Thursday 29 April 2010

''நான் பாஸ்கர்சக்தி ஆனது எப்படி?''

ண் மணம் மாறா எழுத்து பாஸ்கர்சக்தியுடை யது. வாழ்வில் தவறவிடும் தருணங்களை எளிமையும் கிண்டலும் கலந்த மொழியில் எழுதிச் செல்பவர், சின்னத் திரையிலும், பெரிய திரையிலும் பரபரப்பான வசனகர்த்தா.

''தேனி பக்கம் வடபுதுப்பட்டி என் சொந்த ஊர். எட்டாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். படிப்பில் கெட்டிக்கார மாணவன். ஆனால், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும். வீசிங் பிரச்னை. உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் என் பிரச்னை புரிந்து கரிசனத்துடன் பார்த்துக்கொண்டனர். ஆனால், எட்டாம் வகுப்பு முடிந்ததும் வேறொரு ஊரில் ஒன்பதாம் வகுப்பு சேர வேண்டி இருந்தது. ஒரு மாதம்கூட இருக்காது. கடுமையான உடல்நல பாதிப்பு. பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டேன்.

உள்ளூரைவிட்டு தொழில் தேடி குடும்பம் வெவ்வேறு ஊர்களுக்கு மாறியது. எந்த ஊருக்குப் போனாலும் நூலகங்களைத் தேடிப்போய் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மட்டும் தொடர்ந்தது.

அப்பா திருமலைச்சாமி, விதவிதமான தொழில்கள் செய்து விதவிதமாக நஷ்டப்பட்டவர். உற்சாகமாக ஒன்றைத் துவங்கி படுதோல்வி அடை வார். ஓரிரு நாட்களில் அசராத அதே உற்சாகத்தோடு அடுத்த தொழிலை ஆரம்பிப்பது குறித்த கனவு களுடன் பேசிக்கொண்டு இருப்பார். நான் சிரிப்பு டனும் அம்மா கடுப்புடனும் அதனைக்கேட்டுக் கொண்டு இருப்போம். தனது ஒன்பதாவது தொழிலாக அப்பா விறகுக் கடை வைத்திருந்தார். அதை ஒரு வருடம் கவனித்துக்கொண்டு இருந்தேன். அந்த சமயம் கோட்டூரில் சித்தப்பா ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்தார். மிகுந்த சந்தோஷத்துடன் தியேட்டரில் போய் டிக்கெட் கிழித்தேன். வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தால், என்னுடன் படித்த பையன்கள் எல்லோரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தனர். நன்றாகப் படித்த ஆனால், எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத நான் தோல்வி அடைந்தவனாக உணர்ந்தேன். (என் அப்பா அப்போது சில்வர் பாத்திரங்களை வாங்கி வீட்டில்வைத்து உற்சாகமாக விற்கத் துவங்கி இருந் தார்!) தோற்றுவிடக்கூடாது என்கிற உள்ளுணர்வு உந்த, அடுத்த அக்டோபரில் நேரடியாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினேன். பாஸ். அடுத்த ஏப்ரலில் ப்ளஸ் டூ எழுதி அதிலும் பாஸ். பிறகு அஞ்சல் வழி பி.காம்., படிப்பில் சேர்ந்தேன். ஆனால், அது பிடிக்காமல் நிறுத்திட்டேன். இடையில் கிரிக் கெட், இளைஞர் மன்றம் என அந்த வாழ்க்கை ஒரு பக்கம். எல்லாவற்றுக்கும் மைய இழையாக இருந்தது இலக்கியம். தேனியில் அறிமுகமான த.மு.எ.ச.தோழர் கள் மூலமாக இடதுசாரி தத்துவமும், இலக்கியப் பரிமாற்றமும் சாத்தியமாயின. (இந்தக் காலகட்டத்தில் அப்பா செடி முருங்கைக் கன்றுகளை நாற்றுப்போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்!)

நான் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினேன். அப்பாவோ, வேலைக்குப் போனால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார். அதை மறுத்த அம்மா, 'உங்களை மாதிரி அவனும் உருப்படாமப் போறதுக்கா?' என அப்பாவை அதட்டி, என்னை கல்லூரியில் சேரச் சொன்னார். போடி சி.பி.ஏ. கல்லூரியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட் ரேச்சருக்கு விண்ணப்பித்தேன். எனது படிப்பு வழிப் பயணத்தைப் பார்த்து எனக்கு சீட் தர தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் எனக்காகப் பேசி சீட் வாங்கித் தந்தவர் பேராசிரியர் மோகனசுந்தரம். ஒரு வழியாக நானும் பி.ஏ., முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயில வந்தேன். அடிமனதில் எழுத வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ரொம்ப வருடங்கள் கழித்து 95-ம் வருடம்தான் முதன்முதலில் ஒரு கதை எழுதினேன். 'சாதனம்' என்ற அந்தக் கதை இந்தியா டுடே இலக்கிய மலரில் இரண்டாவது பரிசைப் பெற்றது. இரண்டாவது கதை எழுத இன்னொரு வருடம் ஆனது. அது இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

அதைத் தொடர்ந்துதான் விகடனில் சேர்ந்தேன். (இப்போது அப்பாவுக்கு அண்ணன் ஒரு எஸ்.டீ.டி. பூத்வைத்துக் கொடுத்திருந்தார். அப்பா முன்னிலும் உற்சாகமாக இருந்தார்!) 'ரூட் பஸ்' என்ற எனது முதல் குறுந்தொடர் விகடனில் வெளியானது. அடுத்தடுத்த வருடங்களில் நிறைய கதைகளும், சில தொடர்களும் எழுதினேன். அப்படி எழுதிய ஒரு தொடர்தான் 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்'. அந்த சமயம் அப்பாவுக்கு தொண்டையில் பாதிப்பு. புற்றுநோய் என்றார்கள். அப்பாவைப் பார்த்துக் கொண்டு ஊரில் அண்ணன்வைத்திருந்த எஸ்.டீ.டி. பூத்தையும் கவனித்துக்கொண்டு தேனியிலேயே எழுத்தாளராக ஃபார்ம் ஆகிவிடலாம் என்று நினைத்து தேனிக்குப் போய்விட்டேன். கொஞ்ச நாட்களிலேயே எனது 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்' கதையை மைக்ரோ தொடராக மின் பிம்பங்கள் எடுத்தது. திருமுருகன் இயக்கினார். மருத்துவ மனையில் படுக்கையில் அப்பா. அருகில் நான். அப்பா டி.வி-யில் ஒளிபரப்பான தொடரைப் பார்த்தார். என் மீது அளவு கடந்த நம்பிக்கைவைத்திருந்த அவருக்கு 'நான்என்ன வாகப் போகிறேன்' என்பதில் மட்டும் குழப்பம் இருந்தது. அந்த டி.வி. தொடரைப் பார்த்ததும் குழப்பம் நீங்கியவராக, 'பரவாயில்லேப்பா, உனக்கு இது நல்லா வரும் போலிருக்கு' என்றார். கடைசி வரை எந்தத் தொழில் தனக்கு வரும் என்பதைத் தேடிக்கொண்டே இருந்தவர் அவர்.

அந்த மைக்ரோ தொடர் முடிந்ததும் திருமுருகன் இயக்கத்தில் 'காவேரி' என்ற சீரியலுக்கு வசனம் எழுதினேன். முழுக்க முழுக்க மும்பையிலேயே ஷூட்டிங். சீரியல் நடக்கும்போது அப்பாவின் உடல்நிலை மோசமானது. என்னை வரவழைக்க வேண்டும் என்று அம்மாவும் அண்ணனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். படுத்திருந்த அப்பா சட்டெனக் கண் விழித்து, 'இப்பத்தான் போயிருக்கான். அதுக்குள்ள அவனைக் கூப்பிட வேணாம். நான் இன்னும் ஒரு வாரம் இருப்பேன்' என்றாராம். சரியாக அடுத்த வாரம் அப்பா இறந்து போனார். வாழ்வில் எந்தத் தோல்வியிலும் நம்பிக்கை இழக்காத அந்த மனிதரைத்தான் சோர்வு ஏற்படும்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன். என் குறித்த நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் மரணத் தருவாயிலாவது அவருக்குத் தர முடிந்ததை ஒரு பாக்கி யமாகக் கருதுகிறேன். ஒரு வாரம் கழித்து மொட்டைத் தலையுடன் மும்பைக்குச் சென்று அவரது நினைவுகளுடன் வேலையைத் தொடர்ந்தேன். 'காவேரி' முடிந்ததும் அடுத்த வேலைக்கு திருமுருகன் அழைத்தார். 'மெட்டி ஒலி' ஆரம்பம். 700-க்கும் அதிகமான எபிசோடுகள். இதற்கி டையே திருச்செல்வம் 'கோலங்கள்' ஆரம்பித்தார். அதற்கும் நான்தான் வசனம். இதோ இப்போது திருமுருகனின் 'நாதஸ்வரம்' தொடருக்கும் வசனம் எழுதுகிறேன். 2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை சன் டி.வி-யில் ஏதோ ஒரு ஸ்லாட்டில் நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

திருமுருகன் என்னை சினிமாவுக்கும் அழைத்துச் சென் றார். அவரது 'எம்டன் மகன்', 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு', சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடிக் குழு', அவர் தற்போது இயக்கிக்கொண்டு இருக்கும் 'நான் மகான் அல்ல' என்று திரைத் துறையிலும் வேலை தொடர்கிறது. தோல்விகளின்போது எல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. வெற்றிகளின்போது எல்லாம் அவரது நம்பிக்கை நினைவுக்கு வருகிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்த, உடல் நலமற்று மனச்சோர்வுற்று அமர்ந்திருந்த, அந்தச் சிறுவனை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். அவனை இத்தனை தூரம் அழைத்து வந்த அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!''

நன்றி விகடன்....

Thursday 8 April 2010

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் - கோபிநாத்

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார், 'எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயன்றால், எல்லோருக்கும் கெட்டவனாகிவிடுவாய்' என்று. உண்மைதான். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் 'சரி' சொல்பவர்கள் நிறையப் பேர்.

'சரி' சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும் 'சரி' சொல்லி வேலையை இழுத்துப்போட்டுச் செய்யும்போது அனைவரின் அபிமானத்தையும் பாராட்டையும் பெறுவதுபோலத் தோன்றலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்கிற மனோபாவத்தை எல்லோர் மனதிலும் நீங்களே விதைத்துவிடுகிறீர்கள்.

விளைவு, என்றைக்காவது ஒருநாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிறபோது, 'இவன் முன்னைப்போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும். நீங்கள் ஏற்கெனவே பல பேருக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலைகளைச் செய்ய முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும், எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்துப்போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீர்கள். இப்போது, 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்று குற்றம் சாட்டுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும்.
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க நீங்கள் எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிரா கத் திரும்பி நிற்கிறது. போதாக்குறைக்கு இவர் களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.

'சரி'யோ இல்லை 'முடியாது' என்று சொல்வதோ கண்ணையும் மனதையும் மூடிக்கொண்டு சொல்லாதீர்கள். அதனை முடிவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் 'சரி' சொல்ல வேண்டிய நிர்பந்தங்களே நமக்கு நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில், யார் எது சொன்னாலும் அவர்கள் மனசு நோகக் கூடாது என்பதற்காக 'சரி' என்று தலை ஆட்ட ஆரம்பித்தால், தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். முறையாக 'முடியாது' என்று தேவையான இடங்களில் சொல்லிப் பழகாத தால்தான், பலர் கஷ்டப்படுகிறார்கள்.

தன் உயர் அதிகாரியோ, முதலாளியோ, முடியாது என்று சொன்னால், தன்னைப்பற்றித் தவறாக நினைத்துவிடுவார் என்ற எண்ணம்தான் பல நேரங் களில் நம்மைச் 'சரி' சொல்லவைக்கிறது. 'ஏம்ப்பா, உன்னாலதான் அதைச் செய்ய முடியாதே அப்புறம் ஏன் 'சரி'ன்னு தலையாட்டிட்டு வந்தே?' என்று யாராவது கேட்டால், 'முடியாது' என்று எப்படிச் சொல்வது என்று பதில் வரும்.

உண்மைதான். முடியாது என்பதை நாசூக்காகவும், நாகரிகமாகவும் எதிரில் இருப்பவருக்குப் புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சியே நமக்குக் கிடையாதே. தலையை வலமும் இடமும் சாய்த்து நிமிர்த்தினால் வேலை முடிந்தது. 'சரி' என்று சொல்லிஆயிற்று.

நீங்கள் முடியாது என்று சொல்ல நினைத்த விஷ யத்துக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலையை எப்படி ஈடுபாட்டோடு செய்ய முடியும்? ஈடுபாடு இல்லாமல் செய்கிற வேலை எப்படி வெற்றி அடையும்? விளைவு, இரண்டாவது குற்றச்சாட்டும் உங்கள் மீது வரும். 'எல்லாத்துக்கும் சரி சொல்வாரு. ஆனா, ஒரு வேலையைக்கூட உருப்படியாச் செய்ய மாட்டாரு'.
கெட்ட பெயர் எடுக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் சொன்ன 'சரி' இப்போது உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது!

'முடியாது' என்று சொல்வதில் நமக்கு இருக்கிற இரண்டு முக்கியமான பிரச்னைகள் என்னென்ன? ஒன்று, அடுத்தவர் தவறாக நினைக்கக் கூடாது. இரண்டாவது முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

முதல் பிரச்னைக்கான பதில் ஏற்கெனவே கிடைத்துவிட்டது. இரண்டாவது பிரச்னைக்குத் தீர்வு என்ன? நாம் எல்லோரும் ஒன்றும் ராணுவத்தில் இல்லை. இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நீங்கள் 'முடியாது' என்று சொல்லவே கூடாது என எதிர்பார்க்கவும் இல்லை.
அதைவிட முக்கியமான விஷயம், அடுத்தவர் சொல்கிற அனைத்துக்கும் 'சரி' சொல்கிற ஆளாக இருக்கும்பட்சத்தில் உங்களின் சுய சிந்தனை மரத்துப் போகிறது. சுய சிந்தனை மரத்துப்போனவன் ஓர் இயந்திரம் மாதிரிதான் செயல்பட முடியும். அப்படிப்பட்ட ஒருவர் மீது முதலாளிக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ எப்படி மரியாதை வரும்?

நீங்கள் பகுத்தறியும் ஞானம் இல்லாதவர் என்பதைத் தான் எல்லாவற்றுக்கும் 'சரி' சொல்வதன் மூலம் வெளிப் படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப்போல 'முடியாது' என்று சொல்லுவது எளிதான காரியம் இல்லைதான். ஆனால், குறைந்தபட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங் கள், யோசித்துச் சொல்கிறேன்' என்று சொல்லலாம்.

இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் உலகம் உங்களின் 'முடியாது' என்று சொல்லத் தெரியாத பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. உங்களுக்குச் சம்பளம் தீர்மானிக்கும்போது, உங்களிடம் புதிய வேலைகளை ஒப்படைக்கும்போது, இப்படிப் பல தருணங்களில் 'உடனடியாக எனக்குப் பதில் சொல்லுங்கள்' என்பார்கள். காரணம், அந்த அழுத்தத்தை உங்கள் மீது திணிப்பதன் மூலம் உங்களிடம் இருந்து குறைவான விலைக்கு அதிக வேலையைப் பெற்றுவிடலாம். போதாக்குறைக்கு முடியாது என உங்களுக்குச் சொல்லத் தெரியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்தத் தருணங்களில் கொஞ்சம்கூட அச்சப்படாமல் எனக்குச் சற்று அவகாசம் தாருங்கள் எனக் கேட்கலாம். அந்த அவகாசத்தைத் தந்தால் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள் என்பதால்தான், உடனடியாகப் பதில் கேட்கிறது, கார்ப்பரேட் உலகம். அந்த நிர்பந்தத்துக்குப் பணிந்தும் பயந்தும் நீங்கள் 'சரி' என்று தலையாட்டினால், உங்களைக் குறித்து வைத்துக்கொள்வார்கள் 'இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்' என்று

பிறகு, எந்த நியாயம் இல்லாத வேலைப் பளுவாக இருந்தாலும், உங்கள் மீதுதான் சுமத்தப்படும். கடைசி வரை பொதி சுமக்கிற கழுதையாக வாழ்க்கையைத் தள்ளவேண்டி இருக்கும்.
இன்னிக்கு இருக்கிற போட்டி நிறைந்த உலகத்தில்... அவகாசம் கேட்பது, முடியாது எனச் சொல்வதெல்லாம் புத்திசாலித்தனம் இல்லை என்று தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தை நினைத்துப் பார்ப்போம். வேலை கிடைக்க வேண்டும். சம்பளம் கிடைக்க வேண்டும் அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால், நியாயமற்ற வேலைப் பளுவைத் தாங்க முடியாமல் மூன்று மாதங்களில் இன்னொரு வேலையைத் தேட வேண்டி இருக்கும்.

அதற்கு நியாயமான விஷயத்துக்கு மட்டும் 'சரி' சொல்லிவிட்டு, சரியான வேலையைச் செய்வது உத்தமம். இல்லையென்றால், அவசரத்துக்குத் தலையாட்டிவிட்டு அதன் பின்பும் 'முடியாது' என்பதைச் சொல்லவே முடியாமல் மனதும் உடம்பும் களைத்துப் போகும். வேலை தண்டனை ஆகும். மாதச் சம்பளம் வருகிறபோது ஏதோ ஜெயிலில் வேலை பார்த்ததற்குத் தரப்படுகிற 'படி' மாதிரி தெரியும். மனைவி செய்கிற 'சுபச் செலவுகள்'கூட தண்டமாகத் தோன்றும். 'நான் நாய் மாதிரிகஷ்டப் படுகிறேன். நீ ஆடம்பரம் பண்றியா?' என்று கத்த வைக்கும். குழந்தைகளை அடிக்கும். 'அவன் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கித் தரும்.
எங்கேயோ ஓர் இடத்தில் நாகரிகமாகச் சொல்லப்பட வேண்டிய 'முடியாது' சொல்லப்படாததால், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று பாருங்கள்.

நீங்கள் முடியாது என்று நினைக்கிற விஷயத்தை வெளிப்படுத்த ஆரம்ப நிலையில் ஆயிரம் வழிகள் உண்டு. அதைச் செய்ய சங்கடப்பட்டால் ஒருநிலையில் அது மனதோடு கடுமையான வார்த்தைகளாக வெளிவரும். 'என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன உங்கள் அடிமையா?' என்று கத்தவைக்கும்.

அப்படி வெளிப்படுத்த முடியாத சூழலில் தொடர்ந்து இருக்க நேரிட்டால், மன அழுத்தம் அதிகமாகி டாக்டரைப் பார்க்க வேண்டி இருக்கும். ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க வருகிற நண்பர்கள், 'எல்லாத்தையும் இப்படி இழுத்துப் போட்டு செஞ்சா அப்புறம் என்ன ஆகும்' என உங்கள் காதுபடவே சொல்லிவிட்டுப் போவார்கள்.

ஒரு நிமிடம் இப்போது யோசித்துப் பாருங்கள், நீங்கள் யார்? எப்படிப்பட்ட மனிதர்? யார் மனதும் புண்படக் கூடாது, எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்... இப்போது ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறீர்கள் அல்லது, இந்த ஆள் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கி இருக்கிறீர்கள்.

இதற்காகவா இவ்வளவு பாடுபட்டீர்கள்? இந்தச் சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. 'சரி' சொல்வதானாலும் 'முடியாது' சொல்வதானாலும் யோசித்துச் சொல்லுங்கள்.

'தலையாட்டிப் பொம்மையாக இருக்காதீர்கள்!.