Friday, 24 April 2009

ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவது இல்லை?

தத்துவத்துக்குக் கடவுள் தேவை இல்லை. விஞ்ஞானம் முடியும் புள்ளி யில் தத்துவம் துவங்குகிறது. கட வுளை நம்புவது என்பது பகுத்தறிவான, 'லாஜிக்'கலான, ஆதாரம் இல் லாத (மூட)நம்பிக்கை என்பதுதத்துவ வாதிகளின் பரவலான கருத்து.

ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார். 'நான்தான் கடவுள். நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் அடிப்படையான வன்' என்றார். தத்துவவாதி, 'ஓ.கே. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது, அது நல்லது என்பதால் நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?' என்று கேட்டார். கடவுள் 'நான்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால்தான் ஒன்று நல்லதாகிறது!' என்று பதில் சொல்ல, 'அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்து கொல்வது என்பது 'நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?' என்றார் தத்துவவாதி. கடவுளுக்குக் கோபம் வருகிறது. தத்துவவாதி தொடர்ந்து 'அது நல்லது இல்லை. ஆகவேதான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?' என்கிறார். 'நீ திருந்த மாட்டாய்!' என்று எரிச்சலோடு கடவுள் மறைந்துவிடுகிறார். (தத்துவ மேதை பிளேட்டோ சொன்ன கதை இது!)

Sunday, 12 April 2009

கோடையை குளுமையாக்க 'ஜில்' டிப்ஸ்...

உஷ்.. அஷ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி..வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள்.இன்னும் சிலரோ மலை வாஸஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே இருக்கும் என வானிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கோடைக்காலம் என்பது இயற்கையின் கொடையே. இந்தக் காலத்தில்தான் மண்ணில் உள்ள கிருமிகள் அழிகின்றன.இதனால் விளை நிலங்களில் பயிராகும் பயிர்கள் நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடுகின்றன.

இதனால் உற்பத்தி அதிகரிக்கும் .பள்ளியின் தேர்வுகள் முடியும் நேரம். கோடை வெயில் மாணவச் செல்வங்களுக்கு குளிர்மழைபோல் தோன்றும். காரணம் வெயிலின் கடுமை அறியாமல் விடுமுறைகளில் விளையாடும் பருவம் அல்லவா...அவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களாக நீங்களும் கோடையை குளிர்ச்சியாகக் கழிக்க இதோ ஜில்லுன்னு சில டிப்ஸ்.கோடைக் காலம் ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் தான் சிலருக்கு உடலில் பலவகையான பாதிப்புகள் தோன்றும். பனிக்காலம் முடிவடைந்து கோடை வருவதால் உடலானது சில மாற்றங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது.· கோடைக் காலத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை பெண்கள் முடித்துவிடுவது நல்லது.· முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.· அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாகும்.· குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரை அருந்த வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும் 10 நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது.·


அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது ஜூஸ் செய்து அருந்தலாம்.· இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.· ஆரஞ்சு, சாத்துகுடி, கீரணிப் பழச் சாறு, எலுமிச்சை பழச் சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி, பப்பாளிப் பழம் சாப்பிடலாம்.· குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து ஆறியபின் குடிநீராக அருந்தலாம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறைந்து சமநிலைப்படும்.· கோடையின் வெப்பத்தைக் குறைக்க மோரே அருமருந்தாகும். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.உணவு· கோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம். இதனால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.· மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசனிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.· வாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம். இரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சீரணமடையும் உணவுகளை உண்பது நல்லது.· தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போது, வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக்கூடாது.· மதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. · வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம். தலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.v · வெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.· கோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.·


சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.· படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.· வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை தவிர்த்து வெண்மை நிற குடைகளை பயன்டுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது

கேலக்ஸி - விஜயலட்சுமி ரமேஷ்பிரபா

வெளியுலகம் அதிகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று வீட்டுக்குள் உலகத்தை கொண்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். கேலக்ஸி பப்ளிகேஷன் பதிப்பாளர் + வெளியீட்டாளர். இருக்கும் இடம் தெரியாம இருக்கணும் என்று வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று சாயா விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி.

ஒரு கார் ஷெட்டில் இரண்டு டேபிள், சேருடன் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி இன்று பல கார்கள் நிற்கும் வகையில் போர்டிகோ அமைத்திருக்கிறது. பதினைந்து வருட அனுபவத்தில் செய்தி, பொழுதுபோக்கு என்று பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது.


கேலக்ஸிக்கு முன்னுதாரணம் என்று எதுவுமில்லை என்கிறார் விஜயலட்சுமி. ஆனால் இன்று இது மாதிரி நிகழ்ச்சி தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது கேலக்ஸி. ஒரு நிகழ்ச்சிக்காக முதன்முதலில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு சென்றது கேலக்ஸிதான். பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியை கனடா, பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறது.


இப்போதெல்லாம் கையில் பணம் இருந்தால் டிவியில் புரோகிராம் பண்ணிவிடலாம் என்று நினைக்கிறார்கள். புரடக்‌ஷன் பண்ணுறது ஈசி. அந்த புரோகிராமை தூக்கி நிறுத்துவதுதான் கஷ்டம். அதை திறம்பட செய்து வரும் கேலக்ஸி, இன்னும் பல நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சேரும் இடத்தை பொறுத்தே நதியின் சிறப்பு என்பார்கள். ரமேஷ்பிரபாவை சந்தித்த பிறகுதான் என் வாழ்க்கை சிறந்தது என்கிறார் விஜயலட்சுமி.
’’பொறந்தது மூணும் பொண்ணுங்க என்பதால அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க. ரெண்டு அக்காவை விடவும் எனக்கு கொஞ்சம் கவனிப்பு அதிகம் இருக்கும். நடுத்தர குடும்பம்தான் ஆனா அம்மா(ஜெயா), அப்பா(ஆறுமுகம்) எங்களை கஷ்டம் இல்லாம வளர்த்தாங்க.


. ரொம்ப தூரம் போய் படிக்கக்கூடாதுன்னு வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்கூலில்தான் படிக்க வச்சாங்க.சென்னை மண்ணடி ஏ.ஆர்.எஸ்.ஸ்கூலில்தான் +2வரை படிச்சேன்.
நான் ஆசைப்பட்ட கல்லூரி எல்லாம் பஸ்ஸில் போய் படிக்கும் தூரத்தில் இருந்ததால அங்க போய் படிக்க அனுமதிக்கல. வீட்டுக்கு பக்கத்திலே நடந்து போகும் தூரத்தில இருந்ததால பாரதி பெண்கள் கல்லூரியில பி.காம் படிச்சேன்.


எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா நானும் என் ரெண்டு அக்காவும் பாடப்புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை அதிகமா படிச்சது இல்லை. டெய்லி பேப்பர் கூட வீட்டுக்கு வாங்கிட்டு வரமாட்டாங்க அப்பா. அதுல ரொம்ப மோசமான செய்தி எல்லாம் வரும்... அதனாலதான் அப்பா வாங்கிட்டு வரலன்னு அம்மா சொல்லிடுவாங்க. இதனாலதான் டிவியும் வாங்கல.
எங்க பூர்வீகம் கும்பகோணம் பக்கம் குடவாசல். ஆனா துணி வியாபாரத்தால சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டாங்க அப்பா. ரெண்டு அக்காவையும் சென்னையிலேயே கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. பெரிய அக்காவுக்கு 10th படிச்சதும் கல்யாணமாச்சு. அடுத்த அக்காவுக்கு +2 முடிச்சதுமே கல்யாணம் ஆச்சு. நான் மட்டும் நிறைய படிச்சு வேலைக்கு போய்தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்.


பஸ்ஸூல போகுற தூரம் தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி.காலேஜ். ஆனாலும், மல்லுக்கட்டி வீட்டில் சம்மதம் வாங்கிட்டேன். எம்.காம். சேர்ந்தேன். ரெண்டு நாள் காலேஜ் போனேன். அப்ப ஒரு யோசனை வந்துச்சு. இன்னும் ரெண்டு வருசம் படிச்சு காலத்த எதுக்கு ஓட்டிக்கிட்டு... பேசாம இப்பவே வேலைக்கு போயிட்டா என்னன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
காலேஜ் விட்டதும் தேனாம்பேட்டையிலிருந்து மண்ணடி போறதுக்குத்தான் பஸ் ஏறினேன். மவுண்ட் ரோடு வழியாதான் பஸ் போகும். ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆபீஸ் மவுண்ட் ரோட்டில்தான் இருக்கு. என் தோழி சுபா அங்கே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா. அவள பார்த்து வேலை வி்‌ஷயமா சொல்லலாம்னு போனேன். அவளோ டக்குன்னு என்னை மதன் சார்கிட்ட கொண்டு போய் நிறுத்திட்டா.


ஆனந்த விகடனில் (96ல்) எனக்கு எடிட்டோரியல் செகரட்டரி போஸ்டிங் கிடைச்சது. ஒரு வருஷம் அங்க வொர்க் பண்ணினேன். அந்த சமயத்துலதான் அவர (ரமேஷ்பிரபா) சந்திச்சேன். விகடன் மாணவர் திட்ட நிருபரா இருந்து அவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரா அங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். விகடனுக்கு பக்கத்திலே இருந்த கிளாரியன் ( clarion) விளம்பரக் கம்பெனியில் முழு நேரமா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார்.


காலேஜ் படிக்கும் போது படிப்பு, வேலைவாய்ப்பு சம்பந்தமாக அவர் எழுதின புத்தகங்கள் சில தோழிகள் மூலமாக படிச்சிருக்கேன். ரொம்ப பெரிய ஆளுன்னு நினைச்சிருந்தேன். நேரில் பார்த்தப்போ ரொம்ப சின்னப்பையனா இருந்தார். இந்த ஆச்சர்யத்தைதான் முதல் சந்திப்பில் அவர்கிட்ட சொன்னேன்.
விகடனில் அவர் நிறைய பிஸினஸ் தொடர்கள் எழுதுவார். அது சம்பந்தமாக அடிக்கடி அவர் அங்கு வருவார். நல்ல பழக்கம் இருந்தது. ஒரு வரஷத்துக்கு பிறகு நியூ இந்தியா கம்பெனியில் எனக்கு ஜாப் கிடைச்சது. அவருக்கும் ‘உள்கா’ விளம்பரக் கம்பெனியில் பிராஞ்ச் மேனேஜர் போஸ்டிங் கிடைச்சது. எப்போதும் போல யதார்த்தமாக சந்திச்சுக்கிட்டோம்.எங்க வீட்டுக்கு எல்லாம் அவர் அடிக்கடி வருவார். அம்மா,அப்பாவுக்கு அவர் மேல நல்ல அபிப்ராயம் இருந்துச்சு.


யதார்த்தமான சந்திப்புகள் பிறகு அர்த்தமுள்ள சந்திப்புகளாக மாறிப்போச்சு. 90ல் இரு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். இனம் வேறுங்கிறதால அவுங்க பக்கம் கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சு. அப்புறம் எல்லாம் சரியாச்சு’’ என்று சொல்லும் விஜயலட்சுமிக்கு, ரமேஷ்பிரபா பிஸினஸ் சம்பந்தமாக எழுதின புத்தகங்களில் ரொம்ப இம்ரஸ் பண்ணினது ‘எதையும் விற்கும் உலகம்’! இவரும் அவரும் சேர்ந்து இதைத்தான் விற்கணும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது சன் தொலைக்காட்சி ஆரம்பித்த நேரம்.
‘’காலேஜ் சமயத்துல அவர் நிறைய காலேஜ் புரோகிராம் பண்ணியிருக்கிறார். அதே மாதிரி பண்ணலாம்னு முடிவெடுத்து சன் டிவியில் சொன்னார். ஓகே ஆச்சு. 93ல் வார்த்தை விளையாட்டுன்னு சன் டிவியில் புரோகிராம் பண்ணினார். அந்த புரோகிராமுக்கு நான் கோ-ஆர்டினேட்டரா இருந்தேன்’’ என்கிறார். தொண்ணூறுகளின் துவக்கத்தில் டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெகு சில மட்டுமே இருந்தன. அதுவும் தூர்தர்ஷன் டிவிக்குதான் அவை தயாரித்து கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் கேலக்ஸி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலாக நிகழ்ச்சி தயாரித்து கொடுத்ததை சொல்கிறார்.


‘’ராஜ் டிவியில் 94ல் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ புரோகிராம் பண்ணினோம். சிலோன் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த எம்.எச்.அப்துல் ஹமீது சார்தான் அந்த புரோகிராமை தொகுத்து வழங்கினார். நல்ல வரவேற்பு இருந்துச்சு அந்த புரோகிராமுக்கு.
அவர்(ரமேஷ் பிரபா) திருச்சி பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரில் பிறந்தவர். ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர். இந்த தலைமுறையில வசதி கொஞ்சம் குறைவு. அப்படியும் இவருக்கு பூர்வீக சொத்து இருந்துச்சு. ஆனாலும் அந்த பணத்துல கேலக்ஸியை ஆரம்பிக்கல. கையில் இருந்த கொஞ்ச பணத்தை வைத்துதான் ஆரம்பிச்சோம். ஆழ்வார்பேட்டையில் ஒரு கார் ஷெட்டில் தான் கேலக்ஸி ஆபீஸ். இரண்டு டேபிள் சேர் மட்டும் இருக்கும். அவரு பிஎஸ்சி, பி.டெக், எம்பிஏன்னு நிறைய படிச்சிருக்கிறார். அந்த படிப்பு, அவரோட திறமை, என்னோட ஒத்துழைப்புன்னு எல்லாம் சேர்ந்து கேலக்ஸியை வளர்த்தெடுத்தது’’என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார். 97ல் சொந்த நிறுவனம் ஓரளவிற்கு வளர்ந்து விட்டதால் அதுவரை தான் பார்த்து வந்த நியூ இந்தியா வேலையை விட்டு விலகியிருக்கிறார். அந்த சமயத்தில் நியூ இந்தியாவில் அவர் வாங்கிய சம்பளத்தொகை பன்னிரண்டாயிரம்.
’’சிலோன் ரேடியோவுக்கு ஏஜண்ட்டாக இருந்து விளம்பரமும் புரோகிராமும் செஞ்சு கொடுத்தோம். அவரோட திறமையை பார்த்து சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பு வந்தது அவருக்கு. அப்புறம் விஜய் டிவியில் டெமோ பிஸினஸ் புரோகிராம் பண்ணினோம்.


சன் டிவியில பாட்டுக்கு பாட்டு ஆரம்பிச்சோம். அடுத்து ஸ்டார் சமையல் புரோகிராம் பண்ணினோம். வீட்டை விட்டு வெளியே போகாம சினிமா எதுவும் பார்க்காம வளர்த்ததால சமையல் கலை நிறைய கத்துக்கிட்டேன். அதெல்லாம் இந்த புரோகிராமுக்கு யூஸ் ஆச்சு’’ என்று நெகிழ்கிறார். நிகழ்ச்சிகளோடு சேர்ந்து கேலக்ஸி நிறுவனமும் வளர்ந்திருக்கிறது. ஆழ்வார் பேட்டை கார் ஷெட்டில் இருந்து மெல்ல மெல்ல கோபாலபுரத்திற்கு மாறியிருக்கிறது கேலக்ஸி. பிறகு அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் ஒரு வாடகை வீட்டில். இப்போ அதே கற்பகம் அவென்யூவில் கம்மீரமாக சொந்த பில்டிங்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
‘’ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு. போகப்போக எல்லாம் தெரிய வந்துச்சு. பொதுவாகவே பொண்ணுங்களுக்கு சிக்கன புத்தி இருக்கும். அதிலும் எனக்கு கொஞ்சம் அதிகம். அது கேலக்ஸிக்கு கைகொடுத்திருக்கு. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு எபிசோடு மட்டுமே எடுப்போம். இப்போ அனுபவம் இருப்பதால ஒரு நாளைக்கு நாலு எபிசோடு எடுக்குறோம்.
டிவிக்கு நிகழ்ச்சி தயாரிக்கறீங்களே நீங்க சீரியல் எடுக்கலாமேன்னு கேட்குறாங்க. உண்மையை சொன்னா எனக்கு சீரியலே பிடிக்காது. எப்போதும் தூங்குற நேரம் மட்டுமே வீட்டுக்கு போறேன். அம்மாதான் ஒரே மகள் இனியாவையும் வீட்டையும் கவனிச்சிக்கறாங்க. என்னோட அப்பாவும் அவரோட அப்பாவும் தவறிட்டாங்க.


சில பேரு சினிமா எடுக்கலாமேன்னு சொல்லுவாங்க. கேலக்ஸி அதுக்கெல்லாம் தலையாட்டாம அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்ற பழமொழிக்கு ஏத்தபடி போய்க்கிட்டிருக்கு. இப்போ கலைஞர் டிவியில் ‘விடியலே வா’ன்னு புரோகிராம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். எல்லாமே சிரிப்புதான் புரோகிராமும் சக்சஸ் ஆகியிருக்கு.
ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தா கரெக்ட் டயத்துக்கு போயிட்டு கரெக்ட் டயத்துக்கு வந்துடலாம். வருசத்துல ஏகப்பட்ட லீவு இருக்கு. சொந்த நிறுவனம் என்பதால அந்த சவுகரியம் எல்லாம் இல்லாம போச்சு. ஆனா, பலபேரு வந்து, நாங்க உங்க நிறுவனத்தை முன்னுதாரமா வச்சுத்தான் வந்திருக்கிறோம். கணவனும் மனைவியும் சேர்ந்து வொர்க் பண்ணுறத பார்த்துட்டுத்தான் நானும் என் வொய்ப்பை கொண்டு வந்திருக்கிறேன்... என்றெல்லாம் சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு’’என்று மகிழ்கிறார். புதுசு கண்ணா புதுசு விளம்பரம் பட்டி தொட்டி எல்லாம் முனுமுனுக்கப்பட்டது. அந்த விளம்பரத்தை பண்ணிக்கொடுத்தது ‘சாய் அட்வர்டைசிங்’ என்ற கேலக்ஸியின் ஒரு பிரிவு. பிரிண்ட் மற்றும் விசூவல் மீடியாவுக்கு விளம்பரப் பறிமாற்றம் செய்துவருகிறது சாய் அட்வர்டைசிங்.
‘’எனக்கு தமிழ்,ஆங்கிலம், இந்தி,மலையாளம், தெலுங்குன்னு அஞ்சு லாங்வேஜ் தெரியும். அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியும். இதனால அட்வர்டைசிங்கில் நல்லா பண்ண முடியுது. கேலக்ஸி பப்ளிகேஷன் ஆரம்பிச்சு நான் எழுதுன சமையல் கலை புத்தகங்கள், அவர் எழுதுன கல்வி, பிஸினஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வெளியிடுறோம்’’ என்று சொல்கிறார். இத்தனை மொழிகள் தெரிந்தாலும் அத்தனை மொழியிலும் ஏன் நிகழ்ச்சிகள் செய்யவில்லை என்றால் ‘சீரியல் என்றால் ஒரு லாங்வேஜ்ல உள்ளத அப்படியே டப்பிங் செஞ்சுடலாம். நியூஸ்..அப்புறம் ஒரு மொழியைச்சார்ந்து எடுக்குற புரோகிராமை இன்னொரு லாங்வேஜ்க்கு டப்பிங் பண்ண முடியாது. நேரடியா வேறு மொழிகளுக்கு புரோகிராம் பண்ணனும்கிற எண்ணம் இல்ல. ஆனாலும் சூர்யா மலையாள டிவிக்காக ‘காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு புரோகிராம் பண்ணினோம்’ என்கிறார்.


ஏதோ மலையாள மந்திரம் போலத்தான் இருக்கும். காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு அவர் சொன்னது. ஆனால் அது பிரச்சனை பெருசா இருந்தாலும் ஈஸியா முடிஞ்சிடும் என்ற அற்புதமான தமிழ் அர்த்தத்தை தருகிறது. அது போலவே நல்ல பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் கேலக்ஸியும் அர்த்தமுள்ளதாகவே விளங்குகிறது.

Wednesday, 8 April 2009

சட்டப்படி ஓட்டறோம் முதலாளி....

சில வருடங்களுக்கு முன் நடந்தது இது.

கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.

அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்

ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!இதேதான் மூன்றாவது நாளும்.நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!

விசித்திரம் தான்!!!! கவிதை கவிதை....

எனக்குஏழுகழுதை வயசாகியும்கண்ணாடியை நான்பார்த்ததில்லை.
ஒவ்வொருமுறையும்எதிரில்
நிற்கையில்என் முகரக்கட்டைதான் தெரிகிறது.
கண்ணாடியைக் காணோம்.
உடைத்தும் பார்த்தேன்உடைந்த ஒவ்வொருதுண்டிலும் ஒருஉடையாத கண்ணாடி.
லேசான வெட்கம் எனக்கு.
பார்க்க முடியாதகண்ணாடியைத்தான்பார்க்க முடிகிறது.

கவிதையைப் படித்து விட்டீர்களா..இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?

Tuesday, 7 April 2009

எப்படி இருந்திருக்கும் எனக்கு?

கல்லூரியில் முதன் முதலில் நான் அடி எடுத்து வைத்த நாளை மறக்கவே முடியாது.

வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே வகுப்பறையில் ராகிங் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து பயந்து அப்படியே 'அபவுட் டர்ன்' அடித்து விட்டேன். நைஸாக கேன்டீன் பக்கம் போய், டீ சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் கழித்து வரலாம் என்று அங்கே போனால் அங்கும் ராகிங்!
அலறி அடித்து நூலகத்துக்குள் நுழைந்தால் அங்கே ராகிங்கோ ராகிங். கடைசியில் எப்படியோ சீனியர் மாணவர்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டேன். அவர்களும் என்னை ஆட வைத்து, பாட வைத்து, குதிக்க வைத்து, ஓட வைத்து.. என்று ஒருவழியாக முடித்துக் கொண்டார்கள்.

அதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இல்லை.. போகும்போது என்னை ராக் செய்த மாணவர்களில் ஒருத்தன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளைத்தான் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
''பரவாயில்ல நீ ரொம்ப நல்லவன் டா.. உன் குரல் ஸ்வீட். உன் டான்ஸ் வெரி நைஸ். ஆனா, உன்கிட்ட ஒரே ஒரு குறைதான்.. ரொம்ப பயப்படறே. இப்பக் கூட கையெல்லாம் நடுங்குது பார். உன்னைப் பார்த்தவுடனே 'இது புதுப் பையன்னு' ராக் பண்ண வந்துடுவாங்க. நீ தைரியமா இருந்தா, நீயும் சீனியர்னு நெனைச்சு மத்தவங்க பயப்படுவாங்க. இப்ப எங்களையே பாரேன்.. உன்னை மாதிரி நாங்களும் இப்பதான் முதல் நாள் காலேஜுக்கு வர்றோம். அதற்குள்ள உன்னை ராக் பண்ணிட்டோம். இப்படித்தான் சாமர்த்தியமா இருக்கணும்!''

- இதுதான் அந்த வார்த்தைகள்! எப்படி இருந்திருக்கும் எனக்கு?

Wednesday, 1 April 2009

கலக்கற சந்துரு ( (Dubai Story)

நான் ஒரு 5 வருஷம் முன்ன ஒரு உப்புமா கம்பனியிலே ஒரு இரண்டு மாதம் வேலை பார்த்தேன். உப்புமான்னா சாதாரண உப்புமா இல்லை. கிட்ட தட்ட நம்ம பெனாத்தலார் பாணியிலே ஸ்ட்ராங்கான உப்புமா. நான் ஏமாந்ததே அந்த கம்பனியின் சைன் போர்டை பார்த்து தான். அத்தன பெரிய போர்டு.அந்த கம்பனியிலேயே அதான் பெரிய விஷயம்ன்னு எனக்கு பின்ன தான் தெரிஞ்சுது. சரி இது தான் துபாய்லயே பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி போல இருக்குன்னு நெனச்சு தான் இண்டர்வியூவுக்கு போனேன். நான் கேட்ட சம்பளத்தை கேட்டதும் அந்த மேனேஜர் மட்டும் இல்லை அந்த கம்பனியே ஆடி போச்சு. மேனேஜர் சொன்னார், "எங்க கம்பனியின் மொத்த லேபர்ஸும் சேர்ந்து வாங்கும் சம்பளம் இது"ன்னு. நானும் சரி தற்காலிகமா இருப்போம்ன்னு சேர்ந்துட்டேன்.கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனின்னா பெரிசா புது பில்டிங் எல்லாம் எடுத்து செய்ய மாட்டாங்க. சும்மா ஓட்டை உடைசல் அடைக்கும் கம்பனி.

ஒரு நாள் மேனேஜர் கூப்பிட்டு ஒரு செல் நம்பர் கொடுத்து "இவர் பேர் சந்திரசேகர். இவரு கம்பனியிலே ஏதோ தண்ணி ஒழுகுதாம். அபுதாபியிலே இருக்கு. நீ போய் பார்த்துட்டுவா. பின்னே இங்க வந்து எத்தனை லேபர், எதுனா பிலாஸ்டிக் ரோல், சிலிகான் சீலண்ட் எடுத்துட்டு போய் ஓட்டையை அடச்சிடு"ன்னு சொன்னார். எனக்கு தான் அபுதாபி போறதுன்னா அத்தன ஒரு குஷி வந்துடுமா. சரி அப்படியே போய் நண்பர்களையும் பார்த்துட்டு வந்துடுவோம்ன்னு சும்மா ஒரு ஜீன்ஸ், டி ஷர்ட், சாதாரன செருப்புன்னு கிளம்பிட்டேன். அபுதாபி போய் ஒரு கூட்டமே இல்லாத ஹோட்டலா பார்த்து உக்காந்து ரிலாக்சா ஒரு டீயை குடிச்சுகிட்டே அந்த சந்திரசேகருக்கு போன் பண்ணினேன்.

நம்ம கிட்ட ஒரு பொருப்புன்னு குடுத்துட்டாதான் பிரிச்சு மேஞ்சிடுவோம்ல. எப்படியாவது அந்த கம்பனியிலே நல்ல பேர் வாங்கி ஒட்டு மொத்த ஓட்டை அடைக்கும் காண்டிராக்டயும் வாங்கி நம்ம கம்பனிய ரித்தீஷ் மாதிரி ஒலக தரத்துக்கு கொண்டு வந்துடனுங்குற ஆசையிலே அப்படியே நுனி நாக்கு இங்லிபீசுல "ஹாய் மிஸ்டர் சந்துரு ஹவ்வார்யூ"ன்னு ஆரம்பிச்சு சும்மா பொளந்து கட்டிகிட்டு இருந்தேன். உங்களுக்கு எங்கயோ ஒழுகுதாமேன்னு கடைசியா வந்த விஷயத்துக்கு வந்தேன். வெள்ளை மாளிகையிலே ஒழுகினா கூட ஹிலாரி வூட்டுகாரர் எங்களைத்தான் கூப்பிடுவாராக்கும் என்கிற அளவு பீலா விட்டேன்.

மனுஷனுக்கு உதரல் எடுத்துடுச்சு. சந்துரு சந்துருன்னு ரொம்ப நாள் பழகின மாதிரி பொங்கிகிட்டே இருக்கேன். அவரும் என்கிட்ட சார் சார்ன்னு பம்மிகிட்டே இருக்கார். நான் ஹோட்டல்ல இருப்பதாகவும் அன்றைக்கே வந்து பார்க்க முடியாது, பர்சனல் வேலை இருப்பதாகவும் சொன்னேன். அதுக்கு அவரும் சரி சார் சரி சார்ன்னு ஏக பவ்யம் காட்டினாரு. நீங்க தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு கார் அனுப்பறேன்னு சொன்னார். நான் என்னவோ ஹில்ட்டன்ல தங்கியிருப்பது போல நெனச்சுகிட்டர். ஆக நான் டீ குடிக்க ஹோட்டலுக்கு வந்த விஷயத்தை அப்புடியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு "வேண்டாம் வேண்டாம் நான் என் காரிலேயா வந்துடுறேன் சந்துரு"ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டு நண்பர்கள் வீட்டுக்கு போயிட்டு அதிலே ஒருத்தர் அடுத்த நாள் காலையிலே வந்து அந்த கம்பனி வாசல்ல விட்டுட்டு போனார்.

கம்பனின்னா அது 10 மாடி இண்டலிஜண்ட் பில்டிங். மிக பெரிய ஆயில் கம்பனி. வாசல்ல செக்யூரிட்டி எல்லாம் மிலிட்டரி. எல்லார் கையிலயும் மிஷின் கன். நான் அந்த செக்யூரிட்டிகிட்ட வந்து "ஐ நீட் டு மீட் மிஸ்டர் சந்துரு"ன்னு சொன்னேன். அவன் என்னை ஏற இறங்க பார்த்துட்டு கிட்ட தட்ட என்னை புழு மாதிரி பார்த்துட்டு எந்த சந்துருன்னு கேட்டான். நான் சொன்னேன் "மிஸ்டர் சந்திரசேகர், அவரோட போன் நம்பர் இது தான்"ன்னு சொன்னேன். அவ்வளவு தான் அவனுக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. பட படன்னு யார் யாருக்கோ உள்ளே போன் பண்ணினான். முதல்ல தலைமை செக்யூரிட்டிக்கு போன். அவர் சர்ன்னு ஒரு சைரன் வச்ச ஜீப்பிலே வந்துட்டார். என்னை ஒரு குற்றவாளி ரேஞ்சுக்கு சுத்தி நின்னு விசாரிக்கிறாங்க. எனக்கோ பயம் நம்ம சந்துரு எதுனா திருடிகிட்டு மாட்டிகிச்சு போல இருக்கு அதான் அதை தேடி வந்த நம்மை இப்படி டார்ச்சர் பண்றாங்க போல இருக்குன்னு நெனச்சுகிட்டேன்.ரொம்ப நேர விசாரனைக்கு பின்னே ஸ்பீக்கர்ல ஒரு லேடியை கூப்பிட்டாங்க. அவ என்னவோ அரபில அவங்க கிட்ட பேசினா. நான் உடனே போனை எடுத்து நம்ம சந்துருக்கு போன் பண்ணினேன்.

"என்ன சந்துரூ இப்படி கொடையிரானுங்க"ன்னு கேட்டதுக்கு "சார் வந்துட்டீங்களா கொஞ்சம் இருங்க"ன்னு சொன்னார். பின்ன அந்த செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஸ்பீக்கர்ல நம்ம சந்துரு குரல். உக்காந்து இருந்தவன் எல்லாம் எழுந்து அட்டென்ஷன்ல நிக்கிறான். "செண்ட் மை கெஸ்ட் டு மை ரூம் இம்மீடியட்லி"ன்னு சொல்லிட்டு என் போன்ல கூப்பிட்டு "வெரி சாரி சார், உங்களோட மீட்டிங்கால மத்த மீட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்"ன்னு சொன்னார். எனக்கு மெதுவா ஒரு பயம் வந்துச்சு. ரொம்ப பீலா விட்டிருக்க படாதோன்னு தோணுச்சு. செக்யூரிட்டி எல்லாம் என்னை ஒரு வித பயம் கலந்த மரியாதையோட பார்கிறானுங்க. என்னை சந்துரு சார் ரூமுக்கு கூட்டிகிட்டு போக செக்யூரிட்டி எல்லாம் போட்டி போடுறானுங்க. அவங்க தலைவர் தானே அழைச்சுகிட்டு போவதா சொல்லி அழைச்சுகிட்டு போறார். நானும் சப்பக்கு சப்பக்குன்னு செருப்பு சத்தத்தோட போறேன். எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க.

என்னவோ ஏழுமலையான் தரிசனம் மாதிரி கதவு திறந்துகிட்டே போறான் அந்த செக்யூரிட்டி. ஒவ்வொறு கதவுக்கு முன்பும் ஏகப்பட்ட சோதனை. எங்க பார்த்தாலும் கேமிரா கண்கானிப்பு.கடைசியா நம்ம சந்துரு ரூம் வாசலுக்கு வந்தாச்சு. கதவை திறந்து அந்த செக்யூரிட்டி என்னை உள்ளே அனுப்பிட்டு வாசல்லயே நின்னுகிட்டான். நம்ம சந்துருவை பார்த்ததுமே எனக்கு குலை நடுங்கி போயிடுச்சு. சினிமாவிலே ஒரு பணக்கார அப்பாவா ஒருத்தர் வருவாரே வயசானவர், வெள்ளை தாடி வச்சுகிட்டு, நல்ல வெயில்லயும் கோட், சூட் மாட்டிகிட்டு இருப்பாரே அவரை போல இருக்கார் சந்துரு.எனக்கு அப்பவே லைட்டா நடுக்கம் வந்துடுச்சு. சந்துரு அந்த செக்யூரிட்டிய பாத்து ஒரு கத்து கத்தினார் பாருங்க எனக்கு அப்பவே ப்டம் விட்டு போச்சு. கண்ணிலே பட்டாம் பூச்சி பறக்குது. "செக்யூரிட்டி ஹூ இஸ் திஸ், நானே ஒரு முக்கிய கெஸ்ட்டுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருகேன், இவனை யார் இங்கே விட்டது. மேன் அப்பாய்ன்மெண்ட் இருக்கா மேன்?" அப்படீன்னு கத்துறார். அந்த கெஸ்ட்டே நான் தான்னு சொல்லிடலாமா இல்லாட்டி அப்படியே ஓடி போயிடலாமான்னு நெனச்சுகிட்டே இருக்கும் போதே அந்த செக்யூரிட்டி நான் தான் அந்த கெஸ்ட்ன்னு சொல்ல அவர் முகம் போன போக்கை பார்க்கனுமே....அப்படியே கல்கத்தா காளி மாதிரி ஆயிட்டார்.
"நீயா நீயா மேன் அது உன்னால முடியுமா அந்த தண்ணியை அடைக்க, சொல்லு சொல்லு எந்த மெத்தேடுல சரி பண்ணுவ சொல்லு, உனக்கு இந்த பிரச்சனையோட வீரியம் என்னான்னு தெரியுமா?"அப்படி இப்படீன்னு கத்திகிட்டே இருக்கார். நான் சொன்னேன் "சார் பிலாஸ்டிக் பேப்பர் வச்சு, சிலிகான் சீலண்ட் போட்டு..."ன்னு ஏதோ உளறிகிட்டே இருக்கேன். உடனே தன் கையிலே இருந்த ரிமோட் வச்சு அந்த ரூம்ல இருந்த எல்.சி.டி மானிட்டர்ல பிரச்சனைக்கு உரிய இடத்தை நேரா சூம் பண்ணி காமிச்சார். அப்பவும் கத்துவதை நிப்பாட்டலை. அது என்னா பிரச்சனைன்னா அந்த பில்டிங் கிரவுண்ட் புளோருக்கு கீழே 4 ப்ளோர் கார் பார்க்கிங். பக்கத்திலே கடல் இருக்கு. புட்டிங் சரியா போடாமையோ என்ன பிரச்சனையோ தெரியல கடல் தண்ணி ஊற ஆரம்பிச்சு ஒரு மோட்டார் போட்டு தண்ணிய வெளியே எடுக்கிறாங்க. பெரிய லெவல் பிரச்சனை. கிட்ட தட்ட அந்த பில்டிங்ககே இடிக்க வேண்டிய நிலமை. உலக லெவல்ல கன்சல்ட் பண்ணிகிட்டு இருக்காங்க அந்த் பிரச்சனைய சரி பண்ண. நான் என்னவோ சர்வ சாதாரணமா பிலாஸ்டிக், சிலிகான் சீலண்ட்ன்னு சின்ன பிள்ளை தனமா சொல்லி அவர் குருதி அழுத்தத்தை எகிற செஞ்சுட்டேன். மனுஷன் என்னை குத்தி கொதறி தொண்டை வரண்டு போய் தண்ணிய குடிச்சுட்டு குடிச்சுட்டு திட்டுறார். எனக்கோ ஒரு வழியா வெளியே விட்டா தேவலை போல இருக்கு. அவருக்கு இருந்த கொலவெறியிலே அந்த செக்யூரிட்டிய விட்டு சுட சொல்லிடுவாரோன்னு பயமா போச்சு.

நடு நடுவே அவருக்கு வந்த போன்ல "நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், இன்னும் அரை மணி நேரத்துக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு வேற சொல்லிகிறார். ஆக நமக்கு இன்னும் அரை மணி நேரத்துக்கு குமுறி எடுக்க போறான்னு தெரிஞ்சுது. அந்த அரை மணி நேரமும் சும்மா வானத்துக்கும் பூமிக்குமா பறந்து பறந்து திட்டி தீர்த்தார். திட்டு எல்லாம் ஸ்டாக் தீர்ந்து போச்சுன்னா யோசிச்சு யோசிச்சு திட்டுறார். கடைசியா கெட் அவுட்ன்னு கத்தின போது தான் எனக்கு கொஞ்சம் பயம் போச்சு. சரின்னு வெளியே வந்தேன். அவருக்கு என்னை திட்டினது பத்தலை போல இருக்கு. திரும்பவம் கூப்பிட்டார். கூப்பிட்டு "டேய் என் அப்பா அம்மா கூட இப்படி சந்துரு சந்துருன்னு தலையிலே அடிச்ச மாதிரி கூப்பிட்டதில்லை... இந்த கம்பனியே என்னை பார்த்து பயப்படுது..என்னை சந்துரு சந்துருன்னு உன் வேலைக்காரனை கூப்பிடுவது போல கூப்பிட்டியே மகாபாவி... உன்னை நான் இந்த ஜென்மத்துல எங்கயும் பார்க்க கூடாது... கெட் அவுட்..........."ன்னு கத்த நான் ஓடியே வந்துட்டேன். உள்ளே போகும் போது அந்த செக்யூரிட்டிகிட்டே இருந்த மரியாதை திரும்பி வரும் போது தலை கீழா மறி போயிருந்துச்சு. கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறை தான்.
மெதுவா வெளியே வந்து என்னை ஆசுவாசபடுத்திக்க ஒரு டீக்கடையிலே உக்காந்தேன். அப்போ என் மேனேஜர் கிட்ட இருந்து போன். "என்ன ஆச்சு எத்தன ரோல் பிலாஸ்டிக் தேவைப்படும், எத்தன லேபர் தேவைப்படும்ன்னு பார்த்தியா? அந்த சந்துரு ஆள் எப்படி, காண்டிராக்ட் நமக்கு தானே"ன்னு கேட்டார். நான் அதுக்கு "சார் சந்துரு நல்ல பையன் சார். பசு மாதிரி குணம். ஆனா பாருங்க அவன் ரேன்சுக்கு ஒரு மேனேஜர் லெவல்ல தான் பேசுவானாம். அதனால நீங்க கிளம்பி இங்க வாங்க. நான் கிளம்பி அங்க வர்ரேன். இங்க வந்துட்டுசந்துருக்கு போன் பண்ணி பேசுங்க. சும்மா தைரியமா பேசுங்க. எத்தன பிளாஸ்டிக் ரோல் தேவைன்னு சந்துருகிட்டயே கேளுங்க. சந்துரு பையன் நல்ல குணமான பையன். கிளம்பி உடனே வாங்க"ன்னு சொல்லிட்டு மெதுவா கிளம்பி துபாய் வந்து சேர்ந்தேன்.