Wednesday 25 March 2009

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!!!

மால் என்றவுடன் உங்களுக்கு ஏதேனும் கஞ்சா, அபின் போன்ற லாகிரி வஸ்து நினைவுக்கு வந்தால் நீங்கள் ரொம்பவே ராம் கோபால் வர்மா படம் பார்ப்பவராக இருப்பீர்கள். கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.

திருமால் நினைவுக்கு வந்தால் மார்கழி குளிரில் சுடசுட வெண்பொங்கலுக்கு பஜனை செய்தவராக இருப்பீர்கள். போகட்டும்,பெருமாள் உங்களையும் காப்பாத்தட்டும்.

இதையெல்லாம் மீறி தமிழர்களிடையே ஒரு மால் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை மாதிரி சென்னைவாசிகளுக்கு ஸ்பென்சர் தவிர இன்னொரு மால் தான் சிட்டி சென்டர். (இன்னுமா தமிழ்ப்படுத்தலை?)

அன்றாட வாழ்வில் நாம் என்னவெல்லாம் பயன்படுத்த மாட்டோமோ அதையெல்லாம் கடை போட்டு, லைட்டு போட்டு கடை பரத்தி வைத்திருக்கிறார்கள். சிறிது பயம் கலந்த ஆர்வத்துடன் மக்கள் எஸ்கலேட்டரில் கால் பதிக்கிறார்கள். அலேன் சோலி, ரேமான்ட்ஸ், போன்ற பிராண்டட் கடைகளில் கடைப் பணியாளர்கள் தாயக்கட்டை உருட்டி கொண்டிருக்கிறார்கள். லேண்ட் மார்க்கில் நிலமை கொஞ்சம் பரவாயில்லை. சிடி வாங்கும் சாக்கில் பலர், ஏசியில் அமர்ந்து ஒசியில் பாட்டு கேட்கிறார்கள். இன்னும் சிலர் கையில் டிபன் பாக்ஸ் எல்லாம் கட்டி கொண்டு புக்ஸ் செக்சனில் சம்மனம் போட்டு அமர்ந்து யவன ராணி படித்து கொண்டிருக்கிறார்கள்.

புஃட் வேர்ல்டில் தம் குழந்தைகளுக்கு செர்லாக் தேடும் அம்மாக்கள், காஸ்மெடிக்ஸ் செக்சனில் கோத்ரேஜ் டை தேடும் அரக்கு கலரில் லிப்ஸ்டிக் அடித்த ஆன்டிக்கள், இடது கையில் பாப்பின்ஸ் வைத்து கொண்டு, வலது கைக்கு டெய்ரி மில்குக்கு அடம் பிடிக்கும் டெனிம் ஜீன்ஸில் டிராயர் அணிந்த மஷ்ரூம்கட் செட்டிநாட் வித்யாஷ்ரம் குழந்தைகள், பில்லுக்கு கார்டு தேய்க்கவும், ட்ராலி தள்ள மட்டுமே அழைத்துவரப்படும் அப்பாவி கணவன்மார்கள், யார்ட்லி (ஒரிஜினல்) யார்ட்லி (டூப்ளிகேட்), டாமி பாய்/கேள், ஓல்ட் ஸ்பைஸ் என கலவையாய் மணக்கும் கசகச மக்கள், எதையோ தேடி, எதையோ வாங்கி, எங்கோ ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத எடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் என அறிவிக்கப்படா விதிப்படி பெண்களுக்கு கை, காது, மூக்குக்கு என தோரியம் நீங்கலாக பூமியில் கிடைக்கும் எல்லா மெட்டல்களிலும் நகைகள் கொட்டிக் கிடக்கிறது. பெண்ணுக்கு அழகு புன்னகையே! என கல்யாணமான புதிதில் சாலமன் பாப்பையா மாதிரி நான் தீர்ப்பு சொன்னதில் நொந்து போன என் மனைவி அமைதியாக எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார் என நினைத்தது சில வினாடிகளில் தப்பா போச்சு.

அந்த பிளாக் கலர் டாப்ஸ் போட்ட பொண்ணை தானே பாத்தீங்க? என அம்மணி அதிரடியாய் கேட்க, "கட்டிடம் எல்லாம் என்னமா கட்டியிருக்கான், லைட்டு எல்லாம் என்னமா மின்னுது!" என நான் சமாளிக்க பாத்தும் கதை ஒப்பேறவில்லை. நிலைமையை உடனே சமாளிக்க அபியும் நானும் படத்துக்கு டிக்கட் வாங்க வேண்டியதா போச்சு.

சிட்டி சென்டர் வாசலில் முகேஷ் அம்பானி மட்டுமே ஆட்டோ பிடிக்க முடியும் போலிருக்கு. எங்க போகணும்?னு கேக்கறதுக்கு முன்னாடியே டூபிப்ட்டி குடு சார்! என கூலாக கேட்கிறார்கள்.

ஒண்ணும் சொல்றதுக்கில்லை!

1 comment:

Unknown said...

onnum sollrathukku illa