Monday 30 March 2009

உங்களுக்குள்ளே ஒரு எதிரி

உங்களுக்குள்ளே ஒரு எதிரி இருக்கிறான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான முடிவுகளையும் அந்த எதிரி தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் அது உண்மையே. அது மட்டுமல்ல, பெரும்பாலான கருத்துக்களை அந்த எதிரி தான் உங்கள் மேல் திணித்துக் கொண்டு இருக்கிறான். உங்கள் வாழ்க்கையின் லகானை அவன் தான் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறான். உண்மையில் அவன் உள்ளே இருக்கிறான் என்ற உணர்வே உங்களிடம் இல்லை. (இல்லாமல் அவன் பார்த்துக் கொள்கிறான்). அவனைக் கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்கில்லை. ஆனால் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அவனுக்கு இருக்கிறது. நான் சொல்வது சரிதானா இல்லை சற்று மிகைப்படுத்திச் சொல்கிறேனா என்ற சந்தேகம் பலருக்கும் வரக்கூடும். யாராவது அப்படி ஒரு எதிரியைத் தனக்குள்ளே விட்டு வைத்திருப்பார்களா என்ற நியாயமான கேள்வியும் எழக்கூடும். சற்று ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உண்மையை நம்மால் உணர முடியும்.ஒரு எதிரியை உங்களால் எப்படி அடையாளம் காண முடிகிறது?


உங்கள் நலனை சிறிதும் விரும்பாது, உங்கள் நன்மை¨க்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போடும் நபரை, உங்கள் மனநிம்மதியைக் கெடுக்கும் நபரைத் தான் நீங்கள் எதிரியாகக் காண்பீர்கள். இல்லையா? சரி வாருங்கள். உங்கள் எதிரியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.நீங்கள் உங்கள் உடல்நலனில் இனி அக்கறை காட்ட வேண்டும் என்று சீரியஸாக முடிவெடுக்கிறீர்கள். நாளை முதல் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும் என்றோ அதிகாலையில் எழுந்து அரை மணி நேரம் வாக்கிங் போக வேண்டும் என்றோ உறுதி எடுத்துக் கொள்கிறீர்கள். மறுநாள் காலை எழுந்து அதைச் செய்தும் விடுகிறீர்கள். அன்றெல்லாம் உற்சாகமாக இருக்கிறீர்கள். ஒரு நல்ல முடிவெடுத்து அதை செயல்படுத்துவதை விட உற்சாகமான விஷயம் வேறு இருக்கிறதா என்ன?இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ உங்கள் எதிரி அதை சகித்துக் கொள்ள மாட்டான். காலை எழும் போது மெல்ல சொல்வான். "இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....". ஒருநாளில் என்ன கெட்டுப் போகிறது என்று நீங்களும் விழித்தவர்கள் மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். அது அடுத்த நாளும் தொடரும். சில நாள்களில் அந்த நல்ல பழக்கம் முழுவதுமாகக் கை விடப்படும். நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்கள் எதிரி ஜெயித்து விட்டான். ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட உங்கள் எதிரி அனுமதிக்க மாட்டான்.


உங்கள் எதிரி ஒரு கெட்ட பழக்கத்தைக் கைவிடவும் உங்களை அனுமதிக்க மாட்டான்.உங்களை நம்ப வைப்பது எப்படி என்று உங்கள் எதிரிக்குத் தெரியும். நீங்கள் மறுக்க முடியாத வாதங்களைச் சொல்வான். "எதிர்த்த வீட்டுத் தாத்தாவுக்கு ஹை பீபி. ஹை ஷ¤கர். ஆனா அவர் எதையாவது சாப்பிடாம விடறாரா பாரேன். எல்லாம் சாப்பிடுவார். கடைசியில் மாத்திரையும் போட்டுக்குவார். அவருக்கு இப்ப வயசு 75. நல்லா நடமாடிட்டு தானே இருக்கார்". உங்களுக்கு எதிர்வீட்டுத் தாத்தா ஆதர்ச புருஷர் ஆகி விடுவார். இப்படி எத்தனையோ அவன் லீலைகள். ஒவ்வொருவரிடமும் எதிரி ஒவ்வொரு விதமாக செயல்படுவான்.உங்களுக்கு வரும் வருமானம் தாராளமாகப் போதும். அதை வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அவன் சொல்வான். "என்ன பிச்சைக்காசு. உன்னை விடக் கம்மியா மார்க் வாங்கின ரவி இப்ப என்ன சம்பளம் வாங்கறான் தெரியுமா? போன மாசம் கூட யூரோப் (Europe) டூர் போயிட்டு வந்திருக்கான். உன் சம்பாத்தியத்தில் போக முடியுமா? உன் ·ப்ரண்ட் வர்கீஸ் கம்பெனில அவனுக்கு ·ப்ரீயா கார் கொடுத்து பெட்ரோல் அலவன்ஸ¤ம் தர்றாங்க. நீ இன்னும் ஸ்கூட்டர்லயே இருக்கிறாய்.". உங்கள் நிம்மதி போயிற்று.


குடும்பத்திலோ ஆபிசிலோ நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். அதை உணர்ந்து விடுகிறீர்கள். உங்கள் எதிரி சம்பந்தப்பட்டவர்களிடம் உங்களை மன்னிப்பு கேட்க விடமாட்டான். அது தப்பே இல்லை என்று சாதிப்பான். முடியாத போது "எவன் தப்பு செய்யல? அவன் கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும். அவன் உன் தலைக்கு மேல ஏறி உட்காரவா? அவன் என்ன தப்பே செய்யாதவனா?" சிறு மன்னிப்பால் முடிந்து விடக்கூடிய மனக்கசப்புகள் பெரிதாகி பகைகள் வளர்த்தப்படும். உறவுகளும் நட்புகளும் முறிந்து போகும். அடுத்தவர்களுடன் ஒப்பிடச் செய்வது உங்கள் எதிரி. உங்களிடம் என்னவெல்லாம் இல்லையென்பதை மறக்க விடாதிருப்பது உங்கள் எதிரி. சோம்பலை வளர்ப்பது உங்கள் எதிரி. எத்தனை வந்தாலும் போதாது என பேராசைப்பட வைப்பது உங்கள் எதிரி. கட்டுப்பாடில்லாமல் அலைய விடுவது உங்கள் எதிரி. அகங்காரம் கொள்ள வைப்பது உங்கள் எதிரி. அடுத்தவர்களின் குறைகளைப் பட்டியல் போட்டு பெரிதாக்கிக் காட்டுவது உங்கள் எதிரி. பொறுமையை கையாலாகாத்தனம் என்று நம்ப வைப்பது உங்கள் எதிரி. மன உறுதியைக் குலைத்து சஞ்சலப்படுத்துவது உங்கள் எதிரி.....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.அந்த எதிரியை எதிரியாகவே உங்களால் எண்ண முடியாததால் அவனுக்கு உங்களிடம் எதிர்ப்பே இருப்பதில்லை என்பது அவனுடைய மிகப்பெரிய பலம். அவனுடைய குரலை உங்கள் குரலாகவே நீங்கள் நினைக்க ஆரம்பித்து விடுவதால் அவன் இருப்பதும் செய்வதும் உங்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது. முதலில் அவனைப் பிரித்து அடையாளம் காணுங்கள். அதுவே அந்த எதிரியை அழிக்க நீங்கள் எடுக்கக்கூடிய முதல் நடவடிக்கை.ஆறறிவையும் பயன்படுத்தி, நியாய அநியாயத்தை உணர்ந்து, நல்லது கெட்டது இதுவெனத் தெளிந்து நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்யும் போது தான் அந்த எதிரியை அடையாளம் காண முடியும். (இதையே நம் முன்னோர் ஆத்ம விசாரம் என்று சொன்னார்கள்.)அடுத்த நடவடிக்கை அவன் குரல் உங்கள் குரலல்ல என்று உணர்ந்து அலட்சியப்படுத்துவதே. மேலே சொன்ன உதாரணங்களையே எடுத்துக் கொள்வோம்.

"இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....". என்று சொல்லச் சொல்ல அதை ஒரு கணமும் பொருட்படுத்தாமல், "இது என் ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்று எழுந்து உடற்பயிற்சி செய்வதையோ, வாக்கிங் போவதையோ நடைமுறைப்படுத்துங்கள். அந்தக் குரல் காணாமல் போகும். அந்த எதிரி வர்கீஸையோ, ரவியையோ உதாரணம் காட்டுகையில் "சும்மா இரு. உண்மையான சந்தோஷத்துக்கு காரோ, யூரோப் டூரோ வேண்டும் என்று யார் சொன்னது?" என்று உண்மையைச் சொல்லி எதிரியை வாயடைக்க வையுங்கள். மன்னிப்பு கேட்க வேண்டாம் என்பதற்கு எதிரி காரணங்கள் கூறும் போது, "தப்பு என்று உணர்ந்த பின் மன்னிப்பு கேட்க வெட்கப்படுவானேன்" என்று உறுதியாக எண்ணி அப்போதே மன்னிப்பு கேட்டு உறவுகளையும், நட்பையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் எதிரியின் மிகப்பெரிய சித்தாந்தம் இது தான். "விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே. இப்போது அனுபவி. பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது செய்து சரி செய்து விடலாம்". அதன்படி நடந்தால் பிறகு பார்க்கவும், சரி செய்யவும் எந்த நல்லதும் மிஞ்சாது என்பதே உண்மை. அப்போதெல்லாம் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள். "எண்ணித் துணிக கருமம். துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு". அந்த எதிரியின் சித்தாந்தத் தூண்டிலுக்கு இரையாகாதீர்கள். இதையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால் விழிப்புணர்வும், உறுதியும் இருந்தால் இது முடியாததும் அல்ல. எதிரியின் குரல் மெல்ல ஒலிக்கையில் அதை உங்கள் குரலென்று குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் நலம் எது என்று தெளிவாக உணருங்கள். அதைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். உங்களை உயர்த்த உதவும் எதையும் செய்யாமலும் இருக்காதீர்கள். உங்கள் எதிரிக்கு அந்த இரண்டுமே உயிர்க்கொல்லிகள். அவன் உங்களுக்குள் வசிக்க மாட்டான்.

No comments: