Wednesday 4 February 2009

ஹெச்.ஆர். ரவுண்ட் - பதில் சொல்வது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம். பதில் சொல்வதுதான் கஷ்டம் அப்படின்னு சொல்றது உண்மையா..?


1. உங்களைப்பற்றி சொல்லச்சொன்னா உங்களோட படிப்பு, பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் பற்றி சொல்லிட்டு கச்சிதமா முடிங்க. வீட்ல ஆடு குட்டி போட்டது, கோழி முட்டைப் போட்டது பற்றியெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம்.


2. உங்கள் பலம் என்ன என்று கேட்டால் தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு, எடுத்த காரியத்தை சாதிக்கும் துணிவு அப்படின்னு தெளிவான குரல்ல பாயிண்டுகளை எடுத்து வைங்க...


3. நீங்கள் வெற்றியடைந்த விஷயமாக நீங்க செஞ்ச புராஜக்ட்ஸ், கல்லூரியில் நீங்கள் சந்தித்த சவால்கள் போன்றவற்றை சொல்லலாம்.


4.தோல்வியடைந்த விஷயம் பற்றி கேட்டால், ’ரப்பர் பால் கிரிக்கெட் மேட்ச்ல கூட நான் இதுவரைக்கும் தோத்ததே இல்லை தெரியுமா?’னு பீலா விட வேண்டாம். நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்திருந்தால் அதை வெளிப்படையாக சொல்லுங்க. எந்த தவறும் செய்யலேன்னா எந்த முயற்சியும் எடுக்கலேன்னு அர்த்தம். ஒருவேளை எதுவும் ஞாபகம் வரலைன்னா ’அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கலை’ன்னு தன்மையா சொல்லுங்க.


5. நீங்க ஏன் உங்க பழைய நிறுவனத்தில் இருந்து மாறினீங்கன்னு கேட்பாங்க. இந்த கேள்வி ஒரு சீக்ரெட் வெப்பன். வழ-வழ கொழ-கொழ பதில் டோட்டல் டேமேஜ் ஆக்கிடும். தெளிவா, உண்மையா பதில் சொல்லுங்க. நேர்மையான பதில் கண்டிப்பா ஜெயிக்கும். (’ஒரு காரணமும் கிடையாதுங்க. சம்பளம் அதிகம், அதனாலதான் மாறினேன்’ அப்படின்னா தாராளமா அதையும் சொல்லுங்க...)


6. உங்களை நான் ஏன் தேர்ந்தெடுக்கனும் என்ற கேள்விக்கு உங்கள் ஆழ்மனதில் இருந்து பதில் சொல்லணும். (அதாவது ஃபீல் பண்ணி கூவனும்...). பதில் ஒன்னும் சரியா தெரியலைன்னா ’உங்கள் நிறுவனத்துக்கு நான் கடுமையா உழைப்பேன்’. ’இந்த நிறுவனத்தில் பணியாற்றனும்னு ரொம்ப நாளா ஆசை’ அப்படீன்னு வழக்கம்போல பதில் சொல்லி எஸ்கேப் ஆகுங்க. ஓவர் ஆக்ட் பண்ணி கெடுத்துக்க வேண்டாம்.


7. இன்னும் 5 வருஷத்துல நீங்க என்னவா இருப்பீங்கன்னு கேட்டா, ’இந்த கம்பெனிக்கு முதலாளியாகிடுவேன்’னு ஹைட்ரஜன் பாம் போட வேண்டாம். ’ஒரு சீனியர் பர்ஸனா, அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் அறிந்த நிறைகுடமா இருப்பேன்’ அப்படீன்னு சொன்னீங்கன்னா அது பெஸ்ட்.
8. ஒரு நல்ல நிறுவனம் எப்படி இருக்கனும் என்று கேட்டால், இந்த கம்பெனி மாதிரி இருக்கனும்னு சொல்லுங்க. அப்படி இல்லைன்னா அனைத்து ப்ராஸஸ்களும் ஒருங்கே அமைந்த, ஊழியர்களுக்கு மதிப்பு அளிக்கும் நிறுவனம் சிறந்த நிறுவனம் என்று சொல்லலாம் (All systems and processes are well in place, respected employees).


9. முந்தைய கேள்விக்கு அப்புறம் (நல்ல நிறுவனம் கேள்வி), ’எங்களோட நிறுவனத்தில் ஏன் பணியாற்றனும்னு நினைக்கிறீங்க?’னு பட்டுன்னு கேட்பாங்க. இது எதுக்குன்னா ’இந்த பயபுள்ள நம்ம கம்பெனியை ஒரு நல்லவிதமா நினைக்குதா?’னு செக் பண்ண. நீங்களும் ’இது அப்படிப்பட்ட கம்பெனி’ அப்படீன்னு முந்தைய பதிலை மாற்றிச் சொல்லுங்க. இந்த இடத்துல உங்களுக்கு தெரிந்த (நிறுவனம் பற்றிய) நல்ல விஷயங்களையும் சொல்லுங்க.


10. உங்களோட கடுமையான உழைப்பு மதிக்கப்படாமல் போன ஒரு சம்பவத்தை சொல்லுங்கன்னு கேட்டா, அப்படி ஒரு விஷயம் இருந்தா சொல்லுங்க. இல்லைன்னா ‘இதுவரைக்கும் எப்படி நடக்கலை’னு நேர்மையா சொல்லிடுங்க. நீங்களே திரைக்கதை வசனம் எழுதி உடான்ஸ் விட வேண்டாம்.


11. உங்களோட மற்ற ஹாபீஸ், இண்ட்ரஸ்ட் எல்லாம் என்னன்னு கேட்டா, ’பொதுவா புத்தகம் படிக்கறது’ன்னு சொல்லாதீங்க. (’என்ன புத்தகம் கடைசியா படிச்சே'ன்னு கேட்பாங்க. ‘திருக்குறள்’னு சொல்லி அப்பீட் ஆகவேண்டியிருக்கும்). டி.வி பாக்குறது உங்களோட பொழுதுபோக்குன்னா அதை வெளிப்படையா சொல்லுங்க. உண்மையைச் சொல்றேன்னு ’தூங்குறதுதான் என் ஹாபி’னு சொல்லி இமேஜை டேமேஜ் பண்ணிக்க வேண்டாம்.


12. நிறுவனம் பற்றி தெரிந்ததை சொல்லுங்கன்னு கேட்டா, உங்களுக்கு தெரிந்ததை, கேள்விப்பட்டதை எல்லாத்தையும் சொல்லலாம். ஆனா அது சரியான விவரமான்னு செக் பண்ணிகிட்டு சொல்லனும். இண்டர்வியூவுக்கு முன்னால் அந்த நிறுவன இணையதளத்தை மேய்ந்துவிட்டுச் செல்வது நல்லது.


13. ’உங்களை சம்பளம் இல்லாமல் வேலை செய்யச்சொன்னா செய்வீங்களா’னு கேட்டா, ‘நான் என்ன கேனயனா?’னு நினைக்கிறது தப்பில்லே... அது முகத்துல தெரிஞ்சுடக் கூடாது. ’கம்பெனி விரும்பினால், அது நிறுவத்துக்கு தேவையான ஒன்றாக இருந்தால் செய்வேன்’னு சொல்லுங்க.


14. சனி, ஞாயிறு அலுவலகம் வைத்தால் வருவீங்களான்னு கேட்டா, ‘ஐய்யய்யோ... நான் அரட்டை அரங்கம் பார்க்கனும்’னு, ‘செல்லாத், செல்லாது’னு அனுப்பி வைச்சுருவாங்க. ’நிறுவனத்துக்கும், பணி புரியும் புராஜக்ட்டுக்கும் முக்கியமானதாக இருந்தால் வருவேன்’னு சொல்லுங்க. (பொதுவாக சனி, ஞாயிறு அலுவலகம் வைக்கமாட்டார்கள். இது சும்மா உங்க மனநிலையை தெரிந்து கொள்வதற்கான கேள்வி). அதேநேரம், உங்களுக்கு ஞாயிறுகளில் யோகா வகுப்போ, கராத்தே க்ளாஸோ இருந்தால் அதை சொல்லுங்க. ஒண்ணும் தப்பில்லை.


15.அலுவலங்களில் குழுவாக இணைந்து பணியாற்றுவது மிக முக்கியமான விஷயம். அதனால் குழுவாக இணைந்து பணியாற்றுவது பற்றி என்ன நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு நல்லவிதமா பதில் சொல்லுங்க. ஏற்கெனவே கல்லூரியில், பழைய நிறுவனத்தில் நீங்கள் குழுவாக ஆற்றிய பணிகள்பற்றியும் சொல்லலாம். ’டீம் வொர்க் செய்வதில் நான் பெஸ்ட்’ என்பதை ஹெச்.ஆருக்கு புரிய வைங்க.


16. உங்களுக்கு நிறுவனத்தில் ஏதாவது பிரச்னை என்றால் என்ன செய்வீங்க என்ற கேள்விக்கு ஏதாவது லூஸ் டாக் விட்டா மனோதத்துவ ரீதியில் உங்கள் ’சண்டைக்கோழி’ ஆட்டிடியூட் வெளியே வந்துவிடும். ’நான் பிரச்னை வரும் அளவுக்கு நடந்துகொள்ளும் ஆள் இல்லை’ என்று சொல்லுங்க. அப்படியே பிரச்னை வந்துவிட்டாலும் அதை சம்பந்தப்பட்ட நபருடனேயே பேசி தீர்த்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர் நீங்கள் என்பதை மென்மையாக எடுத்துச்சொல்லங்கள். சினிமாவில்தான் ஹீரோயின்ஸ் ரவுடியை லவ் பண்ணுவாங்க. நிறுவனங்கள் அப்படி இல்லை.


17. ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வீங்க என்ற கேள்விக்கு, ’10 முதல் 12 மணி நேரம்’ என்று சொல்லுங்க. ’பழைய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் தேவை ஏற்பட்டபோது இரவு முழுவது கூட பணிகளை செய்திருக்கிறேன்’ என்று சொல்வது அப்ளாஸை அள்ளித்தரும்.


18. உங்களை நார்த் இண்டியாவுல உள்ள ரிமோட் லொக்கேஷனுக்கு பணி மாற்றம் செய்தா அங்கப்போய் வேலை செய்வீங்களா என்று கேட்டால், ’அண்டார்ட்டிகாவில் கூட பணியாற்றத் தயார்’ என்று சொல்லலாம். நமக்கு தேவை வேலை... அது எங்கேயா இருந்தா என்ன? உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் வீடு, குழந்தை, டாடி, மம்மி என்பது மாதிரி ஏதாவது கட்டுப்பாடுகள் இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லலாம். ‘சென்னையில் இருக்க கம்பெனி நம்மளை என்ன ஆப்பிரிக்காவுக்கா அனுப்பப்போவுது? இதெல்லாம் டம்மி ட்ரிக்ஸ்’ என்று மனதுக்குள் நினைத்து பதில் சொல்லவும்.


19. உங்க குடும்பத்தைப் பற்றி கேட்டா, உங்களோட குடும்பம் பற்றி மட்டும் பதில் சொல்லுங்க. சித்தப்பா, பெரியப்பா, எதிர்வீட்டு ப்ளூ சுடிதார் பொண்ணு பற்றியெல்லாம் சொல்ல வேண்டாம்.


20. நீங்க ஏதாவது கேட்க விரும்பறீங்களான்னு கேட்டா மனதில் தோன்றியதை/ உங்கள் பணிக்கு சம்பந்தமானதை கேளுங்க. ’ஐநாக்ஸ்ல என்ன புதுப்படம் என்ன ஓடுது?’ங்குற மாதிரி தேவை இல்லாத விஷயத்தையும், ’இண்டர்வியூவுல நான் பாஸ் ஆனேனா இல்லையான்னு இப்பவே சொல்லுங்க’ன்னு விரும்பத்தகாத விஷயத்தையும் கேட்க வேண்டாம்.
சில செக் பாய்ண்ட்ஸ் பார்க்கலாம்.


* கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்க. வளவளன்னு பேச வேண்டாம். ’அமைதி ஓர் ஆயுதம். அதை குலைக்கும்போது நீங்கள் அந்த ஆயுதத்தின் வலிமையை இழந்துவிடுகிறீர்கள்’ அப்படீன்னு ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.


* தெளிவாகவும், முழுமையாகவும் பேசுங்க. சரளமான ஆங்கிலம் கண்டிப்பாக உதவும்.


* எந்த நேர்முக தேர்விலும் முதல் 15 நிமிடங்கள் முக்கியமானது. இந்த நேரத்திற்குள் நிகழும் கேள்வி, பதில்களில் நீங்கள் சரியான பதில்களை சொல்லியிருந்தால், அதன் பிறகு தேர்வாளர்கள் கேள்விகளை கேட்டுவிட்டு அவர்களே பதில்களையும் சொல்லிவிடுவார்கள். இதை நான் பல நேர்முகத் தேர்வுகளில் கவனித்திருக்கிறேன்.


* நேர்முகத் தேர்வுக்குப் போகும்முன்பு அந்த நிறுவனம் பற்றி அதன் இணையதளத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளுதல் கண்டிப்பாக உதவும். நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து வைத்திருந்து, அதை தேவையான இடத்தில் உபயோகப்படுத்துங்க.


வெற்றி உங்களுக்கே!

No comments: