கல்லூரியில் முதன் முதலில் நான் அடி எடுத்து வைத்த நாளை மறக்கவே முடியாது.
வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னரே வகுப்பறையில் ராகிங் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து பயந்து அப்படியே 'அபவுட் டர்ன்' அடித்து விட்டேன். நைஸாக கேன்டீன் பக்கம் போய், டீ சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் கழித்து வரலாம் என்று அங்கே போனால் அங்கும் ராகிங்!
அலறி அடித்து நூலகத்துக்குள் நுழைந்தால் அங்கே ராகிங்கோ ராகிங். கடைசியில் எப்படியோ சீனியர் மாணவர்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டேன். அவர்களும் என்னை ஆட வைத்து, பாட வைத்து, குதிக்க வைத்து, ஓட வைத்து.. என்று ஒருவழியாக முடித்துக் கொண்டார்கள்.
அதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இல்லை.. போகும்போது என்னை ராக் செய்த மாணவர்களில் ஒருத்தன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளைத்தான் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
''பரவாயில்ல நீ ரொம்ப நல்லவன் டா.. உன் குரல் ஸ்வீட். உன் டான்ஸ் வெரி நைஸ். ஆனா, உன்கிட்ட ஒரே ஒரு குறைதான்.. ரொம்ப பயப்படறே. இப்பக் கூட கையெல்லாம் நடுங்குது பார். உன்னைப் பார்த்தவுடனே 'இது புதுப் பையன்னு' ராக் பண்ண வந்துடுவாங்க. நீ தைரியமா இருந்தா, நீயும் சீனியர்னு நெனைச்சு மத்தவங்க பயப்படுவாங்க. இப்ப எங்களையே பாரேன்.. உன்னை மாதிரி நாங்களும் இப்பதான் முதல் நாள் காலேஜுக்கு வர்றோம். அதற்குள்ள உன்னை ராக் பண்ணிட்டோம். இப்படித்தான் சாமர்த்தியமா இருக்கணும்!''
- இதுதான் அந்த வார்த்தைகள்! எப்படி இருந்திருக்கும் எனக்கு?
No comments:
Post a Comment