Thursday 22 May 2008

பேச்சிலர் மட்டன் குழம்பு

சனிக்கிழமை சாயந்திரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்திருச்சேன். வழக்கம் போல இண்டர்நெட்டை கொஞ்சம் மேய்ந்து விட்டு டிவியை ஆன் பண்ணி கொஞ்சம் நேரம் பார்த்தேன். ஏதாவது சமையல் செய்யலாம் அப்படின்னு தோணிச்சு. சனிக்கிழமை நைட் தான் நான் பெரும்பாலும் சமையல் செய்வேன். சமையல் செஞ்சிட வேண்டியது தான்னு முடிவு செய்து ஆரம்பிச்சேன். மட்டன் குழம்பு செஞ்சிடலாம்னு முடிவு செய்தேன். இண்டர்நெட்டுல சமையல் குறிப்பு எல்லாம் பார்த்து சமையல் செய்றது நம்ம மாதிரி பேச்சுலர்களுக்கு சரி வராது. அவங்க குறிப்பு சொல்ற பொருளை எல்லாம் நம்மால தேட முடியாது.
அதனால பேச்சிலர்களுக்கான சிம்பிளான சமையல் குறிப்பு
முதல்ல இரண்டு நாளைக்கு முன்னால ப்ரிட்ஜூல வாங்கி வைச்சிருக்கிற மட்டனை எடுத்து சுடுதண்ணியில கொஞ்ச நேரம் போடணும். கெட்டியா இருந்த மட்டன் லேசா ஆனவுடன் சின்னதா வெட்டனும். அதை நல்லா சுடுதண்ணியில கழுவி கொஞ்சம் மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு எல்லாம் போட்டு கொஞ்ச நேரம் ப்ரிட்ஜூல ஊறல் போடணும்.
அப்புறம் வெங்காயம், தக்காளி இரண்டையும் கட் பண்ணி வைக்கணும். கொஞ்சம் வெங்காயம், இஞ்சி-பூண்டு மிக்ஸ், தேங்காய் எல்லாத்தையும் மிக்சியில அரைத்து தனியா வைக்கணும். Frozen தேங்காய் தான் நான் பெரும்பாலும் பயன்படுத்தறது வழக்கம். கொஞ்சம் சோம்பேறித்தனமா இருந்தா மிக்சியில அரைக்க மாட்டேன். நேரா பாத்திரத்துல போட்டுவேன்.
அப்புறம் ஒரு பாத்திரத்துல எண்ணெய் போட்டு, கடுகு-உளுத்தம்பருப்பு இரண்டையும் போட்டு கடுகு வெடிச்சதும் வெங்காயத்தை போடணும். நல்லா வதக்கியதும் அப்புறம் தக்காளியை போடணும். தக்காளியும் நல்லா வதங்கியதும் கொஞ்சம் உப்பு, சக்தி மட்டன் மசாலா இரண்டையும் போட்டு நல்லா வதக்கணும். அப்புறம் இந்த வெங்காயம்-தேங்காய்-இஞ்சி-பூண்டு மசியலை எடுத்து பாத்திரத்துல கொட்டணும். கூடவே ப்ரிட்ஜூல ஊறல் போட்ட மட்டனையும் போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து உப்பு, காரம் பதம் எல்லாம் பார்க்கணும். உப்பு, காரம் குறைவா இருந்தா கொஞ்சம் உப்பு, காரம் போட்டு கொதிக்க வைக்கணும். அதிகமா இருந்தா ? நல்ல கேள்வி தான். நான் எப்பவுமே ஆரம்பத்துல குறைவா போடறது தான் வழக்கம். குறைவா போட்டு கடைசியா சரி பண்ணிக்கலாம். அதிக உப்பு இருந்தா கொஞ்சம் தயிர் சேர்த்துக்கலாம்.
எல்லாம் நல்லா இருந்துச்சின்னா இறக்கி வைச்சு ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான்.
இந்தியன் ரெஸ்டரண்ட்ல சாப்பிடறை விட இது ரொம்ப நல்லாவே இருக்கும். எனக்கு அப்படி தான் இருந்துச்சு.

No comments: