Friday, 23 May 2008

எவ்ளோ சம்பளம்?

பொம்பளைங்க கிட்ட வயசைக் கேக்காத, ஆம்பளைங்ககிட்ட சம்பளம் எவ்ளோன்னு கேக்காத’-ன்னு ஏதோ ஒரு சினிமால மனோரமா ஆச்சி ஒரு வசனம் பேசறமாதிரி ஒரு ஞாபகம். ஆம்பளைங்க வாங்கற சம்பளம் ஒரு ப்ரைவசியான விஷயம். ஆனா எது ப்ரைவசியான விஷயமோ அதை தெரிஞ்சுக்கறதுல மக்களுக்கு ஆர்வம் அதிகமாய்டுது. சிலபேரு ‘என்ன சம்பளம் வாங்கறீங்க’-ன்னுகேக்கறதுக்கு ரொம்ப கூச்சப்படுவாங்க. சிலபேரு, ‘உங்க பேரு என்ன?’-ன்னு கேக்கறமாதிரி சதாரணமா கேப்பாங்க. ‘பையன் என்ன சம்பளம் வாங்கறாரு’-ன்னு பொண்ண கொடுக்கறவங்க கேட்டா ஒரு நியாயம் இருக்கு. வர்ற பதில் உண்மைதானா-ன்னு ஆட்களை வெச்சு சரிபார்க்கவும் உரிமை இருக்கு. ஆனா, பஸ்ல பக்கத்துல உக்காந்து பயணம் செய்யறவர்ல இருந்து எல்லோருக்கும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் என்னன்னா அது நாம வாங்கற சம்பளம்தான்.

‘இவன் கிட்ட எவ்ளோ டொனேஷன் வாங்கலாம்’-ன்னு கணக்கு போடறதுக்கு, ‘இவன் ஏதாவது லஞ்சம் கொடுப்பானா?’-ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு, ‘இவன் வாங்கற சம்பளத்தைவிட நம்ம அதிகமா வாங்கறோமா’-ன்னு சுய அனாலிஸிஸ் பண்றதுக்கு, இப்டி பல காரணங்களுக்காக இந்தக் கேள்வி தினமும் கேட்கப்பட்டுகிட்டுதான் இருக்கு.

என் அம்மாவோட வங்கிக் கணக்கு விஷயமா ஊர்ல இருக்குற ஒரு வங்கி-க்கு போயிருந்தேன். அதிகமா சனி, ஞாயிறு ரெண்டு நாள்தான் கிராமத்துல இருக்கோம்-ங்கறதுனால, சனிக்கிழமை காலைல வங்கிக்கு போனேன். ‘சில டாக்குமெண்ட்டுகளை சரி பார்க்க கும்பகோணம் ப்ராஞ்ச்சுக்கு நீங்க போகணும், சார்.’-ன்னு சொல்லி பக்கத்து பெரிய கிளைக்கு அனுப்பினாங்க. ‘இவர் உங்களை கூட்டிகிட்டு போவார் சார்’-ன்னு கூடவே வங்கி உதவியாளர் ஒருத்தரை அனுப்பினாங்க.‘சார், போலாமா சார், வண்டீல வந்தீங்களா’-ன்னு உதவியாளர் தயாரானார்.‘ஆமா சார்’-ன்னு கூட்டிகிட்டு கிளம்பினேன்.‘வண்டி புதுசா சார்?’-ன்னு ஆரம்பிச்சார்.‘ஆமா சார், என் மாமனார் வண்டி’‘ஓ உங்களுக்கு வாங்கி கொடுத்ததா?’‘இல்லை. அவரோடது, திரும்பப் போயி கொடுத்துடணும்’‘பேங்க்ல எல்லா வேலையும் என் தலைலதான் சார். நம்ம அளவுக்கு யாருக்கும் அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இல்லை. எல்லாம் படிச்சுட்டு புதுசு புதுசா வர்றாங்க. கம்ப்யூட்டர் அது இதுங்கறாங்க. யாருக்கும் ஒன்னும் தெரிய மாட்டேங்குது.’‘ஓஹோ’‘நீங்க லோன் அப்ளை பண்ணியிருக்கீங்களா?’‘இல்லை’‘இல்ல, அக்ரி லோன் விஷயமா கும்பகோணம் ப்ராஞ்ச்சுக்கு போறீங்களோ-ன்னு நெனைச்சேன்’வேட்டி கட்டிகிட்டு போயிருந்ததால மாடு வாங்க லோன் போட்ருக்கேன்-ன்னு நெனைச்சுட்டாரு போல.‘நீங்க வேலை பாக்கறீங்களா?’‘ஆமாம்’‘எங்க சார், என்ன வேலை?’‘சென்னைல, ஒரு கம்பெனில’ கம்ப்யூட்டர் வேலை-ன்னு சொல்லிக்கலை. என்னையும் ஒன்னும் தெரியாதவங்க லிஸ்ட்ல சேர்த்துடுவாரோ-ன்னு ஒரு பயம்.‘மாசம் ஒரு பத்து கிடைக்குமா?’எவ்ளோ சம்பளம்-ன்னு கேட்கறதுக்கு இப்டி ஒரு வழி.‘பிடித்தம்லாம் போக ஒரு ஏழு கிட்ட வரும்’. இந்தக் கேள்விக்கு மட்டும் நான் உண்மையை சொல்றது இல்லை-ன்னு மகாத்மா மேல சத்தியம் செஞ்சிருக்கேன்.‘ஏழு வாங்கற ஏழை’-ன்னு சொன்னதும், நம்மளவிட கம்மிதான்-ன்னு ஒரு சந்தோஷம் அவருக்கு. தவிர என்கிட்ட இருந்து ‘ஒன்னும்’ வராது-ன்னும் முடிவுக்கு வந்துட்டார் போல.‘ஏழை வெச்சுகிட்டு செரமம்தான் இல்ல? உங்க வொய்ஃப் வேலை பாக்கறாங்களா?’உனக்கெல்லாம் எவன் பொண்ண குடுத்தான்-ங்கற மாதிரி ஒரு நக்கல் கேள்வி.வண்டியை நிறுத்தினேன்.‘கொஞ்சம் இருங்க பக்கத்து பார்மஸில போயி ஒரு மாத்திரை வாங்கிட்டு வந்துடறேன்’-ன்னு சொல்லிட்டு போயி ஒரு ஹால்ஸ் வாங்கி சப்பிக்கிட்டே வந்தேன்.‘பேங்க் எங்கே இருக்கு?’‘அடுத்த தெருவுலதான்’அப்பாடா-ன்னு இருந்துச்சு.
இன்னொருநாள், சென்னைல ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைல தம்பியோட பைக்க எடுத்துகிட்டு எதோ ஒரு வேலையா கோயம்பேடு வரைக்கும் போனேன். ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்த நேரம். நான் தினமும் பைக் ஓட்றதில்லைங்கறதுனால ஹெல்மெட் போடலை(இப்போ ஹெல்மெட் பழக்கம் வந்துடுச்சு). ஒரு ஷார்ட்ஸ், டீ ஷர்ட், பழைய செருப்பு, நெத்தில கொஞ்சம் விபூதி பூசிகிட்டு கிளம்பிட்டேன். ஞாயிற்றுக்கிழமை காலை-ங்கறதுனால அவ்ளவா ட்ராஃபிக் இல்லை. முதல் பெரிய சிக்னல்ல மாட்டினேன்.‘ஓரங்கட்டு, ஓரங்கட்டு.. ஹெல்மெட் எங்க?’ ஒரு போலீஸ் அமுக்கினார்.‘இல்லை சார், அவசரமா வந்ததுல மறந்துட்டேன் சார்’‘முன்னூறு ரூபாய் அபராதம் கட்டு’‘அவ்ளோ பணம் இல்லைசார்’‘அந்த ஜீப்ல சார் இருக்காரு அவரைப்போயி பாரு’-ன்னு காட்டிட்டு திரும்பவும் தூண்டில போட்டாரு.நான் பைக்க ஓரமா நிறுத்திட்டு ஜீப் கிட்ட போனேன். ஜீப்ல பின்பக்கம் ஒரு போலீஸ் உக்காந்திருந்தாரு. கைல பில் புக்கை வெச்சுகிட்டு, மளிகைக்கடை செட்டியாரை கொஞ்சம் ஞாபகப்படுத்தினாரு.‘என்னப்பா, ஹெல்மெட் போடாம ஏன் வண்டி ஓட்ற?’‘காலம் காலமா எல்லோரும் அப்டிதான ஓட்றாங்க’-ன்னு சொல்ல தோணிச்சு.‘இல்லை சார் அவசரமா கெளம்பினேன். அதான் சார் மறந்துட்டேன். ஹெல்மெட் வீட்ல இருக்கு சார்’‘லைசன்ஸ்ஸ எடு, வண்டி நம்பர் என்ன?’வண்டி நம்பரைப் பார்க்க திரும்பினேன்.‘என்ன வண்டி நம்பர்கூட ஞாபகம் இல்லையா? தொலைஞ்சு போனா எப்டி கம்ப்ளைண்ட் பண்ணுவ?’‘இல்லை சார், இது ப்ரதர் வண்டி, அதுனாலதான்.’‘ப்ரதர் வண்டியா? நீ எங்க வேலை பாக்கற?’‘HCL-ல சார்’‘நீ வண்டி வாங்கலியா?’கார்தான் வெச்சிருக்கேன் சார்-ன்னு நான் ஏன் சொல்லப்போறேன்.‘இல்லை சார்’ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டேன்.‘ஏன்? எவ்ளோ சம்பளம் வாங்கற நீ?’‘எழாயிரம் சார்’ நான்தான் மகாத்மா மேல சத்தியம் பண்ணியிருக்கேனே.‘ஏழாயிரமா? என்னப்பா, என் கூட வேலை பாக்கறவரோட பொண்ணு TCS-ல வேலை பாக்கறா. பதினஞ்சாயிரம் வாங்கறாலாம்?’‘இல்லை சார், நான் இப்போதான் சேர்ந்திருக்கேன்.’‘சாஃப்ட்வேர் கம்பெனிலல்லாம் சேரும்போதே பத்தாயிரத்துக்கு மேல தர்றாங்களாமேப்பா’‘ஆமா சார், நான் ஹார்ட்வேர்ல இருந்தேன். இப்போதான் சாஃப்ட்வேர்க்கு மாறியிருக்கேன். அதுனாலதான் சம்பளம் கம்மி. அடுத்த வருஷம் இன்க்ரிமெண்ட் கெடைக்கும் சார்’ முகத்தில் பாவ ரசத்தை இன்னும் கொஞ்சம் ஊற்றிக்கொண்டேன்.‘நல்லா வேலைபார்த்தா, அமேரிக்கா, ஜப்பான்லாம் போலாங்கறாங்க!!’‘ஆமா சார், நல்ல எக்ஸ்பீரியண்ஸ் கெடைச்சா போலாம் சார். அதுனாலதான் சார் சாஃப்ட்வேர்க்கு மாறினேன்.’‘இங்லீஷெல்லாம் நல்லா பேசணுமாமே?’உன்னைப்பாத்தா தமிழே சரியாப் பேச மாட்ட போலருக்கே-ன்னு ஒரு பாவப் பார்வை பார்த்தாரு. என் முகத்துல இருந்த பாவ ரசம் வேலை செய்யுது.‘ஆமா சார், அதுவும் கத்துகிட்டு இருக்கேன் சார்’.‘சரி சரி ஒரு ஐம்பது ரூபாய் மட்டும் கட்டு, இனிமே ஹெல்மெட் போடாம வராத’.கட்டிட்டு, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
அமெரிக்கால இருந்து இந்தியா வரணும்-ன்னு நெனைக்கற என்னோட நண்பர்களுக்கெல்லாம் நான் ஒரு உரைகல் மாதிரி.‘நம்ம எக்ஸ்பீரியன்ஸ்ஸுக்கெல்லாம் எவ்ளோ மச்சி சம்பளம் தருவாங்க?’ முதல் அட்டெம்ட்.‘அதெல்லாம் நீ நெகோஷியேட் பண்றதுலதான் இருக்கு மச்சி’‘பத்து வருஷம் டாட் நெட் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களுக்கு என்ன போஸ்ட் கிடைக்கும் மச்சி?’‘சீனியர் அனாலிஸ்ட், மேனேஜர், சீனியர் மேனேஜர் எது வேணும்னாலும் கெடைக்கும் மச்சி. நீ பேசறதுலதான் இருக்கு.’‘மேனேஜர்-க்கெல்லாம் எவ்ளோ சம்பளம் கெடைக்கும்?’ அடுத்த அட்டெம்ட்.‘அதுவும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி மச்சி’‘ஒரு ரேஞ்சாவது சொல்லு மச்சி’‘ஒரு பத்துல இருந்து இருபது வரைக்கும்-ன்னு வெச்சுக்கோயேன்’‘நீ எவ்ளோ மச்சி வாங்கற’ கடைசி அட்டெம்ட்.என் சத்தியத்துக்கு பங்கம் வராம, பத்து, பண்ணெண்டு, பதினைஞ்சு, பதினெட்டு, இருவது இப்டி எதாவது ஒரு நம்பர் சொல்லிடுவேன்.
இன்னும் பலபேர் இதே கேள்விய இன்னும் பலவிதமா கேட்ருக்காங்க. அப்பாகூட வேலை பார்த்த அங்கிள், பக்கத்து வீட்டு மாமி, டீக்கடை மொதலாளி, இன்ஸூரண்ஸ் ஏஜண்ட், க்ரெடிட் கார்ட் சேல்ஸ் வுமன், இன்னும் நெறைய பேர்.‘என்ன வாங்கற தம்பீ?’, ‘ஒரு இருபது கெடைக்குமா?’, ‘கம்பெனில என்ன கொடுப்பாங்க?’, ‘சம்பளம் எவ்ளோ சார்?’-ன்னு விதவிதமான கேள்விகள். ஒவ்வொருத்தர்கிட்டையும் ஒவ்வொரு பதில் சொல்லியிருக்கேன். அவங்க யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியம். அப்டியே பேசிகிட்டாலும், அவங்கவுங்க சம்பளங்களைப் பத்தி பேசிப்பாங்களேத் தவிர என்னோட சம்பளத்தைப் பத்தி பேசமாட்டாங்க-ன்னு ஒரு நம்பிக்கை.
ஒன்லீ ஒன் பர்ஸன், ஒரே ஒருத்தர்கிட்ட மட்டும்தான் என்னோட உண்மையான சம்பளத்தை சொல்லுவேன். அது வேற யாரும் இல்லை. நீங்கதான். என் உண்மையான சம்பளம் என்ன-ன்னு உங்ககிட்ட மட்டும்தான் சொல்லலாம்னு இருக்கேன். சொல்லட்டா?

No comments: