Monday, 30 March 2009

உங்களுக்குள்ளே ஒரு எதிரி

உங்களுக்குள்ளே ஒரு எதிரி இருக்கிறான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான முடிவுகளையும் அந்த எதிரி தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் அது உண்மையே. அது மட்டுமல்ல, பெரும்பாலான கருத்துக்களை அந்த எதிரி தான் உங்கள் மேல் திணித்துக் கொண்டு இருக்கிறான். உங்கள் வாழ்க்கையின் லகானை அவன் தான் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறான். உண்மையில் அவன் உள்ளே இருக்கிறான் என்ற உணர்வே உங்களிடம் இல்லை. (இல்லாமல் அவன் பார்த்துக் கொள்கிறான்). அவனைக் கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்கில்லை. ஆனால் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அவனுக்கு இருக்கிறது. நான் சொல்வது சரிதானா இல்லை சற்று மிகைப்படுத்திச் சொல்கிறேனா என்ற சந்தேகம் பலருக்கும் வரக்கூடும். யாராவது அப்படி ஒரு எதிரியைத் தனக்குள்ளே விட்டு வைத்திருப்பார்களா என்ற நியாயமான கேள்வியும் எழக்கூடும். சற்று ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உண்மையை நம்மால் உணர முடியும்.ஒரு எதிரியை உங்களால் எப்படி அடையாளம் காண முடிகிறது?


உங்கள் நலனை சிறிதும் விரும்பாது, உங்கள் நன்மை¨க்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போடும் நபரை, உங்கள் மனநிம்மதியைக் கெடுக்கும் நபரைத் தான் நீங்கள் எதிரியாகக் காண்பீர்கள். இல்லையா? சரி வாருங்கள். உங்கள் எதிரியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.நீங்கள் உங்கள் உடல்நலனில் இனி அக்கறை காட்ட வேண்டும் என்று சீரியஸாக முடிவெடுக்கிறீர்கள். நாளை முதல் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும் என்றோ அதிகாலையில் எழுந்து அரை மணி நேரம் வாக்கிங் போக வேண்டும் என்றோ உறுதி எடுத்துக் கொள்கிறீர்கள். மறுநாள் காலை எழுந்து அதைச் செய்தும் விடுகிறீர்கள். அன்றெல்லாம் உற்சாகமாக இருக்கிறீர்கள். ஒரு நல்ல முடிவெடுத்து அதை செயல்படுத்துவதை விட உற்சாகமான விஷயம் வேறு இருக்கிறதா என்ன?இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ உங்கள் எதிரி அதை சகித்துக் கொள்ள மாட்டான். காலை எழும் போது மெல்ல சொல்வான். "இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....". ஒருநாளில் என்ன கெட்டுப் போகிறது என்று நீங்களும் விழித்தவர்கள் மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். அது அடுத்த நாளும் தொடரும். சில நாள்களில் அந்த நல்ல பழக்கம் முழுவதுமாகக் கை விடப்படும். நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்கள் எதிரி ஜெயித்து விட்டான். ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட உங்கள் எதிரி அனுமதிக்க மாட்டான்.


உங்கள் எதிரி ஒரு கெட்ட பழக்கத்தைக் கைவிடவும் உங்களை அனுமதிக்க மாட்டான்.உங்களை நம்ப வைப்பது எப்படி என்று உங்கள் எதிரிக்குத் தெரியும். நீங்கள் மறுக்க முடியாத வாதங்களைச் சொல்வான். "எதிர்த்த வீட்டுத் தாத்தாவுக்கு ஹை பீபி. ஹை ஷ¤கர். ஆனா அவர் எதையாவது சாப்பிடாம விடறாரா பாரேன். எல்லாம் சாப்பிடுவார். கடைசியில் மாத்திரையும் போட்டுக்குவார். அவருக்கு இப்ப வயசு 75. நல்லா நடமாடிட்டு தானே இருக்கார்". உங்களுக்கு எதிர்வீட்டுத் தாத்தா ஆதர்ச புருஷர் ஆகி விடுவார். இப்படி எத்தனையோ அவன் லீலைகள். ஒவ்வொருவரிடமும் எதிரி ஒவ்வொரு விதமாக செயல்படுவான்.உங்களுக்கு வரும் வருமானம் தாராளமாகப் போதும். அதை வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அவன் சொல்வான். "என்ன பிச்சைக்காசு. உன்னை விடக் கம்மியா மார்க் வாங்கின ரவி இப்ப என்ன சம்பளம் வாங்கறான் தெரியுமா? போன மாசம் கூட யூரோப் (Europe) டூர் போயிட்டு வந்திருக்கான். உன் சம்பாத்தியத்தில் போக முடியுமா? உன் ·ப்ரண்ட் வர்கீஸ் கம்பெனில அவனுக்கு ·ப்ரீயா கார் கொடுத்து பெட்ரோல் அலவன்ஸ¤ம் தர்றாங்க. நீ இன்னும் ஸ்கூட்டர்லயே இருக்கிறாய்.". உங்கள் நிம்மதி போயிற்று.


குடும்பத்திலோ ஆபிசிலோ நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். அதை உணர்ந்து விடுகிறீர்கள். உங்கள் எதிரி சம்பந்தப்பட்டவர்களிடம் உங்களை மன்னிப்பு கேட்க விடமாட்டான். அது தப்பே இல்லை என்று சாதிப்பான். முடியாத போது "எவன் தப்பு செய்யல? அவன் கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும். அவன் உன் தலைக்கு மேல ஏறி உட்காரவா? அவன் என்ன தப்பே செய்யாதவனா?" சிறு மன்னிப்பால் முடிந்து விடக்கூடிய மனக்கசப்புகள் பெரிதாகி பகைகள் வளர்த்தப்படும். உறவுகளும் நட்புகளும் முறிந்து போகும். அடுத்தவர்களுடன் ஒப்பிடச் செய்வது உங்கள் எதிரி. உங்களிடம் என்னவெல்லாம் இல்லையென்பதை மறக்க விடாதிருப்பது உங்கள் எதிரி. சோம்பலை வளர்ப்பது உங்கள் எதிரி. எத்தனை வந்தாலும் போதாது என பேராசைப்பட வைப்பது உங்கள் எதிரி. கட்டுப்பாடில்லாமல் அலைய விடுவது உங்கள் எதிரி. அகங்காரம் கொள்ள வைப்பது உங்கள் எதிரி. அடுத்தவர்களின் குறைகளைப் பட்டியல் போட்டு பெரிதாக்கிக் காட்டுவது உங்கள் எதிரி. பொறுமையை கையாலாகாத்தனம் என்று நம்ப வைப்பது உங்கள் எதிரி. மன உறுதியைக் குலைத்து சஞ்சலப்படுத்துவது உங்கள் எதிரி.....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.அந்த எதிரியை எதிரியாகவே உங்களால் எண்ண முடியாததால் அவனுக்கு உங்களிடம் எதிர்ப்பே இருப்பதில்லை என்பது அவனுடைய மிகப்பெரிய பலம். அவனுடைய குரலை உங்கள் குரலாகவே நீங்கள் நினைக்க ஆரம்பித்து விடுவதால் அவன் இருப்பதும் செய்வதும் உங்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது. முதலில் அவனைப் பிரித்து அடையாளம் காணுங்கள். அதுவே அந்த எதிரியை அழிக்க நீங்கள் எடுக்கக்கூடிய முதல் நடவடிக்கை.ஆறறிவையும் பயன்படுத்தி, நியாய அநியாயத்தை உணர்ந்து, நல்லது கெட்டது இதுவெனத் தெளிந்து நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்யும் போது தான் அந்த எதிரியை அடையாளம் காண முடியும். (இதையே நம் முன்னோர் ஆத்ம விசாரம் என்று சொன்னார்கள்.)அடுத்த நடவடிக்கை அவன் குரல் உங்கள் குரலல்ல என்று உணர்ந்து அலட்சியப்படுத்துவதே. மேலே சொன்ன உதாரணங்களையே எடுத்துக் கொள்வோம்.

"இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....". என்று சொல்லச் சொல்ல அதை ஒரு கணமும் பொருட்படுத்தாமல், "இது என் ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்று எழுந்து உடற்பயிற்சி செய்வதையோ, வாக்கிங் போவதையோ நடைமுறைப்படுத்துங்கள். அந்தக் குரல் காணாமல் போகும். அந்த எதிரி வர்கீஸையோ, ரவியையோ உதாரணம் காட்டுகையில் "சும்மா இரு. உண்மையான சந்தோஷத்துக்கு காரோ, யூரோப் டூரோ வேண்டும் என்று யார் சொன்னது?" என்று உண்மையைச் சொல்லி எதிரியை வாயடைக்க வையுங்கள். மன்னிப்பு கேட்க வேண்டாம் என்பதற்கு எதிரி காரணங்கள் கூறும் போது, "தப்பு என்று உணர்ந்த பின் மன்னிப்பு கேட்க வெட்கப்படுவானேன்" என்று உறுதியாக எண்ணி அப்போதே மன்னிப்பு கேட்டு உறவுகளையும், நட்பையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் எதிரியின் மிகப்பெரிய சித்தாந்தம் இது தான். "விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே. இப்போது அனுபவி. பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது செய்து சரி செய்து விடலாம்". அதன்படி நடந்தால் பிறகு பார்க்கவும், சரி செய்யவும் எந்த நல்லதும் மிஞ்சாது என்பதே உண்மை. அப்போதெல்லாம் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள். "எண்ணித் துணிக கருமம். துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு". அந்த எதிரியின் சித்தாந்தத் தூண்டிலுக்கு இரையாகாதீர்கள். இதையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால் விழிப்புணர்வும், உறுதியும் இருந்தால் இது முடியாததும் அல்ல. எதிரியின் குரல் மெல்ல ஒலிக்கையில் அதை உங்கள் குரலென்று குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் நலம் எது என்று தெளிவாக உணருங்கள். அதைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். உங்களை உயர்த்த உதவும் எதையும் செய்யாமலும் இருக்காதீர்கள். உங்கள் எதிரிக்கு அந்த இரண்டுமே உயிர்க்கொல்லிகள். அவன் உங்களுக்குள் வசிக்க மாட்டான்.

Friday, 27 March 2009

கடைசி பக்கம்.... (ஒரு பக்க கதை)

டேய் முருகா சீக்கிரம் கிளம்புடா என்று அவனுடைய அம்மா சொல்லும் பொது, முருகன் அந்த புத்தகத்தை படித்து முடிப்பதில் தீவிரமாய் இருந்தான். 'கடைசி நிமிடம்' என தலைப்பிட்ட அந்த கதையின் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த அவன், கதையின் முடிவை கொண்ட கடைசி பக்கம் இல்லாததை கண்டு திடுக்கிட்டான். 'ஒ' என்று சொல்லியபடியே கண்ணை மூடிய போது, நேற்று மாலை நடந்த விஷயம் நினைவுக்கு வந்தது.

கடைசி கப் சுண்டல் விற்றபோது இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை கிழித்து ஒரு ஜோடிக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தவனாக, அம்மாவிடம் சொல்லிவிட்டு சுண்டல் விற்க மெரீனா நோக்கி சென்று கொண்டிருந்தான் 7 வது படிக்கும் முருகன்.

- சூரியபிரகாஷ். வா

Wednesday, 25 March 2009

The Layoff Tales:

Name: Charan Sethi (name changed) Age: 26 Company/Sector: IT/Telecommunications Work experience: 5 years with an IT/Telecom companies.

Background:
I worked in the Bangalore division of a California-based WiMax startup. We had only 50-60 people in the Bangalore division. Due to bad economic times, our company started feeling the heat because the products didn't sell, the cash was burning and fresh funding was hard to come by -- in short, there was a money crunch.

How I lost my job :
One fine day in February '09, two gentlemen from the US arrived and announced that the company was closing down its Bangalore centre. Everybody was shocked. We were given a one month notice period (the company was being nice !). I remember, for three months prior to this announcement, I worked day and night. Everybody was working hard. And when you give your 100 percent and you get this kind of treatment, it's really disappointing.

Financial liabilities:
I have taken a home loan for which I pay Rs 35,000 per month as EMI. I had three lakhs to pay up as cash balance, thanks to my 'investments' in the stock market and courtesy my expenditure to build my dream home. I had put all my cash savings in the stock market in 2008 (buying at a lower price). And further, I had borrowed 3 lakhs from my family and friends for the interiors of my home.

Further, we were in talks with a family for a marriage alliance for me. No job for me would have jeopardised the talks. It was a very rough period.

Tough job hunt:
I had been preparing for interviews for the past few months (in anticipation?). But I was always putting them off -- I thought, 'I'll take the plunge (launch an active hunt) after 10 days or 15 -- I am not just prepared! I need some more time'.

I made all kinds of excuses for myself. I had been doing this for two-three months.
Luckily, even with procrastination, I had scheduled an interview with a big giant in telecom even before my company closed down. It played out like this: late on a Friday, the company closure was announced. On Monday morning, I was interviewing with the new employer. And four days later, again on a Friday, I received an offer (with the same CTC) in my hand. And thus I was saved! But, due to procrastination, I was on the backfoot and not in a position to negotiate on my terms.

Lessons learnt:
Don't procrastinate. If you feel that there is something to be done, do it. Don't put off your decisions to a further date.
Never ever -- I repeat -- never ever, put the money you need (or will need in some time) in the stock market.
Keep cash reserves handy for at least six months of your expenditure (including fixed expenses like EMIs etc) -- especially if you are highly leveraged (have huge liabilities).
The key to interview success -- confidence. No matter how much you know or don't know -- confidence is the key.
Work hard. Whether it benefits your company or not, it will surely benefit you.
Stay foolish. Learn, learn and learn more. Money may help you but knowledge WILL.
Stay informed. Keep your market knowledge updated. Stay current with what is going on, what's going on in your company. Else you might be caught on the wrong foot.

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!!!

மால் என்றவுடன் உங்களுக்கு ஏதேனும் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்து நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்பவே ராம் கோபால் வர்மா படம் பார்ப்பவராக இருப்பீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

திருமால் நினைவுக்கு வந்தால் மார்கழி குளிரில் சுடசுட வெண்பொங்கலுக்கு பஜனை செய்தவராக இருப்பீர்கள். போகட்டும்,பெருமாள் உங்களையும் காப்பாத்தட்டும்.

இதையெல்லாம் மீறி தமிழர்களிடையே ஒரு மால் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை மாதிரி சென்னைவாசிகளுக்கு ஸ்பென்சர் தவிர இன்னொரு மால் தான் சிட்டி சென்டர். (இன்னுமா தமிழ்ப்படுத்தலை?)

அன்றாட வாழ்வில் நாம் என்னவெல்லாம் பயன்படுத்த மாட்டோமோ அதையெல்லாம் கடை போட்டு, லைட்டு போட்டு கடை பரத்தி வைத்திருக்கிறார்கள். சிறிது பயம் கலந்த ஆர்வத்துடன் மக்கள் எஸ்கலேட்டரில் கால் பதிக்கிறார்கள். அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள். லேண்ட் மார்க்கில் நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சிடி வாங்கும் சாக்கில் பலர், ஏசியில் அமர்ந்து ஒசியில் பாட்டு கேட்கிறார்கள். இன்னும் சிலர் கையில் டிபன் பாக்ஸ் எல்லாம் கட்டி கொண்டு புக்ஸ் செக்சனில் சம்மனம் போட்டு அமர்ந்து யவன ராணி படித்து கொண்டிருக்கிறார்கள்.

புஃட் வேர்ல்டில் தம் குழந்தைகளுக்கு செர்லாக் தேடும் அம்மாக்கள், காஸ்மெடிக்ஸ் செக்சனில் கோத்ரேஜ் டை தேடும் அரக்கு கலரில் லிப்ஸ்டிக் அடித்த ஆன்டிக்கள், இடது கையில் பாப்பின்ஸ் வைத்து கொண்டு, வலது கைக்கு டெய்ரி மில்குக்கு அடம் பிடிக்கும் டெனிம் ஜீன்ஸில் டிராயர் அணிந்த மஷ்ரூம்கட் செட்டிநாட் வித்யாஷ்ரம் குழந்தைகள், பில்லுக்கு கார்டு தேய்க்கவும், ட்ராலி தள்ள மட்டுமே அழைத்துவரப்படும் அப்பாவி கணவன்மார்கள், யார்ட்லி (ஒரிஜினல்) யார்ட்லி (டூப்ளிகேட்), டாமி பாய்/கேள், ஓல்ட் ஸ்பைஸ் என கலவையாய் மணக்கும் கசகச மக்கள், எதையோ தேடி, எதையோ வாங்கி, எங்கோ ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத எடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என அறிவிக்கப்படா விதிப்படி பெண்களுக்கு கை, காது, மூக்குக்கு என தோரியம் நீங்கலாக பூமியில் கிடைக்கும் எல்லா மெட்டல்களிலும் நகைகள் கொட்டிக் கிடக்கிறது. பெண்ணுக்கு அழகு புன்னகையே! என கல்யாணமான புதிதில் சாலமன் பாப்பையா மாதிரி நான் தீர்ப்பு சொன்னதில் நொந்து போன என் மனைவி அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார் என நினைத்தது சில வினாடிகளில் தப்பா போச்சு.

அந்த பிளாக் கலர் டாப்ஸ் போட்ட பொண்ணை தானே பாத்தீங்க? என அம்மணி அதிரடியாய் கேட்க, "கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது!" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு.

சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும் போலிருக்கு. எங்க போகணும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள்.

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!

Tuesday, 24 March 2009

ஒரு டெஸ்டரின் (SOFTWARE TESTER) டைரி குறிப்பு

சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது. இது எப்பொழுதிலிருந்து எனக்கு பிடிக்காம போச்சுனு ஞாபகமில்லை. ஒரு வேளை எங்க அம்மாவை எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்குற எங்க அத்தை தான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். காலேஜ்ல எங்க கூட படிச்ச கார்த்தி அப்படி தான், யார் எது பண்ணாலும் ஏதாவது தப்பு கண்டுபிடிச்சி சொல்லிட்டே இருப்பான். அந்த காரணத்துக்காகவே என் எதிரி லிஸ்ட்ல அவன் நம்பர் ஒன். நான் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.

எதுக்குடா இப்படி இவன் வரலாறு எல்லாம் சொல்லிட்டு இருக்கானேனு யோசிக்கறீங்களா? இப்படி எனக்கு சுத்தமா பிடிக்காத ஒரு விஷயமே என் வாழ்க்கையாகி போகும்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலை. என்ன சொல்றனு புரியலையா? படிக்க ஒரு பிரிவு, வேலைக்கு ஒரு பிரிவுனு கஷ்டப்படும் இஞ்சினியர்களில் நானும் ஒருவன். படிச்சது எலக்ட்ரானிக்ஸ், வேலை கிடைச்சது சாப்ட்வேர் ஃபீல்ட். அதுவும் ஒரு பெரிய இந்தியன் கம்பெனி. மூணு மாசம் ட்ரெயினிங். அட்டகாசமா இருந்துச்சு.

ட்ரெயினிங் முடிச்சி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு டொமைன்ல போட்டாங்க. எனக்கு மட்டும் என் வாழ்க்கைலயே வெறுக்கற ஒரு வேலைல போட்டாங்க. அது தான் டெஸ்டிங். எவனோ டெவலப் பண்ற ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதானு பார்த்துட்டு அதுல இருக்குற தவறை (பக்) எல்லாம் கண்டுபிடிக்கனும். அப்படி கண்டுபிடிக்கிற தவறு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு பார்த்து எதுக்கு ஏத்த மாதிரி Severity, Priority எல்லாம் போட்டு டெவலப்பர்ஸ்க்கு அனுப்பனும்.

அவுங்களும் எடுத்தவுடனே அதை ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கு அப்பறம் அவனோட பங்காளி சண்டை போடணும். ஏதோ மாமியார், மருமக சண்டை மாதிரி இருக்கும். எனக்கு வேலை செய்யுது. நீ சரியா பண்ணலனு அவன் சொல்லுவான். அப்பறம் நாம அவனுக்கு அதை விளக்கனும். நீ டெவலப் பண்ண அப்ளிக்கஷன்ல தப்பு இருக்குடானு சொல்றது ஏதோ திருவிளையாடல் படத்துல நக்கீரன் சொல்ற மாதிரி இருக்கும். அவன் நம்மல பார்க்கும் போது, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் ரேஞ்சுக்கு பார்ப்பான். சில சமயம் நம்மல பத்தி சொல்லும் போது பூச்சி பிடிக்கறவனு சொல்லுவாங்க.

சில சமயம் கம்பெனி மாறி டெக்னாலஜி மாறிடலாம்னு தோணும். ஆனா இன்னைக்கு இந்தியாவுல அதிக பிராஜக்ட்ஸ் டெஸ்டிங்ல தான் இருக்குது, அப்பறம் இதுல இருந்தா சீக்கிரம் ப்ரோமோஷன் கிடைக்கும், டொமைன்ல எக்ஸ்பர்ட் ஆகலாம்னு என் மேனஜர் திரும்ப திரும்ப சொல்லி என்னை இதுலயே இருக்க வெச்சிட்டார். சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.

இப்படி தான் சிவாஜிக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் புக் பண்ணிட்டு கிளம்பற நேரம் பார்த்து ஒருத்தவன் வர முடியலைனு சொல்லிட்டான். வெள்ளிக்கிழமை அதுவுமா அவன் டெஸ்டிங் டீம்ல நிறைய பக் ரைஸ் பண்ணிட்டாங்க அதனால மொத்த டீமும் சனிக்கிழமை வர வேண்டியதா போச்சுனு சொல்லி, அந்த பக் ரைஸ் பண்ணவன் ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு, அவனுக்கு வேற வேலை வந்து ஃபர்ஸ்ட் நைட்டே கேன்சலாகனும்னு திட்டினான். இந்த மாதிரி எவன் எவன் நமக்கு என்ன சாபம் விடப்போறானோனு இருந்தது. அவன்கிட்ட ஏன்டா மச்சான் இப்படி பர்சனலா திட்றனு கேட்க முடியாது. தப்பு உன் மேல தானனு சொல்லவும் முடியாது. சொன்னா, பார்டா டெஸ்டர் வந்துட்டாருனு நம்மலயே கலாய்ப்பானுங்க.
இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம். ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.

வெளிய சொல்லும் போதும் டெஸ்டர்னு சொல்றதுக்கு எனக்கு கூச்சமா தான் இருக்கும். வெறும் சாப்ட்வேர் இஞ்சினியர்னு தான் சொல்லுவேன். அப்பறமும் ஜாவாவா, டாட் நெட்டானு யாராவது கேட்டா, வேற வழியில்லாம டெஸ்டிங்ல இருக்கேனு சொல்லும் போது ஏதோ செய்யக்கூடாத வேலை செய்யற மாதிரி இருக்கும்.

சாப்ட்வேர் லைஃப் சைக்கிள், water flow model, V Modelனு எல்லாம் டெஸ்டிங்ல சேர்ந்த புதுசுலயே சொல்லி கொடுத்து என் குற்றவுணர்ச்சியை போக்க பார்த்தாங்க. ஒரு Bugயை ஒரு பிராஜக்ட் ஆரம்ப கட்டத்துல கண்டுபிடிக்கறதுக்கும், அதை நடைமுறை படுத்துன பிறகு கண்டுபிடிக்கறதுக்கு ஆகுற செலவுக்கு எனக்கு வித்தியாசம் தெரியாம இல்ல. இருந்தாலும் இவ்வளவு பெரிய சாஃப்ட்வேர் லைஃப் சைக்கிள்ல நான் ஏன் இப்படி டெஸ்டிங்ல வந்து மாட்டனும்னு ஒரு கஷ்டம். அந்த கஷ்டத்தைவிட பெரிய கஷ்டம் இந்த டெவலப்பர்ஸ் கூட சண்டை போடறது தான். என்னுமோ எல்லாத்தையும் சரியா பண்ண மாதிரி பேசுவானுங்க. ஒரு மண்ணும் ஒர்க் ஆகாது. ஆனா பேசும் போது மட்டும் என்னுமோ பெரிய லார்டு லபக்கு தாஸ் மாதிரி பேசுவானுங்க. ஒரு அப்ளிகேஷன் டெவலப் பண்ணவுடனே அது கொஞ்சமாவது வேலை செய்யுதானு பார்க்கனும். அதை கூட பண்ண மாட்டானுங்க.

போன வாரம் இப்படி தான் ஒரு அப்ளிகேஷன்ல பிறந்த நாள் தேதி இருந்தது. அதுல நான் பாலாஜினு டைப் பண்ணா, அதையும் எந்த தப்பும் சொல்லாம ஏத்துக்குது. கேட்டா பிறந்த நாள் இடத்துல தேதியை கொடுக்காம நீ உன் பேரை போட்டா அது யார் தப்பு? உன்னை மாதிரி ஆளுங்களா இதை பயன்படுத்த போறாங்க. இதை பயன்படுத்தறவங்களுக்கு எல்லாம் புத்தி இருக்கும்னு சொல்லி சிரிக்கறானுங்க. அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம். இந்த வாரம் எப்படியும் 100ஆவது ரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம். அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.

இருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையும்.

- ஒரு டெஸ்டரின் டைரி குறிப்பிலிருந்து....

Tuesday, 17 March 2009

கொடுங்கள்... பெறுவீர்கள்..!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது, தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்துக்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு; விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை... நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே, எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

கட்டுரையாளர்: - என்.கணேசன்

Monday, 16 March 2009

தானா சிட்டி அணி வெற்றி !!!!

கடந்த ஞாயிறு (15-March-2009) அன்று TCG மைதானத்தில் அதிகாலை பகல் ஆட்டமாக நடைபெற்ற பரபரப்பான 6 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தானா சிட்டி அணி Bangkok அணியை எதிர்த்து விளையாடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வழக்கம் போல் வெற்றி பெற்று தொடரை 4/2 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக அணி தலைவர் ஜவஹர் வழக்கம் போல் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அவருடன் நிதேஷ் ஆட்டத்தை துவக்கினார். ஆட்டத்தின் முதல் பந்தை எல்லை கோட்டை தாண்டி அடித்து நல்ல துவக்கம் தந்தார் ஜவஹர். இவர் அணியின் அதிக பட்ச ஸ்கோராக 37 ரன்கள் அடித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதில் ஒரு இமாலய சிக்சரும் அடங்கும். அதிரடியாக 4 ரன்களுடன் ஆட்டத்தை துவக்கிய நிதேஷ் அடுத்த பந்திலேயே போல்டானார்.

அடுத்து களமிறங்கிய சுஜீ நிதானமாக ஆடினார். ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என வலுவான நிலையில் இருந்த போது ஜவஹர் கீப்பிங் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சூரியா முதல் பந்திலேயே க்ளீன் போல்டானார். தொடர்ந்து சுஜீயும் அவுட்டானார். இதனால் இந்த போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற நினைத்த அணி தலைவர் ஜவஹர் கனவை நடுவரிசை ஆட்டக்காரர்கள் கலைத்தனர்.

இந்த சூழ்நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த இளங்கோ ஒரு சிறந்த ஆப் சைடு பவுண்டரியுடன் அணியின் ரன் ரேட் 6 புள்ளிகளுக்கு குறையாமல் பார்த்து கொண்டார். இவருடன் சமீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். எதிர்பாராமல் அடித்த பந்து கேட்ச் ஆகி இளங்கோ வெளியேறினார்.

பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் ரஜினி அனைத்து பந்துகளையும் விளாசி தள்ளினார். குறைவான பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ரஜினி தன்னுடைய அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இவருடனும் கடைசி வரை சமீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். 16 Over முடிவில் 6 wicket இழப்புக்கு தானா சிட்டி அணி 102 ரன்கள் எடுத்து கடந்த ஆட்டத்தின் அதே ஸ்கோரை பதிவு செய்தது.

பின்னர் விளையாடிய Bangkok அணி 8 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோல்வியுற்றது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் Bangkok அணியின் முக்கியமான ஆட்டகாரர் ஷான்பாக், சூர்யாவின் முதல் பந்திலேயே எதிர்பாராதவிதமாக க்ளீன் போல்டானார். தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த முரளி Bangkok அணியில் அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இவர் கொடுத்த கேட்சை கணேஷ் அபாரமாக கேட்ச் செய்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இந்த தோல்வியின் மூலம் அவர்களின் கார் ஓட்டும் கனவு சுக்கு நூறாக தகர்ந்தது. இது குறித்து அணியின் மூத்த ஆட்டக்காரர் காஸ்ட்ரோ குறிப்பிடுகையில் "எங்க கம்பெனியில இருக்கிற கார் பார்கிங்ல match நடந்தால் Bangkok அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறினார்"

பின்னர் ஆட்டத்தின் முடிவில் பேசிய அணி தலைவர் ஜவஹர் "Boys Played Well" Everyone fielded well, Special Thanks to all. Keep it up… என கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தானா சிட்டி அணி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த அணி வீரர்கள் அனைவரும் ICC தர வரிசை பட்டியலில் முதல் 11 இடங்களை கைப்பற்றியுள்ளனர். தானா சிட்டி அணி ஒரு நாள், ஐந்து நாள், பத்து நாள் மற்றும் இருபது நாள் ஆட்டங்களின் தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 13 March 2009

கிரிக்கெட் மேட்ச் - 15-March-2009 @ TCG

வரும் ஞாயிறு அன்று நடை பெற இருக்கும் பரபரப்பான 6 வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை வெல்ல போவது யார் ?.
(தானா சிட்டி அணி)

இது வரை நடந்து முடிந்த ஆட்டத்தில் தானா சிட்டி அணி 3/2 என்ற அளவில் TNS அணியை வென்றுள்ளது. நாளைய போட்டி மிகுந்த பரபரப்புக்கு இடையே நடை பெற இருப்பதால் இந்த போட்டி இரு அணி வீரர்களிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNS அணி கடந்த ஆட்டத்தில் தோல்வியுற்றதால் இந்த முறை ஒரு சில சீனியர் ஆட்டக்காரர்களை அழைத்து வர வாய்ப்பு உள்ளது. தானா சிட்டி அணியில் ஆல் ரவுண்டர் சமீர் விளையாட உள்ளது அவர்களுக்கு கூடுதல் பலம். ஐன்ஸ்டீன் இந்த போட்டியில் பங்கேற்பாரா என்பது கடைசி நிமிடத்தில் தான் உறுதி செய்யப்படும் என அணியின் தலைவர் ஜவகர் நேற்றைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார்.

கடந்த சில வாரங்களில் நடந்த பயிற்சி போட்டிகளில் துணை தலைவர் ரஜினி, இளங்கோ, சுஜீ, கணேஷ், சூரியா, அணி தலைவர் ஜவகர், பாவேஷ் , சமீர், காஸ்ட்ரோ, நிதேஷ், கோகுல், தினேஷ் ஆகிய ஆட்டக்காரர்கள் சிறந்த பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம் பற்றி அணி தலைவர் ஜவகர் குறிப்பிடுகையில், தங்கள் அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார், எனினும் கடைசி நிமிடத்தில் ஆட்ட களம் மற்றும் தட்ப வெப்பம் பொறுத்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

ஆட்டத்தில் முடிவை உடனக்குடன் தெரிந்து கொள்ள http://www.cricinfo.com/ பார்க்க வேண்டாம். நேரிலியே வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் ஆடுகளம் இருப்பதால் Live Coverage தடை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் National, Sony Set Max, ESPN, Star Sports ல் நேரடி ஒளிபரப்பை பார்க்க முயற்சி செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டது கொள்ளப்பட்டுள்ளது.

(பி.கு. தங்கள் comments வரவேற்கபடுகிறது)



Sunday, 8 March 2009

தங்க தம்பி ஐன்ஸ்டீன் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

Albert Einstein — Date of Birth: March 14, 1879


நம்ம ஐன்ஸ்டீன் பிறந்த நாள் March 10th 1985






Dear Friends,
Expecting all your Great wishes to our Lovable Friend "Einstein"
Please Click "Comments" link below and enter your wishes......
Regards,

Suriyaprakash.V

Monday, 2 March 2009

வெண்ணிலா கபடிக்குழு - விமர்சனம்

ஒரே 'மூச்சில்' கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். படத்தில் வரும் இடைவேளை அறிவிப்பை கூட ஒரு காட்சியின் சுவாரஸ்யத்தோடு சொல்ல முடிகிறது அவரால்! முதல் ஆட்டத்திலேயே 'கப்'பை கவர்ந்து சென்றுவிட்டார்.

கபடி மீது காதலாக திரியும் வயசுப் பசங்களின் ஆட்டமும், ஆர்ப்பாட்டமும்தான் கதை. மதுரைக்கு பக்கத்தில் இருக்கிற ஏராளமான பட்டிகளில் இவர்களுடைய கணக்கன்பட்டி ஊரும் ஒன்று. விடிந்தால் கபடி, விழுந்தால் கபடி என்று சின்சியராக ஆட்டம் போடும் இவர்களுக்கு வெற்றி மட்டும் எட்டாத உயரம். ஆனாலும் ஆர்வத்தோடு ஒரு போட்டியில் கலந்து கொள்ள மதுரை செல்லும் இவர்களுக்கு ஏற்படுகிற அனுபவங்களும், அதிர்ச்சிகளும்தான் முடிவு. இடையே துளியூண்டு காதலுக்கும் இடம் கொடுக்கிறார் இயக்குனர். மனசை ரணகளமாக்கிவிடுகிறது.

ஏழை குடும்பத்தில் பிறந்து படிப்பை தொடர முடியாமல் பண்ணைக்கு வேலைக்கு போய்விடும் விஷ்ணு, திருவிழாவுக்கு வரும் சரண்யா மோகனிடம் காதல் வயப்படுவது அழகோ அழகு. நாயின் வெறிப்பார்வைக்கு பயந்து, விஷ்ணுவின் கைகளை இறுகப்பிடித்துக் கொள்ளும் சரண்யா, அப்படியே காதலாகி கசிந்துருகுவதும், அந்த ஊரின் குட்டி சந்துகளில் காதல் யாத்திரை நடத்துவதும் காதல் திருவிழா. உரியடியில் காதலன் வெற்றிபெற தனது கொலுசு சத்தத்திலேயே வழிகாட்டும் டெக்னிக், இளசுகளின் சிம்பொனி. ஆனால் இந்த காதலின் க்ளைமாக்ஸ் இருக்கிறதே..................

புதுமுகம் விஷ்ணு பலராலும் கவனிக்கப்பட வேண்டிய வரவு. அறிமுகக்காட்சியில் ஒரு பஸ்சையே தனது சைக்கிளில் முந்திச் செல்லும் அவரது இளமைத் துடிப்பு, "ஜெயிச்சுட்டு போகட்டும்யா... அவன் மொகத்திலே சந்தோஷத்தை பாரு. எவ்வளவு கொடுத்தாலும் அந்த சந்தோஷம் வருமா?" பஸ் டிரைவரின் யதார்த்த வசனத்துக்கு ஒரு சல்யூட்!

விஷ்ணுவுக்கு தோழர்களாக நடித்திருக்கும் அத்தனை அராத்துகளுக்குமாக சேர்த்து, ஒரு பெரிய தட்டில் கட்டி கட்டியாக சூடத்தை கொளுத்தி 'திருஷ்டி' சுற்றிப்போடலாம். குறிப்பாக சாப்பாட்டு ராமன் போட்டியில் பரிசை தட்டிச் செல்லும் அந்த உயரமான இளைஞருக்கு தனி பாராட்டுகள். உரியடி திருவிழாவில் மாமியாரின் நச்சு பேச்சுக்கு ஒரு மண்டையிடி கொடுக்கும் அந்த குண்டு பையனுக்கும்தான்!

எல்லா படத்திலேயும் அசுரனாக நடிக்கும் கிஷோர் இந்த படத்தில், அமைதியாக வந்து ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து எல்லாரையும் கவர்ந்திருக்கிறார். "ரைட்லே ஏறு, லெப்ட்லே போ" என்று இவர் கொடுக்கும் கோச்சிங்கில் மிலிட்டிரி முறைப்பு. மகிழ்ச்சியை கூட, மில்லி மீட்டர் தாண்டாமல் காட்டும்போது இன்னும் ரசிக்க வைக்கிறார்.படத்தில் வரும் எல்லா கேரக்டர்களையுமே மிகவும் மெனக்கட்டு உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன். வில்லன்களின் விரட்டலும், கத்தி கபடா சமாச்சாரங்களும் சுமூகமாக முடிவது, எதிர்பாராத திருப்பம்.

இசையமைப்பாளர் 'லேசா பறக்குது...' மெலடியில் நம்மை லேசாக பறக்கவே வைக்கிறார். பின்னணி இசை இன்னும் விசேஷம். ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கும் கோணங்கள்! எங்கேயும் நெளிய வைக்காத எடிட்டிங்!இந்த கபடிக்குழுவுக்கு திரையிடும் தியேட்டர்களில் எல்லாம் காத்திருக்கின்றன ஏராளமான வெற்றிக்கோப்பைகள்!

Rating - 61/100

அன்புடன்,
விமர்சன குழு