Thursday 28 May 2009

அப்பா - (மகள் எழுதிய கவிதை)

அப்பா...என் முதல் கதாநாயகன்
என் முதல் தோழன்

தடுமாறும் போது தோள் குடுத்து
தடம் மாறும் போது தட்டி கேட்கும்
என் தோழமை நீங்கள்

சமூகத்து சொல்லம்புகள்
எனை காயப்படுத்தும்போது
என்னை கேடயமாய் காத்தீர்

தாய்பாலுக்கு நிகராய்
தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர்
சுயசிந்தனை சுயமரியாதை என
என்னுள் சிந்தனை விரிந்தது உங்களால்

நான் விழும்போது எனை
எழுப்ப நீளும் முதல் கரம் தங்களுடையது

காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும்
உள்ள வித்தியாசம் உங்களால்
எனக்கு பயிற்றுவிக்கப்பட்டது

எத்தனை பேருக்கு கிடைக்கும்
இப்படி ஒரு தந்தை!!!!!!!!!!!!!!

வாழ்கையில் எனை நோக்கி வரும்
எல்லா இன்னலையும் எதிர்க்கிறேன்
எனக்கு பின் என் அப்பா இருக்கிறார்
என்ற தைரியத்தில்....

அம்மாவின் கடவுள் நம்பிக்கையும்
உங்களின் கம்யூனிசமும் பெரியாரிசமும்
என் அறிவு கண்ணை திறந்தது எனலாம்

வெளிநாடு வரும் வரை மெத்தையில் நான் உறங்கியதை விட
உங்கள் மடியில் உறங்கியதே அதிகம்

இன்று வெளிநாட்டு வசதிகளும், மெத்தைகளும்
உங்கள் அருகில் உறங்கிய நிறைவை தருவதில்லை...

கடவுள் என்றாவது என் முன் தோன்றினால்
நான் ஒரே ஒரு வரம் கேட்பேன்

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கடவுளே !
அப்படி மறுபிறவி என ஒன்று இருப்பின்
என் அப்பாவுக்கே நான் மகளாக வேண்டும் என....

No comments: