Thursday 16 September 2010

1990 ம் ஆண்டு ஒரு நாள்....

காஞ்சிபுரம், மிக சிறந்த கோயில்களுக்காகவும், பட்டு சேலைக்கும் புகழ் பெற்ற நகரமாக எல்லார்க்கும் தெரியும். இது தான் என் ஊர். இங்க எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் சினிமா பார்ப்பதும் ஒன்று. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுகிழமையும், காலையில 9.30 மணிக்கெல்லாம் முதல் காட்சி திரையிடப்படும்.

தமிழ் நாட்டிலேயே காஞ்சிபுரத்தில தான் இவ்வளவு சீக்கிரம் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் காலையில 8.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவதாக ஒரு நாளிதழ்ல படிச்சிருக்கேன். திங்கள் முதல் வெள்ளி வரை முதல் காட்சி 10.30 மணிக்கு ஆரம்பமாகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். ஏராளமான படங்களை பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத சினிமா தியேட்டர் அனுபவங்கள் ஏராளம்.

ஒரு புது படம் எங்க ஊர் பாபு தியேட்டர்ல ரிலீஸ் ஆன போஸ்டர் பார்த்தேன். அப்போது நான் ஏழாவது படிச்சிகிட்டு இருக்கேன். ஒரு ஞாயிற்றுகிழமை இந்த படத்தை பார்த்திடனம்னு முடிவு பண்ணி எங்க அப்பா கிட்ட காசு கேட்டேன். 10 ரூபாய் கொடுத்தார். 5 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய்க்கு எதாவது வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணேன். எனக்கு நினைவு தெரிஞ்சி நான் தனியா போய் பார்க்க போற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். கிளம்பும்போது, நானும் சினிமாக்கு வருவேன்னு என் தம்பி ஒரே அழுகை. எங்க அம்மாவும், அவனையும் கூட்டிகிட்டு போடான்னு சொல்லிட்டாங்க. என் தம்பி ஐந்தாவது படிச்சிகிட்டு இருந்தான்.

நாங்க ரெண்டு பேரும் நடந்தே பாபு தியேட்டர்க்கு வந்தடைந்தோம். டிக்கெட் கவுன்ட்டர் ஒவ்வொரு ஆளாக நுழைந்து போகிற குகை மாதிரி இருக்கும். இது வேற புது படம், கூட்டம் எக்கசெக்கமாக இருந்தது. டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில நானும், என் தம்பியும் போய் நின்றோம். சமயத்துல முன்னாடி டிக்கெட் வாங்கற ஆர்வத்துல தலைக்கு மேல எல்லாம் பறந்து, டைவ் அடிச்சி எல்லாம் சில பேர் போவானுங்க. டிக்கெட் கவுன்டரை நெருங்கியதும், 10 ரூபாய் கொடுத்து 2 டிக்கெட் கொடுக்க சொல்லி கேட்டேன். டிக்கெட்டை கையில வாங்கின ஆர்வத்தோட நானும் என் தம்பியும் தியேட்டர் உள்ளை நுழைய முற்பட்டோம்.

அங்கே ஒரு செக்கிங் நபர் என் டிக்கெட்டை பார்த்து விட்டு "ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க" என்று கேட்டார். அதுவரை என்னிடம் இருந்தது ஒரு டிக்கெட்டா இல்ல இரண்டு டிக்கெட்டா என்று கூட தெரியாத நான் மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டேன். புதிய படம் என்பதால் டிக்கெட் விலை 10 ரூபாயாக மாறியிருந்தது எனக்கு தெரியவில்லை.

நாங்க இரண்டு பேர், கையில ஒரே ஒரு டிக்கெட், உள்ளே திரைப்படம் ஆரம்பிக்க போகிறது. எனக்கு ஒரே அழுகையாக வந்துவிட்டது. என் தம்பி மிக தெளிவாக, டேய் நீ படம் பார்த்துட்டு வா, நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னான். என்னடா இது முதல் முறையாக தனியாக படம் பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதேன்னு ஒரே அழுகையும், வருத்தமாகவும் இருந்தது.

என் தம்பி சென்றவுடன், உள்ளே நுழைந்து ஒரு சீட் பிடிச்சி உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கினேன். திரையில் படத்தின் பெயர் போட்டார்கள்,
ஆபாவாணனின் "இணைந்த கைகள்" .