Thursday, 29 July 2010

கவனம் alies Concentration

'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'

நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?

மனசே... கவனம் ப்ளீஸ்!

"மன ஒருமைப்பாடு என்பது ஒரு வகையில் நல்ல நடத்தையைக் குறிக்கும். சிதறாத கவனம் இருக்கிறவர்களிடத்தில் நல்ல குணங்களும், வெற்றி பெறுவதற்கான தகுதிகளும் அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது!" என்று ஆரம்பிக்கிறார் உளவியல் நிபுணரான கீதாஞ்சலி ஷர்மா. "நல்ல கவனம் இருப்பவர்கள் எதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியும். உள்வாங்கிக்கொண்டதைச் சிந்தித்து அதன் மூலம் கிடைக்கின்ற காரணங்களை வைத்துக்கொண்டு சூழ்நிலைகளைச் சமாளித்துவிடுவார்கள்.

மன ஒருமைப்பாடு சமநிலையில் இல்லாவிட்டால், தங்களால் எது செய்ய முடியும், எது செய்ய முடியாது என்று வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. எந்த நேரத்தில் எதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாததால் மனது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.

உதாரணமாக, வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கலாம். ஆனால், உங்கள் மனம் நேற்று பார்த்த திரைப்படத்தில் லயித்திருக்கும். உங்கள் மேலதிகாரி உங்களிடத்தில் முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கண்கள் அறையை அளந்துகொண்டு இருக்கும். நீங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கைகள் வேறு எதையோ கிறுக்கிக்கொண்டு இருக்கும். இங்கே கவனம் எதிலும் பதியவில்லை. ஒப்புக்கு இருக்கிறீர்கள். இது ஒரு வகை.

உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டைக் கேட்கிறீர்கள். உங்களை மெய்மறந்து அந்த வரிகளை முணுமுணுக்கிறீர்கள். யார் கூப்பிட்டாலும் உங்கள் காதில் விழுவது இல்லை. சேனலில் பரபரப்புச் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கும்போது, 'அவ போட்டிருக்கிற செயின் ரொம்ப நல்லாருக்குல்ல!' என்று கேட்கிறீர்கள். இங்கே உங்கள் மனம் ஒன்றில் மட்டும்... குறிப்பாக, உங்களுக்குப் பிடித்த ஒரு காரியத்தில் மட்டும் கவனம்கொண்டு இருக்கிறது. இது இன்னொரு வகை!

இந்த இரண்டு வகைகளிலும் அடிப்படை விஷயம் ஒன்றுதான். ஆனால், அது அமைந்திருக்கிற சூழ்நிலை, செயல்பாடுகள் வேறு வேறு. கான்சன்ட்ரேஷன் எனும் 'மன ஒருமைப்பாடு' வெறும் கவனித்தல் சார்ந்து இயங்குவது அல்ல. ஒரு செயல் செய்யப்படுகிற இடம், காலம், மனிதர்கள் ஆகியோரும் முக்கியம். அவற்றை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்.

இப்போது மேற்சொன்ன இரண்டு விஷயங்களை வேறு விதத்தில் காண்போம். வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், பேராசிரியர் பாடம் எடுக்காமல் உங்கள் 'ஆளை' செமினார் எடுக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் கவனம் முழுக்க அவர்கள் மீதே பதிந்திருக்கும் இல்லையா? இங்கு உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயமும் பிடிக்காத ஓர் அம்சமும் இணைந்திருக்கையில் நீங்கள் வெறுக்கும் ஒரு செயல் இனிமையாக இருக்கிறது. அதனால் கவனம் ஓர் இடத்தில் மட்டும் இருக்கிறது. அந்தக் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி. அவரின் அழகிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ இருக்கலாம். அவர் நடத்துகிறார் என்பதாலேயே உங்களுக்குப் பாடம் கவனிக்க விருப்பம் இருக்கலாம்.

உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டை மெய்மறந்து பாடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது என்ன செய்வீர்கள்? இரண்டிலும் கவனம் செலுத்தியபடியே இருப்பீர்கள். காரணம், இரண்டும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள். இங்கே கவனம் இரண்டிலும் சரிபாதியாகச் சிதறுகிறது. இதை 'ஸ்காட்டர்ட் திங்கிங்' என்பார்கள்.

நிமிடத்துக்குப் பல ஆயிரம் சிந்தனைகள் நம் மூளையில் தோன்றி மறைவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி இருக்கையில் ஏதேனும் ஒரு காரியத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். இரட்டைக் குதிரை சவாரி செய்யலாம்தான். ஆனால், பாதுகாப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இலக்கை அடைவதும் முக்கியம். தியானம், யோகா போன்ற சில பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் திட்டமிடுதல் மூலமும் நம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்!" என்கிறார் கீதாஞ்சலி ஷர்மா.

மனசே... நீ ஒரு மந்திரவாதி!

"தினமும் படிக்கும் பக்க அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து பக்கங்கள் அதிகமாகப் படியுங்கள். அல்ஜீப்ரா கணக்குப் பாடத்தில் தினமும் போட்டுப் பார்க்கும் கணக்கு அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து கணக்குகள் வொர்க்-அவுட் செய்யுங்கள். ஜிம்மில் கொஞ்சம் கூடுதலாக புல்-அப்ஸ் எடுங்கள். இவை மனதை ஒருமுகப்படுத்த உதவும் அடிப்படைப் பயிற்சிகள்!" என்று உற்சாகப்படுத்துகிறார் அஸ்வின். இவர் கல்லூரி மாணவர், கார்ப்பரேட் ஊழியர் களுக்கு 'மன மேம்பாடு' பயிற்சியளித்து வரும் 'வின் டிரெய்னிங்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்.

"எப்படி ஒரு விளையாட்டு வீரர் தொடர்ந்து பயிற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டே இருந்து தன் சாதனை எல்லைகளை நீட்டித்துக்கொள்கிறாரோ, அதே போல மனதுக்கும் சில பயிற்சிகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரண்டு விநாடிகள் கவனமாக இருக்கும் மனம், அடுத்த சில மைக்ரோ நொடிகளில் வேறு ஒன்றுக்குத் தாவிவிடும். ஆனால், தொடர் பயிற்சிகள் மூலம் 'இரண்டாவது மனதை' அடைந்துவிடுவீர்கள். அப்போது உங்கள் மன ஒருமைப்பாடு, கவனம் இன்னும் அதிகமாகும்!" என்பவர் அதற்கென சில பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார்.

ஆப்பிள் அல்லது பென்சில் அல்லது உங்கள் குழந்தையின் போட்டோ இப்படி ஏதேனும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஓர் அமைதியான அறையில் அந்தப் பொருட்களை உங்கள் கண் முன்வைத்து அதையே ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு உற்றுப் பார்க்கவும். அப்படிப் பார்க்கும்போது கண்கள் மட்டும் அங்கேயே நிலைகுத்தி இருக்கும். மனம் வேறெங்கோ அலைந்துகொண்டு இருக்கும். மீண்டும் உங்கள் மனதை அதே பொருளின் மீது இழுத்து வாருங்கள். மீண்டும் மீண்டும் இதைச் செய்வதன் மூலம் மனம் எங்கே இருந்தாலும் அதை இப்போதைய, இந்த நிமிடத்தில் உங்களால் நிலை நிறுத்த முடியும்.

'இந்த செயலை என்னால் முடிக்க முடியுமா?' என்று உள்ளுக்குள் சந்தேகம் தோன்றியவுடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் படம் பார்ப்பது! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்பும் நீங்கள் படம் பார்க்க வேண்டும். ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் ஓடும் படம் அல்ல. உங்கள் மனத் திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டிய படம். சந்தேகமோ, குழப்பமோ, நம்பிக்கை இழந்துபோகிற சமயங்களிலோ நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை மனத்திரையில் காட்சிகளாக ஓட விடுங்கள். எப்படிச் செய்தால் இது சரியாக வரும், அந்தச் செயலை முடிக்க முடியும் என்பது போன்ற விளக்கங்கள் இதில் தெரிய வரும்.

ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியாவது சிந்தியுங்கள். அடுத்த வாரம் தோழியை சினிமாவுக்குக் கூட்டிப் போவது, வோடஃபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரம் - இப்படி எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். அந்த சிந்தனை ஆரம்பிக்கிற நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். அதே சிந்தனை எந்த இடத்தில் முடிந்து இன்னொரு சிந்தனை ஆரம்பிக்கிறதோ அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த நேர இடைவெளிதான் எவ்வளவு நேரம் நம்மால் ஒரு நினைவில் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை உணர்த்துவது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்யும்போது ஒன்றின் மீது கவனம் செலுத்துகிற நேரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உணர்வீர்கள்!

'சும்மா இருப்பதே சுகம்' என்பது சித்தர்கள் வாக்கு. ஓர் அமைதியான அறையில் ஒரு நாற்காலி போட்டு அமருங்கள். அப்படியே 10 நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். உடலில் தன்னிச்சையாக எந்த ஓர் அசைவையும் ஏற்படுத்தாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். இயல்பாக, ரிலாக்ஸ்டாக இருங்கள். அதற்காக, 'ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கிறேன் பேர்வழி' என்று உங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம். இதனை தீவிரமான பயிற்சியாகச் செய்துவந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் உங்களால் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்த முடியும்.

செய்தித்தாள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வந்திருக்கும் கட்டுரையைப் படிக்கவும். படித்து முடித்தவுடன் எவ்வளவு வார்த்தைகள் அந்தக் கட்டுரையில் இருந்ததோ அவற்றில் சிலவற்றையாவது ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிகிறதா என்று முயற்சியுங்கள். அப்படி உங்கள் நினைவில் இருக்கும் சில வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதவும். இப்போது மீண்டும் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். முடித்தவுடன் அதை எழுதவும். முன்பைவிட இரண்டு மூன்று வார்த்தைகள் கூடுதலாகி இருந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை மட்டுமல்லாமல் நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.

ஒரு செயலைச் செய்துகொண்டு இருக்கும்போது தலையைச் சொறிவது, விரல் நக அழுக்குகளை எடுப்பது, பேனாவை உதட்டில் உருட்டி விளையாடுவது போன்ற தேவை இல்லாத அசைவுகளைத் தவிர்க்கவும். நேரம் மிச்சமாவதுடன் கவனமும் அதிகரிக்கும்.

முழுக் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது உங்கள் மனதில் வேறு ஏதேனும் எண்ணங்கள் தோன்றினால், உடனே அதை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு, 'இந்தச் செயலை... இந்தத் தேதியில்... இத்தனை மணிக்குச் செய்ய வேண்டும்' என்று எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் திட்டங்களை வகுத்ததுபோலவும் இருக்கும், உங்கள் கவனம் சிதறாமலும் இருக்கும்.

இவை தவிர, எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதில் ஏனோதானோ என்று இல்லாமல், உங்களின் முழு ஈடுபாட்டையும் செலுத்துங்கள். காரணம், ஈடுபாடு இல்லாமல் போனால், மன ஒருமைப்பாடு வெறும் கனவு மட்டுமே!

"அர்ஜுனா! உன் கண்களுக்கு அந்தப் பறவை தெரிகிறதா?" என்று துரோணாச்சாரியார் கேட்க, "இல்லை... எனக்கு அந்தப் பறவையின் கண்கள் மட்டுமே தெரிகின்றன" என்றான் அர்ஜுனன். "அப்படியானால் அம்பைச் செலுத்து!" துரோணரின் கட்டளை காற்றில் கரையும் முன் அம்பை எய்தினான். குறி தப்பவில்லை.

ஆம் நண்பா... முழுக் கவனத்துடன் எய்தினால், வெச்ச குறி தப்பாது மாமூ!

உணவு... மனம்... கவனம்!
"ருசியான உணவுகள் என்பதைவிடவும் ஆரோக்கியமான உணவுகள்தான் முக்கியம். அதற்காக தீவிரமான பத்தியம் இருக்கத் தேவை இல்லை. சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் மேற்கொண்டால் போதும்!" என்று உணவுப் பழக்கங்கள் பக்கம் கவனம் திருப்புகிறார் டயட்டீஷியன் பூங்கோதை.

"காலை உணவுக்கு புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைக் காலையில் சாப்பிடுவது மிகவும் மந்தமான மனநிலையைத் தரும். மதியமும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். 'வெள்ளை நிற' உணவுகளான அரிசிச் சாதம், சர்க்கரை, பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு சாலட், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த உணவுகளை எடுக்கும்போது எல்லாம் உங்களுக்கு மந்த நிலை ஏற்படுகிறதோ அந்த உணவுகளைத் தவிர்ப்பது நலம்.

காபி அருந்துவதைத் தவிர்த்து டீ அருந்தலாம். ஆனால், அதுவும் மிதமிஞ்சிப் போகக் கூடாது. ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளை அதிகம் உண்பது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளையும் உட்கொள்ளலாம்.

மதியம் சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடுவதில் தவறு இல்லை. ஆனால், அதுவே நீண்ட நேரத் தூக்கமாக மாறிவிடக் கூடாது. அவ்வப்போது நடப்பது, சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பகல் நேர மந்தநிலையைச் சமாளிக்கலாம். ஆர்டிஃபீஷியல் கலரிங் உள்ள உணவுகளைத் தவிர்த்து, தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலமாக மனதை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம். கவனமும் மேம்படும்!" என்கிறார் பூங்கோதை!

நன்றி விகடன்....

மகிழ்ச்சியாக இருப்போம் - வெ.இறையன்பு

நமது மகிழ்ச்சிக்கு மாபெரும் தடையாக இருப்பது நமது கடந்த காலம் பற்றிய சிந்தனைகளே! அவற்றை மூட்டையாகக் கட்டி நம் மேல் ஏற்றிக் கொண்டு, இறக்கி வைக்கமுடியாமல் இம்சைக்கு உள்ளாகிறோம்.

நண்பர் ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்போதுகூட, 'நேற்று இவர் நம்மிடம் எரிச்சலுடன் நடந்துகொண்டாரே?' என்ற கடந்த கால நினைவு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறது. அவரோடு நம்மால் சகஜமாகப் பழகமுடிவதில்லை. செயற்கையான பிளாஸ்டிக் புன்னகையுடன் மனிதர்கள் வாழ ஆரம்பித்தால், வாழ்க்கை வறண்டு விடும்.

மகிழ்ச்சியுடன் மனிதன் வாழ வேண்டும் என்பதற்காகவே, மறதியை நமக்கு வரமாக அளித்திருக்கிறது இயற்கை. ஆனால், நினைவாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளில் அந்த வரத்தைத் தொலைத்துவிட்டு, தேவையானவற்றை வழியவிட்டு, தகுதியற்றவற்றைத் தக்கவைத்துக் கொள்கிறோம். விலங்குகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாட காரணம், அவை நிகழ்காலத்தில் மட்டுமே நீடித்திருக்கின்றன. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் ஏற்படுத்திக்கொள்கிற இணக்கமே, நமது மகிழ்ச்சியை மெருகேற்றுகிறது. வன்மம் நிறைந்த மனத்துடன் இருப்பவர்கள், மாநகராட்சி குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இருப்பதைப் போன்ற மனநிலையுடன் இருப்பார்கள்.

சூழலைச் சுகந்தமாக்குபவர்களால் மட்டுமே வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொள்ளமுடியும். 'நேற்று நம்மிடம் கோபப்பட்ட மனிதன் வேறு; அவனிடம் வருத்தத்தை வரவு வைத்த மனிதன் வேறு' என்கிற புரிதல் வந்தால், மகிழ்ச்சி மட்டுப்படுவ தில்லை. வருத்தம் வரும்போதெல்லாம், உடனே அதை வடிகாலாக்குகிற வாழ்க்கை முறை முன்பு இருந்தது. குடும்பம் அதற்கு வழிவகுத்தது. யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், நமது சோகங்கள் பஸ்பமாகிவிடும் அனுசரணை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான வாழ்வில் பகிர்தல் குறைவு. 'உனது சோகம் உன்னுடன்! என்னுடையதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பதே இன்றைக்கு உறவுகளுக்குள் இருக்கும் மேம்போக்கான, மிக மெல்லிய உறவு இழைகள். எப்போது வேண்டுமானாலும் இற்றுப் போகிற நிலையில் ஊசலாடும் உறவுகளில், உண்மை ஊஞ்சலாட மறுக்கிறது.

இன்றைக்கு எல்லாக் கதவுகளும் சாத்தப்பட்டே இருக்கின்றன. நமது உலகே சுருங்கிப்போன சூழலில், கடந்த காலத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இறக்கி வைக்க முடியாமல் தவிக்கின்ற மனநிலையில், ஆனந்தக் குழந்தைகள் ஓடிவரும்போது, அவற்றை அள்ளி எடுத்து அரவணைக்க முடியவில்லை.

நான் படித்த ஒரு சம்பவம்: அரண்மனையையட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான். வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.

''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்

துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக. அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.

கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன், மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால், பழைய துணி களை எங்கேயும் வைக்கமுடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது. அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான். ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது. அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.

அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர் களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு. மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர். இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை. மகிழ்ச்சியாக இருப்போம்; அப்போது காரணங்கள், தாமாகத் தோன்றி தோரணங்களாகித் துணை நிற்கும்.

நன்றி விகடன்....

Thursday, 15 July 2010

படிப்பில் பிரச்னையா? உங்கள் குழந்தைக்கு மார்க் போடுங்கள்

பெற்றோர்களே உங்கள் குழந்தைக்கு படிப்பில் பிரச்னை இருக்கிறதா? தெரிந்து கொள்ள கீழே உள்ள வினாக்களுக்கு சரியாக பதில் அளியுங்கள்.

1. ஆங்கில எழுத்துக்கள் (A toZ/​a to z) தமிழ் எழுத்துக்கள் எழுதுவதில் சிரமம் இருக்கிறதா -- ஆம்/ இல்லை
2. ஆங்கில எழுத்துக்களில் உள்ள பெரிய/ சிறுய எழுத்துக்களில் ​(A to Z/​ a to Z)​​குழப்பம் இருக்கிறதா? (b/​d) எழுத்துக்களை எழுதும்போதும், படிக்கும்போதும் குழப்பம் இருக்கிறதா-- ஆம்/ இல்லை.
3. கரும்பலகையிலிருந்து பார்த்து எழுதுவதில் சிரமமா? ---ஆம்/ இல்லை

4. வீட்டுப் பாடங்கள் செய்வதில் சிரமமா?-- ஆம்/இல்லை

5. ஆங்கிலம்/ தமிழ் / இந்தி ஆகிய பாடங்களில் அதிக எழுத்துப் பிழைகள் வருகிறதா?
 (e.g.​ knife as nife,​​ apple as ap பள்ளிக்கூடம் என்பது பல்குடம் போன்றவை) -- ஆம்/ இல்லை


6. படிப்பதிலும், எழுதுவதிலும் வெறுப்பாக இருக்கிறார்களா? -- ஆம்/இல்லை.

7. கணிதப் பாடத்தில் அதிக கவனக் குறைவான தவறுகள் செய்கிறார்களா
(கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) -- ஆம்/ இல்லை.

8. கண்ணாடியில் பார்ப்பதை போன்று எழுத்துகளை மாற்றி எழுதுகிறார்களா
(e.g.​ m as w,​​ p as q,​​ n as u;​ 15 as 51)---- ஆம்/ இல்லை.
9. b -யை க் யாகவும் அல்லது சொற்களை முன்னுக்கு பின் முரணாக படிக்கிறார்களா?
​(e.g.​ on ​ as no) -- ஆம்/ இல்லை.
10. நீண்ட பதில்கள்/ கட்டுரைகள் எழுதுவதில் சிரமம் இருக்கிறதா? -- ஆம்/ இல்லை.


இந்த கேள்விகளில் 5 வரை ஆம் என்று பதில் இருந்தால்- அதாவது உங்கள் குழந்தைக்கு 5 குறைகள் இருந்தால் பெரிதாக கவலைப்பட தேவையில்லை. 6 முதல் 7 குறைகள் இருந்தால் கொஞ்சம் பாதிப்பு உள்ளது. இது தானாக சரியாக வாய்ப்புள்ளது. 7க்கு மேல் பாதிப்பு இருந்தால் முறையான பயிற்சி மூலம் இந்தக் குறைகள் களையப்பட வேண்டும்.


இதுகுறித்து உரிய ஆலோசனைக்கு பட்ங் ஏங்ப்ல் இட்ண்ப்க் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி- 044 28275747.

Tuesday, 29 June 2010

எப்போதும் இன்புற்றிருக்க - திரு.வெ.இறையன்பு.

கிழ்ச்சி, வெளியே தெரிகிற பொருளல்ல. நிலைத்த தியானத்தில் இருக்கும் சலனமற்ற புத்தரின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி ஒரு வகை; வயிறு குலுங்கச் சிரிக்கும் 'சிரிக்கும் புத்தரின்' மகிழ்ச்சி ஒரு வகை. இரண்டையும் ஒரே புள்ளியில் இணைப்பதே இன்பத்தின் ரகசியம்.
'அழகான பொருள்கள் எப்போதும் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கின்றன' என்கிறார் கீட்ஸ். உண்மை அது மட்டுமல்ல; 'மகிழ்ச்சியாக இருக்கும்போது, பார்க்கும் பொருள்கள் எல்லாம் அழகாகிவிடுகின்றன' என்பதுதான் அந்தக் கவிதையை நிறைவு செய்யமுடியும்.

சில நேரங்களில்... மிக அழகான பெண்ணுக்குச் சிறிதும் பொருந்தாத மணமகன் அமைந்திருப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுவோம். விசாரித்தால், அது காதல் திருமணம் என்கிற அதிர்ச்சியான செய்தி கசியும். 'இந்தப் பெண் அந்த ஆணுக்கு எப்படி அறிமுகமானாள்... எப்படி அவன்மீது காதல் கொண்டாள்?' என்று மண்டையைக் குழப்பிக் கொள்வோம். வேறொன்றுமில்லை... 'இவ்வளவு அழகான பெண் நமக்குக் கிடைக்கவில்லையே... நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்!' என்கிற ஒரு பொறாமைதான்.

அந்தப் பெண், மிக மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் அந்த ஆணைச் சந்தித்திருக்க வேண்டும்; அது, அவளை அந்த ஆண் மகனை நோக்கி ஈர்த்திருக்கவேண்டும். மனம் நிறைந்திருக்கும்போது வீசும் மணம், உடனடி யாக மனதில் பதிந்துவிடுகிறது. அடுத்தமுறை அந்த நறுமணத்தை நாசி நுகர நேர்ந்தால், முதல்முறை நிகழ்ந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.
எல்லாம் இருந்தும் வெறுமையாய் உணர்பவர்கள் இருக்கிறார்கள்; எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். சிரித்தால் பல் வழியே பணம் நழுவிவிடுமோ என்று நடுங்கிச் சிரிக்காமலேயே முகத்தை எப்போதும் உர்ரென்று வைத்திருக்கும் பணக்காரர்களும் உண்டு; 'எங்களிடம் இழக்க எதுவுமில்லை' எனக் களித்திருக்கும் ஏழைகளும் இருக்கிறார்கள்.
கை- கால்கள் அற்ற ஒருவர், சகலநேரமும் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவரிடம் 'கஷ்டமில்லையா?' எனக் கேட்டதற்கு, 'இல்லை சார்! அதுதான் பாட முடிகிறதே' என்று அவர் பதில் சொன்னதாகவும், ஜெய மோகன் அண்மையில் உடல்நலம் பற்றி எழுதிய ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். வெகுநேரம் அதை அசைபோட்டேன்.
மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்ததும், உலகமே தன் காலடியில் கிடப்பதைப்போல் இறுமாந்திருப்பவர்கள் உண்டு. அந்த நேரத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு, 'ஆணவத் துடன் நடந்துகொள்கிறார்களோ?' என்றுகூட நினைக்கத் தோன்றும். ஆனால், ஐஸ்கிரீமைப் பார்த்ததும் துள்ளிக் குதிக் கும் குழந்தையின் மனநிலை அது என்பது முதிர்ச்சி அடைந் தவர்களுக்குத் தெரியும். வெளியே ததும்பும் மகிழ்ச்சியைவிட உள்ளே ஊறும் நிறைவு இனிமையானது. மகிழ்ச்சியை நெறிப் படுத்தத் தெரிந்தால், எந்த நொடியிலும் கலங்காமல் வாழ முடியும். ஆனால், சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் எகிறிக் குதிப்பவனுக்கு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எலும்பு முறியலாம்!



அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்...

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற இளைஞன் ஒருவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவன் எதிர்பார்க்காத ரேங்க். அவனுக்குத் தனது மகிழ்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரியவில்லை. புத்தி சுவாதீனமற்றவனைப் போல... தனக்குத்தானே பேசிக்கொண்டான்; சிரித்துக் கொண்டான். வீட்டார் பயந்துபோய், வெளியூரில் இருந்த புகழ்பெற்ற மருத்துவரிடம் அவனை அழைத்துச் சென்றனர். அவனைப் பரிசோதித்த மருத்துவர், ''உன் நோயைக் குணப்படுத்துவது கடினம். இன்னும் இரண்டே வாரங்களில் நீ இறந்துவிடுவாய்'' என்றார். மேலும், ஓர் ஊர் பெயரைக் குறிப்பிட்டு, ''அங்கே என் நண்பர் ஒருவர் இருக்கிறார். எதற்கும் அவரைப் போய்ப் பார். ஒருவேளை, அவரால் உன் நோயைக் குணப்படுத்த முடியலாம்'' என்று, பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார்.

இளைஞனுக்கு மகா அதிர்ச்சி! அங்கேயே தளர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான். அவனு டைய மகிழ்ச்சியெல்லாம் ஆவியாகிப் போனது. இரண்டு மணிநேரம் கழித்து, மெள்ள எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் மருத்துவர் குறிப்பிட்ட அந்த நண்பரைச் சந்தித்து, கடிதத் தைக் கொடுத்தான்.

கடிதத்தைப் பிரித்துப் படித்தவர், சிரித்தார். 'இந்த இளைஞன் ஆனந்த மனநிலையில் எல்லையைத் தாண்டிவிட்டான். அவனுடைய கட்டுக்கடங்காத மகிழ்ச்சி, நிறைய மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இதயத்தைப் பாதித்துவிட்டது. எந்த மருந் தாலும் குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டான். விரைவில் அவன் இறந்துவிடுவான் என்று சொல்லி, அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறேன். இந்த அதிர்ச்சி, அவனுடைய அதிகப்படியான மகிழ்ச் சியைக் குறைத்து, இதயத்தைச் சம நிலைக்குக் கொண்டு வரும் என நம்புகிறேன். உன்னிடம் வருவ தற்குள் அநேகமாக அவன் சரியாகியிருப்பான்.'

அந்தக் கடிதத்தில் இதுதான் எழுதப்பட்டிருந்தது. அதேபோலவே, அந்த இளைஞன் ஒரு நிதானத்துக்கு வந்து, குணமானான்.
மகிழ்ச்சியை ஒரு கட்டுக்குள் வைத்து நெறிப்படுத்துபவனால், அதை நீட்டிக்கச் செய்ய இயலும். வாழ்வின் வாய்ப்புகளே அதற்கு வழிவகுக்கின்றன. பெரிய வெற்றி வரும்போது, ஒரு சின்ன தோல்வியும் நமக்கு ஏற்படுகிறதல்லவா! இது... கோப்பையைப் பெற்றுக் கொண்டு பெருமிதத்துடன் ஓடிவருபவனின் காலில் கல் இடறிக் காயம் உண்டாவதைப்போல், நமது மகிழ்ச்சி மிதமிஞ்சிவிடாமல் ஒரு கட்டுக்குள் வைத்து, உடலையும் உள்ளத்தையும் சீராக்கவே! இதற்காக நாம் விதியை வீதிக்கு இழுக்க வேண்டியதில்லை.

நான் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில், உலகின் மீது உட்கார்ந் திருக்கும் மனநிலையுடன் வீட்டுக்கு வந்தேன். எனக்கு முன் ஒரு கடிதம் வந்து காத்திருந்தது. அதில், 'உங்கள் மார்புச் சுற்றளவு, ஐ.பி.எஸ். பணிக்கு உங்களைத் தகுதியற்றவராக ஆக்கு கிறது' என்ற வாசகங்கள்!
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத வன், துயரத்தில் சுருங்கிப்போவது இல்லை. சுனாமியின்போது, கடல் பொங்குவதற்கு முன் உள்வாங்கியதாகக் கரையில் இருந்த மீனவர்கள் சாட்சி சொல்கின்ற னர். அலைகள் வரும் பகுதி, கடலின் மேம்போக்கான பகுதி. ஆழமான பகுதி சலனமற்று இருக்கிறது.

வள்ளுவர்கூட இன்பத்துள் இன்பம் விழையாத வனைத் துன்பம் தொடர்வதில்லை எனக் குறிப்பிடு கிறார். இன்று நிறையப் பேர் குடும்பத்துடன் குதூகல மாக இருப்பதாகக் காட்டிக்கொள்கின்றனர். பலரும் பார்க்கும்படி கைகோத்துக்கொண்டு போகிற தம்பதியரெல்லாம் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள் என்று எண்ண வேண்டியதில்லை; அமைதியாக இடைவெளி விட்டுச் செல்கிற அனைவரும் மனஸ்தாபத்தில் மருள்கிறார்கள் என யூகிக்க வேண்டியதுமில்லை.

எப்போதும் இன்புற்றிருப்பவர்கள், தங்களின் சந்தோ ஷத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லா மல், மனதில் பூரணமாக நிறைந்திருக்கிறார்கள். சிரிக் கிற பல கண்களை உற்றுக் கவனித்தால், அவற்றில் நிறைவேறாத ஏக்கங்கள் ததும்பி இருப்பதைக் காண லாம்; தளும்பியிருக்கும் சிலருடைய விழிகளில், கருணையும் அன்பும் பொங்கி வழிவதைக் காணலாம். மகிழ்ச்சியில் மிதவாதியாக இருப்பவனுக்கு, ஆனந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன.

'எப்படியாவது இவனைச் சாய்த்துவிட மாட்டோமா' என இயற்கை காத்திருக்கிறது. மகிழ்ச்சியில் தன் நிலையை, இலக்கை, நெறியை முற்றிலுமாகத் தவற விடுவதே 'ஊழ்'. அதுதான் சிலப்பதிகாரத்தில் உறுத்து வந்து ஊட்டியது. ஓரிடத்தில் துரோகம், இன்னோர் இடத்தில் பழியாக இடறியது. அதனால்தான் கோவலனின் மகிழ்ச்சி எல்லை மீறியது; மாதவியின் நடனத்தை ரசித்த அவன், அவளையே ரசிக்க ஆரம்பித்தான்; சிதையவும் தொடங்கினான்.

'என் மகிழ்ச்சியை எல்லோருக்கும் தம்பட்டம் அடிக்கும் அவசியம் இல்லை' என்று எண்ணும் நிலையே ஆன்மிக மனநிலை. அப்படிப் பட்டவர்களின் அருகில் கண் மூடி சிறிது நேரம் அமர்ந்தால் போதும்; நம் மனத்திலும் இனம்புரியாத சிலிர்ப்பும், எழுச்சியும் ஏற்படும். அவர்களின் புன்னகை, நம் காயங்களை ஆற்றுப்படுத்தும்.

அதற்காக, மகிழ்ச்சியில் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பதல்ல. சின்னச் சின்ன நிகழ்வு களையும் திருவிழாவாக்கத் தெரிந்தவன், பகிர்ந்துகொள்வதையே மகிழ்ச்சியான நிகழ்ச்சி யாக மாற்றிக்கொள்கிறான். தேநீர் அருந்துவதும் திருவிழாவாகும். ஆனால், அது மேம்போக்கான கேளிக்கையாக இல்லாமல், உள்ளார்ந்த புரிதலாக நிகழும். வானத்தைப் பிடிக்கும் ஆசையில் பூமியை விட்டு விலகாத யதார்த்தமான மனப்பான்மையாக, திகழும். அடுத்தவர்களைத் துன்புறுத்தாது, அனைவரை யும் ஈர்க்கின்ற பேரின்ப நிகழ்வாக அது மலரும்.

Thursday, 29 April 2010

''நான் பாஸ்கர்சக்தி ஆனது எப்படி?''

ண் மணம் மாறா எழுத்து பாஸ்கர்சக்தியுடை யது. வாழ்வில் தவறவிடும் தருணங்களை எளிமையும் கிண்டலும் கலந்த மொழியில் எழுதிச் செல்பவர், சின்னத் திரையிலும், பெரிய திரையிலும் பரபரப்பான வசனகர்த்தா.

''தேனி பக்கம் வடபுதுப்பட்டி என் சொந்த ஊர். எட்டாம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். படிப்பில் கெட்டிக்கார மாணவன். ஆனால், அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும். வீசிங் பிரச்னை. உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் என் பிரச்னை புரிந்து கரிசனத்துடன் பார்த்துக்கொண்டனர். ஆனால், எட்டாம் வகுப்பு முடிந்ததும் வேறொரு ஊரில் ஒன்பதாம் வகுப்பு சேர வேண்டி இருந்தது. ஒரு மாதம்கூட இருக்காது. கடுமையான உடல்நல பாதிப்பு. பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டேன்.

உள்ளூரைவிட்டு தொழில் தேடி குடும்பம் வெவ்வேறு ஊர்களுக்கு மாறியது. எந்த ஊருக்குப் போனாலும் நூலகங்களைத் தேடிப்போய் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மட்டும் தொடர்ந்தது.

அப்பா திருமலைச்சாமி, விதவிதமான தொழில்கள் செய்து விதவிதமாக நஷ்டப்பட்டவர். உற்சாகமாக ஒன்றைத் துவங்கி படுதோல்வி அடை வார். ஓரிரு நாட்களில் அசராத அதே உற்சாகத்தோடு அடுத்த தொழிலை ஆரம்பிப்பது குறித்த கனவு களுடன் பேசிக்கொண்டு இருப்பார். நான் சிரிப்பு டனும் அம்மா கடுப்புடனும் அதனைக்கேட்டுக் கொண்டு இருப்போம். தனது ஒன்பதாவது தொழிலாக அப்பா விறகுக் கடை வைத்திருந்தார். அதை ஒரு வருடம் கவனித்துக்கொண்டு இருந்தேன். அந்த சமயம் கோட்டூரில் சித்தப்பா ஒரு டூரிங் டாக்கீஸ் ஆரம்பித்தார். மிகுந்த சந்தோஷத்துடன் தியேட்டரில் போய் டிக்கெட் கிழித்தேன். வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தால், என்னுடன் படித்த பையன்கள் எல்லோரும் ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தனர். நன்றாகப் படித்த ஆனால், எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத நான் தோல்வி அடைந்தவனாக உணர்ந்தேன். (என் அப்பா அப்போது சில்வர் பாத்திரங்களை வாங்கி வீட்டில்வைத்து உற்சாகமாக விற்கத் துவங்கி இருந் தார்!) தோற்றுவிடக்கூடாது என்கிற உள்ளுணர்வு உந்த, அடுத்த அக்டோபரில் நேரடியாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினேன். பாஸ். அடுத்த ஏப்ரலில் ப்ளஸ் டூ எழுதி அதிலும் பாஸ். பிறகு அஞ்சல் வழி பி.காம்., படிப்பில் சேர்ந்தேன். ஆனால், அது பிடிக்காமல் நிறுத்திட்டேன். இடையில் கிரிக் கெட், இளைஞர் மன்றம் என அந்த வாழ்க்கை ஒரு பக்கம். எல்லாவற்றுக்கும் மைய இழையாக இருந்தது இலக்கியம். தேனியில் அறிமுகமான த.மு.எ.ச.தோழர் கள் மூலமாக இடதுசாரி தத்துவமும், இலக்கியப் பரிமாற்றமும் சாத்தியமாயின. (இந்தக் காலகட்டத்தில் அப்பா செடி முருங்கைக் கன்றுகளை நாற்றுப்போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்!)

நான் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினேன். அப்பாவோ, வேலைக்குப் போனால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார். அதை மறுத்த அம்மா, 'உங்களை மாதிரி அவனும் உருப்படாமப் போறதுக்கா?' என அப்பாவை அதட்டி, என்னை கல்லூரியில் சேரச் சொன்னார். போடி சி.பி.ஏ. கல்லூரியில் பி.ஏ., இங்கிலீஷ் லிட் ரேச்சருக்கு விண்ணப்பித்தேன். எனது படிப்பு வழிப் பயணத்தைப் பார்த்து எனக்கு சீட் தர தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் எனக்காகப் பேசி சீட் வாங்கித் தந்தவர் பேராசிரியர் மோகனசுந்தரம். ஒரு வழியாக நானும் பி.ஏ., முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயில வந்தேன். அடிமனதில் எழுத வேண்டும் என்ற ஆசையும், நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ரொம்ப வருடங்கள் கழித்து 95-ம் வருடம்தான் முதன்முதலில் ஒரு கதை எழுதினேன். 'சாதனம்' என்ற அந்தக் கதை இந்தியா டுடே இலக்கிய மலரில் இரண்டாவது பரிசைப் பெற்றது. இரண்டாவது கதை எழுத இன்னொரு வருடம் ஆனது. அது இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

அதைத் தொடர்ந்துதான் விகடனில் சேர்ந்தேன். (இப்போது அப்பாவுக்கு அண்ணன் ஒரு எஸ்.டீ.டி. பூத்வைத்துக் கொடுத்திருந்தார். அப்பா முன்னிலும் உற்சாகமாக இருந்தார்!) 'ரூட் பஸ்' என்ற எனது முதல் குறுந்தொடர் விகடனில் வெளியானது. அடுத்தடுத்த வருடங்களில் நிறைய கதைகளும், சில தொடர்களும் எழுதினேன். அப்படி எழுதிய ஒரு தொடர்தான் 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்'. அந்த சமயம் அப்பாவுக்கு தொண்டையில் பாதிப்பு. புற்றுநோய் என்றார்கள். அப்பாவைப் பார்த்துக் கொண்டு ஊரில் அண்ணன்வைத்திருந்த எஸ்.டீ.டி. பூத்தையும் கவனித்துக்கொண்டு தேனியிலேயே எழுத்தாளராக ஃபார்ம் ஆகிவிடலாம் என்று நினைத்து தேனிக்குப் போய்விட்டேன். கொஞ்ச நாட்களிலேயே எனது 'ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்' கதையை மைக்ரோ தொடராக மின் பிம்பங்கள் எடுத்தது. திருமுருகன் இயக்கினார். மருத்துவ மனையில் படுக்கையில் அப்பா. அருகில் நான். அப்பா டி.வி-யில் ஒளிபரப்பான தொடரைப் பார்த்தார். என் மீது அளவு கடந்த நம்பிக்கைவைத்திருந்த அவருக்கு 'நான்என்ன வாகப் போகிறேன்' என்பதில் மட்டும் குழப்பம் இருந்தது. அந்த டி.வி. தொடரைப் பார்த்ததும் குழப்பம் நீங்கியவராக, 'பரவாயில்லேப்பா, உனக்கு இது நல்லா வரும் போலிருக்கு' என்றார். கடைசி வரை எந்தத் தொழில் தனக்கு வரும் என்பதைத் தேடிக்கொண்டே இருந்தவர் அவர்.

அந்த மைக்ரோ தொடர் முடிந்ததும் திருமுருகன் இயக்கத்தில் 'காவேரி' என்ற சீரியலுக்கு வசனம் எழுதினேன். முழுக்க முழுக்க மும்பையிலேயே ஷூட்டிங். சீரியல் நடக்கும்போது அப்பாவின் உடல்நிலை மோசமானது. என்னை வரவழைக்க வேண்டும் என்று அம்மாவும் அண்ணனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். படுத்திருந்த அப்பா சட்டெனக் கண் விழித்து, 'இப்பத்தான் போயிருக்கான். அதுக்குள்ள அவனைக் கூப்பிட வேணாம். நான் இன்னும் ஒரு வாரம் இருப்பேன்' என்றாராம். சரியாக அடுத்த வாரம் அப்பா இறந்து போனார். வாழ்வில் எந்தத் தோல்வியிலும் நம்பிக்கை இழக்காத அந்த மனிதரைத்தான் சோர்வு ஏற்படும்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறேன். என் குறித்த நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் மரணத் தருவாயிலாவது அவருக்குத் தர முடிந்ததை ஒரு பாக்கி யமாகக் கருதுகிறேன். ஒரு வாரம் கழித்து மொட்டைத் தலையுடன் மும்பைக்குச் சென்று அவரது நினைவுகளுடன் வேலையைத் தொடர்ந்தேன். 'காவேரி' முடிந்ததும் அடுத்த வேலைக்கு திருமுருகன் அழைத்தார். 'மெட்டி ஒலி' ஆரம்பம். 700-க்கும் அதிகமான எபிசோடுகள். இதற்கி டையே திருச்செல்வம் 'கோலங்கள்' ஆரம்பித்தார். அதற்கும் நான்தான் வசனம். இதோ இப்போது திருமுருகனின் 'நாதஸ்வரம்' தொடருக்கும் வசனம் எழுதுகிறேன். 2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை சன் டி.வி-யில் ஏதோ ஒரு ஸ்லாட்டில் நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

திருமுருகன் என்னை சினிமாவுக்கும் அழைத்துச் சென் றார். அவரது 'எம்டன் மகன்', 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு', சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடிக் குழு', அவர் தற்போது இயக்கிக்கொண்டு இருக்கும் 'நான் மகான் அல்ல' என்று திரைத் துறையிலும் வேலை தொடர்கிறது. தோல்விகளின்போது எல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. வெற்றிகளின்போது எல்லாம் அவரது நம்பிக்கை நினைவுக்கு வருகிறது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்த, உடல் நலமற்று மனச்சோர்வுற்று அமர்ந்திருந்த, அந்தச் சிறுவனை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். அவனை இத்தனை தூரம் அழைத்து வந்த அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்!''

நன்றி விகடன்....

Thursday, 8 April 2010

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் - கோபிநாத்

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார், 'எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயன்றால், எல்லோருக்கும் கெட்டவனாகிவிடுவாய்' என்று. உண்மைதான். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் 'சரி' சொல்பவர்கள் நிறையப் பேர்.

'சரி' சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும் 'சரி' சொல்லி வேலையை இழுத்துப்போட்டுச் செய்யும்போது அனைவரின் அபிமானத்தையும் பாராட்டையும் பெறுவதுபோலத் தோன்றலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்கிற மனோபாவத்தை எல்லோர் மனதிலும் நீங்களே விதைத்துவிடுகிறீர்கள்.

விளைவு, என்றைக்காவது ஒருநாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிறபோது, 'இவன் முன்னைப்போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும். நீங்கள் ஏற்கெனவே பல பேருக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலைகளைச் செய்ய முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும், எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்துப்போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீர்கள். இப்போது, 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்று குற்றம் சாட்டுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும்.
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க நீங்கள் எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிரா கத் திரும்பி நிற்கிறது. போதாக்குறைக்கு இவர் களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.

'சரி'யோ இல்லை 'முடியாது' என்று சொல்வதோ கண்ணையும் மனதையும் மூடிக்கொண்டு சொல்லாதீர்கள். அதனை முடிவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் 'சரி' சொல்ல வேண்டிய நிர்பந்தங்களே நமக்கு நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில், யார் எது சொன்னாலும் அவர்கள் மனசு நோகக் கூடாது என்பதற்காக 'சரி' என்று தலை ஆட்ட ஆரம்பித்தால், தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். முறையாக 'முடியாது' என்று தேவையான இடங்களில் சொல்லிப் பழகாத தால்தான், பலர் கஷ்டப்படுகிறார்கள்.

தன் உயர் அதிகாரியோ, முதலாளியோ, முடியாது என்று சொன்னால், தன்னைப்பற்றித் தவறாக நினைத்துவிடுவார் என்ற எண்ணம்தான் பல நேரங் களில் நம்மைச் 'சரி' சொல்லவைக்கிறது. 'ஏம்ப்பா, உன்னாலதான் அதைச் செய்ய முடியாதே அப்புறம் ஏன் 'சரி'ன்னு தலையாட்டிட்டு வந்தே?' என்று யாராவது கேட்டால், 'முடியாது' என்று எப்படிச் சொல்வது என்று பதில் வரும்.

உண்மைதான். முடியாது என்பதை நாசூக்காகவும், நாகரிகமாகவும் எதிரில் இருப்பவருக்குப் புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சியே நமக்குக் கிடையாதே. தலையை வலமும் இடமும் சாய்த்து நிமிர்த்தினால் வேலை முடிந்தது. 'சரி' என்று சொல்லிஆயிற்று.

நீங்கள் முடியாது என்று சொல்ல நினைத்த விஷ யத்துக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலையை எப்படி ஈடுபாட்டோடு செய்ய முடியும்? ஈடுபாடு இல்லாமல் செய்கிற வேலை எப்படி வெற்றி அடையும்? விளைவு, இரண்டாவது குற்றச்சாட்டும் உங்கள் மீது வரும். 'எல்லாத்துக்கும் சரி சொல்வாரு. ஆனா, ஒரு வேலையைக்கூட உருப்படியாச் செய்ய மாட்டாரு'.
கெட்ட பெயர் எடுக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் சொன்ன 'சரி' இப்போது உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது!

'முடியாது' என்று சொல்வதில் நமக்கு இருக்கிற இரண்டு முக்கியமான பிரச்னைகள் என்னென்ன? ஒன்று, அடுத்தவர் தவறாக நினைக்கக் கூடாது. இரண்டாவது முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

முதல் பிரச்னைக்கான பதில் ஏற்கெனவே கிடைத்துவிட்டது. இரண்டாவது பிரச்னைக்குத் தீர்வு என்ன? நாம் எல்லோரும் ஒன்றும் ராணுவத்தில் இல்லை. இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நீங்கள் 'முடியாது' என்று சொல்லவே கூடாது என எதிர்பார்க்கவும் இல்லை.
அதைவிட முக்கியமான விஷயம், அடுத்தவர் சொல்கிற அனைத்துக்கும் 'சரி' சொல்கிற ஆளாக இருக்கும்பட்சத்தில் உங்களின் சுய சிந்தனை மரத்துப் போகிறது. சுய சிந்தனை மரத்துப்போனவன் ஓர் இயந்திரம் மாதிரிதான் செயல்பட முடியும். அப்படிப்பட்ட ஒருவர் மீது முதலாளிக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ எப்படி மரியாதை வரும்?

நீங்கள் பகுத்தறியும் ஞானம் இல்லாதவர் என்பதைத் தான் எல்லாவற்றுக்கும் 'சரி' சொல்வதன் மூலம் வெளிப் படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப்போல 'முடியாது' என்று சொல்லுவது எளிதான காரியம் இல்லைதான். ஆனால், குறைந்தபட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங் கள், யோசித்துச் சொல்கிறேன்' என்று சொல்லலாம்.

இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் உலகம் உங்களின் 'முடியாது' என்று சொல்லத் தெரியாத பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. உங்களுக்குச் சம்பளம் தீர்மானிக்கும்போது, உங்களிடம் புதிய வேலைகளை ஒப்படைக்கும்போது, இப்படிப் பல தருணங்களில் 'உடனடியாக எனக்குப் பதில் சொல்லுங்கள்' என்பார்கள். காரணம், அந்த அழுத்தத்தை உங்கள் மீது திணிப்பதன் மூலம் உங்களிடம் இருந்து குறைவான விலைக்கு அதிக வேலையைப் பெற்றுவிடலாம். போதாக்குறைக்கு முடியாது என உங்களுக்குச் சொல்லத் தெரியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்தத் தருணங்களில் கொஞ்சம்கூட அச்சப்படாமல் எனக்குச் சற்று அவகாசம் தாருங்கள் எனக் கேட்கலாம். அந்த அவகாசத்தைத் தந்தால் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள் என்பதால்தான், உடனடியாகப் பதில் கேட்கிறது, கார்ப்பரேட் உலகம். அந்த நிர்பந்தத்துக்குப் பணிந்தும் பயந்தும் நீங்கள் 'சரி' என்று தலையாட்டினால், உங்களைக் குறித்து வைத்துக்கொள்வார்கள் 'இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்' என்று

பிறகு, எந்த நியாயம் இல்லாத வேலைப் பளுவாக இருந்தாலும், உங்கள் மீதுதான் சுமத்தப்படும். கடைசி வரை பொதி சுமக்கிற கழுதையாக வாழ்க்கையைத் தள்ளவேண்டி இருக்கும்.
இன்னிக்கு இருக்கிற போட்டி நிறைந்த உலகத்தில்... அவகாசம் கேட்பது, முடியாது எனச் சொல்வதெல்லாம் புத்திசாலித்தனம் இல்லை என்று தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தை நினைத்துப் பார்ப்போம். வேலை கிடைக்க வேண்டும். சம்பளம் கிடைக்க வேண்டும் அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால், நியாயமற்ற வேலைப் பளுவைத் தாங்க முடியாமல் மூன்று மாதங்களில் இன்னொரு வேலையைத் தேட வேண்டி இருக்கும்.

அதற்கு நியாயமான விஷயத்துக்கு மட்டும் 'சரி' சொல்லிவிட்டு, சரியான வேலையைச் செய்வது உத்தமம். இல்லையென்றால், அவசரத்துக்குத் தலையாட்டிவிட்டு அதன் பின்பும் 'முடியாது' என்பதைச் சொல்லவே முடியாமல் மனதும் உடம்பும் களைத்துப் போகும். வேலை தண்டனை ஆகும். மாதச் சம்பளம் வருகிறபோது ஏதோ ஜெயிலில் வேலை பார்த்ததற்குத் தரப்படுகிற 'படி' மாதிரி தெரியும். மனைவி செய்கிற 'சுபச் செலவுகள்'கூட தண்டமாகத் தோன்றும். 'நான் நாய் மாதிரிகஷ்டப் படுகிறேன். நீ ஆடம்பரம் பண்றியா?' என்று கத்த வைக்கும். குழந்தைகளை அடிக்கும். 'அவன் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கித் தரும்.
எங்கேயோ ஓர் இடத்தில் நாகரிகமாகச் சொல்லப்பட வேண்டிய 'முடியாது' சொல்லப்படாததால், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று பாருங்கள்.

நீங்கள் முடியாது என்று நினைக்கிற விஷயத்தை வெளிப்படுத்த ஆரம்ப நிலையில் ஆயிரம் வழிகள் உண்டு. அதைச் செய்ய சங்கடப்பட்டால் ஒருநிலையில் அது மனதோடு கடுமையான வார்த்தைகளாக வெளிவரும். 'என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன உங்கள் அடிமையா?' என்று கத்தவைக்கும்.

அப்படி வெளிப்படுத்த முடியாத சூழலில் தொடர்ந்து இருக்க நேரிட்டால், மன அழுத்தம் அதிகமாகி டாக்டரைப் பார்க்க வேண்டி இருக்கும். ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க வருகிற நண்பர்கள், 'எல்லாத்தையும் இப்படி இழுத்துப் போட்டு செஞ்சா அப்புறம் என்ன ஆகும்' என உங்கள் காதுபடவே சொல்லிவிட்டுப் போவார்கள்.

ஒரு நிமிடம் இப்போது யோசித்துப் பாருங்கள், நீங்கள் யார்? எப்படிப்பட்ட மனிதர்? யார் மனதும் புண்படக் கூடாது, எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்... இப்போது ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறீர்கள் அல்லது, இந்த ஆள் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கி இருக்கிறீர்கள்.

இதற்காகவா இவ்வளவு பாடுபட்டீர்கள்? இந்தச் சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. 'சரி' சொல்வதானாலும் 'முடியாது' சொல்வதானாலும் யோசித்துச் சொல்லுங்கள்.

'தலையாட்டிப் பொம்மையாக இருக்காதீர்கள்!.

Monday, 8 February 2010

''மியூச்சுவல் ஃபண்ட்னா என்ன, தெரியுமா?''

ஏன், எதற்கு, எப்படி?

''மியூச்சுவல் ஃபண்ட்னா என்ன, தெரியுமா?''

''இந்த சீட்டு போடற மாதிரிதானே?''

''ஃபைனான்ஸ் கம்பெனிங்க...''

''கேள்விப்பட்டிருக்கேன், ஆனா கரெக்டா அது என்னனு சொல்லத் தெரியல!''

பலபேரிடம் கேட்டபோது இப்படித்தான் பதில் கிடைத்தது. இவ்வளவுக்கும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ரூபாய்!

ஆச்சரியப்படற அளவுக்கான தொகைதான் அது என்றாலும் கூட, இன்னும் பரவலான மக்களை அது போய்ச் சேரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட்டில் பணத்தைப் போட்டு, லாபத்தை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ருசியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும், பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரை... மியூச்சுவல் ஃபண்ட் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள் இதை 'ஸ்கிப்' செய்துவிட்டு மற்ற பகுதிக்கு சென்றுவிடவும்...

மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்டை நிர்வகிப்பதற்காகவே பல நிறுவனங்கள் இருக்கின்றன. இவை பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைத் திரட்டி, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அப்படி முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ முதலீட்டாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி நிர்வகிப்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் 'செபி'யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

எதற்காக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்?

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்விடும்? அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒரு காலம் என்றால், இப்போது இந்தியா சீனா ஆகிய நாடுகளின் காலம். இந்த இரண்டு நாட்டின் பொருளாதாரம் மிகச் செழிப்பாக வளரும் என்று நிபுணர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் அப்படிப்பட்ட காலத்தில் சம்பளங்கள் உயரும், விலைவாசிகளும் (பணவீக்கம்) உயரும். அப்படி பணவீக்கம் உயரும்போது, நமது சேமிப்புகளுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகமாக இருந்தால்தான் சமாளிக்க முடியும். அதற்கு பங்கு சார்ந்த முதலீடுகள்தான் ஏற்றது. அப்படி பங்குகளில் செய்யும் முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த கருவி.

இதுவரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களின் செயல்பாடு எப்படி?

மிக மிக அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்! கடந்த ஐந்து வருடங்களில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆண்டொன்றுக்கு 28%-க்கு மேல் வருமானத்தைத் தந்துள்ளன. அதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் கடந்த 10 வருடங்களில் முதலீடு செய்திருந்தாலும், ஆண்டொன்றுக்கு 28%-க்கு மேல் வருமானத்தை பல நல்ல திட்டங்கள் தந்துள்ளன. இந்த அளவுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகம் என்றால்கூட, ஆண்டொன்றுக்கு நீண்டகால அடிப்படையில் 12 - 15% வருமானத்தைத் தாராளமாக எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. தேர்ந்தெடுத்த ஒரு சில திட்டங்களில் பதினான்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று 42 லட்சத்துக்கும் மேல்! இருப்பினும் சந்தையின் செயல்பாட்டைவிட மிக மோசமாக செயல்பட்ட திட்டங்களும் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது.

மியூச்சுவல் ஃபண்ட்டில் எப்படி முதலீடு செய்வது சிறந்தது?

மியூச்சுவல் ஃபண்ட்களில் பங்கு, கடன், மற்றும் இரண்டும் சார்ந்த திட்டங்கள் என பலவகை இருந்தாலும், இங்கே நாம் எடுத்துக் கொள்ளப்போவது பங்கு சார்ந்த திட்டங்களைத்தான். பங்கு சார்ந்த முதலீடுகள் அதிக ரிஸ்க் உடையது. ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது ரிஸ்க் மிகவும் குறைவு. அதனால் சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய நீண்ட நாள் தேவைகளுக்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. அப்படி முதலீடு செய்யும் பணம் இடையில் தேவைப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் முதலீடு செய்வது ரிஸ்க்கை கணிசமாகக் குறைக்கும்.

நம்முடைய ஒவ்வொரு தேவைக்காகவும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, ஒன்று அல்லது இரண்டு ஃபண்டை தேர்வுசெய்து முதலீடு செய்து வரலாம். நாம் நிர்ணயித்த தொகையை அடைந்தவுடன், முழுவதுமாக பங்கு சார்ந்த திட்டங்களில் இருந்து வெளியேறி, நிரந்தர வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சேமிப்பை குறிக்கோள் சார்ந்த சேமிப்பு/ முதலீடு என்பார்கள். இளவயதினர் பலருக்கும் இதுபோன்ற முதலீடு பொருந்தும். அவ்வாறு முதலீடு செய்யும்போது 'குரோத் ஆப்ஷன்' என்று சொல்லக்கூடிய வளர்ச்சிப் பாதையிலேயே செல்லலாம். 25 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள் அவ்வாறு முதலீடு செய்யும்போது, தங்களது முதலீட்டில் 75% முதல் 50% வரை பங்கு சார்ந்த முதலீடுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். மீதியை வேறு முதலீட்டுகளில் திசை திருப்பலாம்.

எத்தனை ஃபண்ட்களில்/ ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்?

பல பேர்கள் தாங்கள் கேள்விப்படும் ஃபண்ட்களில் எல்லாம் முதலீடு செய்துவிடுவார்கள். கடைசியில் அதுவே ஒரு பெரிய தலைவலி ஆகிவிடும்! நமது போர்ட்போஃலியோவில் ஃபண்ட்களின் மற்றும் ஃபண்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நமது வேலைப்பளு கூடும், கவனம் சிதறும், மேலும் மொத்த முதலீட்டின் வருமானமும் குறைய வாய்ப்புள்ளது. நிறைய ஃபண்ட்களில் முதலீடு செய்வதால் மட்டுமே ரிஸ்க்கும் குறைந்து விடாது. அதனால் நல்ல ஃபண்ட் நிறுவனங்களாக நான்கு அல்லது ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்குள்ளேயே முதலீடு செய்வது நல்லது. அதேபோல் முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கையையும் ஒரு வரையறைக்குள் வைத்திருப்பதுதான் நல்லது. நீங்கள் ஒரு சிறிய முதலீட்டாளர் என்றால் 2 - 4 திட்டங்களிலும், நடுத்தர முதலீட்டாளர் என்றால் 6 - 8 திட்டங்களுக்கு மிகாமலும், பெரிய முதலீட்டாளர் என்றால் 10 - 12 திட்டங்களுக்கு மிகாமலும் பார்த்துக் கொள்வது நன்று.

ஃபண்டை எப்படி தேர்வு செய்வது?

இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட 40 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. அவை நிர்வகிக்கும் திட்டங்கள் நூற்றுக்கணக்கானவை. நீங்கள் நல்ல ஃபண்ட்களைத் தேர்வு செய்வதற்கு கீழ்கண்ட ஃபில்ட்டர்களை அப்ளை செய்யலாம். இதுவே முடிவானதல்ல, நீங்களே கூட இன்னும் சில ஃபில்ட்டர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

1. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்துள்ளவை.

2. தனிப்பட்ட திட்டங்களின் அஸட் சைஸ் 500 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பவை.

3. ஃபண்ட் ஹவுஸின் அஸட் சைஸ் (மொத்தத் திட்டங்களின் கூட்டு மதிப்பு) மீடியனுக்கு மேல் இருத்தல் வேண்டும் (இன்றைய நிலையில் ரூ 8,000 கோடிக்கு மேல்).

4. ஜெயன்ட் மற்றும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகள் அதிகமாக இருப்பவை.

5. கடந்த ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட கால கட்டங்களில் சென்செக்ஸ்/ நிப்டி 50 குறியீடுகளைவிட அதிகம் வருமானத்தைத் தந்துள்ளவை.

6. ரேட்டிங் கொடுக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.

7. ஓப்பன் எண்டட் திட்டங்களாக இருப்பது நல்லது.

பயப்படாதீர்கள்!

ஏமாற்றிவிட்டு ஓடிவிடும் லோக்கல் ஃபைனான்ஸ் கம்பெனிகளோடு ஃபண்ட் நிறுவனங்களை ஒப்பிட்டு பல பேர்கள் பயந்துகொண்டிருக்கிறார்கள்! ஆனால் உண்மை அப்படி இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன. அவற்றால் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளை இந்தியாவிலும் உலகளவிலும் உள்ள பல தலைசிறந்த நிறுவனங்கள்தான் நடத்தி வருகின்றன. மற்ற அனைத்தையும் சரியாக தேர்ந்தெடுத்துவிட்டால் முதலீட்டாளர் எடுக்க வேண்டிய ரிஸ்க் என்பது சந்தை ரிஸ்க் மட்டும்தான். உங்கள் பணத்தைப் போடுவதற்கு முன்பு நன்றாக ஹோம்வொர்க் செய்து முதலீடு செய்தால் பலன் நிச்சயம். பயத்தால் பலனை இழந்து விடாதீர்கள்!

ஃபண்ட் டிக்ஷ்னரி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளராவது என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில வார்த்தைகளை அடிக்கடி கேட்க வேண்டியதிருக்கும். அப்படிப்பட்ட சில சொற்களும் அதற்கான விளக்கமும்...

யூனிட் - மியூச்சுவல் ஃபண்ட்களை விற்கும் அளவு யூனிட் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு யூனிட்டின் முகமதிப்பு ரூ 10 ஆகும். முதன்முதலாக வெளிவரும்போது 10 ரூபாய்க்கே விற்பனையாகும். பிற்காலங்களில் அந்த ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும், அந்த திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து முகமதிப்பைவிட கூடவோ குறையவோ செய்யும்.

என்.ஏ.வி - என்.ஏ.வி என்பது 'நெட் அஸட் வேல்யூ' ஆகும். ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் ஒரு தேதியில் உள்ள மொத்த சொத்துக்களை அதன் கடன்களில் இருந்து கழித்தபிறகு வரும் தொகையை, அன்றைய தேதியில் உள்ள யூனிட்டுகளால் வகுத்து வருவதுதான் என்.ஏ.வி. ஆகும்.

ஓப்பன் எண்டட் ஃபண்ட் - ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் யூனிட்டுகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதுவரை நன்றாகச் செயல்பட்டுள்ள பலதிட்டங்கள் ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்தவையே.

குளோஸ் எண்டட் ஃபண்ட் - இவ்வகையைச் சார்ந்த திட்டங்களில் குறிப்பிட்ட வருடங்களுக்கு புதிதாக வாங்கவோ விற்கவோ முடியாது. இவ்வகையைச் சார்ந்த திட்டங்கள் பல இந்தியாவில் சிறப்பாகச் செயல்படவில்லை.

டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் - இத்திட்டங்கள் அனைத்து துறைசார்ந்த பங்குகளிலும் தங்களது முதலீட்டை மேற்கொள்ளும். இத்திட்டங்களின் ரிஸ்க், சந்தை ரிஸ்க்கை ஒட்டி அமையும்.

செக்டோரல் ஃபண்ட்ஸ் - இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் தங்களது முதலீட்டை மேற்கொள்ளும். டைவர்ஸிஃபைடு திட்டங்களைவிட இத்திட்டங்களுடைய ரிஸ்க் அதிகம்.

லார்ஜ் கேப் திட்டங்கள் - பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள்.

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்கள் - நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்கள்.

என்ட்ரி லோட் - யூனிட்டுகளை வாங்கும்போது முதலீட்டாளர் செலுத்த வேண்டிய கட்டணம். இக்கட்டணம் இன்றைய நிலையில் முழுவதுமாக செபியால் அகற்றப்பட்டுவிட்டது.

எக்ஸிட் லோட் - யூனிட்டுகளை விற்கும்போது முதலீட்டாளர் செலுத்த வேண்டிய கட்டணம். ஓப்பன் எண்டட் திட்டங்கள் அனைத்திலும் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 1% வசூலிக்கப்படுகிறது. அதற்குமேல் வெளியேறும்போது எக்ஸிட் லோட் எதுவும் இல்லை.