Sunday, 12 April 2009

கேலக்ஸி - விஜயலட்சுமி ரமேஷ்பிரபா

வெளியுலகம் அதிகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று வீட்டுக்குள் உலகத்தை கொண்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர். கேலக்ஸி பப்ளிகேஷன் பதிப்பாளர் + வெளியீட்டாளர். இருக்கும் இடம் தெரியாம இருக்கணும் என்று வளர்க்கப்பட்ட விஜயலட்சுமி இன்று சாயா விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி.

ஒரு கார் ஷெட்டில் இரண்டு டேபிள், சேருடன் ஆரம்பிக்கப்பட்ட கேலக்ஸி இன்று பல கார்கள் நிற்கும் வகையில் போர்டிகோ அமைத்திருக்கிறது. பதினைந்து வருட அனுபவத்தில் செய்தி, பொழுதுபோக்கு என்று பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது.


கேலக்ஸிக்கு முன்னுதாரணம் என்று எதுவுமில்லை என்கிறார் விஜயலட்சுமி. ஆனால் இன்று இது மாதிரி நிகழ்ச்சி தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது கேலக்ஸி. ஒரு நிகழ்ச்சிக்காக முதன்முதலில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு சென்றது கேலக்ஸிதான். பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியை கனடா, பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நிகழ்த்தியிருக்கிறது.


இப்போதெல்லாம் கையில் பணம் இருந்தால் டிவியில் புரோகிராம் பண்ணிவிடலாம் என்று நினைக்கிறார்கள். புரடக்‌ஷன் பண்ணுறது ஈசி. அந்த புரோகிராமை தூக்கி நிறுத்துவதுதான் கஷ்டம். அதை திறம்பட செய்து வரும் கேலக்ஸி, இன்னும் பல நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
சேரும் இடத்தை பொறுத்தே நதியின் சிறப்பு என்பார்கள். ரமேஷ்பிரபாவை சந்தித்த பிறகுதான் என் வாழ்க்கை சிறந்தது என்கிறார் விஜயலட்சுமி.
’’பொறந்தது மூணும் பொண்ணுங்க என்பதால அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க. ரெண்டு அக்காவை விடவும் எனக்கு கொஞ்சம் கவனிப்பு அதிகம் இருக்கும். நடுத்தர குடும்பம்தான் ஆனா அம்மா(ஜெயா), அப்பா(ஆறுமுகம்) எங்களை கஷ்டம் இல்லாம வளர்த்தாங்க.


. ரொம்ப தூரம் போய் படிக்கக்கூடாதுன்னு வீட்டுக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்கூலில்தான் படிக்க வச்சாங்க.சென்னை மண்ணடி ஏ.ஆர்.எஸ்.ஸ்கூலில்தான் +2வரை படிச்சேன்.
நான் ஆசைப்பட்ட கல்லூரி எல்லாம் பஸ்ஸில் போய் படிக்கும் தூரத்தில் இருந்ததால அங்க போய் படிக்க அனுமதிக்கல. வீட்டுக்கு பக்கத்திலே நடந்து போகும் தூரத்தில இருந்ததால பாரதி பெண்கள் கல்லூரியில பி.காம் படிச்சேன்.


எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா நானும் என் ரெண்டு அக்காவும் பாடப்புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை அதிகமா படிச்சது இல்லை. டெய்லி பேப்பர் கூட வீட்டுக்கு வாங்கிட்டு வரமாட்டாங்க அப்பா. அதுல ரொம்ப மோசமான செய்தி எல்லாம் வரும்... அதனாலதான் அப்பா வாங்கிட்டு வரலன்னு அம்மா சொல்லிடுவாங்க. இதனாலதான் டிவியும் வாங்கல.
எங்க பூர்வீகம் கும்பகோணம் பக்கம் குடவாசல். ஆனா துணி வியாபாரத்தால சின்ன வயசிலேயே சென்னைக்கு வந்துட்டாங்க அப்பா. ரெண்டு அக்காவையும் சென்னையிலேயே கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்க. பெரிய அக்காவுக்கு 10th படிச்சதும் கல்யாணமாச்சு. அடுத்த அக்காவுக்கு +2 முடிச்சதுமே கல்யாணம் ஆச்சு. நான் மட்டும் நிறைய படிச்சு வேலைக்கு போய்தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்.


பஸ்ஸூல போகுற தூரம் தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி.காலேஜ். ஆனாலும், மல்லுக்கட்டி வீட்டில் சம்மதம் வாங்கிட்டேன். எம்.காம். சேர்ந்தேன். ரெண்டு நாள் காலேஜ் போனேன். அப்ப ஒரு யோசனை வந்துச்சு. இன்னும் ரெண்டு வருசம் படிச்சு காலத்த எதுக்கு ஓட்டிக்கிட்டு... பேசாம இப்பவே வேலைக்கு போயிட்டா என்னன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.
காலேஜ் விட்டதும் தேனாம்பேட்டையிலிருந்து மண்ணடி போறதுக்குத்தான் பஸ் ஏறினேன். மவுண்ட் ரோடு வழியாதான் பஸ் போகும். ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆபீஸ் மவுண்ட் ரோட்டில்தான் இருக்கு. என் தோழி சுபா அங்கே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தா. அவள பார்த்து வேலை வி்‌ஷயமா சொல்லலாம்னு போனேன். அவளோ டக்குன்னு என்னை மதன் சார்கிட்ட கொண்டு போய் நிறுத்திட்டா.


ஆனந்த விகடனில் (96ல்) எனக்கு எடிட்டோரியல் செகரட்டரி போஸ்டிங் கிடைச்சது. ஒரு வருஷம் அங்க வொர்க் பண்ணினேன். அந்த சமயத்துலதான் அவர (ரமேஷ்பிரபா) சந்திச்சேன். விகடன் மாணவர் திட்ட நிருபரா இருந்து அவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரா அங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். விகடனுக்கு பக்கத்திலே இருந்த கிளாரியன் ( clarion) விளம்பரக் கம்பெனியில் முழு நேரமா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார்.


காலேஜ் படிக்கும் போது படிப்பு, வேலைவாய்ப்பு சம்பந்தமாக அவர் எழுதின புத்தகங்கள் சில தோழிகள் மூலமாக படிச்சிருக்கேன். ரொம்ப பெரிய ஆளுன்னு நினைச்சிருந்தேன். நேரில் பார்த்தப்போ ரொம்ப சின்னப்பையனா இருந்தார். இந்த ஆச்சர்யத்தைதான் முதல் சந்திப்பில் அவர்கிட்ட சொன்னேன்.
விகடனில் அவர் நிறைய பிஸினஸ் தொடர்கள் எழுதுவார். அது சம்பந்தமாக அடிக்கடி அவர் அங்கு வருவார். நல்ல பழக்கம் இருந்தது. ஒரு வரஷத்துக்கு பிறகு நியூ இந்தியா கம்பெனியில் எனக்கு ஜாப் கிடைச்சது. அவருக்கும் ‘உள்கா’ விளம்பரக் கம்பெனியில் பிராஞ்ச் மேனேஜர் போஸ்டிங் கிடைச்சது. எப்போதும் போல யதார்த்தமாக சந்திச்சுக்கிட்டோம்.எங்க வீட்டுக்கு எல்லாம் அவர் அடிக்கடி வருவார். அம்மா,அப்பாவுக்கு அவர் மேல நல்ல அபிப்ராயம் இருந்துச்சு.


யதார்த்தமான சந்திப்புகள் பிறகு அர்த்தமுள்ள சந்திப்புகளாக மாறிப்போச்சு. 90ல் இரு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். இனம் வேறுங்கிறதால அவுங்க பக்கம் கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சு. அப்புறம் எல்லாம் சரியாச்சு’’ என்று சொல்லும் விஜயலட்சுமிக்கு, ரமேஷ்பிரபா பிஸினஸ் சம்பந்தமாக எழுதின புத்தகங்களில் ரொம்ப இம்ரஸ் பண்ணினது ‘எதையும் விற்கும் உலகம்’! இவரும் அவரும் சேர்ந்து இதைத்தான் விற்கணும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது சன் தொலைக்காட்சி ஆரம்பித்த நேரம்.
‘’காலேஜ் சமயத்துல அவர் நிறைய காலேஜ் புரோகிராம் பண்ணியிருக்கிறார். அதே மாதிரி பண்ணலாம்னு முடிவெடுத்து சன் டிவியில் சொன்னார். ஓகே ஆச்சு. 93ல் வார்த்தை விளையாட்டுன்னு சன் டிவியில் புரோகிராம் பண்ணினார். அந்த புரோகிராமுக்கு நான் கோ-ஆர்டினேட்டரா இருந்தேன்’’ என்கிறார். தொண்ணூறுகளின் துவக்கத்தில் டிவி நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெகு சில மட்டுமே இருந்தன. அதுவும் தூர்தர்ஷன் டிவிக்குதான் அவை தயாரித்து கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் கேலக்ஸி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து முதன் முதலாக நிகழ்ச்சி தயாரித்து கொடுத்ததை சொல்கிறார்.


‘’ராஜ் டிவியில் 94ல் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ புரோகிராம் பண்ணினோம். சிலோன் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த எம்.எச்.அப்துல் ஹமீது சார்தான் அந்த புரோகிராமை தொகுத்து வழங்கினார். நல்ல வரவேற்பு இருந்துச்சு அந்த புரோகிராமுக்கு.
அவர்(ரமேஷ் பிரபா) திருச்சி பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரில் பிறந்தவர். ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர். இந்த தலைமுறையில வசதி கொஞ்சம் குறைவு. அப்படியும் இவருக்கு பூர்வீக சொத்து இருந்துச்சு. ஆனாலும் அந்த பணத்துல கேலக்ஸியை ஆரம்பிக்கல. கையில் இருந்த கொஞ்ச பணத்தை வைத்துதான் ஆரம்பிச்சோம். ஆழ்வார்பேட்டையில் ஒரு கார் ஷெட்டில் தான் கேலக்ஸி ஆபீஸ். இரண்டு டேபிள் சேர் மட்டும் இருக்கும். அவரு பிஎஸ்சி, பி.டெக், எம்பிஏன்னு நிறைய படிச்சிருக்கிறார். அந்த படிப்பு, அவரோட திறமை, என்னோட ஒத்துழைப்புன்னு எல்லாம் சேர்ந்து கேலக்ஸியை வளர்த்தெடுத்தது’’என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார். 97ல் சொந்த நிறுவனம் ஓரளவிற்கு வளர்ந்து விட்டதால் அதுவரை தான் பார்த்து வந்த நியூ இந்தியா வேலையை விட்டு விலகியிருக்கிறார். அந்த சமயத்தில் நியூ இந்தியாவில் அவர் வாங்கிய சம்பளத்தொகை பன்னிரண்டாயிரம்.
’’சிலோன் ரேடியோவுக்கு ஏஜண்ட்டாக இருந்து விளம்பரமும் புரோகிராமும் செஞ்சு கொடுத்தோம். அவரோட திறமையை பார்த்து சன் டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை இயக்கும் பொறுப்பு வந்தது அவருக்கு. அப்புறம் விஜய் டிவியில் டெமோ பிஸினஸ் புரோகிராம் பண்ணினோம்.


சன் டிவியில பாட்டுக்கு பாட்டு ஆரம்பிச்சோம். அடுத்து ஸ்டார் சமையல் புரோகிராம் பண்ணினோம். வீட்டை விட்டு வெளியே போகாம சினிமா எதுவும் பார்க்காம வளர்த்ததால சமையல் கலை நிறைய கத்துக்கிட்டேன். அதெல்லாம் இந்த புரோகிராமுக்கு யூஸ் ஆச்சு’’ என்று நெகிழ்கிறார். நிகழ்ச்சிகளோடு சேர்ந்து கேலக்ஸி நிறுவனமும் வளர்ந்திருக்கிறது. ஆழ்வார் பேட்டை கார் ஷெட்டில் இருந்து மெல்ல மெல்ல கோபாலபுரத்திற்கு மாறியிருக்கிறது கேலக்ஸி. பிறகு அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் ஒரு வாடகை வீட்டில். இப்போ அதே கற்பகம் அவென்யூவில் கம்மீரமாக சொந்த பில்டிங்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
‘’ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு. போகப்போக எல்லாம் தெரிய வந்துச்சு. பொதுவாகவே பொண்ணுங்களுக்கு சிக்கன புத்தி இருக்கும். அதிலும் எனக்கு கொஞ்சம் அதிகம். அது கேலக்ஸிக்கு கைகொடுத்திருக்கு. முதலில் ஒரு நாளைக்கு இரண்டு எபிசோடு மட்டுமே எடுப்போம். இப்போ அனுபவம் இருப்பதால ஒரு நாளைக்கு நாலு எபிசோடு எடுக்குறோம்.
டிவிக்கு நிகழ்ச்சி தயாரிக்கறீங்களே நீங்க சீரியல் எடுக்கலாமேன்னு கேட்குறாங்க. உண்மையை சொன்னா எனக்கு சீரியலே பிடிக்காது. எப்போதும் தூங்குற நேரம் மட்டுமே வீட்டுக்கு போறேன். அம்மாதான் ஒரே மகள் இனியாவையும் வீட்டையும் கவனிச்சிக்கறாங்க. என்னோட அப்பாவும் அவரோட அப்பாவும் தவறிட்டாங்க.


சில பேரு சினிமா எடுக்கலாமேன்னு சொல்லுவாங்க. கேலக்ஸி அதுக்கெல்லாம் தலையாட்டாம அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்ற பழமொழிக்கு ஏத்தபடி போய்க்கிட்டிருக்கு. இப்போ கலைஞர் டிவியில் ‘விடியலே வா’ன்னு புரோகிராம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். எல்லாமே சிரிப்புதான் புரோகிராமும் சக்சஸ் ஆகியிருக்கு.
ஒரு நிறுவனத்துல வேலை பார்த்தா கரெக்ட் டயத்துக்கு போயிட்டு கரெக்ட் டயத்துக்கு வந்துடலாம். வருசத்துல ஏகப்பட்ட லீவு இருக்கு. சொந்த நிறுவனம் என்பதால அந்த சவுகரியம் எல்லாம் இல்லாம போச்சு. ஆனா, பலபேரு வந்து, நாங்க உங்க நிறுவனத்தை முன்னுதாரமா வச்சுத்தான் வந்திருக்கிறோம். கணவனும் மனைவியும் சேர்ந்து வொர்க் பண்ணுறத பார்த்துட்டுத்தான் நானும் என் வொய்ப்பை கொண்டு வந்திருக்கிறேன்... என்றெல்லாம் சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு’’என்று மகிழ்கிறார். புதுசு கண்ணா புதுசு விளம்பரம் பட்டி தொட்டி எல்லாம் முனுமுனுக்கப்பட்டது. அந்த விளம்பரத்தை பண்ணிக்கொடுத்தது ‘சாய் அட்வர்டைசிங்’ என்ற கேலக்ஸியின் ஒரு பிரிவு. பிரிண்ட் மற்றும் விசூவல் மீடியாவுக்கு விளம்பரப் பறிமாற்றம் செய்துவருகிறது சாய் அட்வர்டைசிங்.
‘’எனக்கு தமிழ்,ஆங்கிலம், இந்தி,மலையாளம், தெலுங்குன்னு அஞ்சு லாங்வேஜ் தெரியும். அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியும். இதனால அட்வர்டைசிங்கில் நல்லா பண்ண முடியுது. கேலக்ஸி பப்ளிகேஷன் ஆரம்பிச்சு நான் எழுதுன சமையல் கலை புத்தகங்கள், அவர் எழுதுன கல்வி, பிஸினஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வெளியிடுறோம்’’ என்று சொல்கிறார். இத்தனை மொழிகள் தெரிந்தாலும் அத்தனை மொழியிலும் ஏன் நிகழ்ச்சிகள் செய்யவில்லை என்றால் ‘சீரியல் என்றால் ஒரு லாங்வேஜ்ல உள்ளத அப்படியே டப்பிங் செஞ்சுடலாம். நியூஸ்..அப்புறம் ஒரு மொழியைச்சார்ந்து எடுக்குற புரோகிராமை இன்னொரு லாங்வேஜ்க்கு டப்பிங் பண்ண முடியாது. நேரடியா வேறு மொழிகளுக்கு புரோகிராம் பண்ணனும்கிற எண்ணம் இல்ல. ஆனாலும் சூர்யா மலையாள டிவிக்காக ‘காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு புரோகிராம் பண்ணினோம்’ என்கிறார்.


ஏதோ மலையாள மந்திரம் போலத்தான் இருக்கும். காரியம் திசாரம் பிரஸ்னம் குருதரம்’ன்னு அவர் சொன்னது. ஆனால் அது பிரச்சனை பெருசா இருந்தாலும் ஈஸியா முடிஞ்சிடும் என்ற அற்புதமான தமிழ் அர்த்தத்தை தருகிறது. அது போலவே நல்ல பல நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் கேலக்ஸியும் அர்த்தமுள்ளதாகவே விளங்குகிறது.

No comments: