ஆனாலும் இப்படி நெகிழாமல், ஒபாமாவோடு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஒபாமாவோடு சேர்ந்துவந்து நிருபர்களைச் சந்தித்தபோது அவர் அமெரிக்காவுக்கு இப்படி அட்வைஸ் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும்? ‘‘வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனான பிரச்னைகளை அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் இதற்கு கியூபா மூன்றாவது நாடாக இருந்து மத்தியஸ்தம் செய்யலாம்!’’
ஒரு இந்தியப் பிரதமரிடமிருந்து இப்படியான நெஞ்சுரத்தை நாம் எதிர்பார்ப்பது பேராசை. ‘தலையிடாக் கொள்கை’, ‘அணி சேராக் கொள்கை’ என அரதப்பழசான நேரு காலத்து தத்துவங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு தொங்கியே நாம் காலம் தள்ளி வருகிறோம். தவணை முறையில் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் நுழைத்து பாகிஸ்தான் கலக்கத்தை ஏற்படுத்தினாலும் இதே கொள்கையைச் சொல்வோம். எல்லை பாதுகாப்புப் படையினரை வங்க தேச ராணுவம் கொன்றாலும் இதையே சொல்வோம். அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடியும், அங்கு நம் பிரதமர் பயணிப்பதை ஆட்சேபித்தும், இந்தியாவுக்குள் நுழையும் ஜீவ நதிகள் மீது அணைகள் கட்டி தடுத்தும் சீனா அட்டகாசங்கள் செய்தாலும் நாம் கொள்கை மாறமாட்டோம். நம் காலடியில் கிடக்கும் குட்டி தேசமான இலங்கையில் நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டாலும் நமக்கு கொண்ட கொள்கையே முக்கியம்.
அமெரிக்காவுக்கு அட்வைஸ் பிடிக்காது... அவர்களுக்கு யாராவது சொன்னால் மட்டும்! அட்வைஸ் செய்பவர்களையும் பிடிக்காது. ஆனால் உலகத்துக்கே அட்வைஸ் செய்கிற தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறது. ரிபப்ளிகனோ, டெமாக்ரட்டோ & ஜார்ஜ் புஷ்ஷோ, ஒபாமாவோ... யார் அதிபராக இருந்தாலும் இந்த எண்ணங்கள் மாறுவதில்லை. அதனால்தான் சில நாட்களுக்கு முன் சீனத் தலைநகர் வந்து, சீன அதிபரோடு கூட்டறிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்குமான பிரச்னையில் சீனா மூன்றாவது நாடாக இருந்து மத்தியஸ்தம் செய்து வைக்கவேண்டும்’ என்று திருவாய் மலர்ந்துவிட்டுப் போனார். இரண்டே வாரங்களில் மன்மோகனை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘‘ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்காக இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது’’ என அதே வாயால் சொல்கிறார். ஒருவேளை பாகிஸ்தானும் சீனாவும் கொடுக்கும் குடைச்சல்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, ‘ரொம்ப நல்லவர்களாக’ அகிம்சை முறையில் எதிர்ப்பு காட்டாமல் அமைதி காக்கிறோமே... அதைச் சொல்கிறாரோ என்னவோ! இந்தியாவைப் புகழ்ந்த அதே சமயத்தில் பாகிஸ்தான் பற்றியும் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஒபாமா. கொஞ்ச நாளில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அமெரிக்கா போவார். அவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உறுதியான நண்பனாக பாகிஸ்தான் இருக்கிறது’ என்று சொன்னாலும் சொல்வார்.
போரிட்டு வெல்லும் தேசங்களில் எல்லாம் தங்களது அடங்காத பிள்ளைகளையோ, வாலாட்டும் உறவினர்களையோ கவர்னர்களாக நியமித்து, ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்துவிட்டுப் போவது சுல்தான்கள் காலத்து ஆட்சி முறை. அப்படித்தான் உலகத்தின் சட்டாம்பிள்ளையான அமெரிக்கா, ஆசியாவின் சட்டாம்பிள்ளையாக சீனாவை நியமித்து, அமைதிக்கு உதவச் சொல்கிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் பிரச்னைகளை சீனா எப்படி தீர்த்துவைக்க முடியும்? காஷ்மீர் சிக்கல்தான் இதில் பிரதானமானது. காஷ்மீர் இந்தியாவோடு இருந்து இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக இருக்க வேண்டுமா... அல்லது தனி நாடாகி திபெத் போல சீனாவால் ஆக்கிரமிக்கப்பட வேண்டுமா... அல்லது பாகிஸ்தானோடு இணைந்து தாலிபன் தீவிரவாதிகளைத் தோற்றுவிக்கும் லேபாரட்டரி ஆகவேண்டுமா என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கிறது. காஷ்மீரின் மூன்றில் ஒருபகுதிதான் இப்போது நம் வசம் இருக்கிறது. மீதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான் அதில் ஒரு பகுதியில் பொம்மை அரசாங்கத்தை நடத்தி வருகிறது. ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்’ என அதை நாம் சொல்கிறோம். இதுதவிர மூன்றாவது ஏரியாவான ‘அக்ஸாய் சின்’ பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துவிட்டது பாகிஸ்தான்.
இதை தனது தேசத்தின் ஒரு பகுதியாகவே சொந்தம் கொண்டாடும் சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருக்கும் யார் வேண்டுமானாலும் சீனாவுக்கு வருவதற்கு விசா விதிகளைத் தளர்த்தி இருக்கிறது. அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் அந்த நாடு, நமது எல்லையில் ஏராளமான ராணுவத்தைக் குவித்து, எந்த நேரமும் போருக்குத் தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகிறது. சீன அதிகாரிகளும், ‘ஏற்கனவே வாங்கிய அடி மறந்துவிட்டதா’ என்கிற ரேஞ்சில் இந்தியாவைச் சீண்டிப் பார்க்கிறார்கள். இதோடு இந்தியாவில் சமீபகாலமாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் சீனா வழங்கிவரும் ஆயுதங்களும் பயிற்சியுமே என்பதை நமது உள்துறை அமைச்சகமே ஒப்புக்கொண்டிருக்கிறது.
இப்படியான ஒரு ‘அமைதியின் நாயகனை’த்தான் நம் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் நாட்டாமையாக அமெரிக்கா நியமித்திருக்கிறது. கள்ளன் கையில் கொத்துச்சாவியைக் கொடுப்பது போன்ற இந்த செயலைக்கூட நாம் மென்மையாகத்தான் கண்டித்தோம். ‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் மூன்றாம் நாடு தலையிடும் பேச்சுக்கே இடம்கிடையாது’ என சீனாவுக்கும் வலிக்காமல், அமெரிக்காவுக்கும் வலிக்காமல் ஒரு பதிலை நமது வெளியுறவுத்துறை கொடுத்தது.
ஆனால், இந்த நியமனத்துக்கு அங்கீகாரம் தரும்விதமாக காஷ்மீரின் முக்கிய அரசியல் அமைப்பான அனைத்துக்கட்சி ஹுரியத் கமிட்டியின் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக், ‘நாங்கள் சீனாவோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்’ என குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஏற்கனவே காஷ்மீர் கட்சிகள் பலவும் பாகிஸ்தானின் கட்டளைப்படி இயங்கிவரும் நேரத்தில், சீனாவுக்கு இவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது விபரீதத்துக்கான அறிகுறி!
போதாக்குறைக்கு சீக்கிய அமைப்பு ஒன்று, ‘இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நிகழ்ந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நீதி வாங்கித் தரவேண்டும்’ என்று அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இப்படியே போனால் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, சேது சமுத்திரத் திட்டம், குஜ்ஜார் பிரச்னை என இந்தியாவின் தீராத பிரச்னைகளுக்கு முடிவுகளை அமெரிக்காதான் எடுத்தாக வேண்டும் என பலரும் மனுக்களை எழுதிப்போடக்கூடும். ஏதோ இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கும் மேலான ‘அப்பீல் அத்தாரிட்டி’யாக அமெரிக்காவை நினைக்கும் மனோபாவம் இங்கே பலருக்கும் இருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஆசியாவில் அப்படி என்ன அக்கறை? ஏன் அந்த தேசம் சீனாவிடம் ஒரு மாதிரியாகவும், இந்தியாவிடம் ஒரு மாதிரியாகவும், பாகிஸ்தானிடம் வேறு மாதிரியாகவும் பேசுகிறது? இரண்டு நாட்களுக்கு முன்பு உலக வங்கி வெளியிட்ட ஒரு கணிப்பில் இதற்கான பதில் இருக்கிறது. ‘வரும் 2050 ஆண்டுவாக்கில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் வலிமையான பொருளாதார சக்திகளாக சீனாவும் இந்தியாவும் இருக்கும்’ என்பதுதான் அந்தக் கணிப்பு.
ஐரோப்பிய நாடுகளின் போட்டியை அமெரிக்கா சமாளித்துவிடும். ஆனால் மக்கள்தொகையிலும் பரப்பிலும் பெரிய இரண்டு ஆசிய தேசங்கள் போட்டி போட்டால், அமெரிக்காவால் சமாளிக்கமுடியாது. அந்த போட்டியாளர்களை பலவீனப்படுத்தும் ஒரே வழி... போர் மட்டும்தான்! இந்தியாவும் சீனாவும் போரிட்டு தங்கள் பொருளாதார வலிமையை இழந்தால், அதனால் ஆதாயம் பெறும் ஒரே நாடு அமெரிக்காதான்! இப்படி ஒரு போர் நடக்கும்போது இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் சக்தியாக சீனாவுக்கு பாகிஸ்தான் உதவக்கூடும். போரினால் உருக்குலையும் தேசத்தை மீண்டும் கட்டமைப்பதே பெரிய சவாலாக இருக்கும்போது அமெரிக்காவோடு எப்படி மோதமுடியும்?
இரண்டாம் உலகப்போரில் பெருத்த சேதமில்லாமல் வெற்றியை ருசித்த ஒரே தேசம் அமெரிக்காதான்... அதனால் கிடைத்த வல்லமைதான் அந்த தேசத்தை உலகத்தின் கேள்வி கேட்கமுடியாத வல்லரசு ஆக்கியது. இதை சீனா புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பு!
& நாடோடி (நன்றி தெனாலி.காம்)
No comments:
Post a Comment