'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'
நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?
மனசே... கவனம் ப்ளீஸ்!
"மன ஒருமைப்பாடு என்பது ஒரு வகையில் நல்ல நடத்தையைக் குறிக்கும். சிதறாத கவனம் இருக்கிறவர்களிடத்தில் நல்ல குணங்களும், வெற்றி பெறுவதற்கான தகுதிகளும் அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது!" என்று ஆரம்பிக்கிறார் உளவியல் நிபுணரான கீதாஞ்சலி ஷர்மா. "நல்ல கவனம் இருப்பவர்கள் எதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியும். உள்வாங்கிக்கொண்டதைச் சிந்தித்து அதன் மூலம் கிடைக்கின்ற காரணங்களை வைத்துக்கொண்டு சூழ்நிலைகளைச் சமாளித்துவிடுவார்கள்.
மன ஒருமைப்பாடு சமநிலையில் இல்லாவிட்டால், தங்களால் எது செய்ய முடியும், எது செய்ய முடியாது என்று வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. எந்த நேரத்தில் எதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாததால் மனது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.
உதாரணமாக, வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கலாம். ஆனால், உங்கள் மனம் நேற்று பார்த்த திரைப்படத்தில் லயித்திருக்கும். உங்கள் மேலதிகாரி உங்களிடத்தில் முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கண்கள் அறையை அளந்துகொண்டு இருக்கும். நீங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கைகள் வேறு எதையோ கிறுக்கிக்கொண்டு இருக்கும். இங்கே கவனம் எதிலும் பதியவில்லை. ஒப்புக்கு இருக்கிறீர்கள். இது ஒரு வகை.
உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டைக் கேட்கிறீர்கள். உங்களை மெய்மறந்து அந்த வரிகளை முணுமுணுக்கிறீர்கள். யார் கூப்பிட்டாலும் உங்கள் காதில் விழுவது இல்லை. சேனலில் பரபரப்புச் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கும்போது, 'அவ போட்டிருக்கிற செயின் ரொம்ப நல்லாருக்குல்ல!' என்று கேட்கிறீர்கள். இங்கே உங்கள் மனம் ஒன்றில் மட்டும்... குறிப்பாக, உங்களுக்குப் பிடித்த ஒரு காரியத்தில் மட்டும் கவனம்கொண்டு இருக்கிறது. இது இன்னொரு வகை!
இந்த இரண்டு வகைகளிலும் அடிப்படை விஷயம் ஒன்றுதான். ஆனால், அது அமைந்திருக்கிற சூழ்நிலை, செயல்பாடுகள் வேறு வேறு. கான்சன்ட்ரேஷன் எனும் 'மன ஒருமைப்பாடு' வெறும் கவனித்தல் சார்ந்து இயங்குவது அல்ல. ஒரு செயல் செய்யப்படுகிற இடம், காலம், மனிதர்கள் ஆகியோரும் முக்கியம். அவற்றை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்.
இப்போது மேற்சொன்ன இரண்டு விஷயங்களை வேறு விதத்தில் காண்போம். வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், பேராசிரியர் பாடம் எடுக்காமல் உங்கள் 'ஆளை' செமினார் எடுக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் கவனம் முழுக்க அவர்கள் மீதே பதிந்திருக்கும் இல்லையா? இங்கு உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயமும் பிடிக்காத ஓர் அம்சமும் இணைந்திருக்கையில் நீங்கள் வெறுக்கும் ஒரு செயல் இனிமையாக இருக்கிறது. அதனால் கவனம் ஓர் இடத்தில் மட்டும் இருக்கிறது. அந்தக் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி. அவரின் அழகிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ இருக்கலாம். அவர் நடத்துகிறார் என்பதாலேயே உங்களுக்குப் பாடம் கவனிக்க விருப்பம் இருக்கலாம்.
உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டை மெய்மறந்து பாடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது என்ன செய்வீர்கள்? இரண்டிலும் கவனம் செலுத்தியபடியே இருப்பீர்கள். காரணம், இரண்டும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள். இங்கே கவனம் இரண்டிலும் சரிபாதியாகச் சிதறுகிறது. இதை 'ஸ்காட்டர்ட் திங்கிங்' என்பார்கள்.
நிமிடத்துக்குப் பல ஆயிரம் சிந்தனைகள் நம் மூளையில் தோன்றி மறைவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி இருக்கையில் ஏதேனும் ஒரு காரியத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். இரட்டைக் குதிரை சவாரி செய்யலாம்தான். ஆனால், பாதுகாப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இலக்கை அடைவதும் முக்கியம். தியானம், யோகா போன்ற சில பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் திட்டமிடுதல் மூலமும் நம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்!" என்கிறார் கீதாஞ்சலி ஷர்மா.
மனசே... நீ ஒரு மந்திரவாதி!
"தினமும் படிக்கும் பக்க அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து பக்கங்கள் அதிகமாகப் படியுங்கள். அல்ஜீப்ரா கணக்குப் பாடத்தில் தினமும் போட்டுப் பார்க்கும் கணக்கு அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து கணக்குகள் வொர்க்-அவுட் செய்யுங்கள். ஜிம்மில் கொஞ்சம் கூடுதலாக புல்-அப்ஸ் எடுங்கள். இவை மனதை ஒருமுகப்படுத்த உதவும் அடிப்படைப் பயிற்சிகள்!" என்று உற்சாகப்படுத்துகிறார் அஸ்வின். இவர் கல்லூரி மாணவர், கார்ப்பரேட் ஊழியர் களுக்கு 'மன மேம்பாடு' பயிற்சியளித்து வரும் 'வின் டிரெய்னிங்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்.
"எப்படி ஒரு விளையாட்டு வீரர் தொடர்ந்து பயிற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டே இருந்து தன் சாதனை எல்லைகளை நீட்டித்துக்கொள்கிறாரோ, அதே போல மனதுக்கும் சில பயிற்சிகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரண்டு விநாடிகள் கவனமாக இருக்கும் மனம், அடுத்த சில மைக்ரோ நொடிகளில் வேறு ஒன்றுக்குத் தாவிவிடும். ஆனால், தொடர் பயிற்சிகள் மூலம் 'இரண்டாவது மனதை' அடைந்துவிடுவீர்கள். அப்போது உங்கள் மன ஒருமைப்பாடு, கவனம் இன்னும் அதிகமாகும்!" என்பவர் அதற்கென சில பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார்.
ஆப்பிள் அல்லது பென்சில் அல்லது உங்கள் குழந்தையின் போட்டோ இப்படி ஏதேனும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஓர் அமைதியான அறையில் அந்தப் பொருட்களை உங்கள் கண் முன்வைத்து அதையே ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு உற்றுப் பார்க்கவும். அப்படிப் பார்க்கும்போது கண்கள் மட்டும் அங்கேயே நிலைகுத்தி இருக்கும். மனம் வேறெங்கோ அலைந்துகொண்டு இருக்கும். மீண்டும் உங்கள் மனதை அதே பொருளின் மீது இழுத்து வாருங்கள். மீண்டும் மீண்டும் இதைச் செய்வதன் மூலம் மனம் எங்கே இருந்தாலும் அதை இப்போதைய, இந்த நிமிடத்தில் உங்களால் நிலை நிறுத்த முடியும்.
'இந்த செயலை என்னால் முடிக்க முடியுமா?' என்று உள்ளுக்குள் சந்தேகம் தோன்றியவுடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் படம் பார்ப்பது! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்பும் நீங்கள் படம் பார்க்க வேண்டும். ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் ஓடும் படம் அல்ல. உங்கள் மனத் திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டிய படம். சந்தேகமோ, குழப்பமோ, நம்பிக்கை இழந்துபோகிற சமயங்களிலோ நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை மனத்திரையில் காட்சிகளாக ஓட விடுங்கள். எப்படிச் செய்தால் இது சரியாக வரும், அந்தச் செயலை முடிக்க முடியும் என்பது போன்ற விளக்கங்கள் இதில் தெரிய வரும்.
ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியாவது சிந்தியுங்கள். அடுத்த வாரம் தோழியை சினிமாவுக்குக் கூட்டிப் போவது, வோடஃபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரம் - இப்படி எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். அந்த சிந்தனை ஆரம்பிக்கிற நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். அதே சிந்தனை எந்த இடத்தில் முடிந்து இன்னொரு சிந்தனை ஆரம்பிக்கிறதோ அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த நேர இடைவெளிதான் எவ்வளவு நேரம் நம்மால் ஒரு நினைவில் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை உணர்த்துவது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்யும்போது ஒன்றின் மீது கவனம் செலுத்துகிற நேரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உணர்வீர்கள்!
'சும்மா இருப்பதே சுகம்' என்பது சித்தர்கள் வாக்கு. ஓர் அமைதியான அறையில் ஒரு நாற்காலி போட்டு அமருங்கள். அப்படியே 10 நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். உடலில் தன்னிச்சையாக எந்த ஓர் அசைவையும் ஏற்படுத்தாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். இயல்பாக, ரிலாக்ஸ்டாக இருங்கள். அதற்காக, 'ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கிறேன் பேர்வழி' என்று உங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம். இதனை தீவிரமான பயிற்சியாகச் செய்துவந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் உங்களால் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்த முடியும்.
செய்தித்தாள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வந்திருக்கும் கட்டுரையைப் படிக்கவும். படித்து முடித்தவுடன் எவ்வளவு வார்த்தைகள் அந்தக் கட்டுரையில் இருந்ததோ அவற்றில் சிலவற்றையாவது ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிகிறதா என்று முயற்சியுங்கள். அப்படி உங்கள் நினைவில் இருக்கும் சில வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதவும். இப்போது மீண்டும் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். முடித்தவுடன் அதை எழுதவும். முன்பைவிட இரண்டு மூன்று வார்த்தைகள் கூடுதலாகி இருந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை மட்டுமல்லாமல் நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.
ஒரு செயலைச் செய்துகொண்டு இருக்கும்போது தலையைச் சொறிவது, விரல் நக அழுக்குகளை எடுப்பது, பேனாவை உதட்டில் உருட்டி விளையாடுவது போன்ற தேவை இல்லாத அசைவுகளைத் தவிர்க்கவும். நேரம் மிச்சமாவதுடன் கவனமும் அதிகரிக்கும்.
முழுக் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது உங்கள் மனதில் வேறு ஏதேனும் எண்ணங்கள் தோன்றினால், உடனே அதை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு, 'இந்தச் செயலை... இந்தத் தேதியில்... இத்தனை மணிக்குச் செய்ய வேண்டும்' என்று எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் திட்டங்களை வகுத்ததுபோலவும் இருக்கும், உங்கள் கவனம் சிதறாமலும் இருக்கும்.
இவை தவிர, எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதில் ஏனோதானோ என்று இல்லாமல், உங்களின் முழு ஈடுபாட்டையும் செலுத்துங்கள். காரணம், ஈடுபாடு இல்லாமல் போனால், மன ஒருமைப்பாடு வெறும் கனவு மட்டுமே!
"அர்ஜுனா! உன் கண்களுக்கு அந்தப் பறவை தெரிகிறதா?" என்று துரோணாச்சாரியார் கேட்க, "இல்லை... எனக்கு அந்தப் பறவையின் கண்கள் மட்டுமே தெரிகின்றன" என்றான் அர்ஜுனன். "அப்படியானால் அம்பைச் செலுத்து!" துரோணரின் கட்டளை காற்றில் கரையும் முன் அம்பை எய்தினான். குறி தப்பவில்லை.
ஆம் நண்பா... முழுக் கவனத்துடன் எய்தினால், வெச்ச குறி தப்பாது மாமூ!
உணவு... மனம்... கவனம்!
"ருசியான உணவுகள் என்பதைவிடவும் ஆரோக்கியமான உணவுகள்தான் முக்கியம். அதற்காக தீவிரமான பத்தியம் இருக்கத் தேவை இல்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் மேற்கொண்டால் போதும்!" என்று உணவுப் பழக்கங்கள் பக்கம் கவனம் திருப்புகிறார் டயட்டீஷியன் பூங்கோதை.
"காலை உணவுக்கு புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் காலையில் சாப்பிடுவது மிகவும் மந்தமான மனநிலையைத் தரும். மதியமும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். 'வெள்ளை நிற' உணவுகளான அரிசிச் சாதம், சர்க்கரை, பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு சாலட், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த உணவுகளை எடுக்கும்போது எல்லாம் உங்களுக்கு மந்த நிலை ஏற்படுகிறதோ அந்த உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
காபி அருந்துவதைத் தவிர்த்து டீ அருந்தலாம். ஆனால், அதுவும் மிதமிஞ்சிப் போகக் கூடாது. ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளை அதிகம் உண்பது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளையும் உட்கொள்ளலாம்.
மதியம் சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடுவதில் தவறு இல்லை. ஆனால், அதுவே நீண்ட நேரத் தூக்கமாக மாறிவிடக் கூடாது. அவ்வப்போது நடப்பது, சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பகல் நேர மந்தநிலையைச் சமாளிக்கலாம். ஆர்டிஃபீஷியல் கலரிங் உள்ள உணவுகளைத் தவிர்த்து, தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலமாக மனதை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம். கவனமும் மேம்படும்!" என்கிறார் பூங்கோதை!
நன்றி விகடன்....
1 comment:
விகடன் பக்கத்தை ஸ்கேன் பண்ணிப்போட்டிருக்கலாமே,ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டீங்க?
Post a Comment