''ஜி.டி.பி-யைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயம், உற்பத்தி, சேவைத் துறை ஆகிய மூன்று துறைகளில் ஏற்படும் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியைப் பொறுத்தே ஜி.டி.பி. கூடுகிறது அல்லது குறைகிறது. நம்நாட்டைப் பொறுத்தவரை ஜி.டி.பி. வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு அதிகம் (சுமார் 3-4%). கடந்த ஆண்டில் இந்தியா முழுக்க விவசாயம் ஓரளவுக்கு நன்றாகவே நடந்ததால், ஜி.டி.பி-யின் வீழ்ச்சி இந்த அளவுக்காவது மட்டுப்பட்டு நிற்கிறது. விவசாயமும் படுத்திருக்குமெனில், இன்னும்கூட குறைந்திருக்கும்.
1950-ம் ஆண்டு கணக்கின்படி நம்நாட்டின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், 2008-ன்படி 1,040 பில்லியன் டாலர் என்கிற அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம். 1950 முதல் 1992 வரை உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5.7 சதவிகித வளர்ச்சி மட்டுமே அடைந்து வந்தோம். 1992 முதல் 2008 வரை நாம் அடைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி 8.2%. இந்த எக்ஸ்பிரஸ் வளர்ச்சிக்குக் காரணம், மத்திய அரசாங்கம் எடுத்த சில முக்கியமான முடிவுகள்தான். லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்தது, இறக்குமதி வரியைச் சீர்படுத்தியது, வெளிநாட்டு முதலீட்டைத் தளர்த்தியது, பணமாற்றத்தை அதிகப்படுத்தியது போன்ற முக்கியமான முடிவுகளை எடுத்ததினால்தான் ஆண்டுதோறும் 8.2% சராசரி வளர்ச்சி அடைய நம்மால் முடிந்தது. அதற்கும் மேலாக 9 சதவிகித வளர்ச்சியையும் நம்மால் காண முடிந்தது.
ஆனால், இப்போது நம்நாட்டின் ஜி.டி.பி. குறைய ஆரம்பித்திருக்கிறது. இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், கடந்த காலங்களில் இதைவிடக் குறைவான வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம். 1999-2002 வரை நாம் கண்டது 6 சதவிகிதத்துக்கும் குறைவான வளர்ச்சியே! ஜி.டி.பி. வளர்ச்சி எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் அமையாது. அது கொஞ்சம் மேலும் கீழுமாகத்தான் செல்லும்.
இப்போது நம்நாட்டின் ஜி.டி.பி-யின் வளர்ச்சி குறையக் காரணம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு. அதன் விளைவாக இங்கே சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. என்றாலும், நம்நாட்டின் பொருளாதார அடிப்படை மிகவும் பலமாக இருக்கிறது. நம் வங்கிகளின் செயல்பாடு எல்லா வகையிலும் சிறப்பாகவே இருக்கிறது. தவிர, நம் பொருளாதாரம் பெருமளவில் அமெரிக்காவையோ அல்லது வேறு வெளிநாட்டையோ நம்பி இல்லை. எனவே அமெரிக்காவைப் போல நாமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி காணாமல் போய்விடுவோமோ என்று பயப்படத் தேவையில்லை.
அதிலும் குறிப்பாக, கட்டுமானத் துறையில் நாம் அடிப்படையாகச் செய்யவேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றில் எதையும் நாம் நிறுத்தவும் முடியாது; தள்ளி வைக்கவும் முடியாது. உதாரணமாக, சாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்... இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு வெறும் 2% மட்டுமே. இந்தியாவில் ஒரு சரக்கு வாகனம் சராசரியாக நாளன்றுக்கு 200 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்கிறது. சர்வதேச அளவில் ஒரு சரக்கு வாகனம் சராசரியாக 800 கி.மீ. தூரம் வரை பயணம் செய்கிறது. எனவே, நாம் புதிய சாலைகளை அவசியம் அமைத்தாக வேண்டும்.
ரயில் பாதை அமைப்பதிலும் இதே நிலைதான். இந்தியாவில் ஒவ்வொரு 1,000 சதுர கி.மீட்டருக்கு வெறும் 35 கி.மீட்டர் மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் பார்த்தால் 150 கி.மீட்டருக்கு ரயில் பாதை அமைத்திருக்கின்றனர். இதுமாதிரி, அணை கட்டுவது, விமான நிலையங்கள் அமைப்பது, மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது, துறைமுகங்களை உருவாக்குவது என எந்த ஒரு கட்டுமானப் பணியையும் நம்மால் நிறுத்திவிட முடியாது.
இந்த நிலையில் மீண்டும் 9 சதவிகிதத்தை அடைய அல்லது அதையும் தாண்டிச் செல்லவேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்? மத்திய அரசாங்கம் பி.பி.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப்பை இன்னும் அதிக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த பி.பி.பி. மாடல் வெற்றிகரமாக நடந்துவருகிறது. கட்டுமானத் துறை வேலைகளுக்கான டெண்டர் அறிவிப்புகளைத் தாமதிக்காமல் உடனுக்குடன் வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். திட்டங்களுக்கான நிலங்களைக் கொடுப்பதிலும் அரசாங்கம் வேகம் காட்டவேண்டும்.
கட்டுமானத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதிலும் காலம் தாழ்த்தக்கூடாது. வங்கிகள் இப்போது வசூலிக்கும் வட்டி விகிதத்தை இன்னும் குறைக்கவேண்டும். இந்த அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கட்டுமானப் பணிகள் தடையின்றி வேகமாக நடக்கும். பொருளாதாரம் சீராகும் நேரத்தில், நம்நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த இந்த நடவடிக்கைகள் நிச்சயம் உதவும்.
No comments:
Post a Comment