Thursday 30 September 2010

"ஆதார்' எனும் ஆதாரம்! - தினமணி தலையங்கம்

இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை (ஆதார்) மகாராஷ்டிர மாநிலத்தில் ஓர் ஆதிவாசி குடியிருப்பில், ரஜ்னா சோனாவாணே என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் தேசிய அடையாள அட்டையை யாரோ ஒரு பெருநகரவாசிக்கு அளிக்காமல், கடைக்கோடியில் உள்ள ஆதிவாசி குடியிருப்பில் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011-க்குள் வழங்கப்பட்டுவிடும் என்று இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் அறிவித்த திட்டத்தின்படியே இது நடந்துள்ளது என்பதும்கூட, இவர்கள் சொன்னபடி 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கும் ஆதார அட்டைகளை வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தருகிறது.

நகரவாசிகளைவிடவும் மிகவும் முக்கியமாக கிராம மக்களுக்குத்தான் இத்தகைய அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆதார அட்டையைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் தனது நன்றி தெரிவிப்பில்கூட, "ஆதாரம் இனி என் வாழ்வின் ஆதாரம்'  என்று கூறியிருப்பது மிகமிக உண்மை.

தற்போதைய சூழ்நிலையில் குடும்ப அட்டையை வங்கிகள்கூட ஓர் அடையாளமாக ஏற்கத் தயங்கும் அளவுக்குப் போலி குடும்ப அட்டைகள் மலிந்துவிட்ட நிலையில், எல்லா பயன்பாட்டுக்கும் பொருந்துகின்ற ஆதாரம் போன்ற அடையாள அட்டைகள் மிகமிக அவசியமாகின்றன. பன்னிரண்டு இலக்கங்கள் கொண்ட ஆதார அட்டை எண்ணைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணைப்பை வழங்க முடியும். ஒருவேளை, ஆதார அட்டை எண்ணும் செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்கும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த ஆதார அட்டை உண்மையிலேயே ஏழைகளுக்குத்தான் அடிப்படையான விஷயங்களில் தேவையாக இருக்கிறது. முதலாவதாக உணவு, இரண்டாவதாக மருத்துவம், மூன்றாவதாகக் கல்வி. இந்த அட்டையை வழங்கிப் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகளால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை, குடும்ப அட்டை பெற முடியவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை. இந்த ஆதார அட்டை அத்தகைய நிலையைப்  போக்கும் என்று கூறியுள்ளார். அது உண்மைதான். இருப்பினும், இந்த ஆதார அட்டை வெறும் ஆதாரமாக இல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் தொடர்புடைய ஆவணமாக மாற்றப்பட்டாக வேண்டும்.

இந்த ஆதார அட்டைகளை அடிப்படையாக வைத்து பொருள் விநியோகத்தைத் தொடங்கும்போது, ஏழையின் பெயரைச் சொல்லி உணவு தானியங்களை வேறு இடங்களுக்குக் கடத்தவும், பொது விநியோக மையங்களில் கொடுக்காமல் தவிர்க்கப்படுவதுமான நிலையைத் தவிர்த்துவிட முடியும். மேலும், இந்த ஆதார  அட்டையில் இருப்பவர் எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எந்தெந்தத் தடுப்பூசிகள் அரசால் போடப்பட்டன, இவர் எந்தெந்தத் திட்டத்தில் பயனடைந்தார் என்கிற அனைத்துத் தகவல்களும் - இந்த ஆதார எண்ணைத் தட்டினாலே கணினியில் பார்க்க வகைசெய்ய முடியும். ஆதார அட்டையால் பயன்பெறப் போகிறவர்கள் முழுக்க முழுக்க ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அட்டை ஒவ்வொரு இந்தியனின் பிறந்த தேதி, தாய் தந்தை, ஊர், மாவட்டம், மாநிலம், ரத்த வகை ஆகியவற்றோடு, ரேகைப்பதிவு அடையாளங்களையும் கொண்டிருக்கும் என்பதால் இதன் பயன்பாடு பலவகைப்பட்டதாக இருக்கிறது.

பெருவிரல் ரேகைப் பதிவு இருப்பதால் இதில் போலிகள் வராது என்றாலும்கூட, நம் அரசு ஊழியர்கள் செய்யும் குளறுபடிகளால் இத்திட்டம் அர்த்தமற்றதாக மாற்றப்படும் அபாயங்கள் உள்ளன. கைரேகைப் பதிவு சரியாக இருந்தாலும் பெயர் மாறுதல், தவறாக அச்சிடுதல், பிறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுதல் என்று எல்லா குளறுபடிகளையும் செய்யும் துணிவும் ஆற்றலும் கொண்டவர்கள் நம் அரசு இயந்திரத்தின் உறுப்புகளாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை இதற்கு ஒரு சான்று.

வாக்காளர் அடையாள அட்டைகளுக்காகப் புகைப்படம் எடுத்து, நேரடி சரிபார்ப்பு முடித்தும் பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவே இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்படாமல், எங்கோ ஒளித்து வைக்கப்பட்டு, பிறகு குப்பையில் கொட்டப்பட்ட வாக்காளர் அட்டைகள் பற்றி நிறையச் செய்திகள் வந்தும், எந்தவொரு அதிகாரி, ஊழியர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

வாக்காளர் பதிவேட்டில் உள்ளவருக்கு எப்படி அடையாள அட்டை மட்டும் இல்லாமல் போகும்? அதற்குப் பொறுப்பானவர் யார்? என்கிற விசாரணைகூட இல்லையென்றால், இதற்குக் காரணம் அலுவலர்களின் சோம்பேறித்தனமா அல்லது அரசியல்வாதிகளின் சதியா? எது உண்மை?

வாக்காளர் அடையாள அட்டை வழங்கவில்லை அல்லது தவறான புகைப்படம், பிழையான பெயரில் வழங்கப்பட்டது என்று சொன்னால், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.

தொலைந்துபோனதால் வேறு அடையாள அட்டை வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்து, வாக்காளரைக் குற்றவாளியாக்கும் நடைமுறைதான் தற்போது அமலில் இருக்கிறது.

இதே நிலைமை ஆதார அட்டைக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தவறுக்குக்  காரணமான ஊழியர், அதைச் சரிபார்க்கத் தவறிய அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். அதைச் செய்ய அரசு தயங்குமானால், வாக்காளர் அடையாள அட்டை குழப்பம் போலவே, ஆதார அட்டை அர்த்தமிழக்கும்.

நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, குளறுபடிகளோ, குறைபாடுகளோ இல்லாத, எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய, எல்லா பயன்பாட்டுக்கும் உதவக்கூடிய அடையாள அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், ஊடுருவல்கள் தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

Friday 24 September 2010

கிரிக்கெட் மட்டையும், கன்னத்தில் அறையும் (ஒரு பக்க கதை)

எங்கடா பார்த்திபன்,  என்று வேலு கேட்டு முடிக்கும் போதே  கிரிக்கெட்  மைதானத்துக்கு அவன் வந்து  சேர்ந்தான்.  ஞாயிற்றுக்கிழமை  வந்தா எல்லாம் ஒன்னு சேந்து கிரிக்கெட் ஆடுவாங்க.   இவங்க  கிரிக்கெட்  அணிக்கு ஸ்டார் கிரிக்கெட் டீம், சச்சின் கிரிக்கெட் டீம்னு  எல்லாம் பேர் வச்சி, எந்த பெரும் நிலைச்சி  இருந்ததில்லை.  எல்லாரும்  ஆளுக்கு  ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சேர்த்து மொத்தமா  25 ருபாய் பார்த்திபன் கையில கொடுத்த விக்கி கார்க் பந்து(Wicky corck ball)  வாங்கிட்டு வர சொன்னாங்க.

நீங்க நினைக்கலாம், கடையில காசு கொடுத்தா பந்து கொடுக்க போறாங்க, அது எதுக்கு பார்த்திபன். அவன் போனால் தான் ஒரு பந்து வாங்க வேண்டிய காசுல இரண்டு பந்து வாங்கிட்டு வருவான்.  கடைக்காரன் அசர்ற நேரமா பார்த்து ஒரு பந்தை ஆட்டைய போடறதுல அவன அடிச்சிக்க ஆளே கிடையாது.  பெரும்பாலான சமயம் ரெண்டு பந்தோட தான் அவன் வருவான். சில சமயம் வேலைக்கு ஆகாது.

இப்படி பண்ணுவதெல்லாம் சரியா இல்ல தவறான்னு கூட தெரியாத சின்ன வயசு பசங்க. எல்லாமே ஒரு த்ரில், ஜாலி அவங்களுக்கு. பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி போகிற பசங்க, மருந்து  கடைகளுக்கு  மருந்து சப்ளை  பண்ற பசங்க,  மற்றும் பட்டு நெசவு தறியில வேலை பாக்கற பசங்க கலந்த கலவையாக இவங்க கிரிக்கெட் டீம் இருக்கும்.  இரண்டு அணியாக பிரிந்து  ஆட்டம்னு வந்துட்டா ஜெயிக்கிறதுல வெறியா இருப்பானுங்க. மற்ற சமயங்களிலும் ஒற்றுமையாக இருப்பாங்க.
பொங்கல் மாதிரி பண்டிகை வந்துட்டா இவங்களுக்கெல்லாம் ரொம்ப ஜாலி தான்.  ஏனென்றால், நெசவு வேலை செய்யற பசங்களுக்கு தொடர்ச்சியா 15  நாள் விடுமுறை கிடைக்கும்.  பள்ளி கல்லூரி விடுமுறையாக இருக்கும், மற்ற வேலை செய்கிற பசங்களும் எப்படியோ சமாளிச்சி வேலைக்கு நடுவுல கிரிக்கெட் மைதானத்துக்கு வந்திடுவாங்க. அந்த நேரத்தில எல்லாம் தினமும் காலையில இருந்து மாலை வரை கிரிக்கெட் மட்டும் தான் அவங்களுக்கு வாழ்க்கை.

எல்லாரும் காசு போட்டு ஒரு நல்ல புது கிரிக்கெட் மட்டை (Cricket Bat) வாங்கலாம்னு முடிவு  பண்ணி காசு சேத்தாங்க.  மொத்தமா 250 ரூபாய் வசூலாகிவிட்டது. அடுத்து யாரெல்லாம் சேர்ந்து கடைக்கு போய் புது Bat வாங்கறதுன்னு முடிவு பண்ணும் போது, பார்த்திபன் அவங்க அத்தை ஊருக்கு போய்ட்டதால, மற்ற ஐந்து  நண்பர்கள்,  ஸ்போர்ட்ஸ் கடைக்கு போய் ஒவ்வொரு மட்டையா எடுத்து எடுத்து விலை கேட்டுட்டு,  இதுல  ஒருத்தர் வித விதமாக ஸ்ட்ரோக் வச்சி பார்த்து இது சரி இல்லை அது சரி இல்லைன்னு கமெண்ட்ஸ் கொடுத்து கிட்டு,  இன்னொருத்தர் MRF ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிற இந்த மட்டைய வாங்கலாம்னு ஆளுக்கு ஒரு மட்டைய எடுத்து வச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கும்போதே,   ஒரு மட்டைய,  கடைக்காரருக்கு  தெரியாம எடுத்துகிட்டு ரவி வேகமா படிக்கட்டை நோக்கி போவதை மற்ற நான்கு நண்பர்களும் பாக்கறதுக்கும் சரியாக இருந்தது. மற்ற நான்கு பேரும்  ஷாக் ஆகிட்டாங்க, ஏன்டா ரவி இப்படி பண்ணிட்டான்.  அதே நேரத்தில எதிர்  திசையில இருந்து இரண்டு பசங்க அந்த கடைய நோக்கி வராங்க.  வழக்கமா பார்த்திபன் தானே இப்படி எல்லாம் பண்ணுவான். ரவி ஏன் இப்படி பண்ணிட்டன்  என்று ஒரே கலவரமாகி போனார்கள். இந்த ஐந்து பேருமே அவ்வளவாக தைரியம் இல்லாத பசங்க. இந்த மாதிரி இரண்டு பேட் எடுக்கிற திட்டமெல்லாம் அவங்க போடவே இல்லை.

எதிர்  திசையில இருந்து வந்த பசங்க, கடைக்காரர பார்த்து, ஒரு அண்ணன் இப்போ மட்டை வாங்கிட்டு போறாரே அது எவ்வளவு விலை என்று கடைக்காரரை பார்த்து கேட்கவும்,  கடைக்காரர் அதிர்ச்சியாகி, யாரும் இன்னும் வாங்கலயே என்று சொல்லிக்கொண்டே, எதிரில் மட்டை வாங்க வந்த பசங்களோட தலையை எண்ண ஆரம்பித்தார். எங்கடா நீங்க 5 பேர் தான வந்திங்க, இன்னொருத்தன் எங்க என்று கேட்டு கொண்டே இரண்டு பேர் கைய பிடிச்சிகிட்டார். மற்ற இரண்டு பேரிடம் ஒழுங்கா போய் அவன கூட்டிகிட்டு வாங்க, இல்லனா இவங்க இரண்டு பேரையும் போலீஸ்ல புடிச்சி கொடுத்திடுவேன்னு கடைக்காரர்  ஆக்ரோஷமாகி கத்தறார்.
அந்த இரண்டு பேரும் இப்படி விளையாட்டு  வினையாகி  போனதேன்னு வருத்தபட்டுகிட்டே, மட்டைய எடுத்துகிட்டு போன ரவியை  தேடிகிட்டு போறாங்க. மட்டைய எடுத்தவன் 7 கீ.மீ.  தள்ளி இருக்கிற அவங்க கிரிக்கெட் ஆடற மைதானத்துக்கு ஒரே ஓட்டமாக ஓடி அங்க இருக்கிற மற்ற நண்பர்கள் கிட்ட  நடந்த  விஷயத்த சொல்லவும்,  கடையிலிருந்து சைக்கிள்ல வந்த மற்ற இரண்டு பேர் அங்க வரவும் சரியாக இருந்தது. எல்லாம் சேர்ந்து அந்த மட்டைய எடுத்துகிட்டு வந்த ரவியை கடுமையாக திட்டி என்ன பண்றதுன்னு முடிவு பண்ணி இவங்களை எப்பவுமே சப்போர்ட் பண்ற 3 ஏரியா பெரிய மனிதர்கள் கிட்ட விஷயத்த சொல்லி கடைய நோக்கி வந்துகிட்டு இருக்காங்க.

கடைக்காரர் அதுக்குள்ள அவங்க மாமன், மச்சான், எல்லாரையும் போன் பண்ணி வர வச்சிட்டார். அதில ஒரு ஆள் அந்த இரண்டு பையன்களுள் ஒருத்தனான வேலு கிட்ட வந்து அவன் முகத்தை  பார்த்து,  மூஞ்ச பாரு திருட்டு தனம் அப்படியே இருக்கு என்று சொல்லிக்கிட்டே  இன்னொருத்தன  பார்த்து உன் பேர் என்னனு கேட்டான். அவன் ராமு என்று சொன்னவுடன், அவனை பார்த்து எந்த ஏரியா நீங்க எல்லாம், உங்க அப்பா பேர் என்ன அவர் என்ன வேலை செய்யறார் இப்படி எல்லா விதமான கேள்வியும் மாத்தி மாத்தி கேட்டுகிட்டே இருக்கும் போது,  வேலு, அந்த ஆளை பார்த்து இதெல்லாம் ஏன் கேக்கறிங்க. உங்க வேலைய பாருங்கன்னு சொன்னவுடன்,   வேலுவோட கன்னத்திலே பளார்னு ஒரு அடி விழுந்தது. பண்றது திருட்டு வேலை, குடுக்கற சவுண்ட பார்த்தியான்னு கேட்டுகிட்டே கையை மறுபடியும் ஓங்கவும்,  உடனே ராமு, கடைக்காரரை பார்த்து  அந்த மட்டை எவ்வளவு காசுன்னு சொல்லுங்க கொடுத்திடறோம்,  மேல எல்லாம் கைய   வைக்கதீங்கன்னு   சொல்லிகிட்டே பாக்கெட்டில இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான்.  கடைக்காரர் எண்ணி பார்த்து 250  ரூபாயை வாங்கிகிட்டு, பார்த்த சின்ன பசங்கள இருக்கீங்க, எடத்த காலி பண்ணுங்கன்னு சொல்லி அனுப்பிட்டார்.  ராமு, வேலுவை பார்த்து ரொம்ப வலிக்குதாடான்னு கேட்கும்போதே,  அடிவாங்கின வேலு , ரொம்பநாளா விளையாட்டா நம்ம பார்த்திபன் ஒரு பந்து காசுக்கு, இரண்டு பந்து வாங்கிட்டு வந்ததுக்கு தண்டனையா இன்னைக்கு நான் அடி வாங்கிட்டேன்.   இனிமே இந்த மாதிரி தப்பை யாரும் செய்ய நாம அனுமதிக்க கூடாதுன்னு, இந்த மாதிரி அனுபவம் யாருக்கும் வரக்கூடதுடான்னு  சொல்லிகிட்டே, அடக்க முடியாம அவன் கண்ணுல வந்த கண்ணீரை துடைத்தான். 

கடையிலிருந்து வேலுவும், ராமுவும் விளையாட்டு மைதானத்தை நோக்கி செல்லும் போது,  சில பெரிய மனிதர்களுடன், மட்டைய தூக்கிட்டு ஓடின ரவியும்,  மற்ற பசங்களும் வந்துட்டாங்க. நடந்ததை எல்லாம் அவர்களிடம் சொல்லி திரும்பி போகும் போது வேலு , மட்டைய தூக்கிட்டு ஓடின ரவியை பார்த்து முறைச்சிகிட்டே ஏண்டா இப்படி பண்ண,  இனிமே இப்படி எல்லாம் பண்ணாதடா என்று சொன்னான். ரவியும் தவறை உணர்ந்தவனாய் தலை கவிழ்ந்தான்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து,  ஊருக்கு போயிருந்த பார்த்திபன் திரும்பி வந்தான்.  வேலுவிடம் நெருங்கி வந்து, என்ன நண்பா பொங்கலுக்கு புது பேட் வாங்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தோம். பந்தை ஓங்கி அடிச்சா  பறக்கிறா மாதிரி இரண்டு பேட் வாங்கிடுவோம்,  என்னைக்கு போகலாம்னு சொல்லு என்று பார்த்திபன் வேலுவை பார்த்து கேட்கவும்.  , வேலு அவன் கன்னத்திலே ஒரு அறை விடறதுக்கும் சரியாக இருந்தது.    நண்பேண்டா!   நண்பேண்டா! 

டிஸ்கி: எனக்கு இந்த மாதிரி கதை எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை.  என்னுடைய எழுத்து நடை பற்றி  கமெண்ட்ஸ்  மூலமாக  உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

Tuesday 21 September 2010

விதிக்கப்பட்ட விதிகள்

கடந்த வாரம் விஜய் டிவி நீயா நானாவில் 'விதி' இருக்கா இல்லையா என்ற தலைப்பில் பல்வேறு சுவராசியமான  விஷயங்கள்   விவாதிக்கப்பட்டது.  அந்த தலைப்பு குறித்து சில கருத்துகள் என் பார்வையில்

எதிர்காலத்தில் நமக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த ஒரு பயம் அல்லது அதை பற்றி விளங்காத புதிர்கள், இதன் விளைவாக  உருவானது தான் விதி என்று பொதுவாக கருதப்படுகிறது. 'அவன் விதி அவ்வளவு தான்',  'வாழ்க்கையில் விதி விளையாடுது'  போன்ற சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலம்.

விதி என்ற ஒரு விஷயத்தின் மீது மக்களுக்கு பல தரப்பட்ட அபிப்பிராயம் இருக்கிறது. அவை இந்த நான்கு பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

I. எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.

II. விதி என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அதை பற்றி பயப்படாமல் உன் வேலையை பார்த்து கொண்டிரு.

III. விதி என்ற ஒன்று இல்லை, அதனால் அதை பற்றி கவலை பட வேண்டியது இல்லை.

IV. விதி என்கிற நம்பிக்கையை அல்லது உணர்வை கடக்கும் போது ஞானம் பிறக்கிறது.

அலுவலகத்தில்,  வேலையை குறித்த நேரத்தில் முடிக்காததால் மேனேஜர் கண்டிக்கும் போது,  என் விதி இவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு என்று மனதிற்குள் தோன்றும்.   இந்த செயலில் எந்த விதி உங்களை, உங்களுடைய வேலையை  குறித்த நேரத்தில் செய்ய விடாமல் தடுத்தது.  அந்த வேலையை குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் முடிக்க ஏற்கனவே ஒப்புகொண்டவரும் நீங்கள் தான். அதேபோல், குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் முடிக்காததும் நீங்கள் தான்.  உங்கள் தவறை உங்கள் மனது ஏற்று கொள்ள மறுக்கிறது. எனவே ஒரு 'விதி' யை உருவாக்கி தப்பிக்க வழி தேடுகின்றோம்.

நம்மை மீறின ஒரு செயல் அல்லது எதிர்பாராத ஒரு பிரச்சினையை சந்திக்கும் போது அல்லது நம்முடைய கட்டுபாட்டை மீறி ஏதாவது  நடக்கும் போது,  விதி என்று வித விதமான பெயரிட்டு அழைக்கிறோம்.  ஒரு மனிதன் மரணத்தை தழுவும் போது, அவன் விதி முடிந்ததாக கருதுகிறோம். இதை பார்த்து விட்டு எப்படி இருந்தாலும் விதிப்படி  நாம் இறக்க போகிறோம் என்று இந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை கெடுத்து கொள்ளாமல்,  வாழும் காலத்தில் நீங்கள் செய்யும் நல்லவைகள் உங்கள் 'விதி' முடிந்த பின்பும் பேசப்பட கூடியதாக இருக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு என்ற விதி ஒன்று இருப்பதாக  நீங்கள் நினைத்தால்,  அதை பற்றி பயப்படாமல் உங்களுடைய வேலையை அல்லது கடமையை செய்து கொண்டிருக்கும் போது விதி என்ற ஒன்று இருந்தாலும் இல்லை என்றாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

அதேபோல், ஒரு மனிதன் சாதாரணமாக நான்காவது விதியை பின்பற்றி விட முடியாது. காரணம், படிப்படியாக அவன் வாழ்க்கை நிலையில் பெற்ற அனுபவங்கள், ழ்ந்த மற்றும் தேர்ந்த படிப்பறிவு மூலம் மட்டுமே அவன் அந்த விதி என்ற நிலையை கடந்து ஞானம் என்ற தெளிவான நிலையை அடைய முடியும்.

Thursday 16 September 2010

1990 ம் ஆண்டு ஒரு நாள்....

காஞ்சிபுரம், மிக சிறந்த கோயில்களுக்காகவும், பட்டு சேலைக்கும் புகழ் பெற்ற நகரமாக எல்லார்க்கும் தெரியும். இது தான் என் ஊர். இங்க எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் சினிமா பார்ப்பதும் ஒன்று. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுகிழமையும், காலையில 9.30 மணிக்கெல்லாம் முதல் காட்சி திரையிடப்படும்.

தமிழ் நாட்டிலேயே காஞ்சிபுரத்தில தான் இவ்வளவு சீக்கிரம் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் காலையில 8.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவதாக ஒரு நாளிதழ்ல படிச்சிருக்கேன். திங்கள் முதல் வெள்ளி வரை முதல் காட்சி 10.30 மணிக்கு ஆரம்பமாகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். ஏராளமான படங்களை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத சினிமா தியேட்டர் அனுபவங்கள் ஏராளம்.

ஒரு புது படம் எங்க ஊர் பாபு தியேட்டர்ல ரிலீஸ் ஆன போஸ்டர் பார்த்தேன். அப்போது நான் ஏழாவது படிச்சிகிட்டு இருக்கேன். ஒரு ஞாயிற்றுகிழமை இந்த படத்தை பார்த்திடனம்னு முடிவு பண்ணி எங்க அப்பா கிட்ட காசு கேட்டேன். 10 ரூபாய் கொடுத்தார். 5 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய்க்கு எதாவது வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணேன். எனக்கு நினைவு தெரிஞ்சி நான் தனியா போய் பார்க்க போற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். கிளம்பும்போது, நானும் சினிமாக்கு வருவேன்னு என் தம்பி ஒரே அழுகை. எங்க அம்மாவும், அவனையும் கூட்டிகிட்டு போடான்னு சொல்லிட்டாங்க. என் தம்பி ஐந்தாவது படிச்சிகிட்டு இருந்தான்.

நாங்க ரெண்டு பேரும் நடந்தே பாபு தியேட்டர்க்கு வந்தடைந்தோம். டிக்கெட் கவுன்ட்டர் ஒவ்வொரு ஆளாக நுழைந்து போகிற குகை மாதிரி இருக்கும். இது வேற புது படம், கூட்டம் எக்கசெக்கமாக இருந்தது. டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில நானும், என் தம்பியும் போய் நின்றோம். சமயத்துல முன்னாடி டிக்கெட் வாங்கற ஆர்வத்துல தலைக்கு மேல எல்லாம் பறந்து, டைவ் அடிச்சி எல்லாம் சில பேர் போவானுங்க. டிக்கெட் கவுன்டரை நெருங்கியதும், 10 ரூபாய் கொடுத்து 2 டிக்கெட் கொடுக்க சொல்லி கேட்டேன். டிக்கெட்டை கையில வாங்கின ஆர்வத்தோட நானும் என் தம்பியும் தியேட்டர் உள்ளை நுழைய முற்பட்டோம்.

அங்கே ஒரு செக்கிங் நபர் என் டிக்கெட்டை பார்த்து விட்டு "ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க" என்று கேட்டார். அதுவரை என்னிடம் இருந்தது ஒரு டிக்கெட்டா இல்ல இரண்டு டிக்கெட்டா என்று கூட தெரியாத நான் மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டேன். புதிய படம் என்பதால் டிக்கெட் விலை 10 ரூபாயாக மாறியிருந்தது எனக்கு தெரியவில்லை.

நாங்க இரண்டு பேர், கையில ஒரே ஒரு டிக்கெட், உள்ளே திரைப்படம் ஆரம்பிக்க போகிறது. எனக்கு ஒரே அழுகையாக வந்துவிட்டது. என் தம்பி மிக தெளிவாக, டேய் நீ படம் பார்த்துட்டு வா, நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். என்னடா இது முதல் முறையாக தனியாக படம் பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு ஒரே அழுகையும், வருத்தமாகவும் இருந்தது.

என் தம்பி சென்றவுடன், உள்ளே நுழைந்து ஒரு சீட் பிடிச்சி உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கினேன். திரையில் படத்தின் பெயர் போட்டார்கள்,
ஆபாவாணனின் "இணைந்த கைகள்" .

Wednesday 15 September 2010

தேசிய விருது - 'பசங்க'ளுக்கு 3 விருதுகள்....

சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தேர்வுக் குழு தலைவர் ரமேஷ் சிப்பி இதனை டெல்லி [^]யில் அறிவித்தார்.

இந்தியில் வெளியான 'பா' (Paa) படத்தில் நடித்த அமிதாப்பச்சனுக்கு 2009ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் இது.

அமிதாப் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பின்னணி இசை-இளையராஜா:

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியாகி பெரும் வெற்றி கண்ட பழஸிராஜா படத்துக்காக இந்த விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.

தேசிய அளவில் சிறந்த இசையமைப்பாளர் விருதினை இளையராஜா பெறுவது இது நான்காவது முறையாகும். ஏற்கெனவே சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணை ஆகிய படங்களுக்காக இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

பசங்களுக்கு 3 விருதுகள்:

சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை பசங்க படம் பெறுகிறது. இதில் நடித்த ஜீவா, அன்புக்கரசுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ரூ. 50,000 சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

அமிர் கான், மாதவன் நடித்த 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படத்துக்கு சிறந்த பொழுது போக்குப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் அந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியான 'குட்டி ஸ்ராங்கு' படம், சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது தேவ் டி படத்துக்கு இசையத்த அமித் திரிவேதிக்குக் கிடைத்துள்ளது.

பெங்காலி மொழிப் படமான 'அபோ ஹவா' படத்தில் நடித்த அனன்யா சாட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்கி ரிதுபர்னா கோஷுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது.

ஷ்யாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான 'வெல் டன் அபா' படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருது நிலாஞ்சனாவுக்கும், பாடகருக்கான விருது ருபம் இஸ்லாமுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடலாசியருக்கான விருது ஸ்வானந்த் கிக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இளையராஜா, பாண்டிராஜ், அன்புகரசு IAS, ஜீவானந்தன் CM, மற்றும் அமிதாப்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்....

Sunday 12 September 2010

தயக்கமின்றிப் பழகுங்கள்! - நன்றி தினமணி

சிலர் மிக மிக நன்றாகப் படிப்பார்கள். நிறைய மதிப்பெண்கள் எடுப்பார்கள். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகமாட்டார்கள். ஆனால் சிலர் சுமாராகப் படிப்பார்கள். எல்லாரிடமும் கலகலவென்று பேசுவார்கள். ஏதோ தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூக்களில் தேர்வாகி வேலைக்குப் போய்விடுவார்கள்.


""இது ஏன்?'' என்று ராஜபாளையத்தில் "அட்மையர் பெர்சனாலிட்டி ஸ்பாட்' என்ற பெயரில் ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை அளித்துவரும் பவித்ரா ராமிடம் கேட்டோம். அவர் சொன்னதிலிருந்து....


""மாணவர்களை மட்டுமல்ல, மனிதர்களை நாம் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடலாம். கூச்ச சுபாவமுடையவர்கள், தயக்கமின்றிப் பழகுபவர்கள் என்று இரு பிரிவாகப் பிரித்து விடலாம்.


மாணவர்களில் கூச்ச சுபாவமுடையவர்கள் எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருப்பார்கள். பிறரிடம் சகஜமாகப் பேசிப் பழகமாட்டார்கள். அப்படியே பேசும்படி நேர்ந்துவிட்டால் ஏதோ ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு ஓடிவிடுவார்கள்.


தனியாக இருக்கும்போது பாட்டுக் கேட்டுக் கொண்டோ, கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து கொண்டோ இருப்பார்கள். தானுண்டு தன் புத்தகங்களுண்டு என்று இருக்கும் இவர்கள், பிறரிடம் பேசுவதற்கே பயப்படுவார்கள். ஏதாவது தப்பாகப் பேசிவிடுவோமா? என்று நினைப்பார்கள். அதிலும் மாணவிகளாக இருந்தால் இன்னும் கூச்சப்படுவார்கள். பாடம் தொடர்பான எல்லாவற்றிலும் இவர்களை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது.


செய்முறைத் தேர்வுகளில் கூட நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் சரியாகப் பதில் சொல்லமாட்டார்கள். பதட்டப்படுவார்கள். இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்குத் தவறாகப் பதில் சொல்லிவிடுவோம் என்ற நினைப்பிலேயே தவறாகப் பதில் சொல்லிவிடுவார்கள்.


எவ்வளவுதான் நன்றாகப் படித்திருந்தும், எவ்வளவுதான் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தும் கடைசியில் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாமல் மனம் இடிந்து போய்விடுவார்கள். ஆனால் எல்லாரிடமும் தயக்கமின்றிப் பழகும் மாணவர்கள் படிப்பிலோ வெகு சுமார்தான். இன்னும் சொல்லப் போனால் தேர்வுக்கு முதல் வாரம் வரை பாடப் புத்தகங்களைக் கண்ணிலேயே பார்த்திருக்கமாட்டார்கள். கடைசி நேரத்தில் மிகவும் குறைந்த அளவு பாடங்களைத் தேர்வு செய்து படித்து, தேவையான மதிப்பெண்களை எடுத்துவிடுவார்கள். இதில் சில மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் கூட எடுத்துவிடுவார்கள்.


ஆனால் படிப்பைத் தவிர, பிறவற்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்களேன். நாக்கு நுனியில் பதில்களை வைத்திருப்பார்கள். இலக்கியம், அரசியல், விளையாட்டு, கலை, சினிமா, கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் என்ற எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள். புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமிருக்கும்.


இதனால் பொது அறிவு அதிகமாக இருக்கும். எல்லாரிடமும் கலகலவென்று பேசிப் பழகுவதால் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல விவரங்கள் எப்போதும் இவர்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். அதனால் யாரிடமும் எந்த  விஷயத்தைப் பற்றியும் பேசுவதில் இவர்களுக்குத் தயக்கமெதுவும் இருக்காது.


எனவே கேம்ப்பஸ் இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்குத் தைரியமாக எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்கள். வேலை வாய்ப்பையும் எளிதில் பெற்றுவிடுவார்கள். நான் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மாணவர்களுக்குப் பலவிதமான ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறேன். என்னுடைய பயிற்சிமுறை நாடக வடிவிலானது.

கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நான்தரும் பயிற்சிகள் வித்தியாசமானவை.


கூச்ச சுபாவமுள்ள மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவில் உள்ளவர்களை வேலை தருபவர்களாக நடிக்கச் சொல்வேன். இன்னொரு பிரிவில் உள்ளவர்களை வேலை தேடிச் செல்பவர்களாக நடிக்கச் சொல்வேன்.


வேலை தருபவர், தனக்கு - இந்த வேலைக்கு - இந்த மாதிரியான தகுதிகள் உடைய நபர்கள் - தேவை என்ற முடிவுடன் வேலைக்கான நபரைத் தேர்வு செய்வார். அதை வேலை தருபவர்களாக நடிப்பவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி என்ன கேள்விகள் கேட்பதென்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.


அதுபோல வேலை தேடிச் செல்பவர் தனக்கு இந்த இந்தத் தகுதிகள் உள்ளன, வேலை தருபவரின் தேவைக்கேற்ற திறமைகள் இவை இவை என்னிடம் உள்ளன என்று தன்னைப் பற்றிய தன் மதிப்பீடு செய்து கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்படி கூறுவேன்.

நாடக வடிவிலான இந்த நேர்முகத் தேர்வு நடந்து, சிறிது நேரம் கழித்து, வேலை தேடிச் செல்பவர் வேலை தருபவராகவும்,வேலை தருபவர் வேலை தேடிச் செல்பவராகவும் மாறி நடிப்பார்கள்.


இந்த நாடக வடிவிலான பயிற்சி முறையின் மூலம் வேலை தேடிச் செல்பவர், வேலை தருபவர் ஆகிய இருதரப்பினரின் தேவைகள், விருப்பங்கள், வேலை தேடிச் செல்பவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும் முறை, நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என நிறைய விஷயங்களை நடைமுறையில் தெரிந்து கொள்வார்கள். வேலைக்குச் செல்ல விரும்பும் தனக்கு உள்ள திறமைகள் போதுமா? எந்தத் திறனில் குறையுள்ளது? எவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்? என்பவை எல்லாம் இந்தப் பயிற்சியின் மூலம் கூச்ச சுபாவமுள்ள மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டுவிடும்.


இதுதவிர, நேர்முகத் தேர்வுகளில் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்பார்கள்? அறிவுத்திறனைத் தெரிந்து கொள்ள எப்படிக் கேள்விகள் கேட்பார்கள்? நேர்முகத் தேர்வில் பங்கேற்கும்போது எப்படி உடை உடுத்த  வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்?  வேலை தேடிச் செல்பவர் தனக்குத் தேவையான சம்பளம் எவ்வளவு என்பதை எப்படிப் பணிவாக வேலை தருபவரிடம் கேட்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்களையும் இந்தப் பயிற்சிகளின் மூலம் நான் சொல்லித் தந்துவிடுவேன்.


எந்தவொரு நிறுவனமும் தனக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க, வேலை தேடி வருபவரிடம் வேலை தொடர்பான அறிவு, திறமை, நல்ல நேர்மறையான அணுகுமுறை, தன்னம்பிக்கை இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். கூச்ச சுபாவமுள்ளவர்கள் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


பிறரிடம் பழகுவதில் உள்ள தயக்கத்தை விட்டொழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி நிச்சயம் '' என்றார்.