Thursday 28 May 2009

அப்பா - (மகள் எழுதிய கவிதை)

அப்பா...என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்

தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என்னுள் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம் தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்கும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!

வாழ்கையில் எனை நோக்கி வரும்
எல்லா இன்னலையும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என்ற தைரியத்தில்....

அம்மாவின் கடவுள் நம்பிக்கையும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவு கண்ணை திறந்தது எனலாம்

வெளிநாடு வரும் வரை மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று வெளிநாட்டு வசதிகளும், மெத்தைகளும்
உங்கள் அருகில் உறங்கிய நிறைவை தருவதில்லை...

கடவுள் என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கடவுளே !
அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என....

Friday 22 May 2009

கண்ணே மணியே !!!!

ஏதாவது ஒரு பொருளைக் கண்களைக் குவித்துப் பார்க்கும்போது, அந்தப் பொருள் மங்கலாகத் தெரிந்தால் அல்லது முழுக்கவே தெரியாவிட்டால், கண் பார்வையில் கோளாறு என்று அர்த்தம்!

லேசர் அறுவை சிகிச்சையை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் செய்து கொள்ள வேண்டும். அதே போல 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் லேசர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதல்ல!

குறைந்தது 10 அடி தூர இடைவெளி வைத்து டி.வி. பார்ப்பதுதான் நல்லது. டி.வி. பார்க்கும் அறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்!

கம்ப்யூட்டரில்தான் உங்களுக்கு வேலை என்றால், எதிரே நாற்காலியில் அமர்ந்திருக்கும் உங்களின் முகம் கம்ப்யூட்டரைவிட உயரமாக இருக்கும்படி அமைய வேண்டும். அதாவது, தலையை உயர்த்திப் பார்க்காமல், கம்ப்யூட்டர் திரை உங்கள் பார்வையின் கீழ்க்கோணத்தில் இருப்பது நல்லது!
குழந்தைகள் புத்தகத்தைக் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் படித்தாலோ, டி.வி-க்கு மிக அருகில் அமர்ந்து பார்த்தாலோ அது கிட்டப் பார்வைக்கான அறிகுறி. உடனே உஷார் ஆகுங்கள்!

வைட்டமின் A கண்களுக்கு நல்லது. அயோடின் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்!

சாலையோரம் விற்கப்படும் மலிவு விலை குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத் தாதீர்கள். இன்றைய சிக்கனம் நாளைய பிரமாண்ட செலவாக இருக்கலாம்!

கண்ணுக்கு மை அழகுதான். ஆனால், அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கண் மை இமைக்கு உள்ளே படக்கூடாது. ஒருவர் உபயோகித்த மையை இன்னொருவர் பயன்படுத்துவதும் சுகாதாரமானது அல்ல!
இறப்பு நேர்ந்த 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்யலாம். ஒருவரின் இரு கண்கள் இருவருக்குப் பார்வை கொடுக்கும். கண் தானம் பெற்றவரின் கண்ணைக் கூட அவர் இறப்புக்குப் பிறகு, மற்றவருக்குத் தானமாகத் தரலாம்!

என்னைச் செதுக்கிய 7 நாட்கள் - இந்த வாரம்: இளவழகி


கண்கள் பார்த்துப் பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட காற்றில் ஸ்டிரைக்கர் சுண்டுகின்றன இளவழகியின் விரல்கள்!


உலகக் கோப்பை கேரம் சாம்பியன். வாழ்க்கை வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தபோதே கேரம் போட்டிகளில் உச்சக் கோடு தொட்ட பெண்... சாதித்த கதை சொல்கிறார்...


001
''எங்கப்பா கேரம் பிளேயர். வீட்ல நாங்க மூணு பேரும் பொண்ணுங்கதான். அப்பாவோ, அம்மாவோ, என்னைப் 'படி... படி'ன்னு சொன்னதே கிடையாது. ஆனா, அப்பா தினமும் என்னை கேரம்போர்டு விளையாடச் சொல்வாரு. மத்த பசங்களோடு விளையாட முடியாததால, எனக்கு கேரம்னா கொஞ்சம் வெறுப்பு. ஆனா, எனக்கு கேரம் கத்துக் குடுக்குறப்போ அப்பா கண்ல சின்னதா ஒரு பளபள. 'பையன் பொறந்திருந்தா, பெரிய கேரம் பிளேயர் ஆக்கி இருக்கலாமே'னு நினைக்குறாரோனு தோணுச்சு.


'பையனா இருந்தாலும் அவனுக்கும் கையில பத்து விரல்தானே இருக்கும். அவனால முடியும்னா, நம்மால முடியாதா?'ன்னு நிஜமா எனக்குள்ள ஒரு வீம்பு. கேரம் போட்டிகள்ல நிச்சயம் ஜெயிக்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். அதுவரை கேரம் விளையாட்டு மேல எனக்கு இருந்த சின்ன வெறுப்பைப் பெரிய வெறியா மாத்தினேன். அப்பெல்லாம் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 'டோர்னமென்ட் போர்டு'கள்லதான் நடக்கும். நல்லா வழுவழுன்னு போட்டிகளுக்காகவே தயாரிக்கப்படுற போர்டுகள். அது வாங்க வசதியில்லாம சாதாரண கட்டை போர்டுலதான் நான் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் வீட்ல டோர்னமென்ட் போர்டு இருந்துச்சு. தினமும் அதிகாலை நாலு மணில இருந்து ஆறு மணி வரை அதுல பிராக்டீஸ் பண்ணிட்டு, ஸ்கூலுக்குப் போவேன். சாயங்காலம் சும்மா இருக்கப் பிடிக்காம வீட்டு கட்டை போர்டுல பிராக்டீஸ் பண்ணிட்டு இருப்பேன். காலைல டோர்னமென்ட் போர்டுல ஸ்மூத்தா விளையாடிட்டு கட்டை போர்டுல விரல் நோக ஸ்டிரைக்கர் சுண்டுறதுக்குக் கடுப்பா இருக் கும். தினமும் காலைல அத்தனை சீக்கிரம் எழுந் திரிக்குறதுக்கும் கடுப்பா இருக்கும். ஆனா, அந்த வலி இருந்துட்டே இருந்தாதான் ஏதாவது ஒரு வழி திறக்கும்னு பொறுத்துக்கிட்டேன். முதல் வெற்றி கிடைக்கிற வரை என்னை நானே வாட்டிக்கிட்ட அத்தனை நாளும் இப்பவும் எனக்குச் சுளீர்னு ஞாபகம் இருக்கு!''


002
''ஆறாவது படிக்கிறப்போ ஜூனியர் கேரம் ஸ்டேட் டோர்னமென்ட்ல என்னைக் கலந்துக்கச் சொன்னாங்க பி.டி. டீச்சர் கலாவதியும் ஹெச்.எம். சந்திரா மேடமும். அதுக்கு முன்னாடி நான் பெரிய போட்டிகள்ல கலந்துக்கிட்டது கிடையாது. எனக்கு எதிரா விளையாடியது அப்போ ஸ்டேட் பிளேயரா இருந்தவங்க. சரசரன்னு என்னை அடிச்சுக் காலி செஞ்சுரலாம்னு வந்து உக்காந்தாங்க. 4:45-க்குள்ள என்னைத் தோக்கடிச்சுட்டு 5 மணி பஸ்ஸைப் பிடிக்கப் போற மாதிரியே இருந்துச்சு அவங்க ஒவ்வொரு ஆக்ஷனும்.


ஜெயிச்சே ஆகணும்னு உள்ளுக்குள்ள வெறியாயிருச்சு. என்கிட்ட இழக்குறதுக்கு எதுவும் இல்லை. ஆனா, ஜெயிச்சா உலகமே இருக்குன்னு நினைச்சுக்கிட்டு ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சேன். அன்னிக்கு எனக்கு கேம் அட்டகாசமா கை வந்துச்சு. 4:50 பஸ்ஸையே அவங்க பிடிக்கலாம்கிற அளவுக்கு கேம் அவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுது. ஆனா, ஜெயிச்சது நான். யோசிச்சுப் பார்த்தா, அன்னிக்கு என் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால, என்னால இயல்பா இருக்க முடிஞ்சது. அந்த இயல்பை எந்தச் சூழ்நிலையிலும் இருத் திக்கிற மனப்பக்குவத்தைக் கத்துக்கொடுத்த முதல் வெற்றி அது. அதோடு ஸ்கூல் சார்பா எனக்கு டோர்னமென்ட் கேரம்போர்டும் வாங் கிக் கொடுத்த நாள்!''


003
''அடுத்தடுத்து நிறையப் போட்டிகள்ல கலந் துக்க ஆரம்பிச்சேன். நிறைய ஜெயிச்சேன். கொஞ்சம் கொஞ்சம் தோற்கவும் செஞ்சேன். எத்தனையோ போட்டிகள். ஆனா, நான் கலந்துகிட்ட முதல் ஆசியக் கோப்பைப் போட்டியை மறக்க முடியாது. 2005-ல மாலத்தீவுகள்ல நடந் தது. முட்டி மோதி ஃபைனல்ஸ் வரை வந்துட்டேன். ஃபைனல்ஸ்ல எனக்கு எதிரே நிர்மலா. அவங்கதான் அப்போ உலகத்துலயே டாப் பிளேயர். தொடர்ச்சியா நாலு உலகக் கோப்பை போட்டி ஃபைனல்ஸூக்கு வந்த ரன்னர்அப் அவங்க. முதல் செட்ல நான் ஆறு பாயின்ட். அவங்க 45. ரெண்டாவது செட்லயும் அவங்க லீடிங்.


'அதுக்குள்ள ஏன் நாம தோத்துட்டோம்னு நினைக்கணும்? இன்னும் அவங்க ஜெயிக்கலைதானே... அவங்களைக் கடைசி வரை ஜெயிக்கவிடாம பண்ணுவோம். அதுக்கப்புறம் நாம ஜெயிக்க முடியுமான்னு பார்ப்போம்'னு நினைச்சுக்கிட்டு விளையாடினேன். அஞ்சு நிமிஷத்துல முடியிற மாதிரி இருந்த கேம், முழுசா முடிய ஏழு மணி நேரம் ஆச்சு. நான்தான் ஜெயிச்சேன். கடைசி பாயின்ட் வரை அவங்க போக, நான் புடிச்சு இழுத்துட்டு வர... என்னை முன்னாடி நகரவிடாம அவங்க முட்டுக்கட்டை போட... ஒவ்வொரு ஸ்டிரைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஏழு மணி நேரமும் மனசை விடாம இறுக்கிப்புடிச்சு வெச்சிருந்ததுதான் பெருசு. தோக்குறதுக்குக் கடைசி செகண்ட் வரைக்குமான நேரம் இருக்கே... அது நமக்கும் சொந்தம்தானேன்னு அந்த ஏழு மணி நேரம்தான் கத்துக்கொடுத்துச்சு!''


004
''2005-ல ஒரு நாள். அமெரிக்காவில் நடக்குற கேரம் போட்டியில் கலந்துக்க எனக்கு வாய்ப்பு. ஆனா, செலவெல்லாம் நான்தான் பார்த் துக்கணும். ஏர்போர்ட்டுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவே முடியாத எங்க ளால எப்படி ஏரோப்ளேன் டிக்கெட் எடுக்க முடியும்? 'உண்டு... இல்லை'னு சொல்றதுக்கு அன்னிக்குத்தான் கடைசி நாள். கடைசியா ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கலாமேன்னு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேவிதார் சாரைப் போய்ப் பார்த்தேன். 'கிறிஸ்துதாஸ் காந்தின்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீஸர் இருக்காரு. அவர் உன்னை மாதிரி கஷ்டப்படுற திறமையான பிளேயர்களுக்கு உதவி பண்ணுவாரு'ன்னு அனுப்பிவெச்சார்.
கிறிஸ்துதாஸ் காந்தி சார் என் சர்ட்டிஃபிகேட்லாம் பார்த்தார். 'உன்னை மாதிரி ஒரு ஆளு எப்படி இந்தப் போட்டியில் கலந்துக்காம இருக்கலாம்..? நீ நிச்சயம் அமெரிக்கா போற. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆபீஸ்ல இருந்து ஒரு என்.ஓ.சி. லெட்டர் மட்டும் வாங்கிட்டு வந்துரு'ன்னு சொன்னாரு. ஆச்சர்ய ஆனந்த அதிர்ச்சி. திரும்பவும் நேரு ஸ்டே டியத்துக்கு ஓடுறேன். அந்த லெட்டர் கிடைச்சாலும் பாஸ்போர்ட், விசான்னு ஏகப்பட்ட பஞ்சாயத்து இருக்கே. ரெண்டு, மூணு மணி நேரத்துல எப்படி எல்லாம் சரியாகும்னு எனக்குப் பதற்றம். ஆனா, நம்ப மாட்டீங்க... நான் நேரு ஸ்டேடியம் வர்ற துக்கு முன்னாடியே என்.ஓ.சி. லெட்டர் ரெடியா இருந்துச்சு. திரும்ப கிண்டி வர்றதுக் குள்ள பாஸ்போர்ட் அப்ளிகேஷன் தயார். அடுத்த அரை மணி நேரத்துல பாஸ்போர்ட் ரெடி! ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி திக்கு திசை தெரியாம நின்னவ, இப்போ அமெரிக்கா கிளம்பத் துணிமணி எடுத்துவைக்கணும். கிறிஸ்துதாஸ் காந்தி சாருக்குக் கோடிப் புண் ணியம்.
அதிர்ஷ்டம், லக், நல்ல நேரம்னுஎல்லாம் சொல்றாங்களே... அதுக் கெல்லாம் அப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சா, நம்மைச் சுத்தி இருக்குற நல்லவங்க நமக்காகச் செய்யுற நல்லதுதாங்க அதிர்ஷ்டம். நல்லவங்க எப்பவும் நல்லது செய்வாங்க. ஆனா, நம்ம வேலையை நாம ஒழுங்கா செஞ்சி ருந்தாதான் அந்த நல்லது அதிர்ஷ்டமா மாறும்!''


005
''2008-ல உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் பிரான்ஸ்ல நடக்குது. ஏர்போர்ட்ல நாங்க போய் இறங்கினா, என் லக்கேஜ் மட்டும் காணலை. இந்தியாவுல இருந்து கிளம்புறப்போ நான் போட்டிருந்த அந்த ஒரு டிராக் சூட் மட்டும்தான் என்கிட்ட இருந்த டிரெஸ். பகல் 12 மணிக்கே ஸ்வெட்டர் போட்டு நிக்கிற அளவுக்குக் குத்திக் கொல்லுற குளிர் பிரான்ஸ்ல விசேஷம். ஒரு மணி நேரம்கூட என்னால தாக்குப்பிடிக்க முடியலை. இந்தியாவுல இருந்து போன ஆறு பேர்ல என்னையும் சேர்த்து மூணு பொண்ணுங்க. அவங்களோட டிரெஸ்ஸை எனக்குக் கொடுத்து உதவுற அளவுக்கு அவங்க சூழ்நிலை இல்லை. காசு கொடுத்து புது டிரெஸ் வாங்கிப் போடுற அளவுக்கு என் சூழ்நிலை இல்லை. மொத்தமா ஏழு நாள் அங்கே தங்கியிருக்கணும்.
கேரம் ஒரு மைண்ட் கேம். மனசுல எந்தக் குழப்பமும் சஞ்சலமும் இல்லாம ரொம்ப ஃப்ரீயா உணர்ந் தாதான் நம்ம மனசு திட்டமிடுற திசையில விரல் ஸ்டிரைக்கரைச் செலுத்தும். ஆனா, என் வாழ்க்கை யிலயே முக்கியமான கட்டத்தின்போது என் மனசு ஃப்ரீயா உணரலை. அன்னிக்கு முழுக்க மகா குழப்பம். குளிர்ல அழுதா கண்ணீர்கூட வர மாட்டேங்குது. பயம், பதற்றம், குழப்பம்... அந்தளவுக்கு நான் அது வரை அரண்டு மிரண்டதில்லை. 'போட்டியிலகலந்துக் காம ஊருக்குத் திரும்பிடலாமா?', 'ஏழு நாளும் ஓட்டல் ரூம்லயே தங்கிட்டு போட்டியில கலந்துக்காம இருக்கலாமா?'ன்னு ஏகப்பட்ட சிந்தனைகள். 'இளவழகி, நீ இப்போ நீயா இல்லை. இப்போ நீ என்ன முடிவெடுத்தாலும் அது தப்பாதான் இருக்கும். பேசாம படுத்துத் தூங்கு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, மறுநாள் என்ன நடக்கும்னு தெரியாமலே கஷ்டப்பட்டு தூங்கிட்டேன். அன்னிக்கு நான் எந்த முடிவும் எடுக்காதது எவ்வளவு நல்லதுன்னு மறுநாள்தான் எனக்குப் புரிஞ்சுது!''


006
''மறுநாள் பிரான்ஸ்ல ரெண்டாவது நாள். எந்திரிக்கிறப்பவே பசி வயித்தைக் கிள்ளுது. சாப்பிடப் போனா நாம அதுவரை கண்ணால பாத்திருக்காத, கேள்வியேபட்டிருக்காத சங்கதிகளை எல்லாம் சாப்பிடக் கொடுக்குறாங்க. இன்னொரு இடி... போட்டுக்க டிரெஸ் இல்லை, சரியான சாப்பாடு இல்லை. ஆனா, என்கிட்ட இருக்குற அதிகபட்சத் திறமையை நான் வெளிக்காட்டியாகணும். அப்போ உலகம் முழுக்க இருந்து வந்திருந்த போட்டியாளர்கள் என் கண்ணுக்குத் தெரியலை. எனக்கு நானேதான் போட்டியாத் தெரிஞ்சேன். 'உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் நார்மலா இல்லாம, இந்தப் போட்டியில் உன்னால எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியும்?'கிற கேள்விக்குப் பதில் தேடுறதுதான் அப்போ எனக்குச் சவாலா இருந்துச்சு. 'எல்லாரும் நீ போட்டிருக்கிற டிரெஸ்ஸைப் பார்க்க இங்கே வரலை. உன் வேலை என்னவோ, அதை மட்டும் பாரு'ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.


முதல் கேம்ல எதிராளி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே ஜெயிச்சேன். அதே வேகத்தோடு ஒவ்வொரு கேம்லயும் அடிச்சு ஃபைனல்ஸூக்கு வந்தேன். அங்கே காத்துட்டு இருந்தது, என் கூடவே வந்திருந்த நம்ம நாட்டு பிளேயர்தான். எதையும் மனசுல ஏத்திக்காம விளையாடினேன். ஜெயிச்சுட்டேன். உலக சாம்பியன்! மனதளவிலும் உடலளவிலும் நான் ரொம்ப உடைஞ்சுகிடந்த நேரத்துல நான் சந்திச்ச உச்சகட்ட வெற்றி!


சரியான சமயத்துல சரியான முடிவெடுக்குறது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தப்பான சமயத்துல தப்பான முடிவு எடுக்காம இருக்குறதும்னு உணர்ந்த நாட்கள்!''


007
''எங்கப்பா மீன்பாடி வண்டி ஓட்டியே கஷ்டப்பட்டுட்டு இருந்தாரு. இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவருக்கு டாடா ஏஸ்னு மினி லாரி வாங்கிக் குடுத்தேன். அன்னிக்கு அவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்! 'நீ பையனா பொறந்திருந்தாக்கூட இப்படி எல்லாம் செஞ்சிருப்பியா?'ங்கிற கேள்வி அவர் பார்வையில தெரிஞ்சது. அவரும் வாய்விட்டுக் கேக்கலை. நானும் பதில் சொல்லலை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கே!''

Friday 8 May 2009

அட, இது நல்லா இருக்கே!

''தீபாவளிக்கு முதல் நாள் செம கூட்டம். ஒரு ஆள் சாப்பிட்டுக் காசில்லைன்னு சொல்லவும், 'சரி, சப்ளை ஆளுங்களும் பத்தலை. அவனுக்குத் தண்டனையாவும் இருக்கும்'னு அவனை சப்ளையர் ஆக்கினோம். 47 ரூபாய் பில் கொடுக்க முடியாதவனுக்கு அன்னிக்குக் கிடைச்ச டிப்ஸ் மட்டும் 102 ரூபாய். 'சூப்பர்'னு ஓட்டல்லயே செட்டில் ஆயிட்டான்!'' என்கிறார் முனியாண்டி விலாஸ் சமையல் மாஸ்டர் சேகர்.

அட, இது நல்லா இருக்கே!

Thursday 7 May 2009

மன உளைச்சல் : புரிதலும் எளிய தீர்வும்

மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்றுங்கள்.
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லையா?
உங்களுக்கு எப்போதும் மனக்கவலையா?
உங்கள் கை நடுக்கம் மற்றும் உள்ளங்கை வியர்வை சுரக்கிறதா?

இவை எல்லாம் மன உளைச்சலுக்கான அறிகுறிகள்.
மன உளைச்சலை கட்டுப்படுத்த முடியும், அது உங்களை கட்டுப்படுத்தும் முன்.

மன உளைச்சல் என்றால் என்ன?
அன்றாட வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் நம் உடலின் பதில் தான் மன உளைச்சல் என்பது. இதில் ஹார்மோன்கள் மற்றும் அட்ரினாலின் வெளிப்பாடும் அடங்கும். அட்ரினாலின் சுரப்பியின் விளையாக இருதயத்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு கூடுகிறது. மேலும் இது, இரத்த ஓட்டத்தை செரிமான அமைப்பிலிருந்து தசைகளுக்கு மாற்றுகிறது.

அத்துடன், அதிக நாட்கள் மன உளைச்சலுடன் வாழ்வது, நமது உடல் ஆரோக்கியம், உறவு மற்றும் சந்தோசங்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதும் மறுக்க முடியாதது.

மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன?
நேர்மறையான மற்றும் எதிர்மறையான நிகழ்வுகள் இரண்டுமே மன உளைச்சலுக்கு காரணங்களாக அமைந்துவிடுகிறது.

அன்புக்குறியோரின் மரணம், விபத்து, சட்டப் பிரச்னை, இடமாற்றம், கடன், உடல் நலக்குறைவு, திருமணம், கருத்தரிப்பு, புதிய பணி, விவாகரத்து, பணியின்மை பொன்ற பொதுவான வாழ்க்கை மாற்றங்கள்.

அதிகப்படியான ஒலி, போக்குவரத்து நெரிசல், நேர அழுத்தம், போட்டி, தொற்று நோய் போன்ற சுற்றுச்சூழல் நிகழ்வுகள் பொன்றவையே மன உளைச்சலுக்கான காரணங்கள்.

மன உளைச்சலின் பாதிப்புகள் என்ன?
தலை மற்றும் வயிற்று வலி, தசை அழுத்தம், வேகமான இருதயத்துடிப்பு, தூக்கமின்மை, பசியின்மை அல்லது அதிகபசி, உள்ளங்கை வியர்வை பொன்ற உடலியல் பாதிப்புகள்.

பதற்றம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், அதிகப்படியான கவலை, துன்பம், பற்றாமை எண்ணம் போன்ற உணர்வியல் பாதிப்புகள்.கவனமின்மை, மறதி, நம்பிக்கையின்மை உள்ளிட்ட மனவியல் பாதிப்புகள் போன்றவை.

மன உளைச்சலை கட்டுப்படுத்துவது எப்படி?
சிலர் எதிர்மறையான நடவடிக்கைகளான புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருட்கள் உட்கொள்வதன் மூலம் மன உளைச்சலை சமாளிக்க முற்படுவர். இது, மன உளைச்சலை கட்டுப்படுத்தியதாக முகமூடியை தந்து இவர்களுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பது மட்டுமல்லாது, குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். இத்தகைய பழக்கங்கள் முற்றிலும் தவறு மற்றும் தவிர்கப்பட வேண்டியதாகும்.

மன உளைச்சலை தகர்த்தெரிய...
* நேரத்தை சரியாக திட்டமிடுதல்
தினசரி திட்டமிடல் அவசியம். மிக முக்கியமான செயல்களுக்கு முக்கியத்துவம், பெரிய தேவைகளை உடைத்து சமாளிக்க முடிந்த சிறியவைகளாக ஆக்குதல், ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்தல் ஆகியவை இவற்றில் அடங்கும்.

* செய்வதை நேர்மையாய் செய்தல்
நமக்கு தகுதியான மற்றும் விருப்பமான வேலைகளை மட்டும் தேர்ந்தெடுத்தல். நம்மால் செய்ய முடிந்த வேலைக்கான திட்டமிடல் மற்றும் உற்றுநோக்குதல்.

* முக்கியமான வாழ்க்கை மாற்றங்களை பிரித்தல்
நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் போதிய இடைவெளி, அதாவது ஒரே சமயத்தில் பணி மாற்றம், புது வீடு வாகனம் வாங்குதல் ஆகியவற்றை தவிர்த்தல்.

* பகிர்தல்
உதவிகோருதல் என்பது இயலாமையின் வெளிப்பாடாகிவிடாது. நமது பிரச்னைகளை குடும்பத்தினரிடமோ, சக பணியாளரிடமோ, மேற்பார்வையாளரிடமோ அல்லது ஆன்மிகத் தலைவர்களிடமோ மனம் விட்டு பேசுவதன் மூலம் உணர்ச்சிவசப்படுவது குறையும் மற்றும் உளவியல் ரீதியாக ஆதரவு கிடைக்கும்.

* குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுதல்
குடும்பத்தினரும் நண்பர்களும் தான் நம் வாழ்க்கையின் அங்கம், அவர்களே நமக்கு அன்பு, பாசம், நட்பு மற்றும் தேவையானபோது ஆதரவு தருபவர்கள்.

* நம்மை நாமே விரும்ப கற்றுக்கொள்ளுதல்
நம்மை கண்டு நாம் முதலில் சந்தோஷப்படவேண்டும். மற்றவர் முன்னிலையில் நாம் எப்படி தோன்றமளிக்கின்றோம் என்பதில் கவலை கொள்ளாமல், நம் தோற்றத்தில் மகிழ்தல். நேர்மறை எண்ணங்களின் வகையாதல் மிக முக்கியம். அது நமக்கு காட்டித்தரும், நம்மால் எதை மாற்ற முடியும் எதை நமது வாழ்வின் மிகச் சிறந்ததாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை.

* ஆரோக்கியமான வாழ்க்கை
உடற்பயிற்சியின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு உட்கொள்ளுதலும், அளவான உறக்கமும் மிக அவசியம்.

* நமக்காக நேரம் ஒதுக்குதல்
நமக்கு விருப்பமானவற்றை செய்ய நேரம் ஒதுக்குதல், பாட்டு, நடனம், ஓவியம், சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்றவற்றில் நமக்கு விருப்பமானவற்றை செய்தல். சோர்வாகும் போது சிறிது ஓய்வெடுத்தல்.

* இளைப்பாற கற்றுக்கொள்ளுதல்
ஆழ்ந்த சுவாச உடற்பயிற்சி, ஆசனம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளுதல்.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சி:
1. ஒலிபெருக்கியில் மெல்லிய இசையை ஓடவிடுங்கள்
2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்
3. வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள்
4. கண்களை மூடிக்கொண்டு ஒரு கையை வயிற்றில் வைக்கவும்
5. மெதுவாக சுவாசத்தை மூக்கினூடாய் உள்ளிழுக்கவும்
6. பின்பு மெதுவாக வாய்வழியே வெளியிடவும்
7. இதே பயிற்சியை 4-5 முறை 5-10 நிமிடங்கள் செய்யவும், நீங்கள் ஆசுவாசப்படும்வரை.

விழிசார் கற்பனை பயிற்சி:
இந்த பயிற்சிக்கு 10-15 நிமிடங்கள் எடுக்கும். உங்களுக்கு நேரமிருந்தால் ஆழ்ந்த சுவாசப் பயிற்சியை தொடர்ந்து இதை செய்யலாம்.

1. வசதியான இடத்தில் நல்ல அமைதியான மெல்லிசையை ஒலிபெருக்கியில் ஓட விடுங்கள்.
2. முடிந்தால் விளக்கின் ஒளியை குறைத்துக்கொள்ளுங்கள்.
3. வசதியான இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.
4. கண்களை மூடிக்கொள்ளுங்கள். கவலைகளை ஒரு ஓரமாக மூட்டைகட்டி வையுங்கள்.
5. மெதுவாக சுவாசிக்கவும்.
6. நீங்கள் பச்சை புல்வெளியில் நடந்துகொண்டிருக்கிறீர்கள், சுற்றிலும் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது, பறவைகளின் ரீங்காரம் கேட்பதாக கற்பனை செய்யுங்கள்
7. தென்றல் உங்களை தழுவுவதாகவும் உணருங்கள்.
8. நடைபாதையின் முடிவில் வெள்ளை மணல் கடற்கரையும், சூரிய உதயத்தையும் பாருங்கள்.
9. நீங்கள் ஆசுவாசப்படும்வரை இந்த பயிற்சியை தொடருங்கள்.

இத்தகைய எளிய முயற்சிகளாலும் மன உளைச்சல் பாதிப்பை போக்கிக் கொள்ள முடியாத பட்சத்தில், உளவியல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற தயங்காதீர்.

Sunday 3 May 2009

டக்வொர்த் லூயிஸ் முறை - உருவான கதையும் எளிய விளக்கமும்

இங்கிலாந்தின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் நகமும் கடிக்கப்பட்டிருக்கும் அன்றைய தினம் . இங்கி. அந்த ஆட்டத்தில் தோற்றால் உலகக்கோப்பையிலிருந்து அந்த அணி வெளியேறிவிடும். கருப்பின பிரச்சனையில் இருந்து மீண்டு தென்னாப்பிரிக்க அணி பல வருடங்களுக்கு பின் ஆடுகிற உலக கோப்பை அது. தென்னாப்பிரிக்கா அந்த உ.கோ ஆரம்ப போட்டிகளில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து தன் இருப்பை ( கிரிக்கெட்) உலகத்திற்கே பறைசாற்றியிருந்தது. முதலில் ஆடிய இங்கி. 45 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி 42.5 ஒவர்களில் 236/6 என்ற நிலையில் மழைக்குறுக்கிடுகிறது. 13 பந்துகள் 21 ரன்கள் . மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் துவங்குகிறது. அனைவருக்கும் அதிர்ச்சி. ஒரே பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என தெ.ஆப்பிரிக்க அணிக்கு இயலாத டார்கெட் வழங்கப்படுகிறது. ஆட்டத்தை இங்கிலாந்து அணி வென்றது.

ஒரு வேளை அந்த ஆட்டத்தில் அப்படி ஒரு ஒருதலைபட்சமான டார்கெட் வழங்கப்பட்டிருக்காவிட்டால் அந்த உ.கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கலாம்.அன்றைய காலக்கட்டத்தில் அப்படி ஒரு டார்கெட்டை வழங்க உபயோகித்த முறை மிக மோசமானது. ஒருதலைபட்சமானது. ரன்ரேட் விகிதத்தையும் அதே ஒவரில் எதிர் அணி முதல் இன்னிங்சில் பெற்ற ரன்களையும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுபவை. இரண்டாவது இன்னிங்சில் ஆடும் அணியின் விக்கெட்டுகளும் கணக்கிலெடுக்கப்படாது. பல வருடங்களுக்கு அந்த முறையே வழக்கமாகி இருந்தது. பல மேட்ச்களுக்கும் அதுவே முதலில் பேட் செய்யும் அணிக்கு பல நேரங்களிலும் உதவியாய் இருந்திருக்கிறது.தமிழ்சினிமாக்களில் ஏழைகளும் வலிமையில்லாதோரும் அடிவாங்கும்போது அவர்களெல்லாம் கதறி அழ ''நம்மள காப்பாத்த யாருமே வரமாட்டாங்களா?'' என சோகமாய் கேட்பார்கள். அப்படித்தான் கிரிக்கெட் அணிகளும் மேட்ச்சுக்கு நடுவே வருகின்ற மழையை விட அதனால் உண்டாக இருக்கும் டார்கெட் பிரச்சனையால் கதறிக் கொண்டிருந்தனர். பல விதவிதமான முறைகளை கையாண்டு தோற்றனர் ஐசிசியும் அகில உலக கிரிக்கெட் ஆர்வலர்களும். ஹீரோக்களைப்போல வந்தனர் இரண்டு பேர். பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் அதுதான் அவர்களது பெயர்.

பிற்காலத்தில் தங்களது பெயர் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாத பெயராகப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 1994ஆம் ஆண்டு மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி மாணவர்கள் அவர்கள். தங்களது பட்டப்படிப்பின் இறுதியாண்டு பிராஜக்ட்டுக்காக புதுமாதிரியான சிந்தனையோடு உருவாக்கிய கணக்கீட்டு முறைதான் இன்று நம்மில் பலரும் மண்டையை குடாய்ந்து சிந்திக்கும் அந்த டி/எல் கணக்கீட்டு முறை. 1995ல் இருவருமாக இம்முறை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசியிடமும் விளக்கியுள்ளனர். 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து , ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டியில் இம்முறை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் உலக கிரிக்கெட்டில் இருந்த கணக்கீட்டு முறை PARABOLA எனப்படும் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளார்க் என்பவரின் முறையே. டி/எல் முறை அதைவிட நேர்த்தியாகவும் பாரபட்சமற்ற முறையில் இருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதியது. ஐசிசி உடனடியாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்னரே கூடி பேசி முடிவெடுத்தது.5 வருடங்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் தேதி ஐசிசி இம்முறையை அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் ( முதல்தர ஒரு நாள் போட்டிகளுக்கும்) பொதுவான ஒன்றாக அறிவித்தது.

டக்வொர்த் மற்றும் லூயிஸிடம் இந்த முறைக்கான யோசனை எப்படித்தோன்றியது எனக்கேட்ட போது 1992 ஆம் ஆண்டு இங்கி-தென் ஆப்பிரிக்காவின் போட்டியில் ஒரு வேளை அப்போது கையாண்ட முறை இங்கிலாந்துக்கு எதிராக அமைந்திருந்தால் என்கிற கேள்வியே இது போன்ற முயற்சிக்கு விதையாக அமைந்ததாக தெரிவித்தனர். டக்வொர்த் லூயிஸ் முறை:இந்த டக்வொர்த் லூயிஸ் முறையில் எப்படி கணக்கிடுகிறார்கள் என்கிற ஐயம் பலருக்கும் உண்டு. புரிந்து கொள்ளும் வரை அது மிகசிக்கலான மற்றும் புரிந்து கொள்ள இயலாத ஒன்றாகவே தெரிந்தது.. அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினால் அது ஒன்றுமே இல்லாத வாய்ப்பாட்டு முறை என்பது நிதர்சனமானக தெரிந்தது.அதைக்குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் , பொறுமையும் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்.

முதலில் சில அஸ்திவார குறிப்புகள்.
*இரண்டு அணிகளும் குறைந்தது 20 ஓவர்களாவது விளையாடினால் மட்டுமே டி/எல் முறை கணக்கிலெடுக்கப்படும்* ரிசோசர்சஸ் (Resources ) - இதுதான் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளும் இந்த முறையின் மிகமுக்கியமான காரணி . அதை நாம் சக்தி அல்லது அணியின் பலம் என்று அழைக்கலாம்.*அதாவது இரண்டு அணிகளுக்கும் சமமான அளவில் 10 விக்கெட்டுகள் மற்றும் ஐம்பது ஓவர்கள் என்பது இங்கே '' பலமாக'' கருதலாம். இரண்டு அணிகளுக்கும் சமமான பலம் (50 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்கள் )*இந்த ரிசோசர்ஸ்களை அல்லது இரு அணி பலத்தை அடிப்படையாக கொண்டே டார்கெட் முடிவாகிறது. இரண்டு அணிகளின் ரன்கள், ஆடிய மற்றும் ஆட இருக்கும் ஒவர்கள் , எத்தனை விக்கெட்டுகள் இழந்திருக்கிறோம் என்பனவான காரணிகள்.* இது தவிர டக்வொர்த் மற்றும் லூயிஸ் இணைந்து பல நூறு ,தற்காலத்தில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டங்களின் போக்கை கருத்தில் கொண்டு உருவாக்கிய ( ரன்ரேட், பிட்ச்,அணி பலம்,ஆட்டத்தின் போக்கு etc ) அட்டவணையைக்கொண்டு மேலே கூறிய ரிசோர்ஸ்களை வைத்து டி/எல் முறையில் டார்கெட்டை கண்டறியலாம்.இதை ஒரு எளிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம்.A அணியிம் B அணியும் ஆடுகின்றன. A அணி ஆடி முழுமையாக தனது ஆடி முடித்தபின் B அணி பேட்டிங் செய்யும் போது மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் குறைக்கப்படும் , அதே போல ஆடும் நேரமும் குறைக்கப்படும் . இப்படி அவர்களுக்கான ரிசோர்சஸ் (பலம்) குறைக்கப்படும் பட்சத்தில் B அணிக்கு A அணியைவிட குறைந்த டார்கெட் தரப்படும்A அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடும் போதே மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் மற்றும் ஆடும் நேரமும் குறைக்கப்படும் இல்லையா.. அதனால் அதனை கருத்தில் கொண்டு B அணிக்கு உயரிய டார்கெட் தரப்படும்.இதை இப்படியும் விளக்கலாம். A அணி ஆடத்துவங்கும் போது 50 ஓவர்கள் என்றே ஆடத்துவங்கும் ஆனால் 40 ஓவர்களில் மழை வந்துவிடுகிறது. அவர்களது கையில் 7 விக்கெட்டுகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மீதியிருக்கும் கடைசி பத்து ஓவர்களில் A அணி ஆடியிருந்தால் நிச்சயம் அவர்களால் 60-75 ரன்கள் வரை சேர்க்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. அவர்கள் ஆடத்துவங்கும் போதும் 40 ஓவரின் போதும் மழையால் இத்தோடு அவர்களது பேட்டிங் முடியப்போகிறது என்பது தெரிந்திருக்காது. அதை கருத்தில் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 40 ஓவர்கள்தான் ஆடப்போகிறோம் என்று தெரிந்தே ஆட இருக்கும் B அணிக்கு அதிக டார்கெட் வழங்கப்படுகிறது.ஒரு வேளை A அணி 40 வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்திருந்தால், அடுத்த பத்து ஓவர்களில் அதிகபட்சம் 25-30 ரன்களே எடுக்க இயலும் . அதற்கேற்றாற் போல் B அணிக்கு டார்கெட் கிடைக்கும்.இது பொதுவான ஒரு எடுத்துக்காட்டு. நடைமுறையின் ஒரு துளியே.இப்படி கணக்கிட டக்வொர்த் மற்றும் லூயிஸ் உருவாக்கிய அட்டவணையை காண்போம்.

அட்டவணையானது ஒவ்வொரு ஓவரின் பந்தையும் கணக்கிலெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அது மிகப்பெரிய அட்டவணையாக இருப்பதால் அதிலிருந்து முக்கிய பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய அட்டவணை உருவாக்குவோம்.சுருக்கப்பட்ட மாதிரி அட்டவணைப்படி எப்படிக்கணக்கிடுவது என காண்போம்.

மூன்று சூழ்நிலைகளில் ஒரு போட்டி தடையாகலாம் அல்லது நிறுத்தப்படலாம்.1.இரண்டாவது பேட்டிங்கின் போது2.முதல் பேட்டிங்கின் போது3.ஆட்டம் தொடங்குதற்கு முன்1.இரண்டாவது பேட்டிங்கின் போது -A அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்கிறது. B அணி தொடர்ந்து ஆடும் போது, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 80 ரன்கள் எடுக்கிறது. இப்போது மழை வந்தால் எப்படி கணக்கிடுவது எனப்பார்ப்போம்.*ஆட்டம் நின்றபோது B அணிக்கு 30 ஓவர்களும் 8 விக்கெட்டுகளும் கையில் இருந்தன. எனவே அவர்களிடம் 67.3% பலம் இருந்தன.*மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக ஆக்கப்பட்டால் , இதே அட்டவணையில் அவர்களது பலம் 57% சதவீதமாக குறையும்.*மழையால் அவர்களுக்கான இழப்பு 67.3-57.4=14.9%*இதனால் A அணியைவிட ( 100% சதவீதம் பலம் உபயோகிக்கப்பட்டுள்ளது) B அணிக்கு 85.1% சதவீத பலம் உள்ளது.*இப்போது A அணியை விட B அணிக்கு பலம் குறைந்திருப்பதால் இப்படி கணக்கிட வேண்டும்.A அணியின் ஸ்கோர் x B அணியின் பலம் சதவிகிதத்தில்250 x 85.1/100 = 212.75எனவே B அணிக்கான டார்கெட் 40 ஓவர்களில் 213 எடுத்தால் வெற்றி என டி/எல் முறையில் நிர்ணயிக்கப்படும்.2. முதல் பேட்டிங்கிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -A அணி முதலில் பேட்டிங் செய்கிறது, 30 ஓவர்கள் ஆடிய நிலையில் 143ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையிலிருக்கிறது. இப்போது ஆட்டம் இரு அணிகளுக்குமே 40 ஓவர்கள் என பிரிக்கப்படுகிறது. A அணிக்கு 10 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் எஞ்சியுள்ளன. தொடர்ந்து ஆடி 40 ஓவர்களில் 200 ரன்கள் குவிக்கிறது A அணி.*மழைக்குறிக்கிட்ட போது A அணிக்கு 20 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் மீதமிருந்தன. இதைக்கொண்டு அதன் பலத்தை டி.எல் அட்டவணை முறையில் கணக்கிட்டால் அவர்களது பலம் 38.6% இருந்தது.*மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ( ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின் ) அவர்களுக்கு 10 ஓவர்களும் 5விக்கெட்டுகளுமே மீதமிருந்தன. அதை கொண்டு அட்டவணையில் பார்த்தால் 26.1%*மழையால் A அணியில் பலம் 38.6% - 26.1% = 12.5% சதவீதம் B அணியை விட குறைந்துள்ளது. அதாவது 87.5 சதவீதமே பலம்.*B அணிக்கு தனது டார்கெட்டும் ஆட இருக்கும் ஓவர்களும் பேட்டிங் செய்யும் முன்பே தெரியுமென்பதால் அவர்களுக்கும் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் 10 விக்கெட்டுகளும் இருப்பதால் அட்டவணைப்படி 89.3% பலம் இருக்கிறது.*A அணிக்கு ( 89.3% - 87.5% = )1.8% பலம் B அணியை விட குறைவாக இருப்பதால் , B அணிக்கு 1.8% சதவீதம் அதிக டார்கெட் தரப்படும். ஆனால் அது 50 ஓவர்களுக்கு அட்டவணைப்படி கணக்கிடப்பட்டு தரப்படும். அதாவது மழையால் குறைந்த A அணியின் பலம் 12.5% அதைக்கொண்டு கணக்கிட்டால்..200 x 12.5% = 25 , ஆகவே 200+25 = 225 , இப்போது இந்த ஸ்கோரைக்கொண்டு எத்தனை ரன்கள் B அணிக்கான டார்கெட்டை அதிகமாக்குவதென்று காண்போம்.225 x 1.8% = 4.5 ரன்கள்*இப்போது 40 ஓவர்களில் A அணி எடுத்த 200 ரன்களுடன் 4 ரன்களையும் சேர்த்து 204+1 , 205 ரன்கள் பெற்றால் வெற்றி என அறிவிக்கலாம்.3.ஆட்டம் துவங்குவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -காலைநேரப்பனி, அல்லது மழை , வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகிறது , அதனால் A அணிக்கு இரு அணிகளுக்கும் 40 ஓவர்கள் நிர்ணயிக்கப்படுகிறது , முதலில் ஆடும் A அணி 38 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது ( ஆல் அவுட்). உணவு இடைவேளையில் மீண்டும் மழை .B அணிக்கு 30 ஓவர்கள் என நிர்ணயிக்கப்படுகிறது.., இப்போது அந்த அணிக்கு எப்படி டார்கெட் தருவது..*A அணிக்கு 40 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்ட போது இருந்த பலம்.. அட்டவணைப்படி 89.3% ( 40 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் )*B அணிக்கு 30 ஓவர்கள் எனக் குறைக்கப்பட்டதும் அவர்களது பலம் அட்டவணைப்படி 75.1% எனக்குறைகிறது. ( 30 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகளுடன் )*எனவே B அணிக்கு A வைவிட குறைந்த பலமே இருப்பதால் , A வை விட குறைந்த பட்ச டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அது இப்படி கணக்கிடப்படுகிறது* 160 x 75.1/89.3 = 134.56 , எனவே B அணிக்கு 30 ஓவர்களில் 134+1 எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்படுகிறது.B அணி இந்த டார்க்கெட்டை நோக்கி விளையாடும் போது 25 ஓவரில் மழை வந்து ஆட்டம் கைவிடப்படும் சூழல் வருகிறது. இப்போது என்ன செய்யலாம் . அந்த நேரத்தில் B அணி 120 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருக்கிறது.* இப்போது அந்த அணியின் பலம் , 5 ஓவர்களையும் 8 விக்கெட்டுகளையும் இழந்திருப்பதை வைத்து கணக்கிடப்படவேண்டும். அட்டவணைப்படி அதன் பலம் 9.4% . இந்த 9.4% ஆட்டம் கைவிடப்பட்டதால் B அணிக்கு ஏற்பட்ட இழப்பாக கருதலாம்.*தனது பேட்டிங்கை B அணி துவங்கும் போது அதற்கு 75.1% பலம் இருந்தது. ஆனால் இப்போது அதில் மேலும் 9.4% இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அணியின் பலம் 75.1 - 9.4 = 65.7% மட்டுமே. எனவே முன்னால் கூறியதைப்போல இந்த பலத்தை வைத்து டார்கெட்டை கணக்கிடலாம்* 160x65.7/89.3 = 117.7 , எனவே 25 ஓவர்களில் B அணி 118 ரன்கள் எடுத்திருந்தாலே அது வெற்றிப்பெற்றதாக கருதலாம். அந்த அணியோ 120/8 என்ற முன்னிலையில் இருப்பதால் , B அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்க இயலும்.எதிர்பார்க்கப் படும் ஸ்கோர் ( PAR SCORE)-
சிலசமயங்களில் கங்குலி அல்லது தோனி விளையாடும் போது பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டோடு விளையாடுவதை பார்த்திருப்போம். அது ஒரு வேளை சேஸிங் செய்யும் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மழை வரும் என எதிர்பார்க்கையில் டி/எல் முறைப்படி 30வது ஓவரில் மழைவர நேர்ந்தால் எடுத்திருக்க வேண்டிய ஸ்கோர் 35 என்றால் ஒன்று 40 என்றால் ஒன்று என கணக்கிட்டு வைத்துக்கொள்ளுதல். இதை PAR Score என அழைக்கிறார்கள். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு எளிதாக இருக்கும்.
சமீபகாலமாக மென்பொருள் துறையின் எழுச்சியும் வளர்ச்சியும் இம்முறையை ஒரு சிறிய தட்டச்சுகளில் எளிதாக்கியிருக்கிறது.
http://www.duckworth-lewis.com/Calculator/tabid/72/Default.aspxஎன்கிற இந்த இணையதளத்தில் யார்வேண்டுமானாலும் கணக்கிடலாம்.

Saturday 2 May 2009

சிக்கனமே சிறந்தது....

அமெரிக்காவின் ராக்பெல்லர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். ஒரு நாள் ராக்பெல்லரை பார்த்து தங்களது பள்ளிக்காக நன்கொடை வாங்க ஒரு மாணவர் குழுவினர் வந்திருந்தனர்.ராக்பெல்லரின் வீடு இரவு நேரத்தில், சில விளக்குகளின் உதவியோடு சற்று இருட்டாகவே இருந்தது.ராக்பெல்லர் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்துக் கொண்டு மங்கலான ஒளியில் படித்துக் கொண்டிருந்தார்.உள்ளே வந்த மாணவர்கள், இவரே இப்படி கஞ்சப்பிசினாரியாக உள்ளாரே, இவரா நமது பள்ளி கட்ட நன்கொடைத் தரப் போகிறார். வேண்டாம், இப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று கூட எண்ணினர்.அப்போது, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று ராக்பெல்லர் கேட்டார்.கல்லூரியில் வகுப்பறை இல்லாமல் கஷ்டப்படுகிறோம், அதற்கு சுமார் 3 லட்சம் டாலர் செலவாகும். தாங்கள் ஒரு 500 டாலர் நன்கொடை கொடுத்தால் கூட நன்றாக இருக்கும் என்று மாணவர்கள் நம்பிக்கையே இல்லாமல் கேட்டனர்.

இதைக் கேட்ட ராக்பெல்லர் 3 லட்சம் டாலரையும் ஒரே செக்கில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்."நான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த உதவியை செய்திருக்க முடியாது" என்று கூறினார்.அவரது அடக்கமான பேச்சும், எளிமையும் அவரை செல்வந்தராக உயர்த்தி இருக்கும் என்பதை புரிந்து கொண்டவர்களாய் மாணவர்கள் வெளியே வந்தனர்.