Friday, 11 December 2009

சூரி +2

நான் ஒரு சராசரி மாணவன். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி அடுத்தடுத்த கிளாசுக்கு வந்திடுவேன். எனக்கு வகுப்பறையில் முதல் வரிசையில் உட்கார ரொம்ப ஆசை. எப்படியாவது முதல் வரிசையில் உட்கார்ந்து நல்லா படிக்கிற மாணவனாக என்னை அடையாளப்படுத்தி கொள்வேன்.

+2 முதல் நாள் கிளாசுக்கு வந்திருந்தபோது, வகுப்பாசிரியர் அனைத்து மாணவர்களையும் உயரம் குறைந்தவர்கள் முதல் உயரமானவர்கள் வரை வரிசையாக நிற்க வைத்து கொண்டிருந்தார். +1 லிருந்து +2 வரும்போது சற்று உயரமாக வளர்ந்துவிட்டேன். எப்படியோ என்னுடைய காலை கொஞ்சமாக வளைத்து நெளித்து 7 வதாக நின்று முதல் வரிசையில் அமர்ந்து விட்டேன். எனக்கு இடது பக்கம் கோபிநாத் (தற்போது மருத்துவர்), வலது பக்கம் இர்பான் (தற்போது அரசு ஊழியர்). இருவருமே மிக சிறந்த படிப்பாளிகள். இந்த மாதிரி நல்லா படிக்கிற பசங்களோட பழகியே நானும் எப்படியோ நல்லா படிச்சிட்டேன்.

எப்படியோ முதல் வரிசையில இடம் பிடித்து உட்கார்ந்த மகிழ்ச்சியில் திளைத்துகொண்டிருந்தேன். வேதியியல் ஆசிரியர் உள்ளே நுழைந்து முதல் நாள் பாடம் எடுக்க துவங்கினார். முதல் நாள் என்பதால் பாடங்களை தவிர்த்து பொதுவான விஷயங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்கள் எல்லோரையும் பார்த்து "ஒரு கை ஓசை போடுமா" என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்ட உடன், என்னையும் அறியாமல் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஒரு கையால் இரண்டு முறை "சிட்டிகை" போட்டு விட்டேன்.

வகுப்பறை முழுவதும் சில நிமிட அமைதி. ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. என்னை வகுப்பறையை விட்டு வெளியே சென்று நிற்குமாறு சொல்லிவிட்டார். அந்த வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். என் நண்பன் என்னருகில் வந்து, அவர் கிட்ட போய் மன்னிப்பு கேட்க சொன்னான். இல்லையென்றால் இந்த வருடம் வேதியியல் செய்முறை தேர்வில் (Practical Exam) அவர் உன் மதிப்பெண்ணை குறைத்துவிடுவார் என்று சொன்னான்.

வேகமாக சென்று வேதியியல் ஆசிரியரிடம் என்னை அறியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டேன். அவர் அடுத்த வினாடியே என் முதுகில் அவர் கையால் மூன்று அடி அடித்து விட்டார். எத்தனையோ
ஆசிரியர்களிடம் அடி வாங்கி இருந்தாலும், இந்த அடி என்னால் என்றும் மறக்க முடியாதது.

அவரிடம் டியூஷன் படித்தேன், காலாண்டு, அரையாண்டு வேதியியல் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி அவரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வெளியாகி இருந்தது. இயற்பியல் செய்முறை தேர்வில் (Physics practical ) 50/50, உயிரியல் செய்முறை தேர்வில் (Biology practical) 50/50 மற்றும் வேதியியல் செய்முறை தேர்வில் (Chemistry practical) 49/50.

இயற்பியல், உயிரியல் தேர்வை விட வேதியியல் தேர்வை மிக எளிமையாக செய்திருந்தேன். என் வகுப்பறை மாணவர்கள் பெரும்பாலானவர்கள் முழு மதிப்பெண்கள் வாங்கி இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டது ஏன்? என்பது மட்டும் இன்று வரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இந்த "வேதியியல் மாற்றம்" (Chemical reaction) என்னால் என்றும் மறக்க முடியாதது.
மாற்றங்கள் நிகழும்....
-சூரியபிரகாஷ்.வா

1 comment:

Nalini said...

real touching story.. Will give u 50/50 for this story.. :) u rock..