படிப் பேசுகிறீர்கள்'' என்று கடுத்த குரலில் சொன்னேன். அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அன்றெல்லாம் ஆத்திரம் எனக்குத் தணியவே இல்லை.

திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் போனால், தம்பதிகள் சந்திக்கும் கேலிகளும், ஏளனப் பேச்சுக் களும், இலவச ஆலோசனைகளும் சகிக்க முடியாத வேதனைகள். குழந்தை பெற்றுவிட்டதைப் பெரிய சாதனைபோலப் பேசும் பலரைக் கண்டிருக்கிறேன். அதுபோலவே குழந்தை இல்லா தவர்கள் என்னதான் படித்து, உயர்வேலை செய்து வசதியாக வாழ்ந்தபோதும் அவர்களை விரல் நீட்டி, 'உங்களுக்குத்தான் பிள்ளை இல்லையே' என்று இளக்காரமாகப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

திருமணம், ஆணைவிடப் பெண்களுக்குப் பெரிய சவாலா கவே இருக்கிறது. உலகில் எந்த ஆணும் தான் பிறந்த வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்குப் போய் அவர்களது சாப்பாட்டை, பழக்கவழக்கத்தை, இனிஷியலைப் போட்டுக்கொண்டு அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஏதோ சில சலுகைகளுக்காக அப்படி முன்வரும் ஒரு சிலர்கூட அதைப் பெரிய தியாகச் செயல்போலத்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால், பெண்கள் திருமணமான உடனே தங்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவர்கள் வீட்டு உணவின் ருசியோ, பழக்கமோ எதுவும் இருக்கக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறோம். எவ்வளவு அபத்தமான முரண் இது. குழந்தைப்பேறின்மைக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை நாம் யோசிப்பதே இல்லை. குழந்தை இல்லை என்று மறுமணம் செய்துகொண்ட ஆண்கள் பலரைக் கண்டு இருக்கிறேன். அப்படி ஒரு பெண்ணைக்கூட நாம் அனுமதிக்கவில்லையே... அது ஏன்?

குழந்தை இல்லாமல் இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், யாரோ ஒரு குழந்தையைத் தத்து எடுப்பதை என் உயிர் உள்ளவரை அனுமதிக்கவே மாட்டேன் என்று வீம்பு பேசும் வயதானவர்கள் பல வீடுகளில் இருக்கிறார்கள். இவர்களுக்குப் பயந்து தத்து எடுப்பதைக் கைவிட்ட பலரையும் கண்டு இருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் பணிபுரிகிறார். அவருக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லை. கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பேசி, ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்தனர். அந்தக் குழந்தைக் குப் பெயர் சூட்டும் விழாவுக்கு யாவரையும் அழைத்திருந்தார். நண்பரின் தாய் - தந்தை மற்றும் அவர் மனைவியின் உறவினர் என்று வந்திருந்த அத்தனை பேரும், "ஏன் இப்படிச் செய்தீர்கள்? இந்தப் பிள்ளை என்ன சாதியோ, என்ன குலமோ, ஏதாவது நோய் இருக்குமோ? இவள் நிறத்தைப் பாருங்கள்... அட்டைக் கரி. சிவப்பான பிள்ளையைத் தத்து எடுத்திருக்கலாமே'' என்று குற்றம் சொன்னதோடு, ஒருவரும் குழந்தையைத் தொட்டுத் தூக்கவோ, கொஞ்சவோ இல்லை.

எங்கோ கோயிலில் பார்க்கும் அடுத்தவர் குழந்தையைக்கூட ஆசையாகத் தொட்டுத் தூக்கும் நண்பரின் அம்மா, தன் மகன் யாரோ ஒரு அநாதை குழந்தையைத் தத்து எடுத்துவிட்டானே என்று, கடசிவரை குழந்தையைத் தொடவே இல்லை. தத்து எடுப்பதாக ஆசை இருந்தால் சொந்தத்தில் எடுத்திருக்கலாமே என்று அவரது அப்பா ஆதங்கப்பட்டார். இவர்களை ஏன் அழைத்தோம் என்று நண்பருக்கு மனச்சோர்வாகிப்போனது.

அந்தக் குழந்தையை எங்கே அழைத்துச் சென்றாலும், இதே கேள்விகள்... அபத்தமான அறிவுரைகள் அவர்களை ரணப்படுத்தின. ஒருமுறை மருத்துவமனையில், "இது உங்க வயித்துல வளர்ந்த பிள்ளை இல்லையா? அதான் பிள்ளை இப்படி மெலிஞ்சிபோயிருக்கு'' என்று ஒரு நர்ஸ் முகத்துக்கு நேராகச் சொல்லியதும், நண்பர் மனைவி வாய்விட்டு அழுதிருக்கிறார்.

அதற்காகவே அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்வதில்லை. நண்பர்கள் வீடுகளுக்குக்கூட வருவதில்லை. அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தபோதுதான் அவர்கள் இயல்பானார்கள். ஆனால், அப்போதும் ஊரில் இருந்து வந்துபோகும் யாராவது அந்தப் பிள்ளையின் முன்னால் அது தத்துப்பிள்ளை என்று சொல்லி மனதை நோகடிப்பார்கள்.

அப்படி ஊரில் இருந்து வந்த மாமா ஒருவர் அந்தச் சிறுமியைப் பார்த்து, "இதுதான் அடாப்டட் சைல்டா? நோகாம பிள்ளை பெத்துக்கிடறதுன்னு சொல்வாங்க. அது உங்க விஷயத்துல நடந்திருக்கு. பெத்த பிள்ளைகளையே நம்ப முடியலை. தத்துப் பிள்ளைன்னா ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. எவனையாவது இழுத்துக்கிட்டு ஓடிப் போயிரும். பிறகு, நாமதான் தெருவுல நிக்கணும்'' என்று கமென்ட் அடித்திருக்கிறார்.

நண்பர் இந்த வலியைத் தாங்கிப் பழகியதால், அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார். ஆனால், அந்தச் சிறுமி அந்தச் சொல்லால் மிகவும் காயமடைந்துவிட்டாள். இரவெல்லாம் சாப்பிடாமல் அழுதிருக்கிறாள். அவளுக்காகவே நண்பர் வட இந்தியாவுக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு சென்றார்.

100 கோடிக்கும் மேலாக மக்கள்தொகை உள்ள நாட்டில் குழந்தை இல்லை என்பது பற்றி எரியும் பிரச்னையாக இருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். முந்தைய தலைமுறைகள்போல தத்து எடுப்பதற்கு இன்றைய பெற்றோர்கள் அதிகம் யோசிப்பதோ, தயக்கம் காட்டுவதோ இல்லை. ஆனால், அவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் காயப்படுத்து பவர்கள் பெரிதும் குடும்பத்து நபர்களே.

காலங்காலமாகவே நமது சமூகம் குழந்தைப்பேற்றை மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடுகிறது. குழந்தை இல்லாதவர்கள் பாவிகள். சபிக்கப்பட்டவர்கள் என்ற பொதுபிம்பத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. இரண்டும் இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாகி அர்த்தமற்றவையாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

குழந்தைகள் உலகுக்கு ஒளியாக வருகிறார்கள். ஒளியில் ஏது பேதம்? உண்மையில் குழந்தைகள் நம் நம்பிக்கைகள், கனவுகள். அன்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். நாம் வாழ்ந்த நினைவுகளை நாம் வசித்த வீடும், ஊரும், சேர்ந்த பணமும், செல்வமும் தேக்கிவைப்பதில்லை. ஆனால், நம் குழந்தைகளிடம் மட்டுமே நம் நினைவுகள் எஞ்சியிருக்கின்றன. நெஞ்சில்வைத்துக் காப்பாற்றப்படுகின்றன.

உலகமே பார்த்து ஆச்சர்யப்படும் சூப்பர்மேன் கதாபாத்திரம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பிள்ளையே. நம் காலத்தின் மாபெரும் தத்துவவாதியும் சிந்தனாவாதியுமான ஜெ.கிருஷ்ண மூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரே. செட்டிநாட்டில் ஆண் வாரிசுக்காகத் தத்து எடுப்பது தலைமுறை வழக்கமாகவே இருந்து வருகிறது. தத்துப்பிள்ளை என்பதற்காக அங்கே எந்தப் பேதமும் காட்டப்படுவது இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீனப் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தை இயக்கியவர் ஷென் கேஹே. 13 வயதுச் சிறுவன் ஒருவனையும் அவன் அப்பாவையும்பற்றியது படம். அந்தச் சிறுவனுக்கு வயலின் வாசிப்பதில் மிகவும் அசாத்தியமான திறமை இருக்கிறது. அப்பாவோ, சாதாரணத் தொழிலாளி.

தன் மகனை மொசார்ட் போல நாடறிந்த இசைக் கலைஞன் ஆக்குவதற்காக பீகிங் அழைத்து வரும் அப்பா, அங்கே இசைப் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவைக்க ஆசைப்படுகிறார். அந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள திறமையான இளம் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ஆகவே, அவனுக்குச் சிறப்பு பயிற்சியளிக்க நல்ல ஆசான் ஒருவர் தேவை என்று அறிந்து, சீனாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைத் தேடிச் சென்று, தன் மகன் அவரிடம் பாடம் படிக்க அனுமதிக்கும்படி கேட்கிறார். அதற்கு நிறையப் பணம் செலவாகும் என்றபோதும், தன்னிடம் உள்ள பொருட்களை விற்றுக் கடன் வாங்கி அவனைப் படிக்க அனுமதிக்கிறார்.

சிறுவனுக்கோ பதின் பிராயத்தில் தோன்றும் ஊர் சுற்றும் ஆசை. பெண்கள் மீது தோன்றும் ஏக்கம் காரணமாக அவன் திசை தடுமாறத் துவங்குகிறான். அப்பா அவனைக் கண்டிக்கிறார். இசையில் சாதனை செய்வது மட்டுமே அவனது உலகம் என்று திட்டுகிறார். அவன் தேர்ந்த இசைத் திறனுடன் இருந்தபோதும், அப்பாவின் ஆசைக்காக எதற்கு தான் சாதிக்க வேண்டும் என்று வீண்பிடிவாதம்கொள்கிறான். அப்பா சொன்ன இசைக் கலைஞரிடம் மனமில்லாமல் பாடம் படிக்கிறான்.

போட்டி நடக்கும் நாளில் தனக்கு இசை முக்கியம் இல்லை என்று விலக முடிவு செய்கிறான். அப்பா ஆத்திரமாகி அவனைப் பிரிந்து போகிறார். அப்போதுதான் அவன் ஒரு தத்துப்பிள்ளை, அவனைக் குழந்தையாக யாரோ ரயில் நிலையத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்பா அவனைக் கண்டெடுத்து வளர்த்து இசைக் கலைஞனாக உருவாக்க மிகவும் போராடியிருக்கிறார் என்ற உண்மைகள் தெரியவருகின்றன.

போட்டியில் வெல்வதைவிடவும், தன்னைப் பிரிந்து போகும் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகத் தனது வயலினுடன் ரயில் நிலையம் ஓடி வருகிறான். அங்கே பெரும் ஜனத்திரள் ததும்பி வழிகிறது. அப்பாவைத் தேடிக் காணாமல் மனம் உடைந்து வயலின் வாசிக்கத் துவங்குகிறான். மிக அற்புதமான வயலின் இசை ரயில் நிலையத்தையே ஸ்தம்பிக்கவைக்கிறது. இசை முடிவில் பொதுமக்கள் அவனைக் கைதட்டிக் கொண்டாடுகிறார்கள். தன்னை வளர்ப்பதற்கு அப்பா எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டு அழுகிறான் மகன். அவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

தனது சொந்த வாழ்க்கையை மறந்து, தான் கண்டெடுத்த பிள்ளையின் திறமையை உலகம் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவின் மனதுதான் இந்தப் படம். இது எங்கோ... யாரோ ஓர் அப்பாவின் ஆசை மட்டுமில்லை. பிறப்பில் பேதமில்லை என்ற உறுதியான நம்பிக்கையுடன் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து உன்னத நிலையை அடையவைக்க ஆசைப்படும் பலரது மனதும் இதுவே!

இன்னும் பரவும்...

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
நன்றி விகடன்.

Thursday 17 December 2009

சாதிகள் (நிஜமாகவே) இல்லையடி பாப்பா!

விகடன் இதழ் 'டீன் கொஸ்டீன்' பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வி-பதில் இது...

"சாதி மாறித் திருமணம் செய்துகொண்டவன் நான். என் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா?"

"கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் சாதியில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இப்போது இருக்கும் நடைமுறைப்படி பள்ளிச் சான்றிதழ் மற்றும் அரசின் பிற வேலைவாய்ப்புச் சான்றிதழ்களிலும் சாதி அவசியமாகிறது. சாதி பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், பள்ளியில் சேர்க்க மறுப்பது இப்போது உள்ள சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், 'சாதியைக் குறிப்பிடச் சொல்லக் கூடாது' என்று நீங்கள் விரும்பினால், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால் உரிய தீர்வு கிடைக்கும். சாதி குறிப்பிடவில்லை என்றால், உங்கள் குழந்தை பொதுப் பிரிவில் வரும்!"

இதழ் வெளியான மூன்றாவது நாளில் விகடன் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் சாராம்சம் இது...

"என் பேரு செந்தில்குமாருங்க. சென்னைல வேலை பாக்குற சேலத்துக்காரன். நான் சின்ன வயசுல இருந்தே சாதிக் கொடுமையால ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்ந்தவனுங்க. வாழ்க்கையோட வரமா எனக்குப் பொறந்தா ஆராதனா. அவ பொறந்த நிமிஷத்துல இருந்தே சாதி பேரைச் சொல்லி கிடைக்கும் எந்தச் சலுகையும் அவளுக்குத் தேவையில்லைன்னு முடிவெடுத்தேன். இப்ப அவளுக்கு மூணு வயசு. ஆராதனாவுக்கு எல்.கே.ஜி. அட்மிஷனுக்குப் போனப்போ அட்மிஷன் ஃபார்ம்ல 'சாதி'ங்கிற காலத்துல 'சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை'ன்னு எழுதினேன். 'சாதியைக் குறிப்பிடலைன்னா உங்க குழந்தைக்கு எதிர்காலத்துல சில சலுகைகள் கிடைக்காமப் போகலாம். பரவாயில்லையா?'ன்னு கேட்டாங்க பிரின்சிபால். 'தேவையில்லை'ன்னு உறுதியாச் சொன்னேன். 'வெரிகுட்'னு சொல்லி அட்மிஷன் போட்டாங்க.

படிப்பு, வேலைவாய்ப்புன்னு எதுவா இருந்தாலும், தங்கள் சாதிகளைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு அதிகளவில் சலுகை அளிக்க அரசாங்கம் முன்வரணும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்திவிட்டால், ஒரு காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களும்கூட தலை நிமிருவாங்க. சாதிரீதியான அடையாளத்தைத் தவிர்க்கத் தயாராயிடுவாங்க. சாதிகளைப் பள்ளிகளில் குறிப்பிட அவசியம் இல்லைன்னு எத்தனை பேருக்கு இங்கே தெரியுது? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் சாதியைக் குறிப்பிடுவதால் கிடைக்கும் சலுகைக்காகவே அவங்க தயங்குறாங்க. இது ஸ்கூல் அட்மிஷன் நேரம். சாதிகளைக் குறிப்பிடாம உங்க குழந்தைகளைப் பள்ளிகளில் சேருங்க.

'சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!'னு முண்டாசுக் கவிஞன் அப்பவே பாடிட்டுப் போயிட்டான். ஆனா கம்ப்யூட்டர், இன்டர்நெட், நிலவுக்கு மனுஷன்னு இந்தக் காலத்துலயும் நாம அதை விடாமத் தொங்கிட்டு இருக்கோம். இன்னிக்கு நாம விதைச்சாதான் நாளைக்கு அறுவடை பண்ண முடியும். நான் விதைச்சுட்டேன்!"

நாளைய நம்பிக்கையுடன்,
செந்தில்குமார்.

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்டோம்,

"2000-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தமிழக அரசாணை 205, 'இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றல் சான்றிதழ் ஆகியவற்றில் 'சாதி இல்லை, சமயம் இல்லை' என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ விரும்புவர்களுக்கு அந்த உரிமையை வழங்குகிறது. சாதியைக் குறிப்பிடாதவர்கள் பொதுப்பிரிவில் இணைக்கப்பட்டு விடுவார்கள்!" என்று தெரிவித்தார்.

எல்லோருமே 'பொதுப் பிரிவு' ஆகும் ஒரு நன்னாள் வரட்டும்!

நன்றி விகடன் !!!!

Friday 11 December 2009

சூரி +2

நான் ஒரு சராசரி மாணவன். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி அடுத்தடுத்த கிளாசுக்கு வந்திடுவேன். எனக்கு வகுப்பறையில் முதல் வரிசையில் உட்கார ரொம்ப ஆசை. எப்படியாவது முதல் வரிசையில் உட்கார்ந்து நல்லா படிக்கிற மாணவனாக என்னை அடையாளப்படுத்தி கொள்வேன்.

+2 முதல் நாள் கிளாசுக்கு வந்திருந்தபோது, வகுப்பாசிரியர் அனைத்து மாணவர்களையும் உயரம் குறைந்தவர்கள் முதல் உயரமானவர்கள் வரை வரிசையாக நிற்க வைத்து கொண்டிருந்தார். +1 லிருந்து +2 வரும்போது சற்று உயரமாக வளர்ந்துவிட்டேன். எப்படியோ என்னுடைய காலை கொஞ்சமாக வளைத்து நெளித்து 7 வதாக நின்று முதல் வரிசையில் அமர்ந்து விட்டேன். எனக்கு இடது பக்கம் கோபிநாத் (தற்போது மருத்துவர்), வலது பக்கம் இர்பான் (தற்போது அரசு ஊழியர்). இருவருமே மிக சிறந்த படிப்பாளிகள். இந்த மாதிரி நல்லா படிக்கிற பசங்களோட பழகியே நானும் எப்படியோ நல்லா படிச்சிட்டேன்.

எப்படியோ முதல் வரிசையில இடம் பிடித்து உட்கார்ந்த மகிழ்ச்சியில் திளைத்துகொண்டிருந்தேன். வேதியியல் ஆசிரியர் உள்ளே நுழைந்து முதல் நாள் பாடம் எடுக்க துவங்கினார். முதல் நாள் என்பதால் பாடங்களை தவிர்த்து பொதுவான விஷயங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் எல்லோரையும் பார்த்து "ஒரு கை ஓசை போடுமா" என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்ட உடன், என்னையும் அறியாமல் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஒரு கையால் இரண்டு முறை "சிட்டிகை" போட்டு விட்டேன்.

வகுப்பறை முழுவதும் சில நிமிட அமைதி. ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. என்னை வகுப்பறையை விட்டு வெளியே சென்று நிற்குமாறு சொல்லிவிட்டார். அந்த வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். என் நண்பன் என்னருகில் வந்து, அவர் கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொன்னான். இல்லையென்றால் இந்த வருடம் வேதியியல் செய்முறை தேர்வில் (Practical Exam) அவர் உன் மதிப்பெண்ணை குறைத்துவிடுவார் என்று சொன்னான்.

வேகமாக சென்று வேதியியல் ஆசிரியரிடம் என்னை அறியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டேன். அவர் அடுத்த வினாடியே என் முதுகில் அவர் கையால் மூன்று அடி அடித்து விட்டார். எத்தனையோ
ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருந்தாலும், இந்த அடி என்னால் என்றும் மறக்க முடியாதது.

அவரிடம் டியூஷன் படித்தேன், காலாண்டு, அரையாண்டு வேதியியல் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி அவரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வெளியாகி இருந்தது. இயற்பியல் செய்முறை தேர்வில் (Physics practical ) 50/50, உயிரியல் செய்முறை தேர்வில் (Biology practical) 50/50 மற்றும் வேதியியல் செய்முறை தேர்வில் (Chemistry practical) 49/50.

இயற்பியல், உயிரியல் தேர்வை விட வேதியியல் தேர்வை மிக எளிமையாக செய்திருந்தேன். என் வகுப்பறை மாணவர்கள் பெரும்பாலானவர்கள் முழு மதிப்பெண்கள் வாங்கி இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டது ஏன்? என்பது மட்டும் இன்று வரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இந்த "வேதியியல் மாற்றம்" (Chemical reaction) என்னால் என்றும் மறக்க முடியாதது.
மாற்றங்கள் நிகழும்....
-சூரியபிரகாஷ்.வா