Saturday, 28 November 2009

1990ம் வருடம் - ஒரு நாள்

காஞ்சிபுரம், மிக சிறந்த கோயில்களுக்காகவும், பட்டு சேலைக்கும் புகழ் பெற்ற நகரமாக எல்லார்க்கும் தெரியும். இது தான் என் ஊர். இங்க எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் சினிமா பார்ப்பதும் ஒன்று. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுகிழமையும், காலையில 9.30 மணிக்கெல்லாம் முதல் காட்சி திரையிடப்படும்.

தமிழ் நாட்டிலேயே காஞ்சிபுரத்தில தான் இவ்வளவு சீக்கிரம் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் காலையில 8.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவதாக ஒரு நாளிதழ்ல படிச்சிருக்கேன். திங்கள் முதல் வெள்ளி வரை முதல் காட்சி 10.30 மணிக்கு ஆரம்பமாகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். ஏராளமான படங்களை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத சினிமா தியேட்டர் அனுபவங்கள் ஏராளம்.
ஒரு புது படம் எங்க ஊர் பாபு தியேட்டர்ல ரிலீஸ் ஆன போஸ்டர் பார்த்தேன். இப்பொழுது நான் ஏழாவது படிச்சிகிட்டு இருக்கேன். இந்த ஞாயிற்றுகிழமை இந்த படத்தை பார்த்திடனம்னு முடிவு பண்ணி எங்க அப்பா கிட்ட காசு கேட்டேன். ஒரு 10 ரூபாய் கொடுத்தார். 5 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய்க்கு எதாவது வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணேன். எனக்கு நினைவு தெரிஞ்சி நான் தனியா போய் பார்க்க போற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். கிளம்பும்போது, என் தம்பி ஒரே அழுகை, நானும் சினிமாக்கு வருவேன்னு. எங்க அம்மாவும், அவனையும் கூட்டிகிட்டு போடான்னு சொல்லிட்டாங்க. என் தம்பி ஐந்தாவது படிச்சிகிட்டு இருக்கான்.

நாங்க ரெண்டு பேரும் நடந்தே பாபு தியேட்டர்க்கு வந்தடைந்தோம். டிக்கெட் கவுன்ட்டர் ஒவ்வொரு ஆளாக நுழைந்து போகிற குகை மாதிரி இருக்கும். இது வேற புது படம், கூட்டம் எக்கசெக்கமாக இருந்தது. டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில நானும், என் தம்பியும் போய் நின்றோம். சமயத்துல முன்னாடி டிக்கெட் வாங்கற ஆர்வத்துல தலைக்கு மேல எல்லாம் பறந்து, டைவ் அடிச்சி எல்லாம் சில பேர் போவானுங்க. டிக்கெட் கவுன்டரை நெருங்கியதும், 10 ரூபாய் கொடுத்து 2 டிக்கெட் கொடுக்க சொல்லி கேட்டேன். டிக்கெட்டை கையில வாங்கின ஆர்வத்தோட நானும் என் தம்பியும் தியேட்டர் உள்ளை நுழைய முற்பட்டோம்.

அங்கே ஒரு செக்கிங் நபர் என் டிக்கெட்டை பார்த்து விட்டு "ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க" என்று கேட்டார். அதுவரை என்னிடம் இருந்தது ஒரு டிக்கெட்டா இல்ல இரண்டு டிக்கெட்டா என்று கூட தெரியாத நான் மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டேன். புதிய படம் என்பதால் டிக்கெட் விலை 10 ரூபாயாக மாறியிருந்தது எனக்கு தெரியவில்லை.

நாங்க இரண்டு பேர், கையில ஒரே ஒரு டிக்கெட், உள்ளே திரைப்படம் ஆரம்பிக்க போகிறது. எனக்கு ஒரே அழுகையாக வந்துவிட்டது. என் தம்பி மிக தெளிவாக, டேய் நீ படம் பார்த்துட்டு வா, நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். என்னடா இது முதல் முறையாக தனியாக படம் பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு ஒரே அழுகையும், வருத்தமாகவும் இருந்தது.

என் தம்பி சென்றவுடன், உள்ளே நுழைந்து ஒரு சீட் பிடிச்சி உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கினேன். திரையில் படத்தின் பெயர் போட்டார்கள்,
ஆபாவாணனின் "இணைந்த கைகள்" .

Friday, 27 November 2009

அட்வைஸ் அண்ணன் அமெரிக்கா!

விருந்தோம்பலில் நெகிழ்ந்துபோவது இந்தியர்களின் பொதுவான குணம். இதில் நமது பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்? அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் கொடுத்த சிவப்புக் கம்பள வரவேற்பும் அட்டகாச விருந்தும் அவரை நெகிழ வைத்ததில் வியப்பில்லை.

ஆனாலும் இப்படி நெகிழாமல், ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஒபாமாவோடு சேர்ந்துவந்து நிருபர்களைச் சந்தித்தபோது அவர் அமெரிக்காவுக்கு இப்படி அட்வைஸ் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும்? ‘‘வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனான பிரச்னைகளை அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் இதற்கு கியூபா மூன்றாவது நாடாக இருந்து மத்தியஸ்தம் செய்யலாம்!’’

ஒரு இந்தியப் பிரதமரிடமிருந்து இப்படியான நெஞ்சுரத்தை நாம் எதிர்பார்ப்பது பேராசை. தலையிடாக் கொள்கை’, ‘அணி சேராக் கொள்கைஎன அரதப்பழசான நேரு காலத்து தத்துவங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தொங்கியே நாம் காலம் தள்ளி வருகிறோம். தவணை முறையில் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் நுழைத்து பாகிஸ்தான் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் இதே கொள்கையைச் சொல்வோம். எல்லை பாதுகாப்புப் படையினரை வங்க தேச ராணுவம் கொன்றாலும் இதையே சொல்வோம். அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடியும், அங்கு நம் பிரதமர் பயணிப்பதை ஆட்சேபித்தும், இந்தியாவுக்குள் நுழையும் ஜீவ நதிகள் மீது அணைகள் கட்டி தடுத்தும் சீனா அட்டகாசங்கள் செய்தாலும் நாம் கொள்கை மாறமாட்டோம். நம் காலடியில் கிடக்கும் குட்டி தேசமான இலங்கையில் நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும் நமக்கு கொண்ட கொள்கையே முக்கியம்.

அமெரிக்காவுக்கு அட்வைஸ் பிடிக்காது... அவர்களுக்கு யாராவது சொன்னால் மட்டும்! அட்வைஸ் செய்பவர்களையும் பிடிக்காது. ஆனால் உலகத்துக்கே அட்வைஸ் செய்கிற தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறது. ரிபப்ளிகனோ, டெமாக்ரட்டோ & ஜார்ஜ் புஷ்ஷோ, ஒபாமாவோ... யார் அதிபராக இருந்தாலும் இந்த எண்ணங்கள் மாறுவதில்லை. அதனால்தான் சில நாட்களுக்கு முன் சீனத் தலைநகர் வந்து, சீன அதிபரோடு கூட்டறிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்குமான பிரச்னையில் சீனா மூன்றாவது நாடாக இருந்து மத்தியஸ்தம் செய்து வைக்கவேண்டும்என்று திருவாய் மலர்ந்துவிட்டுப் போனார். இரண்டே வாரங்களில் மன்மோகனை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘‘ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்காக இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது’’ என அதே வாயால் சொல்கிறார். ஒருவேளை பாகிஸ்தானும் சீனாவும் கொடுக்கும் குடைச்சல்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, ‘ரொம்ப நல்லவர்களாகஅகிம்சை முறையில் எதிர்ப்பு காட்டாமல் அமைதி காக்கிறோமே... அதைச் சொல்கிறாரோ என்னவோ! இந்தியாவைப் புகழ்ந்த அதே சமயத்தில் பாகிஸ்தான் பற்றியும் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஒபாமா. கொஞ்ச நாளில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்கா போவார். அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உறுதியான நண்பனாக பாகிஸ்தான் இருக்கிறதுஎன்று சொன்னாலும் சொல்வார்.

போரிட்டு வெல்லும் தேசங்களில் எல்லாம் தங்களது அடங்காத பிள்ளைகளையோ, வாலாட்டும் உறவினர்களையோ கவர்னர்களாக நியமித்து, ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்துவிட்டுப் போவது சுல்தான்கள் காலத்து ஆட்சி முறை. அப்படித்தான் உலகத்தின் சட்டாம்பிள்ளையான அமெரிக்கா, ஆசியாவின் சட்டாம்பிள்ளையாக சீனாவை நியமித்து, அமைதிக்கு உதவச் சொல்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் பிரச்னைகளை சீனா எப்படி தீர்த்துவைக்க முடியும்? காஷ்மீர் சிக்கல்தான் இதில் பிரதானமானது. காஷ்மீர் இந்தியாவோடு இருந்து இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக இருக்க வேண்டுமா... அல்லது தனி நாடாகி திபெத் போல சீனாவால் ஆக்கிரமிக்கப்பட வேண்டுமா... அல்லது பாகிஸ்தானோடு இணைந்து தாலிபன் தீவிரவாதிகளைத் தோற்றுவிக்கும் லேபாரட்டரி ஆகவேண்டுமா என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கிறது. காஷ்மீரின் மூன்றில் ஒருபகுதிதான் இப்போது நம் வசம் இருக்கிறது. மீதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் அதில் ஒரு பகுதியில் பொம்மை அரசாங்கத்தை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்என அதை நாம் சொல்கிறோம். இதுதவிர மூன்றாவது ஏரியாவான அக்ஸாய் சின்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டது பாகிஸ்தான்.

இதை தனது தேசத்தின் ஒரு பகுதியாகவே சொந்தம் கொண்டாடும் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருக்கும் யார் வேண்டுமானாலும் சீனாவுக்கு வருவதற்கு விசா விதிகளைத் தளர்த்தி இருக்கிறது. அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் அந்த நாடு, நமது எல்லையில் ஏராளமான ராணுவத்தைக் குவித்து, எந்த நேரமும் போருக்குத் தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகிறது. சீன அதிகாரிகளும், ‘ஏற்கனவே வாங்கிய அடி மறந்துவிட்டதாஎன்கிற ரேஞ்சில் இந்தியாவைச் சீண்டிப் பார்க்கிறார்கள். இதோடு இந்தியாவில் சமீபகாலமாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் சீனா வழங்கிவரும் ஆயுதங்களும் பயிற்சியுமே என்பதை நமது உள்துறை அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு அமைதியின் நாயகனைத்தான் நம் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் நாட்டாமையாக அமெரிக்கா நியமித்திருக்கிறது. கள்ளன் கையில் கொத்துச்சாவியைக் கொடுப்பது போன்ற இந்த செயலைக்கூட நாம் மென்மையாகத்தான் கண்டித்தோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் மூன்றாம் நாடு தலையிடும் பேச்சுக்கே இடம்கிடையாதுஎன சீனாவுக்கும் வலிக்காமல், அமெரிக்காவுக்கும் வலிக்காமல் ஒரு பதிலை நமது வெளியுறவுத்துறை கொடுத்தது.

ஆனால், இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் தரும்விதமாக காஷ்மீரின் முக்கிய அரசியல் அமைப்பான அனைத்துக்கட்சி ஹுரியத் கமிட்டியின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக், ‘நாங்கள் சீனாவோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்என குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஏற்கனவே காஷ்மீர் கட்சிகள் பலவும் பாகிஸ்தானின் கட்டளைப்படி இயங்கிவரும் நேரத்தில், சீனாவுக்கு இவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது விபரீதத்துக்கான அறிகுறி!

போதாக்குறைக்கு சீக்கிய அமைப்பு ஒன்று, ‘இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நிகழ்ந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நீதி வாங்கித் தரவேண்டும்என்று அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இப்படியே போனால் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, சேது சமுத்திரத் திட்டம், குஜ்ஜார் பிரச்னை என இந்தியாவின் தீராத பிரச்னைகளுக்கு முடிவுகளை அமெரிக்காதான் எடுத்தாக வேண்டும் என பலரும் மனுக்களை எழுதிப்போடக்கூடும். ஏதோ இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கும் மேலான அப்பீல் அத்தாரிட்டியாக அமெரிக்காவை நினைக்கும் மனோபாவம் இங்கே பலருக்கும் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு ஆசியாவில் அப்படி என்ன அக்கறை? ஏன் அந்த தேசம் சீனாவிடம் ஒரு மாதிரியாகவும், இந்தியாவிடம் ஒரு மாதிரியாகவும், பாகிஸ்தானிடம் வேறு மாதிரியாகவும் பேசுகிறது? இரண்டு நாட்களுக்கு முன்பு உலக வங்கி வெளியிட்ட ஒரு கணிப்பில் இதற்கான பதில் இருக்கிறது. வரும் 2050 ஆண்டுவாக்கில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் வலிமையான பொருளாதார சக்திகளாக சீனாவும் இந்தியாவும் இருக்கும்என்பதுதான் அந்தக் கணிப்பு.

ஐரோப்பிய நாடுகளின் போட்டியை அமெரிக்கா சமாளித்துவிடும். ஆனால் மக்கள்தொகையிலும் பரப்பிலும் பெரிய இரண்டு ஆசிய தேசங்கள் போட்டி போட்டால், அமெரிக்காவால் சமாளிக்கமுடியாது. அந்த போட்டியாளர்களை பலவீனப்படுத்தும் ஒரே வழி... போர் மட்டும்தான்! இந்தியாவும் சீனாவும் போரிட்டு தங்கள் பொருளாதார வலிமையை இழந்தால், அதனால் ஆதாயம் பெறும் ஒரே நாடு அமெரிக்காதான்! இப்படி ஒரு போர் நடக்கும்போது இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் சக்தியாக சீனாவுக்கு பாகிஸ்தான் உதவக்கூடும். போரினால் உருக்குலையும் தேசத்தை மீண்டும் கட்டமைப்பதே பெரிய சவாலாக இருக்கும்போது அமெரிக்காவோடு எப்படி மோதமுடியும்?

இரண்டாம் உலகப்போரில் பெருத்த சேதமில்லாமல் வெற்றியை ருசித்த ஒரே தேசம் அமெரிக்காதான்... அதனால் கிடைத்த வல்லமைதான் அந்த தேசத்தை உலகத்தின் கேள்வி கேட்கமுடியாத வல்லரசு ஆக்கியது. இதை சீனா புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு!


& நாடோடி (நன்றி தெனாலி.காம்)

Tuesday, 17 November 2009

தொல்காப்பியன்... ஸாரி, திருச்செல்வம்


*ஆறுவருட பயணம்... எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொண்டேன். அம்மா, பெண், பாட்டி என மூன்று தலை முறைகளையும் தொலைக்காட்சி முன்னால் அமர வைத்ததை பெரிய விருதாகவே நினைக்கிறேன்.

*தொல்ஸ் மகாபொறுமைசாலியாக இருக்கிறாரே?

இந்த காலத்தில் பொறுமை என்பது அனைவருக்கும் அவசியமான ஒரு குணம். எதற்கெடுத்தாலும் முதலில் கோபப்படுகிறோம். மேடையில் ஆயிரம் பேசினாலும் நிஜத்தில் பெண்களின் முன்னேற்றத்தை ஆண்கள் ஏற்க மறுக்கிறார்கள். இன்னும் சிலர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்புக்கு சாத்தியமில்லை என்று அடித்துச் சொல்வார்கள். இந்த ஆண்கள் திருந்தவே மாட்டார்களா என்ற என் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் 'தொல்காப்பியன்' கதாபாத்திரம். அதிகாரம் செய்யும் ஆணைவிட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும். அந்தவகையில் பெண்களின் நல்ல நண்பன் 'தொல்ஸ்'

*திருநங்கை கதாப்பத்திரத்தையும் குடும்பத்தில் ஒருவராக சேர்த்திருக்கிறீர்களே?

அவர்கள் மட்டும் தீண்டத் தகாதவர்களா என்ன? இயற்கை செய்த தவறுக்கு அவர்களை ஒதுக்கி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இங்குதான் தேவையில்லாத கேலிப்பேச்சுகளால் அவர்களை பிரித்து பார்த்து ஒதுக்கி வைக்கிறார்கள். எங்க பேராவூரணி ஏரியாவில் அவர்களையும் உறவு முறை சொல்லித்தான் அழைப்போம்.

*அபியை மட்டுமே சுற்றி வரும் கதையில் மார்க்சியம் பேசும் தோழர் கதாபாத்திரம் எதற்கு?

பெண் என்பவள் தனிப்பட்டவள் இல்லை. அவளும் சமூகத்தில் ஒரு அங்கம்தான். அவள் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளோடு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறவர்தான் தோழர். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சமூகத்தின் மீதும், சமூகத்தில் நிகழும் முறைகேடுகள் மீதும் கோபம் இருக்க வேண்டும் என்பதை சொல்வார் என் தோழர். அந்தக் கதாபாத்திரத்தை ரசித்துச் செய்த தோழர் ஆதவனால் அது இன்னும் மெருகேறியது. தங்களால் செய்ய முடியாததை செய்ததாலேயே தோழருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

*தோழரின் மரணம், விடுதலை புலிகள் தலைவர் பிரகரனின் இறப்பை நினைவுபடுத்துவது போல இருந்ததே?

அப்படி நினைவுபடுத்த வேண்டும் என திட்டமிட்டு அமைக்கப்பட்ட காட்சிதான் அது. சாவைக் கண்டு பயப்படாத ஒருவனுடைய கண்கள் மரணத்தின்போது எப்படி இருக்குமோ அதை அப்படியே பிரதிபலித்தார் தோழர். மார்க்சிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, 'முப்பது வருடங்களாக எங்களால் செய்ய முடியாததை உங்கள் தோழர் கதாபாத்திரம் செய்து விட்டது. நான் போகிற ஊர்களில் சிறுவர்கள் கூட 'தோழர்' என்று அழைப்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது' என்று பாராட்டினார். என் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே போதுமே.

மேலும் இந்தத் தொடரில் வரும் எல்லா கதாபாத்திரமும் ஒரு குறியீடுதான். ஆதி என்பவன் முதலாளி வர்க்கத்தின் குறியீடு. தோழரும், அபியும் சமூக மற்றும் தனிமனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் போராட்ட வர்க்கத்தின் குறியீடுகள். சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவதை இங்கு அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் போரட்டம் என்ற பெயரில் அரசியல் ஆதாயங்களை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மை எத்தனை பேரைச் சென்று அடைந்திருக்கிறது? சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களுக்கும் யதார்த்தம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் என் கருத்துகளை சின்னத்திரை என்கிற சக்திவாய்ந்த ஊடகம் மூலமாக சொல்கிறேன்.


*அடுத்தது சின்னத்திரையா வெள்ளித்திரையா?

இரண்டும்தான். 'மாதவி மனோகரன்' என்ற தொடரை இரண்டு வாரங்களுக்கு மட்டும் இயக்க இருக்கிறேன். பிறகு கதை, திரைக்கதை மட்டும் எழுதுவேன். தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் 'முத்து குமரனின் காதல்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். இது காதல் கதை கிடையாது. அனைவரும் விரும்பு குடும்பம் மற்றம் போராட்ட கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இந்தியின் முன்னனி நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்.


*வெள்ளித்திரையில் இயக்கப் போவதில்லையா?

செய்யலாம். ஆனால் சின்னத்திரையில் இருக்கிற வசதி பெரியதிரையில் இல்லை. ஒரு தொடரை இயக்கும் போது இந்த வாரம் சரியில்லை என்றால் அடுத்த வரம் சரி செய்துக் கொள்ளலாம். ஆனால் சினிமாவில் அப்படி செய்ய முடியாது.

வரும் டிசம்பர் 4-ம் தேதியோடு கோலங்கள் நிறைவடையப் போகிறதாம். சின்னத்திரையில் வெற்றிவலம் வரும் தொல்காப்பியன்... ஸாரி, திருச்செல்வம் வெள்ளித்திரையிலும் பிரகாசிக்க வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

Wednesday, 4 November 2009

தேய்பிறைகள் - சத்யராஜ்குமார்

சிறுகதை

- ஆனந்தவிகடன் – 10.05.1998

” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.

ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.

” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா காட்டியிருக்கார்.

எவ்ளோவ் பெரிய கட்டிடம் ! ஒரே மாதிரி டிரஸ் போட்டு அக்கா, அண்ணா எல்லாம் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டிருந்தாங்க.

எதிர் வீட்டு ரம்யாக்கா கூட அந்தக் கூட்டத்தில் இருப்பா. ஷூ, ஸாக்ஸ் போட்டு டை எல்லாம் கட்டியிருப்பா. அப்பா கிட்டே எனக்கும் அது மாதிரி வாங்கித் தரச் சொன்னேன்.

” அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்ந்துக்க. நீயும் அதெல்லாம் போட்டுட்டுப் போகலாம். “

சாயந்தரமானா ரம்யாக்கா, மதுக்கா எல்லாரும் சத்தம் போட்டுப் படிப்பாங்க. நானும் படிக்கணும்பேன். அம்மா அகர முதலன்னு ஒரு பாட்டு சொல்லித் தந்தா.

யாராவது வீட்டுக்கு வந்தா, ” அஸ்மிதா, திருக்குறள் சொல்லு” ம்பா அம்மா.

” அகர… முதல… எழுத்தெல்லாம்… ஆதி… பகவன்… முதற்றேஏஏஏஏ… உலகு. “

அந்தப் பாட்டை நான் ராகமா சொல்லுவேன்.

” ஸ்கூலுக்குப் போறதுக்கு முந்தியே இந்தப் பாப்பா திருக்குறள் எல்லாம் சொல்லுதே” ன்னு வந்தவங்க என்னோட கன்னத்தை செல்லமாக் கிள்ளுவாங்க.

காலேஜில் படிக்கிற ராஜிக்கா என்னை ” அகர முதல அஸ்மிதா “ன்னுதான் கூப்பிடுவாங்க.

அப்புறம் அம்மா ஒன் டூ த்ரீ… டென் வரைக்கும் சொல்லிக் குடுத்தா. அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் வந்தா அதெல்லாம் நான் சொல்லுவேன்.

” அஸ்மிதா, எந்த கிளாஸ் படிக்கிறே? “

” அடுத்த வருஷம்தான் ஸ்கூலுக்குப் போவேன். எல்.கே.ஜி-ல சேரப் போறேன். “

” ஸ்கூலுக்குப் போறதுக்கு முந்தியே இவ்வளவு சொல்றா… உன் பொண்ணுக்கு நல்ல மெமரி பவர் வாசு. “

கொஞ்ச நாள் கழிச்சு புது டிரஸ்செல்லாம் போட்டு என்னை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

” பிரின்சிபல் மேடம் கேக்கற கேள்விக்கு டாண் டாண்ணு பதில் சொல்லணும். ” – அம்மா சும்மா சும்மா இதையே சொன்னா.

மேடம், ” வாட்ஸ் யுவர் நேம்? ” ன்னாங்க.

” அஸ்மிதா. “

” நைஸ் நேம்! நல்லா படிப்பியா? “

” ஓ ! “

” ரொம்ப புத்திசாலிக் குழந்தையா தெரியறா. “

என்னோட தலையைத் தடவினாங்க மேடம். அப்பா கிட்டே சொன்னாங்க.

” கெளண்ட்டர்ல பணத்தைக் கட்டி அட்மிஷன் ஆகிக்கங்க. புக்ஸ், யுனிபார்ம், ஷூ, ஸாக்ஸ் எல்லாம் எங்க ஸ்டோர்லயே கிடைக்கும். ஜூலை முதல் தேதியிலிருந்து ஸ்கூலுக்கு அனுப்பிடுங்க. “

” தாங்க்யூ மேடம். “

வெளியே வந்ததும், ” நீ ஸ்கூல்ல சேர்ந்தாச்சு. இப்ப உனக்கு யுனிபார்ம், டை எல்லாம் வாங்கப் போறோம்”னு அப்பா சொன்னார்.

” யாராவது கேட்டா ‘ எல்.கே.ஜி படிக்கிறேன்’னு சொல்லு”ன்னா அம்மா.

அன்னிக்கு சாயந்தரம் மேஸ்திரி மாமா வீட்டு மல்லி மண்ணுல விளையாடிட்டிருந்தா.

” நான் எல்கேஜி-ல சேர்ந்துட்டேன்”னு அவ கிட்டே சொன்னேன்.

” நீ எல்கேஜிலதானே சேர்ந்தே… நான் நேரா ஒண்ணாங்கிளாஸ் போயிடுவேன்”னு அவ சொன்னா.

” அதெப்படி எல்.கே.ஜி. படிக்காம ஒண்ணாங்கிளாஸ் போக முடியும்? “

” அடுத்த வருஷம் திண்ணை ஸ்ககூலுக்குப் போ… எல்.கே.ஜி- யை விட பெரிய படிப்புன்னு எங்கம்மாதான் சொல்லிச்சு. எங்கப்பாவோட இன்ஜினியரெல்லாம் அங்கதான் படிச்சாங்களாம். “

எனக்கு ஒண்ணுமே விளங்கலை. திண்ணை ஸ்கூலை நான் பார்த்திருக்கேன்.

” அய்யே, அது அழுக்கு ஸ்கூல்ன்னேன். “

அவ கோபிச்சு என்னைப் பிறாண்டினா. இரண்டு பேர்க்கும் சண்டை வந்துருச்சு. நான் அவ கூட டூ விட்டுட்டேன்.

பத்தே நாள்ல புது டிரஸ் எல்லாம் வந்துருச்சு. அம்மா போட்டு விட்டா. ஸ்கூல் பேகை தோளில் போட்டுக்கிட்டேன். டையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். ஷூ சத்தம் ரொம்பப் பிடிச்சது. ரம்யாக்கா, மதுக்கா மாதிரியே டாக் டாக்ன்னு நடந்தேன்.

அம்மா என் நெத்தியில ஆசையா முத்தம் குடுத்தா.

” ஸகூலுக்குப் போலாமா? “

” ஓ…! “

” அங்க போய் அழக் கூடாது. “

” எதுக்கு அழணும்? நான் சமர்த்துப் பாப்பா. “

” அம்மா உன்னை அங்கே விட்டுட்டு வந்துருவேன். டீச்சர் கிட்டேதான் நீ இருக்கணும். “

” நீ கவலைப்படாதேம்மா. நீ வர்ற வரைக்கும் டீச்சர் கிட்டே சமர்த்தா இருந்துப்பேன். “

” பெரிய மனுஷி மாதிரி எப்படிப் பேசறா பாருங்க. ” – அப்பாவைப் பார்த்து அம்மா சொன்னா.

மொத மொதல்ல ஸ்கூலுக்குள்ளே நுழைஞ்சப்ப ஒரு மாதிரி சந்தோஷமா இருந்துச்சு. அம்மாவோட கையை உதறிட்டு வீசி வீசி நடந்தேன்.

கிளாஸூக்குள்ளே போனா என்னை மாதிரியே நிறைய குழந்தைங்க. ‘ வீர் வீர் ‘ன்னு சத்தம். எல்லாருமே அழுதுட்டிருந்தாங்க. எனக்கு சிரிப்பா வந்துச்சு.

என்னமோ தெரியலை. அம்மாதான் லேசா கண்ணு கலங்கியிருந்தா.

” அஸ்மிதா, டாட்டா. “

கையை ஆட்டினா. நானும் வேகமா கையை ஆட்டினேன்.

கொஞ்ச நேரத்தில் மணியடிச்சது. அம்மாவைக் காணோம். பெரியவங்க யாரையும் காணோம். டீச்சர் வந்தாங்க.

” யாரும் அழக் கூடாது. அஸ்மிதா பாரு… எப்படி சிரிச்சிட்டிருக்கா. “

அழற குழந்தைங்க கிட்டே என்னைக் காட்டி சமாதானப்படுத்தினாங்க.

டீச்சரை எனக்குப் பிடிச்சது. அவங்க கையிலிருந்த பிரம்புதான் பிடிக்கலை.

கொஞ்ச நேரம்தான் விளையாட விடுவாங்க. ‘அங்க ஓடாதே… இங்க ஓடாதே’ன்னு பிரம்பைக் காட்டி மிரட்டுவாங்க. அம்மா சொல்லிக் குடுத்த அதே ஏ.பி.சி.டி-யைத்தான் டீச்சரும் சொல்லித் தந்தாங்க. அவங்க சொல்லி முடிக்கிறதுக்குள்ளே நான் இஸட் வரைக்கும் சொல்லிடுவேன்.

” முந்திரிக் கொட்டை மாதிரி கத்தாதே”ன்னாங்க.

மிட் டெர்ம் டெஸ்ட்ல எனக்கு நூத்துக்கு நூறு. யுனிபார்ம் சட்டைல கோல்டு ஸ்டார் குத்தி விட்டாங்க.

o0o

அன்னிக்கு ஒரு நாள் டீச்சர் உர்ர்ன்னு கிளாஸுக்குள்ளே நுழைஞ்சாங்க.

” என்ன சளசளன்னு சத்தம்? கீப் கொய்ட். “

அபியும், செல்லம்மாளும்தான் பேசிட்டிருந்தாங்க. என் தலைலயும் பிரம்பு அடி விழுந்துச்சு.

” மிஸ், நான் பேசலை. “

” எதிர்த்தா பேசறே? “

இன்னொரு அடி போட்டாங்க. எனக்குத் தொண்டையெல்லாம் அடைச்சிருச்சு.

அம்மாகிட்டே சொல்லி அழுதேன்.

” சாயந்தரம் மிஸ் கிட்டே கேக்கறேன் ” னாங்க.

” வேணாம்மா. அடிப்பாங்க. “

” ஒண்ணும் அடிக்கமாட்டாங்க. “

அம்மா டீச்சரைப் பார்த்தாங்க.

அம்மா பேசறதுக்கு முந்தியே டீச்சர் பேசினாங்க.

” அஸ்மிதாக்கு வர வர குறும்பு அதிகமாயிருச்சு. லேசா அடி போட்டாத்தான் பயமிருக்கும். “

” குறும்பு செஞ்சா தாராளமா அடிச்சுக் கண்டியுங்க. ” ன்னு அம்மா சொன்னா.

எனக்கு திக்ன்னு ஆச்சு.

அன்னிலர்ந்து டீச்சர் பிரம்போட கிட்டே வந்தாலே, எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது.

இப்போவெல்லாம் கை வலிக்க எழுதச் சொல்றாங்க. அம்மாவும் புதுசா ஒரு ஸ்கேல் வாங்கி வெச்சிருக்கா. வீட்டுக்குப் போனதும் யுனிபார்ம் மாத்தி பால் குடிக்க வெச்சிட்டு பேரண்ட்ஸ் டைரியைப் பிரிச்சு வெச்சு ஸ்கேலும், கையுமா உக்காந்துப்பா.

” எழுதுடி. இப்படி சுழி. சனியனே… உனக்கு எத்தனை வாட்டி சொல்லிட்டேன். சொல்றது மண்டையிலே ஏறாதா ? “

” கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேம்மா. “

” வண்டி வண்டியா ஹோம் ஒர்க் இருக்கு. அதை முடிச்சிட்டுப் போய் விளையாடு. “

முடிக்கிறதுக்குள்ளே இருட்டிடும். அப்புறம் தூக்கம் வந்துரும். தூங்கி எழறப்ப கூட ஸ்கேலால சுள்ன்னு அடி விழும். நான் ஓ-ன்னு அழுவேன். அப்பா கத்துவார்.

” ஏண்டி குழந்தையைப் படுத்தறே? “

” ஹாஃப் இயர்லி எக்சாம்ல எவ்வளவு வாங்கியிருக்கான்னு தெரியுமா? முட்டை முட்டையா வாங்கிட்டு வந்திருக்கா. “

” வீட்ல நல்லாத்தானே சொல்றா. “

” வீட்ல சொல்லி என்ன பண்றது? டீச்சர்ட்ட சொல்லணுமே? “

” டீச்சர் கையில பிரம்பைப் பார்த்தா பயமா இருக்கு. எல்லாமே மறந்து போயிடுதும்மா. “

” பேச்சு மட்டும் ஏழு மைல் நீளம். “

” சரி விடு. நாளைக்கு சொல்லிக் குடு. “

” நீங்க கொஞ்சம் சும்மா இருக்கிங்களா? அஸ்மிதா இப்பல்லாம் சரியாப் படிக்கிறதில்லைன்னு பிரின்சிபல் மேடம் கூப்பிட்டு சொல்றாங்க. மானம் போகுது. “

” நாம என்ன செய்ய முடியும்? “

” பேரண்ட்ஸ் நீங்க கொஞ்சமாச்சும் அக்கறை எடுத்துக்கணும். ஹோம் ஒர்க்கை எல்லாம் கூட இருந்து செய்ய வெக்கணும். அப்பதான் உங்க குழந்தை நல்லாப் படிக்கும்ன்னு சொல்றாங்க. ‘ உங்களால முடியலைன்னா டியூஷன்ல விடுங்க. நாங்க கேர் எடுத்துக்கறோம் ‘ ன்னு மேடம் சொல்றாங்க. “

” டெர்ம் ஃபீஸ் கட்டறதுக்குள்ளே உயிர் போகுது. இதில் டியூஷனுக்கு வேற தனியா தண்டம் அழணுமா? நோ. “

” அப்ப குறுக்கே வந்து இடைஞ்சல் பண்ணாம இருங்க. “

அப்பாவோட வாயை அடைச்சிட்டு என்னை பொத் பொத்துன்னு அடிக்கறா.

” ச்சே ! வீடா இது. போர்க்களம் ” ன்னுட்டு அப்பா சட்டையை மாட்டிட்டு வெளியே போறார்.

அம்மா ஸ்கூல் ஃபீஸ் கேக்கறப்பவெல்லாம் தப்பாம சண்டை வரும்.

” மாசம் பூரா நீதானே உக்காந்து தொண்டை வறள சொல்லித் தர்றே. அப்புறம் எதுக்கு ஸ்கூல் ஃபீஸ்? “

” இப்படியெல்லாம் சட்டம் பேசினா டிசியைக் கிழிச்சுக் குடுத்துருவாங்க. அப்புறம் உங்க பொண்ணை மாடு மேய்க்கத்தான் விடணும். “

” ஏண்டி மாடு மேய்க்கணும்? அவ என்ன இப்ப ஐஏஎஸ்ஸா படிக்கிறா? வெறும் எல்கேஜிதானே? போனா போகுது. வேற ஸ்கூல்ல சேர்த்திட்டா என்ன? “

” இங்க பாருங்க. குழந்தையோட படிப்புல கஞ்சத்தனம் பார்க்காதிங்க. “

” நான் பணத்துக்காக சொல்லலை. அவ எவ்வளவு கஷ்டப்படறா. “

” கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். எதிர்காலத்தில் போட்டி போட கஷ்டப்பட்டுத்தான் படிச்சாகணும். “

” அததுக்கு வயசு இருக்கு. குழந்தைக்கு ஓவர் ஸ்ட்ரெயின் குடுத்துட்டிருக்கோம். எப்படிக் கலகலப்பா இருந்தவ இப்ப எப்படி ஆயிட்டா. “

” உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆபிஸ், லெட்ஜர் இது மட்டும்தான். உங்களுக்கென்ன கஷ்டம் வந்தது? “

அப்பா பல்லைக் கடிச்சிட்டு பேசாம போயிடுவார்.

இரண்டு பேரும் கத்திப் பேசறதைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கும்.

கடைசில ஆனுவல் எக்சாம் வந்துச்சு. ஸ்கூல்ல பிரம்படி. வீட்ல ஸ்கேல் அடி. இரண்டுக்கும் பயந்து உளறிக் கொட்டினேன்.

டீச்சர் அம்பது அறுபதுன்னு மார்க் போட்டாங்க. நான் பாஸாம். ஒரு மாசம் லீவு.

அப்புறம் அம்மாவும் அப்பாவும் சண்டையே போடலை. ஊருக்குப் போனேன். லீவுக்கு ஹேமா, கணேஷ், உஷா, கோபி எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே ஜாலி. நிறைய விளையாடினோம்.

திடீர்ன்னு ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் வந்தாங்க.

” நாளைக்கு ஸ்கூல் திறக்குது “ன்னு சொன்னாங்க.

” புது யுனிபார்ம், டை எல்லாம் வாங்கி வெச்சிருக்கோம் “ன்னார் அப்பா.

நான் அதைத் திரும்பிக் கூடப் பார்க்கலை. காலைலர்ந்து ஒரே அழுகை. குட்டிக் குட்டி தலை பின்னி விட்டா அம்மா. பிரம்பு டீச்சர் ஞாபகத்துக்கு வந்தாங்க. என்னோட அழுகை அதிகமாச்சு.

அம்மா திட்டினா.

” எல்.கே.ஜி-க்கு கூட அழாம போனா. இப்ப யூ.கே.ஜி போறப்ப ஏன் இப்படி அழறா? “

அப்பா ஒண்ணும் சொல்லலை.

நான் அழுதுட்டேயிருந்தேன். அம்மா என்னை முறைச்சா.

” நீ இப்படி அழுது அழிச்சாட்டியம் பண்ணினா முதுகுல மொத்திருவேன். மொத நாள் அடி வாங்காதே. “

என்னால அழுகையை நிறுத்த முடியலை. அம்மா தரதரன்னு இழுத்துட்டுப் போனா. பிடிக்கலை. எனக்கு ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கலை. ◙