Friday 23 May 2008

ஆரோக்கியமாய் வாழ்வது கடினமல்ல…

ஆரோக்கியமான வாழ்வு கடினமானதா ? எளிதானதா ? கேள்விகள் காலம் காலமாய் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
வாழ்க்கை அவசரங்களின் பைகளில் மனிதர்களைத் திணித்து விட்டது. யாரும் ஆர அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம்.

இதோ, இந்த பத்து செய்திகளையும் மனதில் கொள்ளுங்கள்.

1. தினமும் காலையில் தவறாமல் காலை உணவு உண்ணுங்கள். காலையில் உணவு உண்பது அதிக வைட்டமின்களையும் தேவையான சத்துகளையும் உடல் பெற்றுக் கொள்ள உதவுகிறது. குறைந்த அளவு கொழுப்பே உடலில் சேர்கிறது.

அமெரிக்காவிலுள்ள இதயம் தொடர்பான ஆராய்ச்சி ஒன்று “காலை உணவை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில், காலை உணவை தவறாமல் உண்பவர்கள் பிற்காலத்தில் நீரிழிவு, அதிக எடை போன்ற சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு குறைவு” என்று முடிவு வெளியிட்டிருந்தது.
நேரமில்லை என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் அலுவலகத்திற்கு காலை உணவை கையோடு எடுத்துக் கொண்டு வந்தேனும் உண்பதே நல்லது.

2. நன்றாகத் தூங்க வேண்டும். இன்றைய அவசர உலகம் பல்வேறு காரணங்களைக் கூறி தூக்கத்தின் நீளத்தைக் குறைக்கிறது.
தேவையான அளவு (ஏழு முதல் எட்டு மணி நேரம் ) தூக்கம் கிடைக்காதவர்களின் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. அலுவலகப் பணிகளிலும், தனிப்பட்ட பணிகளிலும் கவன சிதைவுக்கு இது காரணமாகி விடுகிறது. பல்வேறு நோய்களுக்கும் இது விண்ணப்பம் விடுகிறது.

3. உடற்பயிற்சி செய்யுங்கள். உலகில் முக்கால் வாசி பேர் எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.
உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருப்பது மனதை உற்சாகத்துடன் வைத்திருக்கவும், தீய பழக்கங்களிலிருந்து விடுபடவும் உதவும்.
செய்யும் வேலையிலேயே உடற்பயிற்சிக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடக்க வேண்டும். அலுவலகத்திலும், வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் நடந்து கொண்டே இருப்பது நம்மை அறியாமலேயே நமக்கு உடற்பயிற்சியாய் அமைந்து விடுகிறது.

லிப்ட்டை புறக்கணித்து படிகளில் ஏறி இறங்குவது, கடைகளின் உள்ளே நடந்து திரிவது, பக்கத்து தெருவுக்கு நடந்தே போய் வருவது என சிறு சிறு செயல்கள் மூலமாகவே உடலுக்கு சற்று ஆரோக்கியம் வழங்க முடியும்.
ஆரோக்கியமான உடலே நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய பரிசு.

4. பற்களைக் கவனியுங்கள். உடலைப் பாதுகாக்க நாம் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட பல்லைப் பாதுகாக்க நாம் செலவிடுவதில்லை.

பல் வலி வருவதற்கு முன்பாக பல் மருத்துவரிடம் செல்லும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மையைச் சொல்வதெனில் பற்களை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்வதன் மூலம் ஆயுளில் 6.4 ஆண்டுகளைக் கூட்ட முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.5. உணவில் மீன் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் சிறந்தது. மீனிலுள்ள ஒமேகா – 3 எனும் அமிலம் அலர்ஜி, ஆஸ்த்மா, தலைவலி, இதயம் தொடர்பான நோய்கள் போன்றவற்றைத் தடை செய்வதில் உதவுகின்றன.6. கொறித்தலை வகைப்படுத்துங்கள். தேனீர் இடைவேளைகள் போன்ற நேரங்களில் வறுத்த, பொரித்த வகையறாக்களை கட்டுவதை விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறி சாலட்களை உண்ணுங்கள்.

தேனீருக்கு டீ குடியுங்கள். பால் இல்லாமல் டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது.

7. நிறைய தண்ணீர் குடியுங்கள். மிகவும் எளிதான ஆனால் பலரும் செய்யாத செயல் இது தான். தண்ணீர் குடிக்க மறந்து விடுதல் பல நோய்களை இழுத்து வரும்.

உடலின் உறுப்புக்களை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் ஒரு எளிய வழி நிறைய சுத்தமான தண்ணீர் குடிப்பதே என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

இது இதய நோய், சிறுநீரகக் கற்கள், உயர் குருதி அழுத்தம் உட்பட பல நோய்களை தடுக்கிறது. உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது.

8. சமூகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு குழுவில் இணைந்தோ, அல்லது சமூக நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டோ சமூக நிகழ்வுகளில் பங்கு பெறுங்கள்.

மனிதன் குழுவாக வாழ படைக்கப்பட்டவன், தனிமைத் தீவுகளுக்குள் அடைபடுவதை விட சமூக வனத்துக்குள் சுற்றி வருவது மனம், உடல் என இரண்டையுமே சுறுசுறுப்பாக்கும். பாதுகாப்பு உணர்வும் அதிகரிக்கும்.

9. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாழ்வில் எட்ட முடியாத இலட்சியங்களையும், தேவையற்ற எதிர் மறை சிந்தனைகளளயும் ஒதுக்கி விடுங்கள்.

குடும்ப உறவுகளை பலப்படுத்தி வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான கோடு கிழியுங்கள்.

திட்டமிடுங்கள். உணவு, வேலை, குடும்பம் என அனைத்து செயல்களையும் சரியான முறையில் திட்டமிடுங்கள்.

10. ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். உங்களை மிகவும் ஆனந்தமடையச் செய்வதாகவும், மனதை இலகுவாக்குவதாகவும் இருக்கவேண்டும் அது.

எழுதுவது, வாசிப்பது, இசை கேட்பது, தோட்டம் வைப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என எதுவானாலும் உங்களை மிகவும் வசீகரிக்கும் ஒன்றை பற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்துதலை அவை தரும்.
இந்த எளிய வழிகளைக் கடைபிடிப்பது தேவையற்ற நோய்களை நம் வாசலோடு அனுப்பி விடவும், உடல் நலத்தை வீட்டுக்குள் வரவேற்கவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை

நன்றி கவிதை சோலை இணையத்தளம் !

No comments: