Thursday 21 January 2010

நீயும்...நானும் ! - கோபிநாத்

சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை சிக்னல்... ஹார்ன்கள் பறக்கின்றன. 'யார்றா அது முன்னால, வண்டிய எடு. யே போப்பா... காலையிலயே வந்துட்டானுங்க. அட, போய்த் தொலைய்யா...' ஆளாளுக்குத் திட்ட, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே கோபத்தோடும் அவமானத்தோடும் நின்றுபோன தன் வண்டியை வேகவேகமாக உதைக்கிறார். அது கிளம்புகிற மாதிரி தெரியவில்லை. இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

தரையில் கால்களை ஊன்றித் தள்ளி வண்டியை ஓரங்கட்டிய அவர், எல்லோரின் மேல் இருந்த கோபத்தையும் வண்டியின் கிக்கர் மீது காட்டினார். எத்தனை முறை உதைத்தும் ஒரு பயனும் இல்லை. முகம் எல்லாம் வியர்த்துப் போக, நம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் கிக்கரை உதைப்பதும், ஆக்ஸிலேட்டரைத் திருகுவதுமாக அவர் முயற்சி தொடர்கிறது.

அணிந்து வந்த புது டிரெஸ் நனையும் அளவுக்கு வியர்வை. முகம் எல்லாம் கோபம். போதாக்குறைக்கு போவோர் வருவோர் எல்லாம் பார்த்துக்கொண்டே போகிறார்கள் என்ற எரிச்சல் வேறு. யாருக்கோ போன் செய்கிறார். ச்சே! என்று தலையில் அடித்துக்கொள்கிறார். வாட்ச்சைப் பார்க்கிறார். ஆத்திரமாக வண்டியை எட்டி உதைக்கிறார்.

எங்கிருந்தோ வந்த அழுக்கு டிரவுசர் பையன்... 'என்னண்ணே, வண்டி நின்னுபோச்சா?' என்று கேட்டபடியே வண்டியின் அருகில் முழந்தாளிட்டான். ஏதோ ஒன்றைக் கழட்டினான். தன் பனியனால் துடைத்தான். இன்னொரு வொயரை உருவினான். பல்லால் கடித்தே ஏதோ செய்தான். 'இப்போ ஸ்டார்ட் பண்ணுங்கண்ணே!' என்று ஆர்டர் போட்டான்.

ஒரு உதைதான், வண்டி ஸ்டார்ட் ஆனது. ஆத்திரம் தீர ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடியே அந்த அழுக்குப் பையனை நன்றியோடு பார்த்தார் அந்த இளைஞர். அன்றைய தேதிக்கு அந்தப் பையன்தான் அவருக்குக் கடவுள்.

இவர் மட்டுமல்ல... நம்மில் பெரும்பாலானோருக்கு வண்டி நின்றுபோனால் செய்யத் தெரிந்த வைத்தியம் இதுதான். வேகவேகமாக கிக்கரை உதைப்பது, வெறித்தனமாக ஆக்ஸிலேட்டரைத் திருகுவது. அவசரத்துக்கு நாம் போன் பண்ணிக் கூப்பிட்ட மெக்கானிக் வந்தால் பிழைத்தோம். ஏறக்குறைய 1 மணி நேரம் வண்டியை ஸ்டார்ட் செய்யப் போராடிய அந்த இளைஞர், அநேகமாக 10 வருடங்களாவது வண்டி ஓட்டிக்கொண்டு இருப்பவராகத்தான் தெரிந்தார்.

புதுசு புதுசாக வண்டி வாங்கினாலும் நமக்குத் தெரிந்த ஒரே உத்தி ஆக்ஸிலேட்டரைத் திருகுவதுதான். அதிகபட்சம் சோக் போட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சிப் போம்.

அதைத்தாண்டி அது குறித்துத் தெரிந்துவைத்து இருப்பதில்லை. அதில் ஆர்வம் இருப்பதில்லை அல்லது, அது என் வேலை இல்லை என்ற முடிவுக்கு வருகிறோம். இரு சக்கர வாகனம் என்றில்லை. மொபைல் போன், கையில் அணிந்திருக்கிற காஸ்ட்லி வாட்ச், ஏ.சி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், டியூப்லைட், வாஷிங் மெஷின், கார், கம்ப்யூட்டர், டி.வி. இப்படி எதுவானாலும் பிரச்னை இல்லாமல் ஓடும் வரை சந்தோஷம். நின்றுபோனால் கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போலத்தான் இருக்கும்.

நாம் பயன்படுத்தும் பொருளோடு தொடர்புடைய சிறுசிறு விஷயங்களைக்கூடத் தெரிந்துகொள்ள முனைவதில்லை.

முன்பெல்லாம் மை ஊற்றி எழுதும் பேனாக்கள் பிரபலம். அதில் இங்க் ஊற்றுவது, நிப்பைச் சரி செய்வது, கழுவிவைப்பது என்று அது தொடர்பான வேலைகளை நாம் செய்வதுண்டு. இப்போதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் வாடிக்கையாளர் நோகாமல் இருக்க வசதியாகச் செய்யப்படுகின்றன.

தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கைக்கு மாறி இருந்தாலும், இயந்திரங்களோடு புழங்குவது அதிகரித்து இருந்தாலும், அதைப் பயன்படுத்துவது தவிர, வேறெதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எண்ணமும் இருப்பதில்லை.

ஒரு நிலையில் நாம் பயன்படுத்துகிற, நமக்குத் தேவைப்படுகிற பொருட்கள் குறித்தும், விஷயங்கள் குறித்தும் தன்னிறைவோடு இருக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்... பயன்படுத்துதல் மட்டுமே என் வேலை என்பது ஒரு குணமாக மாறிவிடுகிறது.

இந்தக் குணம் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் எதிரொலிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 'என்னய்யா நெனைச்சுட்டு இருக்கீங்க. நான் என்ன இளிச்சவாயனா? ஒருநாள் லேட்டா பணம் கட்டினதுக்கு இவ்வளவு ரூபா அபராதம் போடுவீங்களா? உங்க கிரெடிட் கார்டே எனக்கு வேண்டாம்' என்று கத்திக்கொண்டு இருப்பவரிடம், 'ஹலோ! ரொம்பச் சத்தம் போடாதீங்க. நாங்க கார்டுகூடவே ஒரு கையடக்கப் புத்தகம் அனுப்பினோமே, எல்லா விவரமும் அதுல இருக்கு' என்று பதில் சொல்வார், பணம் வாங்க வந்த பேங்க்காரர்.

கிரெடிட் கார்டு விவரங்களை, வங்கி அனுப்பும் சட்ட திட்டங்கள் குறித்த தகவல்களை எத்தனை பேர் படித்திருப்போம். ஏ.சி-யோடு, வாஷிங்மெஷினோடு, மொபைல் போனோடு வரும் விவரப் புத்தகங்களைப் படித்து, அது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தான் பயன்படுத்தும் பொருள் குறித்து தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும் என்ற குணமும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.

ஆனால், மார்க்கெட்டில் புதிதாக ஒரு பொருள் வந்ததும் ஓடிப் போய் வாங்குகிற முதல் ஆள் நாம்தான். தரம் இல்லாத பொருள்களை ஏமாற்றி விற்றுவிடுகிறார்கள். சரியான விவரம் சொல்லாமல் கிரெடிட் கார்டைத் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோமே ஒழிய... அது குறித்து ஒன்றுக்குப் பத்து கேள்விகள் எழுப்பி, விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லை.

எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வதில் இருக்கிற முனைப்பு... கோளாறு ஏற்பட்டால், பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதில் இருப்பதில்லை. காரணம், தெரியாததைக் கேட்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது. 'இதுகூட இவருக்குத் தெரியவில்லையே என்று மற்றவர் கள் கேவலமாக நினைத்துவிடுவார்களோ' என்ற எண்ணமே முதலில் வருகிறது.

'எல்லாம் தெரிந்துவைத்திருப்பவன் சிறந்தவன்' என்ற நினைப்புதான் எதையுமே தெரிந்துகொள்ளவிடாமல் தடுத்துவிடுகிறது.

'ச்சே! நான் எவ்வளவு பெரிய ஆளு... இதப்போயி கேப்பாங்களா' என்று யோசித்தால், எங்கோ ஓரிடத்தில் அந்த விஷயம் தெரியாததால் தவிக்க வேண்டி இருக்கும்.

நான், எனது நண்பர், அவருடைய நண்பர் மூவரும் ஒரு காரில் பயணித்துக்கொண்டு இருந்தோம். என் நண்பரின் நண்பர் ஐ.நா சபையோடு இணைந்து பணியாற்றும் ஒரு நிறுவனத்தின் ஊழியர். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் என் நண்பரிடம், 'இந்தக் கதவை எப்படித் திறப்பது?' என்றார். என் நண்பர் கிண்டலாக, 'இவ்வளவு பெரிய பணியில் இருக்கிறீர்கள், இதுகூடத் தெரிய வில்லையா' என்றார். அவர் நிதானமாக, 'ஐ.நா. சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்னவென்று தெரியுமா?' என்று கேட்டார். 'அதெப்படி எனக்குத் தெரியும்' என்றார் நண்பர். 'அப்போ எனக்கு மட்டும் உன் கார் கதவைத் எப்படித் திறக்கத் தெரியும்' என்றார்.

விஷயம் இவ்வளவுதான்... ஒருவருக்குத் தெரிந்த விஷயம் உங்களுக்குத் தெரியாததைப் போலவே உங்களுக்குத் தெரிந்த விஷயம் இன்னொருத்தருக்குத் தெரியாமல் இருக்கும். இங்கு எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. தெரிந்துகொள்வதற்காகக் கேட்பது கேவலமும் இல்லை.

கூச்சமில்லாமல் கேட்பது குறித்து வெள்ளைக்காரர்களிடம் கற்றுக்கொள்ளலாம். அடுத்தவர் அற்பமாக நினைப்பாரோ என்றெல்லாம் யோசிக்காமல், தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். உணவகத்துக்குப் போனால்கூட, தான் கேட்கிற உணவு எப்படி இருக்கும். அதில் என்னென்ன பொருட்கள் சேர்ப்பீர்கள், அதன் விலை என்ன என்றெல்லாம் கேட்பார்கள்.

புதிதாகப் போன ஏரியாவில் வழி தெரியாமல் அரை மணி நேரம் சுற்றிக்கொண்டே இருக்கிற நம்மில் பலரும்... அது எங்கே இருக்கிறது என்று கேட்கக் கூச்சப்படுபவர்கள்தான். பேருந்து நிலையத்திலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ, விமான நிலையத்திலோ யாரிடமும் எதையும் கேட்காமல் சிறுநீரை அடக்கிக்கொண்டு கழிவறை தேடிக்கொண்டு இருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

கேட்டுத் தெரிந்துகொள்வதில் தீவிரம் இல்லாமல் போனதால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் போய்விடுகிறது. ஏனோதானோவென்று பல விஷயங்களைச் சொல்கிறோம். பிறகு, நான் என்ன சொன்னேன்... நீ என்ன செஞ்சிருக்கே என்று சண்டை வரும்.

ஐந்து ஆண்டு ஆளப்போகிறவர்கள் தொடங்கி, மூன்றாண்டு படிப்பு சொல்லித் தரப்போகிற கல்லூரி வரை எங்கும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்பதில் வரும் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காக நாம் செய்த கோமாளித்தனங்களால், இன்று எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்குச் சமூகச் சூழல் மாறி இருக்கிறது.

யாராவது கேட்பார்கள், அப்போது தெரிந்துகொள்ளலாம் என்று நீங்கள் காத்திருப்பதைப்போலவே எல்லாரும் காத்திருக்கிறார்கள். விளைவு, தான் செய்கிற செயல் குறித்த தெளிவான தகவல் யாரிடமும் இல்லை. ஓட்டுப் போடுவது வரை இதுதான் நிலைமை. எலெக்ட்ரானிக் மெஷினில் எப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பதை... ஓர் ஓட்டின் பலம் என்ன என்பதை உணர்வதே அவசியம்.

கேள்வியை எங்கு அதிகாரமாக வெளிப்படுத்த முடியுமோ, அங்கு மட்டுமே அதைப் பிரயோகிப்பதில் என்ன பயன்? ஒரு ரூபாய்க்கு மூன்று வாழைப் பழம் என்று பஸ் ஜன்னல் வழியே நீட்டுகிறவரிடம் அத்தனை கேள்வி கேட்கிற நாம், தேனும் பாலும் ஓடும் என்று சொல்லி ஓட்டுக் கேட்டு வருபவ ரிடம் என்ன கேட்கிறோம்?

நாம் செய்கிற வேலையில், வாங்குகிற பொருட்களில் அது குறித்த தன்னிறைவைப் பெற... புரிதலை உணர... கூச்சப்படாமல் கேளுங்கள். அது எனக்குத் தேவைஇல்லை என்கிற மனோபாவம்தான், வண்டியை ஸ்டார்ட் செய்யத் தெரியாமல் நடுரோட்டிலும், வாழ்க்கையை ஆளத் தெரியாமல் இந்தச் சமூகத்தை வீதியிலும் நிறுத்தியிருக்கிறது.

கிடைக்கிறதோ
கிடைக்கவில்லையோ
கேளுங்கள்- அது நமது உரிமை.
'கேளுங்கள் தரப்படும்!'

உங்களை, உங்களுக்கே உணர்த்தும் - சுவாமி சுகபோதானந்தா

'நாற்பது வயதில் நீங்கள் இருபதாகலாம்... அறுபது வயதில் நாற்பதாகலாம்!'

வாழ்வியல் பயிலரங்கங்களை நடத்த அவ்வப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும்.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில்... ஏராளமான அனுபவ அறிவு தேவைப்படும் பதவிகளில் எல்லாம் வெறும் இருபது, இருபத்தி இரண்டு வயது பெண்கள் வீற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 'எப்படி...?!' என்று நான் வியந்தபோதுதான், என் மாணவன் ஒருவன் எனக்கு அந்த நாடுகளில் நிலவும் நிதர்சனத்தை விளக்கினான்.

"சுவாமி... இவர்கள் எல்லாம் பார்க்கத்தான் இருபது, இருபத்தி ஐந்து வயது பெண்கள் போல இருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அதைவிட இருமடங்கு வயது கொண்டவர்கள்!" என்றான். நம்புவதற்கு நான் சிரமப்படுவதைப் பார்த்த மாணவனே தொடர்ந்தான்.

"சுவாமி... இந்தியாவில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களுக்குச் செல்லும் பெண்கள் நல்ல நகை நட்டோடு, பாந்தமாக பட்டுப்புடவை அணிந்து போவதை எப்படி முக்கியமாக நினைக்கிறார்களோ, அதேபோல அலுவலகத்துக்கு நல்ல கச்சிதமான உடலமைப்போடு போக வேண்டும் என்பதை இந்த நாட்டுப் பெண்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். குழந்தை பெற்று சற்றே சதை போட்டுவிடும் பெண்கள்கூட பேறுகாலம் முடிந்து மீண்டும் அலுவலகம் போக முடிவெடுத்தால், சுமார் இரண்டு மாத காலம் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடம்பை கச்சிதமாக மாற்றிக் கொண்டுதான் அலுவலகம் செல்கிறார்கள்" என்றான்.

நான் என் இந்த அனுபவத்தை என் இந்திய மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு, " 'உடற்பயிற்சியால் நாற்பது வயது பெண்கள் எல்லாம் இருபது வயது பெண்கள் போல தோற்றமளிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவர்களின் உற்சாகம், துறுதுறுப்பு, வேலையில் குதூகலம் என்று... அனைத்திலும் இருபது வயது பெண்கள் போல சுறுசுறுப்போடு எப்படி நடந்து கொள்ள முடிகிறது?!'

- இதுதானே உங்களின் கேள்வி? இது மிகவும் சுலபம். நினைத்தால்... மனதளவில் உங்களால்கூட உங்கள் வயதை பாதியாகக் குறைத்துக் கொண்டு உற்சாகத்தை இரண்டு மடங்கு கூட்ட முடியும்" என்றேன்.

ஒரு பெண்மணி, "சுவாமி... நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே?! திருமணமான புதிதில் என் கணவரின் கவனம் முழுக்க முழுக்க என் மீது இருந்தது. எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. பேறுகாலத்திலும் குழந்தைகள் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த பருவங்களிலும் என் கவனம் முழுக்க அவர்கள் மீது இருந்தது. அப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால், இப்போதோ குழந்தைகள் பெரியவர்களாகி வேலை கிடைத்து திருமணம் நடந்து வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது வாழ்க்கையில் வெறுமை தான் மிஞ்சியிருக்கிறது."

இப்படிப் பேசிய பெண்மணிக்கு நாற்பத்தி ஐந்து வயதுதான் இருக்கும். அதற்குள் அவருக்கு வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்டதைப் போல ஓர் உணர்வு.

ஆனால், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் ஒருபோதும் இப்படி நினைப்பதில்லை. அவ்வளவு ஏன்... மறைந்த நமது பிரதமர் இந்திரா காந்தியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேரன், பேத்தியெல்லாம் எடுத்தவர்தான். அந்த அந்தஸ்தை அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தார். பேரன், பேத்திகளோடு எல்லாம் விளையாடினார். ஆனால், வேலை என்று வரும்போது அவர் தன்னை பாட்டியாக கற்பனை செய்து கொண்டதுகூட இல்லை. ஆம்... உலகம் எப்போதுமே அவரை ஒரு இரும்பு மனுஷியாகத்தான் பார்த்திருக்கிறதே ஒழிய, ஒருபோதும் பாட்டியாகப் பார்த்ததே இல்லை. காரணம்... வயது என்பது உடம்பைவிட மிக அதிகமாக மனதோடும், செயல்பாட்டோடும் சம்பந்தப்பட்டது.

அமெரிக்கா போன்ற பிரதேசங்களில் வாழும் 'வல்ச்சர்' என்று சொல்லப்படும் பருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிஸ்கவரி சேனலே இப்போது தமிழில் வருவதால் அதில்கூட நான் சொல்லும் செய்தியை நீங்கள் பார்க்கக்கூடும். அந்த பருந்துகளுக்குப் பொதுவாக நாற்பது வயது வரைதான் ஆயுள். அந்த வயதை எட்டிப்பிடிக்கும் போதே எலி, பாம்பு மாதிரியான இரைகளை வேட்டையாடிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதன் அலகுகள் மழமழவென்று மழுங்கி போய்விடும். கால் விரல்களில் இருக்கும் நகங்களும் கூர்மையை இழந்துவிடும். அதனால் இந்தப் பருவத்தில் ஒரு சில பருந்துகள் உணவின்றி இறந்துபோய்விடும். ஆனால், அவற்றில் அதீத மனத்தின்மை வாய்ந்த பருந்துகளோ... தங்களின் முயற்சியால் கூடுதலாக முப்பது வருட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும்!

ஆச்சர்யமாக இருக்கிறதா..? ஆனால், அது உண்மைதான்! இந்தப் பருந்துகள், நாற்பது வயதான பருவத்தில் ஆளரவமற்ற ஏகாந்தமான மலைப்பிரதேசங்களுக்குச் சென்று பெரும் மறுமலர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும். இந்தக் காலத்தில் அவை மலைகளில் தன் அலகுகளை மோதி உடைத்துக் கொள்வதுடன், புதிதாக அலகு முளைக்கும் வரை அந்த மலைகளிலேயே தங்கியிருக்கும். அதேபோல கூர்மை இழந்த தங்களது கால் நகங்களை அவை பிடுங்கிப் போட்டுவிட்டு, புதிய நகங்கள் வளரும் வரை காத்திருக்கும். புதிய அலகும் கால் நகங்களும் வளர்ந்த பின்னர், மீண்டும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி... மேலும் முப்பது ஆண்டு காலம் வாழும்!

இந்தப் பருந்துகளைப் போல நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் ஆசைப்பட்டு நிறைவேறாத விஷயங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். நீங்கள் படிக்க விரும்பிய புத்தகங்களை எல்லாம் அனுபவித்து படித்து ரசியுங்கள். 'வீணை கற்றுக் கொள்ள வேண்டும்', 'இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்' 'தெலுங்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்!' என்று ஆளாளுக்கு ஆயிரமாயிரம் நிறைவேறாத ஆசைகள் மனசுக்குள் அடங்கிக் கிடக்கும். உங்களின் வயது என்னவானாலும் அதை இப்போது நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

'குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதித்து விளையாடுகிற மாதிரி...' என்று யாராவது உங்களைப் பரிகாசம் செய்ய முற்பட்டால்... அதையெல்லாம் காதிலேயே வாங்காதீர்கள். எனக்குத் தெரிந்த பல பெண்மணிகள் நாற்பத்தைந்து வயதுக்கு மேல்தான் ஸ்கூட்டி ஓட்டவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் பேரன், பேத்திகளோடு பேச அறுபது வயதுக்கு மேல் கம்ப்யூட்டரை இயக்க கற்றுக் கொண்ட பலரை உங்களுக்கே தெரிந்திருக்கும். புதிய விஷயத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் போது... உங்கள் மனதுக்குள் உற்சாக அலை அடிப்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும்!

பின் நாற்பதிலும் நீங்கள் இருபது; அறுபதிலும் நாற்பது!

- அமைதி தவழும்...