சிலர் மிக மிக நன்றாகப் படிப்பார்கள். நிறைய மதிப்பெண்கள் எடுப்பார்கள். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகமாட்டார்கள். ஆனால் சிலர் சுமாராகப் படிப்பார்கள். எல்லாரிடமும் கலகலவென்று பேசுவார்கள். ஏதோ தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூக்களில் தேர்வாகி வேலைக்குப் போய்விடுவார்கள்.
""இது ஏன்?'' என்று ராஜபாளையத்தில் "அட்மையர் பெர்சனாலிட்டி ஸ்பாட்' என்ற பெயரில் ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை அளித்துவரும் பவித்ரா ராமிடம் கேட்டோம். அவர் சொன்னதிலிருந்து....
""மாணவர்களை மட்டுமல்ல, மனிதர்களை நாம் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடலாம். கூச்ச சுபாவமுடையவர்கள், தயக்கமின்றிப் பழகுபவர்கள் என்று இரு பிரிவாகப் பிரித்து விடலாம்.
மாணவர்களில் கூச்ச சுபாவமுடையவர்கள் எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருப்பார்கள். பிறரிடம் சகஜமாகப் பேசிப் பழகமாட்டார்கள். அப்படியே பேசும்படி நேர்ந்துவிட்டால் ஏதோ ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு ஓடிவிடுவார்கள்.
தனியாக இருக்கும்போது பாட்டுக் கேட்டுக் கொண்டோ, கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து கொண்டோ இருப்பார்கள். தானுண்டு தன் புத்தகங்களுண்டு என்று இருக்கும் இவர்கள், பிறரிடம் பேசுவதற்கே பயப்படுவார்கள். ஏதாவது தப்பாகப் பேசிவிடுவோமா? என்று நினைப்பார்கள். அதிலும் மாணவிகளாக இருந்தால் இன்னும் கூச்சப்படுவார்கள். பாடம் தொடர்பான எல்லாவற்றிலும் இவர்களை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது.
செய்முறைத் தேர்வுகளில் கூட நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் சரியாகப் பதில் சொல்லமாட்டார்கள். பதட்டப்படுவார்கள். இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்குத் தவறாகப் பதில் சொல்லிவிடுவோம் என்ற நினைப்பிலேயே தவறாகப் பதில் சொல்லிவிடுவார்கள்.
எவ்வளவுதான் நன்றாகப் படித்திருந்தும், எவ்வளவுதான் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தும் கடைசியில் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாமல் மனம் இடிந்து போய்விடுவார்கள். ஆனால் எல்லாரிடமும் தயக்கமின்றிப் பழகும் மாணவர்கள் படிப்பிலோ வெகு சுமார்தான். இன்னும் சொல்லப் போனால் தேர்வுக்கு முதல் வாரம் வரை பாடப் புத்தகங்களைக் கண்ணிலேயே பார்த்திருக்கமாட்டார்கள். கடைசி நேரத்தில் மிகவும் குறைந்த அளவு பாடங்களைத் தேர்வு செய்து படித்து, தேவையான மதிப்பெண்களை எடுத்துவிடுவார்கள். இதில் சில மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் கூட எடுத்துவிடுவார்கள்.
ஆனால் படிப்பைத் தவிர, பிறவற்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்களேன். நாக்கு நுனியில் பதில்களை வைத்திருப்பார்கள். இலக்கியம், அரசியல், விளையாட்டு, கலை, சினிமா, கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் என்ற எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள். புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமிருக்கும்.
இதனால் பொது அறிவு அதிகமாக இருக்கும். எல்லாரிடமும் கலகலவென்று பேசிப் பழகுவதால் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல விவரங்கள் எப்போதும் இவர்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். அதனால் யாரிடமும் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசுவதில் இவர்களுக்குத் தயக்கமெதுவும் இருக்காது.
எனவே கேம்ப்பஸ் இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்குத் தைரியமாக எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்கள். வேலை வாய்ப்பையும் எளிதில் பெற்றுவிடுவார்கள். நான் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மாணவர்களுக்குப் பலவிதமான ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறேன். என்னுடைய பயிற்சிமுறை நாடக வடிவிலானது.
கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நான்தரும் பயிற்சிகள் வித்தியாசமானவை.
கூச்ச சுபாவமுள்ள மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவில் உள்ளவர்களை வேலை தருபவர்களாக நடிக்கச் சொல்வேன். இன்னொரு பிரிவில் உள்ளவர்களை வேலை தேடிச் செல்பவர்களாக நடிக்கச் சொல்வேன்.
வேலை தருபவர், தனக்கு - இந்த வேலைக்கு - இந்த மாதிரியான தகுதிகள் உடைய நபர்கள் - தேவை என்ற முடிவுடன் வேலைக்கான நபரைத் தேர்வு செய்வார். அதை வேலை தருபவர்களாக நடிப்பவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி என்ன கேள்விகள் கேட்பதென்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அதுபோல வேலை தேடிச் செல்பவர் தனக்கு இந்த இந்தத் தகுதிகள் உள்ளன, வேலை தருபவரின் தேவைக்கேற்ற திறமைகள் இவை இவை என்னிடம் உள்ளன என்று தன்னைப் பற்றிய தன் மதிப்பீடு செய்து கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்படி கூறுவேன்.
நாடக வடிவிலான இந்த நேர்முகத் தேர்வு நடந்து, சிறிது நேரம் கழித்து, வேலை தேடிச் செல்பவர் வேலை தருபவராகவும்,வேலை தருபவர் வேலை தேடிச் செல்பவராகவும் மாறி நடிப்பார்கள்.
இந்த நாடக வடிவிலான பயிற்சி முறையின் மூலம் வேலை தேடிச் செல்பவர், வேலை தருபவர் ஆகிய இருதரப்பினரின் தேவைகள், விருப்பங்கள், வேலை தேடிச் செல்பவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும் முறை, நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என நிறைய விஷயங்களை நடைமுறையில் தெரிந்து கொள்வார்கள். வேலைக்குச் செல்ல விரும்பும் தனக்கு உள்ள திறமைகள் போதுமா? எந்தத் திறனில் குறையுள்ளது? எவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்? என்பவை எல்லாம் இந்தப் பயிற்சியின் மூலம் கூச்ச சுபாவமுள்ள மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டுவிடும்.
இதுதவிர, நேர்முகத் தேர்வுகளில் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்பார்கள்? அறிவுத்திறனைத் தெரிந்து கொள்ள எப்படிக் கேள்விகள் கேட்பார்கள்? நேர்முகத் தேர்வில் பங்கேற்கும்போது எப்படி உடை உடுத்த வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? வேலை தேடிச் செல்பவர் தனக்குத் தேவையான சம்பளம் எவ்வளவு என்பதை எப்படிப் பணிவாக வேலை தருபவரிடம் கேட்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்களையும் இந்தப் பயிற்சிகளின் மூலம் நான் சொல்லித் தந்துவிடுவேன்.
எந்தவொரு நிறுவனமும் தனக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க, வேலை தேடி வருபவரிடம் வேலை தொடர்பான அறிவு, திறமை, நல்ல நேர்மறையான அணுகுமுறை, தன்னம்பிக்கை இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். கூச்ச சுபாவமுள்ளவர்கள் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறரிடம் பழகுவதில் உள்ள தயக்கத்தை விட்டொழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி நிச்சயம் '' என்றார்.
2 comments:
இளைஞ்ர்களுக்கு பயனுள்ள பதிவு
Doubt is the key to knowledge.
-----------------------------------
Post a Comment