வரும் சனிக்கிழமை போய் அடுத்த சனிக்கிழமை வந்தால் சிவாவுக்கு 28 வயது முடிந்து 29 பிறக்கிறது. இவன் ஒரு சாஃப்ட்வேர் ஆள். முன் மண்டை ஏறிப்போய் இருக்கும் அவன் தலையில் எண்ணெய் தேய்த்து ரோட்டில் போனால் கிளார் அடிக்கும். ஆனால் என்ன இன்னும் கல்யாணம் தான் ஆகவில்லை. இவனுக்கு இல்லாத வசதி வாய்ப்பா, இல்லை வேலையா? ஆனால் என்ன பண்ணுவது சிவாவின் அம்மாவும் பார்க்காத பெண்கள் இல்லை போகாத ஜோதிடர்கள் இல்லை. ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.
சென்னையில் பக்கத்து அப்பார்ட்மெண்டில் இருக்கும் LKG குழந்தை, அவன் வீட்டுக்கு வந்த புதிதில், "அண்ணா , அண்ணா" என்று அழைத்தாள். இப்போதெல்லாம் "ஹலோ அங்கிள்" என்று பாசத்தோடு தோளில் தொற்றுகிறாள்.
அந்த மாதிரி அசடு வழியும் சமயங்களில், தான் வயதாகி கொண்டிருக்கும் வீரியத்தை உணர்ந்தான். அம்மாவிடம் கத்தியும் பிரயோஜனம் இல்லை. நாளடைவில் இவனுக்கு இது காம்ப்ளக்ஸ் மாதிரி ஆகி பெண்களுடன் பேசுவதையே தவிர்த்தான். கூட வேலை பார்க்கும் 22 வயது நண்டு, சிண்டுக்கெல்லாம் கல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்று பத்திரிக்கை நீட்டும்போது, தார் ரோட்டில் உச்சி வெயிலில் வெறும் காலுடன் நடப்பது போல ஃபீல் பண்ண ஆரம்பித்தான்.
இதுவாவது பரவாயில்லை. புதிதாக வேலை பார்க்க வந்தவர்கள், லஞ்ச் ஹவரில் கேஷுவலாக, "அப்புறம் சார், உங்களுக்கு எத்தனை குழந்தைங்க? வித்யா மந்திர்ல குழந்தைக்கு அட்மிஷன் கார்டு வாங்கிட்டீங்களா?" என்று கேட்கும்போது "இன்னும் கல்யாணமே ஆகவில்லை" என்று சொல்லி சாதத்தை கொட்டிவிட்டு தம் அடித்து ஆற்றாமையை கொட்டுவான்.
சீக்கிரமே ஆஃபிஸில் இருந்து வந்துவிட்டு, பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கால் பண்ணினாள். "சிவா, எப்படிடா இருக்க? முத்துராஜ் மாமா தெரியுமா, டே அதாண்டா சாயல்குடில இருக்கிறா என்னோட கடைசி தம்பி. நடுவுல கூட பத்து வருஷமா பேசாம சண்டை போட்டு கெடந்தோமே. அவன் தான்டா..இன்னிக்கி கல்யாணத்துல பாத்தேன். அவ பொண்ணு வளர்ந்து பெரிய மனுஷி ஆகிட்டாளாம். உனக்கு சம்மதமான்னு கேட்டு சொல்ல சொல்றான்டா" என்றாள்.
"அப்பாடா, ஒரு வழியா சொந்ததுக்குள்ளேயே முடிஞ்சது" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு, "சரிம்மா சந்தோஷம். நான் இந்த வாரம் ஊருக்கு வர்றேன். போய் பார்க்கலாம்" என்று சொல்லி போனை வைத்து விட்டு பெருமூச்சு விட்டான்.
சாயல்குடி போய் பொண்ணை பார்த்துவிட்டு, மற்ற எல்லா ஃபார்மாலிட்டியும் முடித்துவிட்டு திருப்தியுடன் சென்னை திரும்பினான். இரண்டு வாரம் கழித்து ஓர் இரவில் வேலை எல்லாம் முடித்து ஓய்ந்து போய் மெத்தையில் ஷூ பேண்ட் மாற்றாமல் சரிந்தான். அம்மா கால் பண்ணினாள். "அவன் கெடக்கான் போக்கத்த பய. கூப்பிடுற மாதிரி கூப்பிட்டுட்டு அசிங்கப்படுத்தி விட்டான். ஊரு ஒலகத்துல இவன்தேன் மகராணிய பெத்து வச்சிருக்கானா? செத்தாலும் இனிமே அவன் மூஞ்சில முழிக்க மாட்டேன். " என்று
சொல்லிக்கொண்டிருக்கும் போது, சிவாவுக்கு அம்மா எதைப்பற்றி பேசுகிறாள் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதே போல் எத்தனை முறை பேசியிருப்பாள். போனை வைத்துவிட்டான். மீண்டும் ஒரு அவமானம். எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை.
மறுநாள் காலை 11 மணிவாக்கில் ஆஃபிஸ் போய் சேர்ந்தான். என்ட்ரன்சில் ஆட்டோமேட்டிக் டோர் லாக் அருகில் இருந்த Swiping Machine ல் Swipe பண்ணினான். "கீ, கீ" என்ற சத்ததுடன் திறக்கவில்லை. Help Desk க்கு கால் பண்ணினான். அதன் சீஃப், "ஸாரி சார். HR வினோத் சொன்னதுனால உங்களோட ஐ.டிய Deactivate பண்ணிட்டோம்." என்றான். சிவாவுக்கு அரசல் புரசலாக புரிந்து வயிற்றைக் கலக்கியது. வினோத்திடம் பேசினதில் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. வேலையை விட்டு துரத்தப்பட்டான்.
கை நிறைய சம்பளம் வாங்கும்போதெ பொண்ணு கிடைக்கவில்லை. இனிமேல் கனவில் கூட கல்யாணத்தை நினைத்து பார்க்ககூடாது என்று முடிவு பண்ணிவிட்டான். இரண்டு மாதத்தில் வேற வேலை தேடி, Airtel நெட்வொர்க் ஆஃபிஸில் Technical Manager ஆகிவிட்டான். ஒரே வாரத்தில் நாலு வரன்கள். அவனால் நம்பமுடியவில்லை. அதில் ஒரு நல்ல அழகான பெண்ணை பேசி முடித்து, ஒரு மாதத்திலேயே கலியாணமும் முடிந்து விட்டது.
முதலிரவுக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் அவன் பாதாம்பால் குடித்துக் கொண்டே யோசித்தான். ஒரு கிராமத்து மாமனுக்கு தெரிஞ்சது, எனக்கு தெரியலையே? சாஃப்ட்வேர் கம்பெனியையும், அதுல வேல பாக்குறவங்களயும் நம்பக் கூடாதுன்னு. இன்னும் அதே கம்பெனியில இருந்திருந்தேன்னா, "முதல் மரியாதை" சிவாஜி மாதிரி "பூங்காத்து திரும்புமா"ன்னு தான் பாடிட்டு இருக்கணும்.
No comments:
Post a Comment