Monday 2 March 2009

வெண்ணிலா கபடிக்குழு - விமர்சனம்

ஒரே 'மூச்சில்' கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். படத்தில் வரும் இடைவேளை அறிவிப்பை கூட ஒரு காட்சியின் சுவாரஸ்யத்தோடு சொல்ல முடிகிறது அவரால்! முதல் ஆட்டத்திலேயே 'கப்'பை கவர்ந்து சென்றுவிட்டார்.

கபடி மீது காதலாக திரியும் வயசுப் பசங்களின் ஆட்டமும், ஆர்ப்பாட்டமும்தான் கதை. மதுரைக்கு பக்கத்தில் இருக்கிற ஏராளமான பட்டிகளில் இவர்களுடைய கணக்கன்பட்டி ஊரும் ஒன்று. விடிந்தால் கபடி, விழுந்தால் கபடி என்று சின்சியராக ஆட்டம் போடும் இவர்களுக்கு வெற்றி மட்டும் எட்டாத உயரம். ஆனாலும் ஆர்வத்தோடு ஒரு போட்டியில் கலந்து கொள்ள மதுரை செல்லும் இவர்களுக்கு ஏற்படுகிற அனுபவங்களும், அதிர்ச்சிகளும்தான் முடிவு. இடையே துளியூண்டு காதலுக்கும் இடம் கொடுக்கிறார் இயக்குனர். மனசை ரணகளமாக்கிவிடுகிறது.

ஏழை குடும்பத்தில் பிறந்து படிப்பை தொடர முடியாமல் பண்ணைக்கு வேலைக்கு போய்விடும் விஷ்ணு, திருவிழாவுக்கு வரும் சரண்யா மோகனிடம் காதல் வயப்படுவது அழகோ அழகு. நாயின் வெறிப்பார்வைக்கு பயந்து, விஷ்ணுவின் கைகளை இறுகப்பிடித்துக் கொள்ளும் சரண்யா, அப்படியே காதலாகி கசிந்துருகுவதும், அந்த ஊரின் குட்டி சந்துகளில் காதல் யாத்திரை நடத்துவதும் காதல் திருவிழா. உரியடியில் காதலன் வெற்றிபெற தனது கொலுசு சத்தத்திலேயே வழிகாட்டும் டெக்னிக், இளசுகளின் சிம்பொனி. ஆனால் இந்த காதலின் க்ளைமாக்ஸ் இருக்கிறதே..................

புதுமுகம் விஷ்ணு பலராலும் கவனிக்கப்பட வேண்டிய வரவு. அறிமுகக்காட்சியில் ஒரு பஸ்சையே தனது சைக்கிளில் முந்திச் செல்லும் அவரது இளமைத் துடிப்பு, "ஜெயிச்சுட்டு போகட்டும்யா... அவன் மொகத்திலே சந்தோஷத்தை பாரு. எவ்வளவு கொடுத்தாலும் அந்த சந்தோஷம் வருமா?" பஸ் டிரைவரின் யதார்த்த வசனத்துக்கு ஒரு சல்யூட்!

விஷ்ணுவுக்கு தோழர்களாக நடித்திருக்கும் அத்தனை அராத்துகளுக்குமாக சேர்த்து, ஒரு பெரிய தட்டில் கட்டி கட்டியாக சூடத்தை கொளுத்தி 'திருஷ்டி' சுற்றிப்போடலாம். குறிப்பாக சாப்பாட்டு ராமன் போட்டியில் பரிசை தட்டிச் செல்லும் அந்த உயரமான இளைஞருக்கு தனி பாராட்டுகள். உரியடி திருவிழாவில் மாமியாரின் நச்சு பேச்சுக்கு ஒரு மண்டையிடி கொடுக்கும் அந்த குண்டு பையனுக்கும்தான்!

எல்லா படத்திலேயும் அசுரனாக நடிக்கும் கிஷோர் இந்த படத்தில், அமைதியாக வந்து ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து எல்லாரையும் கவர்ந்திருக்கிறார். "ரைட்லே ஏறு, லெப்ட்லே போ" என்று இவர் கொடுக்கும் கோச்சிங்கில் மிலிட்டிரி முறைப்பு. மகிழ்ச்சியை கூட, மில்லி மீட்டர் தாண்டாமல் காட்டும்போது இன்னும் ரசிக்க வைக்கிறார்.படத்தில் வரும் எல்லா கேரக்டர்களையுமே மிகவும் மெனக்கட்டு உருவாக்கியிருக்கிறார் சுசீந்திரன். வில்லன்களின் விரட்டலும், கத்தி கபடா சமாச்சாரங்களும் சுமூகமாக முடிவது, எதிர்பாராத திருப்பம்.

இசையமைப்பாளர் 'லேசா பறக்குது...' மெலடியில் நம்மை லேசாக பறக்கவே வைக்கிறார். பின்னணி இசை இன்னும் விசேஷம். ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கும் கோணங்கள்! எங்கேயும் நெளிய வைக்காத எடிட்டிங்!இந்த கபடிக்குழுவுக்கு திரையிடும் தியேட்டர்களில் எல்லாம் காத்திருக்கின்றன ஏராளமான வெற்றிக்கோப்பைகள்!

Rating - 61/100

அன்புடன்,
விமர்சன குழு

No comments: