அது 1952-ஆம் வருடம். நான் பள்ளியிறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வசதியானவர்கள் மட்டும்தான் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். என் குடும்பம் வறுமையில் உழன்றதால் என்னால் மாதாமாதம் பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாத சூழல். இருந்தாலும் புத்தகம், நோட்ஸ் என்று எல்லாவற்றையும் இரவல் வாங்கிப் படித்து, முதலிடம் பிடித்து விடுவேன்.
இப்படிப்பட்ட சூழலில் எனது பள்ளிக் கட்டணத்தை ஊர்ப் பெரியவர் ஒருவர் தானே கட்டுவதாகக் கூறி, என்னைப் படிக்க வைத்தார். ஒருமுறை அவர் தொழில் விஷயமாக வெளியூர் சென்று விட்டதால் பணம் கட்டவில்லை.
அப்போது 'ப்ரீ ஃபைனல் எக்ஸாம்' நடந்து கொண்டிருந்தது. பரீட்சைக்குப் பணம் கட்டாததால் எனது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆசிரியர் என்னை பரீட்சை எழுத அனுமதிக்க மறுத்துவிட்டார். அதோடு, 'இப்படி யாசகம் எடுத்துப் படிக்கணுமா? போய் அடுப்பூது, நான்கு வீட்டில் பாத்திரம் கழுவு' என்று அவர் கூற மாணவ, மாணவிகள் பலரும் சிரித்தனர். இது எனக்கு அவமானமாக இருந்தாலும் பரீட்சை எழுதியே தீருவது என்கிற தீர்மானத்துடன் ஹாலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.
அரை மணி நேரம் கழித்து அங்கு வந்த தலைமையாசிரியர் நான் வெளியே நிற்பதன் காரணத்தைக் கேட்க, நானும் சொன்னேன். உடனடியாக என்னை அவர் பரீட்சை எழுத அனுமதித்ததுடன் எனக்கான கட்டணம் மற்றும் ரீ - அட்மிஷன் தொகையையும் கட்டினார்.
ஒரே பள்ளியில் ஒரு ஆசிரியர் என்னை அவமானப்படுத்த, இன்னொருவர் என் உயர்வுக்குக் காரணமாக அமைந்தார்.கடைசியில் பள்ளி இறுதி வகுப்பை முடித்த நான் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். வேலையில் சேர்ந்து, அதன் பிறகு மேலும் படித்து இன்றுவரை ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
என்னுடைய டீன்-ஏஜில் நான் பெற்ற அவமானங்கள், உதவிகள்.. இந்த இரண்டுமே என் வாழ்வில் நான் உயர காரணமாக அமைந்தன.
இப்போது எனக்கு எழுபதைத் தொடும் வயது. இன்னும்கூட எதையாவது படிக்கிறேன். படிப்பு ஆசை எனக்குக் குறையவேயில்லை.
No comments:
Post a Comment