Thursday 17 December 2009

சாதிகள் (நிஜமாகவே) இல்லையடி பாப்பா!

விகடன் இதழ் 'டீன் கொஸ்டீன்' பகுதியில் இடம் பெற்றிருந்த கேள்வி-பதில் இது...

"சாதி மாறித் திருமணம் செய்துகொண்டவன் நான். என் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி குறிப்பிட எனக்கு விருப்பம் இல்லை. சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க ஏதேனும் வழிகள் உள்ளனவா?"

"கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் குழந்தையின் தாய் அல்லது தந்தையின் சாதியில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இப்போது இருக்கும் நடைமுறைப்படி பள்ளிச் சான்றிதழ் மற்றும் அரசின் பிற வேலைவாய்ப்புச் சான்றிதழ்களிலும் சாதி அவசியமாகிறது. சாதி பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், பள்ளியில் சேர்க்க மறுப்பது இப்போது உள்ள சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், 'சாதியைக் குறிப்பிடச் சொல்லக் கூடாது' என்று நீங்கள் விரும்பினால், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தால் உரிய தீர்வு கிடைக்கும். சாதி குறிப்பிடவில்லை என்றால், உங்கள் குழந்தை பொதுப் பிரிவில் வரும்!"

இதழ் வெளியான மூன்றாவது நாளில் விகடன் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் சாராம்சம் இது...

"என் பேரு செந்தில்குமாருங்க. சென்னைல வேலை பாக்குற சேலத்துக்காரன். நான் சின்ன வயசுல இருந்தே சாதிக் கொடுமையால ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்ந்தவனுங்க. வாழ்க்கையோட வரமா எனக்குப் பொறந்தா ஆராதனா. அவ பொறந்த நிமிஷத்துல இருந்தே சாதி பேரைச் சொல்லி கிடைக்கும் எந்தச் சலுகையும் அவளுக்குத் தேவையில்லைன்னு முடிவெடுத்தேன். இப்ப அவளுக்கு மூணு வயசு. ஆராதனாவுக்கு எல்.கே.ஜி. அட்மிஷனுக்குப் போனப்போ அட்மிஷன் ஃபார்ம்ல 'சாதி'ங்கிற காலத்துல 'சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை'ன்னு எழுதினேன். 'சாதியைக் குறிப்பிடலைன்னா உங்க குழந்தைக்கு எதிர்காலத்துல சில சலுகைகள் கிடைக்காமப் போகலாம். பரவாயில்லையா?'ன்னு கேட்டாங்க பிரின்சிபால். 'தேவையில்லை'ன்னு உறுதியாச் சொன்னேன். 'வெரிகுட்'னு சொல்லி அட்மிஷன் போட்டாங்க.

படிப்பு, வேலைவாய்ப்புன்னு எதுவா இருந்தாலும், தங்கள் சாதிகளைக் குறிப்பிட விரும்பாதவர்களுக்கு அதிகளவில் சலுகை அளிக்க அரசாங்கம் முன்வரணும். அப்படி ஒரு நிலை ஏற்படுத்திவிட்டால், ஒரு காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களும்கூட தலை நிமிருவாங்க. சாதிரீதியான அடையாளத்தைத் தவிர்க்கத் தயாராயிடுவாங்க. சாதிகளைப் பள்ளிகளில் குறிப்பிட அவசியம் இல்லைன்னு எத்தனை பேருக்கு இங்கே தெரியுது? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் சாதியைக் குறிப்பிடுவதால் கிடைக்கும் சலுகைக்காகவே அவங்க தயங்குறாங்க. இது ஸ்கூல் அட்மிஷன் நேரம். சாதிகளைக் குறிப்பிடாம உங்க குழந்தைகளைப் பள்ளிகளில் சேருங்க.

'சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!'னு முண்டாசுக் கவிஞன் அப்பவே பாடிட்டுப் போயிட்டான். ஆனா கம்ப்யூட்டர், இன்டர்நெட், நிலவுக்கு மனுஷன்னு இந்தக் காலத்துலயும் நாம அதை விடாமத் தொங்கிட்டு இருக்கோம். இன்னிக்கு நாம விதைச்சாதான் நாளைக்கு அறுவடை பண்ண முடியும். நான் விதைச்சுட்டேன்!"

நாளைய நம்பிக்கையுடன்,
செந்தில்குமார்.

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்டோம்,

"2000-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தமிழக அரசாணை 205, 'இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றல் சான்றிதழ் ஆகியவற்றில் 'சாதி இல்லை, சமயம் இல்லை' என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ விரும்புவர்களுக்கு அந்த உரிமையை வழங்குகிறது. சாதியைக் குறிப்பிடாதவர்கள் பொதுப்பிரிவில் இணைக்கப்பட்டு விடுவார்கள்!" என்று தெரிவித்தார்.

எல்லோருமே 'பொதுப் பிரிவு' ஆகும் ஒரு நன்னாள் வரட்டும்!

நன்றி விகடன் !!!!

No comments: