படம் ஒரு வீட்டுத் தோட்டத்தில் துவங்குகிறது. புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்ச்சில் வயதான அப்பாவும் அவரது மகனும் உட்கார்ந்துஇருக்கிறார்கள். மகன் நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டு இருக்கிறான். அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம். புல்வெளியைப் பார்த்தபடியே இருக்கிறார். அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக் கிளையில் உட்காருகிறது. அதை அப்பா கவனமாகப் பார்க்கிறார். குருவி தாவிப் பறக்கிறது. அது என்னவென்று மகனிடம் கேட்கிறார். அவன் குருவி என்று சொல்லிவிட்டு பேப்பர் படிக்கிறான். அவர் மறுபடியும் அதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, அது என்னவென்று கேட்கிறார்.
அவன் குருவி என்று அழுத்தமாகச் சொல்கிறான். இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது. அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார். மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவிப்பா. கு... ரு... வி...' என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொல்கிறான். குருவி ஒரு கிளை நோக்கிப் பறக்கிறது. அப்பா மறுபடி கேட்கிறார்... அது என்ன? மகன், ''குருவி... குருவி என்று எத்தனை தடவை சொல்வது? உங்களுக்கு அறிவு இல்லையா?'' என்று கோபத்தில் வெடிக்கிறான். அப்பா மௌனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, ''உரக்கப் படி'' என்கிறார். அவன் சத்தமாகப் படிக்கிறான்.
'என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்துப் போனேன். அங்கே ஒரு குருவி வந்தது. அது என்னவென்று பையன் கேட்டான். குருவி என்று பதில் சொன்னேன். அவன் அதை உற்றுப் பார்த்துவிட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான். நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன். திருப்திஅடை யாத என் மகன் 21 முறை அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தான். நான் எரிச்சல் அடையாமல், கோபம்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் சந்தோஷமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டேன்!' என்று அந்த டைரியில் உள்ளது.
டைரியைப் படித்து முடித்த மகன், அப்பா போல ஏன் பொறுமையாகத் தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல, அப்பாவின் தலையைக் கோதி அவரைக் கட்டிக் கொள்கிறான். அத்துடன் படம் முடி கிறது.
2 comments:
Nice Story. . . . .
This story is better than vijay's movie 'kurivi' ......
Post a Comment