எங்கடா பார்த்திபன், என்று வேலு கேட்டு முடிக்கும் போதே கிரிக்கெட் மைதானத்துக்கு அவன் வந்து சேர்ந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தா எல்லாம் ஒன்னு சேந்து கிரிக்கெட் ஆடுவாங்க. இவங்க கிரிக்கெட் அணிக்கு ஸ்டார் கிரிக்கெட் டீம், சச்சின் கிரிக்கெட் டீம்னு எல்லாம் பேர் வச்சி, எந்த பெரும் நிலைச்சி இருந்ததில்லை. எல்லாரும் ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சேர்த்து மொத்தமா 25 ருபாய் பார்த்திபன் கையில கொடுத்த விக்கி கார்க் பந்து(Wicky corck ball) வாங்கிட்டு வர சொன்னாங்க.
நீங்க நினைக்கலாம், கடையில காசு கொடுத்தா பந்து கொடுக்க போறாங்க, அது எதுக்கு பார்த்திபன். அவன் போனால் தான் ஒரு பந்து வாங்க வேண்டிய காசுல இரண்டு பந்து வாங்கிட்டு வருவான். கடைக்காரன் அசர்ற நேரமா பார்த்து ஒரு பந்தை ஆட்டைய போடறதுல அவன அடிச்சிக்க ஆளே கிடையாது. பெரும்பாலான சமயம் ரெண்டு பந்தோட தான் அவன் வருவான். சில சமயம் வேலைக்கு ஆகாது.
இப்படி பண்ணுவதெல்லாம் சரியா இல்ல தவறான்னு கூட தெரியாத சின்ன வயசு பசங்க. எல்லாமே ஒரு த்ரில், ஜாலி அவங்களுக்கு. பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி போகிற பசங்க, மருந்து கடைகளுக்கு மருந்து சப்ளை பண்ற பசங்க, மற்றும் பட்டு நெசவு தறியில வேலை பாக்கற பசங்க கலந்த கலவையாக இவங்க கிரிக்கெட் டீம் இருக்கும். இரண்டு அணியாக பிரிந்து ஆட்டம்னு வந்துட்டா ஜெயிக்கிறதுல வெறியா இருப்பானுங்க. மற்ற சமயங்களிலும் ஒற்றுமையாக இருப்பாங்க.
பொங்கல் மாதிரி பண்டிகை வந்துட்டா இவங்களுக்கெல்லாம் ரொம்ப ஜாலி தான். ஏனென்றால், நெசவு வேலை செய்யற பசங்களுக்கு தொடர்ச்சியா 15 நாள் விடுமுறை கிடைக்கும். பள்ளி கல்லூரி விடுமுறையாக இருக்கும், மற்ற வேலை செய்கிற பசங்களும் எப்படியோ சமாளிச்சி வேலைக்கு நடுவுல கிரிக்கெட் மைதானத்துக்கு வந்திடுவாங்க. அந்த நேரத்தில எல்லாம் தினமும் காலையில இருந்து மாலை வரை கிரிக்கெட் மட்டும் தான் அவங்களுக்கு வாழ்க்கை.
எல்லாரும் காசு போட்டு ஒரு நல்ல புது கிரிக்கெட் மட்டை (Cricket Bat) வாங்கலாம்னு முடிவு பண்ணி காசு சேத்தாங்க. மொத்தமா 250 ரூபாய் வசூலாகிவிட்டது. அடுத்து யாரெல்லாம் சேர்ந்து கடைக்கு போய் புது Bat வாங்கறதுன்னு முடிவு பண்ணும் போது, பார்த்திபன் அவங்க அத்தை ஊருக்கு போய்ட்டதால, மற்ற ஐந்து நண்பர்கள், ஸ்போர்ட்ஸ் கடைக்கு போய் ஒவ்வொரு மட்டையா எடுத்து எடுத்து விலை கேட்டுட்டு, இதுல ஒருத்தர் வித விதமாக ஸ்ட்ரோக் வச்சி பார்த்து இது சரி இல்லை அது சரி இல்லைன்னு கமெண்ட்ஸ் கொடுத்து கிட்டு, இன்னொருத்தர் MRF ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிற இந்த மட்டைய வாங்கலாம்னு ஆளுக்கு ஒரு மட்டைய எடுத்து வச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கும்போதே, ஒரு மட்டைய, கடைக்காரருக்கு தெரியாம எடுத்துகிட்டு ரவி வேகமா படிக்கட்டை நோக்கி போவதை மற்ற நான்கு நண்பர்களும் பாக்கறதுக்கும் சரியாக இருந்தது. மற்ற நான்கு பேரும் ஷாக் ஆகிட்டாங்க, ஏன்டா ரவி இப்படி பண்ணிட்டான். அதே நேரத்தில எதிர் திசையில இருந்து இரண்டு பசங்க அந்த கடைய நோக்கி வராங்க. வழக்கமா பார்த்திபன் தானே இப்படி எல்லாம் பண்ணுவான். ரவி ஏன் இப்படி பண்ணிட்டன் என்று ஒரே கலவரமாகி போனார்கள். இந்த ஐந்து பேருமே அவ்வளவாக தைரியம் இல்லாத பசங்க. இந்த மாதிரி இரண்டு பேட் எடுக்கிற திட்டமெல்லாம் அவங்க போடவே இல்லை.
எதிர் திசையில இருந்து வந்த பசங்க, கடைக்காரர பார்த்து, ஒரு அண்ணன் இப்போ மட்டை வாங்கிட்டு போறாரே அது எவ்வளவு விலை என்று கடைக்காரரை பார்த்து கேட்கவும், கடைக்காரர் அதிர்ச்சியாகி, யாரும் இன்னும் வாங்கலயே என்று சொல்லிக்கொண்டே, எதிரில் மட்டை வாங்க வந்த பசங்களோட தலையை எண்ண ஆரம்பித்தார். எங்கடா நீங்க 5 பேர் தான வந்திங்க, இன்னொருத்தன் எங்க என்று கேட்டு கொண்டே இரண்டு பேர் கைய பிடிச்சிகிட்டார். மற்ற இரண்டு பேரிடம் ஒழுங்கா போய் அவன கூட்டிகிட்டு வாங்க, இல்லனா இவங்க இரண்டு பேரையும் போலீஸ்ல புடிச்சி கொடுத்திடுவேன்னு கடைக்காரர் ஆக்ரோஷமாகி கத்தறார்.
அந்த இரண்டு பேரும் இப்படி விளையாட்டு வினையாகி போனதேன்னு வருத்தபட்டுகிட்டே, மட்டைய எடுத்துகிட்டு போன ரவியை தேடிகிட்டு போறாங்க. மட்டைய எடுத்தவன் 7 கீ.மீ. தள்ளி இருக்கிற அவங்க கிரிக்கெட் ஆடற மைதானத்துக்கு ஒரே ஓட்டமாக ஓடி அங்க இருக்கிற மற்ற நண்பர்கள் கிட்ட நடந்த விஷயத்த சொல்லவும், கடையிலிருந்து சைக்கிள்ல வந்த மற்ற இரண்டு பேர் அங்க வரவும் சரியாக இருந்தது. எல்லாம் சேர்ந்து அந்த மட்டைய எடுத்துகிட்டு வந்த ரவியை கடுமையாக திட்டி என்ன பண்றதுன்னு முடிவு பண்ணி இவங்களை எப்பவுமே சப்போர்ட் பண்ற 3 ஏரியா பெரிய மனிதர்கள் கிட்ட விஷயத்த சொல்லி கடைய நோக்கி வந்துகிட்டு இருக்காங்க.
கடைக்காரர் அதுக்குள்ள அவங்க மாமன், மச்சான், எல்லாரையும் போன் பண்ணி வர வச்சிட்டார். அதில ஒரு ஆள் அந்த இரண்டு பையன்களுள் ஒருத்தனான வேலு கிட்ட வந்து அவன் முகத்தை பார்த்து, மூஞ்ச பாரு திருட்டு தனம் அப்படியே இருக்கு என்று சொல்லிக்கிட்டே இன்னொருத்தன பார்த்து உன் பேர் என்னனு கேட்டான். அவன் ராமு என்று சொன்னவுடன், அவனை பார்த்து எந்த ஏரியா நீங்க எல்லாம், உங்க அப்பா பேர் என்ன அவர் என்ன வேலை செய்யறார் இப்படி எல்லா விதமான கேள்வியும் மாத்தி மாத்தி கேட்டுகிட்டே இருக்கும் போது, வேலு, அந்த ஆளை பார்த்து இதெல்லாம் ஏன் கேக்கறிங்க. உங்க வேலைய பாருங்கன்னு சொன்னவுடன், வேலுவோட கன்னத்திலே பளார்னு ஒரு அடி விழுந்தது. பண்றது திருட்டு வேலை, குடுக்கற சவுண்ட பார்த்தியான்னு கேட்டுகிட்டே கையை மறுபடியும் ஓங்கவும், உடனே ராமு, கடைக்காரரை பார்த்து அந்த மட்டை எவ்வளவு காசுன்னு சொல்லுங்க கொடுத்திடறோம், மேல எல்லாம் கைய வைக்கதீங்கன்னு சொல்லிகிட்டே பாக்கெட்டில இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான். கடைக்காரர் எண்ணி பார்த்து 250 ரூபாயை வாங்கிகிட்டு, பார்த்த சின்ன பசங்கள இருக்கீங்க, எடத்த காலி பண்ணுங்கன்னு சொல்லி அனுப்பிட்டார். ராமு, வேலுவை பார்த்து ரொம்ப வலிக்குதாடான்னு கேட்கும்போதே, அடிவாங்கின வேலு , ரொம்பநாளா விளையாட்டா நம்ம பார்த்திபன் ஒரு பந்து காசுக்கு, இரண்டு பந்து வாங்கிட்டு வந்ததுக்கு தண்டனையா இன்னைக்கு நான் அடி வாங்கிட்டேன். இனிமே இந்த மாதிரி தப்பை யாரும் செய்ய நாம அனுமதிக்க கூடாதுன்னு, இந்த மாதிரி அனுபவம் யாருக்கும் வரக்கூடதுடான்னு சொல்லிகிட்டே, அடக்க முடியாம அவன் கண்ணுல வந்த கண்ணீரை துடைத்தான்.
கடையிலிருந்து வேலுவும், ராமுவும் விளையாட்டு மைதானத்தை நோக்கி செல்லும் போது, சில பெரிய மனிதர்களுடன், மட்டைய தூக்கிட்டு ஓடின ரவியும், மற்ற பசங்களும் வந்துட்டாங்க. நடந்ததை எல்லாம் அவர்களிடம் சொல்லி திரும்பி போகும் போது வேலு , மட்டைய தூக்கிட்டு ஓடின ரவியை பார்த்து முறைச்சிகிட்டே ஏண்டா இப்படி பண்ண, இனிமே இப்படி எல்லாம் பண்ணாதடா என்று சொன்னான். ரவியும் தவறை உணர்ந்தவனாய் தலை கவிழ்ந்தான்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து, ஊருக்கு போயிருந்த பார்த்திபன் திரும்பி வந்தான். வேலுவிடம் நெருங்கி வந்து, என்ன நண்பா பொங்கலுக்கு புது பேட் வாங்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தோம். பந்தை ஓங்கி அடிச்சா பறக்கிறா மாதிரி இரண்டு பேட் வாங்கிடுவோம், என்னைக்கு போகலாம்னு சொல்லு என்று பார்த்திபன் வேலுவை பார்த்து கேட்கவும். , வேலு அவன் கன்னத்திலே ஒரு அறை விடறதுக்கும் சரியாக இருந்தது. நண்பேண்டா! நண்பேண்டா!
டிஸ்கி: எனக்கு இந்த மாதிரி கதை எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. என்னுடைய எழுத்து நடை பற்றி கமெண்ட்ஸ் மூலமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.
7 comments:
அடடே,நல்லாருக்கே,இதை தினமலர் வாரமலர்க்கு அனுப்புங்கோ
இது கதையோ உண்மை சம்பவமோ! ஆனால் நல்லா விவரிச்சிருக்கீங்க. அந்த வயசு பசங்களோட மனநிலை பேச்செல்லாம் மிகச் சரியா இருக்கு வாழ்த்துக்கள்!
//கடைக்காரன் அசர்ற நேரமா பார்த்து ஒரு பந்தை ஆட்டைய போடறதுல அவன அடிச்சிக்க ஆளே கிடையாது. //
எல்லா கேங்குளையும் இப்படி ஒருத்தர் இருக்கார் ..!!
நல்லா இருந்தது...
எழுதி முடித்ததும் ஒரு முறை வாசிக்கவும். எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம்
அவன் போனால் தான் ஒரு பந்து வாங்க வேண்டிய காசுல இரண்டு பந்து வாங்கிட்டு வருவான்//
கெட்டிகார பயபுள்ள
பதிவு சூப்பரா இருக்கு
தங்கள் கருத்துக்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி நண்பர்களே.
Post a Comment